Friday, July 28, 2017

சுஜாதாவை ஏன் வாசிக்க வேண்டும்? ”கனவுத் தொழிற்சாலை” நாவலை முன்வைத்து

Image result for சுஜாதா
சுஜாதாவை ஒரு இலக்கிய வாசகன் தயக்கமின்றி நுணுகி வாசிக்க வேண்டும் என நம்புகிறேன். முக்கியமான காரணம் சுஜாதாவின் உயிரோட்டமும் விளையாட்டுத்தனமும் நிறைந்த மொழி. அவரது பெரும்பாலான கