இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 1: இலக்கிய குழு அரசியலில் தவறில்லை!


இலக்கிய விமர்சகன் ஏன் மதிப்பெண்கள் இடக்கூடாது என்பது பற்றின எனது முந்தின கட்டுரையை ஒட்டி நண்பர் கோகுல் பிரசாத் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பி இருந்தார்: “சில இலக்கிய குழுக்கள் சில இலக்கிய படைப்புகளை அதீதமாய் விதந்தோதி உடனடி பரபரப்பை உண்டு பண்ணி ‘நல்லாத்தான் இருக்கும் போல’ என தற்காலிகமாக நம்ப வைத்து அந்தஸ்தை உருவாக்கி விடுகிறார்களே! அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவற்றை மறுத்து திரையை விலக்கி உண்மையை நிறுவ வேண்டியது விமர்சகனின் கடமை இல்லையா?”

சில புத்தகங்கள் பொய்யாய் பாராட்டப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன எனும் பேச்சு சமீபமாய் வலுப்பட்டிருக்கிறது. ஏன் “வலுப்பட்டிருக்கிறது” என சொன்னேன் என்றால் இந்த எண்ணம் நீண்ட காலமாகவே தமிழில் இருக்கிறது. ஏன் என்றால் நீண்ட காலமாகவே தீவிர இலக்கிய உலகில் குழுக்களும் அவற்றின் அரசியலும் உள்ளன. ஒரு படைப்பு பாராட்டப்பட்டால் “ஒருவேளை குழு அரசியலாக இருக்குமோ?”, “அவர்கள் தான் ஒரே சாதி ஆயிற்றே?”, “அதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்து ஆட்களாயிற்றே, உடனே கூட்டு சேர்ந்து விடுவார்கள் தானே?”, “அதான் ஒரே மாவட்டத்து ஆட்கள் ஆயிற்றே, பரஸ்பரம் சொறிந்து விடுகிறார்கள் போலும்?” என ஆயிரம் கேள்விகள் புகைய ஆரம்பிக்கும். இக்கேள்விகளில் நியாயம் உண்டா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் ஒரே சமயம் பதில் கூறுவேன்.
 ஜெயமோகனின் வெண்முரசு நாவல்களை அவரது “வெண்முரசு வாசக வட்டத்தினர்” அன்றி வேறு யார் படிக்கிறார்கள்? என ஒரு நண்பர் என்னிடம் சமீபமாய் கேட்டார். வேறு யாரெல்லாம் படித்தால் அந்நாவல்களை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நான் அவரிடம் திரும்பக் கேட்டேன். “பொதுவான வாசகர்கள்” என்றார். “இந்த பொதுவான வாசகர்கள் ஒரு படைப்பை கொண்டாடுவதே அதன் சிறப்புக்கான ஆதாரம் எனும் முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? இவர்கள் அல்லாத பொது வாசகர்களுக்கும் இவர்களைப் போன்ற சார்புநிலைகள் இல்லை என உங்களுக்கு எப்படித் தெரியும்?”. அவர் நைஸாக என்னை விட்டு விலகிப் போனார்.
இலக்கிய குழுக்கள் சார்புநிலையின் அடிப்படையில் செயல்படுகிறவை தாம். ஆனால் அதில் என்ன தவறு? தமிழின் பல உன்னதமான படைப்பாளிகள் இந்த இலக்கிய குழுச்சூழல்களில் இருந்து, இந்த இலக்கிய அரசியலின் ஆதரவினால் முன்னிறுத்தப்பட்டு மேலெழுந்து வந்தவர்கள் தானே என ஜெயமோகன் ஒருமுறை கேட்டார். எனக்கு அதுவே நியாயமான கேள்வி எனப் படுகிறது. ஏன் இலக்கிய குழு அரசியலை நாம் நேர்மறையாய் பார்க்கக் கூடாது? ஏன் சார்புநிலையை தழுவி ஏற்றுக் கொள்ளக் கூடாது?
இலக்கியம் என்பது எந்த சார்புநிலையும் அற்ற ஒரு பொதுவாசகனால் ரசித்து கொண்டாடப்படுகிறது என நாம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். ஆனால் இந்த “பொது வாசகன்” என்றொருவன் உண்மையில் இருக்கிறானா என நாம் சோதித்துப் பார்ப்பதில்லை. யார் இந்த “பொது வாசகன்”?
அவன் என்ன எந்த வட்டாரத்தையும், குழுவையும், சாதியையும் சேராதவனா? நான் அறியாதவனா? அதனால் மட்டுமே அவன் பாரபட்சம் அற்றவனாய் ஆகி விடுவானா?
தான் விரும்புகிற ஒரு சினிமாக் கலைஞனை, எழுத்தாளனை நான் பாராட்டி இருக்கிறேன், தான் மதிக்கும் ஒரு கருத்துநிலையுடன் நான் உடன்படுகிறேன், தனது வாழ்வனுபவத்துக்கு இணையான ஒன்றை நான் சித்தரித்திருக்கிறேன் என்பதற்காக மட்டுமே உடனடியாய் என் வாசகன் ஆனவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள். இது சார்புநிலை இல்லையா? ஆம்.
சொந்த ஊர்க்காரன் என்பதாலே என்னைப் படிப்பவர்கள் உண்டு. நான் எழுத ஆரம்பித்த புதிதில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் சொன்னார்: “எனக்கு உங்க கிரிக்கெட் கட்டுரைகள் மட்டும் தாங்க பிடிக்கும். தீவிரமான கட்டுரைகள் சுத்த போர்!” மிக சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீகணேஷ் “உங்க கிரிக்கெட் கட்டுரைகளை ரசித்து படிப்பதுண்டு” என்றார். “என் கிரிக்கெட் கட்டுரைகளை நான் போகிறபோக்கில் எழுதுகிறேன் எனக்கு அவை சுத்தமாய் பிடிக்காது.” என இருவரிடமும் சொன்னேன். ஆனால் அவற்றை படிக்காதீர்கள் என நான் அவர்களை தடுக்க முடியாது. கிரிக்கெட்டுக்காய் ஒருவர் என்னை படிப்பது சார்புநிலை தான். அதை விடுங்கள். சில கலைஞர்கள், எழுத்தாளர்கள் நான் அவர்களது படைப்புகளை பாராட்டி எழுதியதை மட்டுமே படித்திருக்கிறார்கள். நண்பனாய் இருப்பதால் மட்டுமே என்னை படிப்பவர்கள் இருக்கிறார்கள். நண்பனாய் இருந்தும் என் ஒரு வரியை கூட படிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அது பற்றி புகார் இல்லை.
”காடு” நாவல் வெளியான போது பரபரப்பாய் கவனிக்கப்பட்டு படிக்கப்பட்டது. இத்தனைக்கும் அது சர்ச்சைக்கு உட்படவில்லை. பரபரப்பான அரசியலும் இல்லை. ஒருமுறை ஜெயமோகன் அந்நாவல் கவனம் பெற்றதன் காரணத்தை என்னிடம் சொன்னார். அந்நாவலை படித்து அதன் விவரணைகளில் திளைத்துப் போய், அதை பயங்கரமாய் சிலாகித்து அவருக்கு கடிதம் எழுதியவர்கள் பலர் ”வறட்சியான நிலப்பகுதியை சேர்ந்தவர்கள். எங்கும் ஈரம் குன்றாத, பச்சைப்பசேல் என்ற, குளங்களும் நீர்நிலைகளும் தளும்புகிற, மலைத்தொடர்கள் பார்வைப்புலத்தை விட்டு நீங்காத குமரிப்பகுதி அவர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாய் இருக்கிறது. அவர்கள் அந்நாவல் வழி அந்த மண்ணில் இறங்கி நடந்து இயற்கையை ஸ்பரிசித்து உள்ளம் களிப்புறுகிறார்கள். அதற்காகவே அந்நாவலின் மொழிக்குள் மீண்டும் மீண்டும் இறங்கி நடைபயில்கிறார்கள்” என்றார்.
 இதை எப்படிப் பார்ப்பது? “இல்லாமையின் சார்புநிலை” என்றா? ஆனால் அந்நாவலை குமரி மண்ணின் மைந்தனான நானும் மிகவும் சிலாகித்துப் படித்தேனே. ஏன்? இருப்பதை மீண்டும் நிலைவில் எழுப்பவா? ”இருப்பதன் சார்புநிலைக்காகவா?”
ஒரு இந்துத்துவாவாதி, சாதியவாதி, பிற்போக்காளர் என “கருதப்படும்” ஜெயமோகனின் “வெள்ளை யானை” தலித் முகாமினரால் கொண்டாடி விதந்தோதப்பட்டது. ஒரு முற்போக்காளரே அதை பிரசுரித்து முன்னெடுக்கவும் செய்தார். அப்போது ஜெயமோகன் எந்த “குழுவில்” இருந்தார்?
என்னுடைய முதல் நாவல் “கால்கள்” ஊனமுற்ற ஒரு பெண்ணின் கதை என “சொல்லப்படுகிறது”. ஆனால் ஒரு ஊனமுற்ற வாசகன் கூட அதற்காய் என்னை அழைத்து பாராட்டியதில்லை. வாசகிகள் – பெண்கள் – தாம் திரும்பத் திரும்ப அந்நாவலுக்காய் என்னை அழைத்து கண்ணீர் மல்க பேசுகிறார்கள். அவர்கள் ஊனர்கள் இல்லையே? அவர்க்ள் என் “குழுவில்” இல்லையே?
ஆனால் அதற்காய் அவர்கள் ”பொதுவாசகர்களும்” அல்ல. பெண்நிலை எனும் “சார்புநிலை” அவர்களை அந்நாவலை நோக்கி ஈர்க்கிறது. ஒன்ற வைக்கிறது. ஒருவேளை நான் பெண் பெயரில் அந்நாவலை எழுதியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

(இதன் அடுத்த பகுதி விரைவில் … )

Comments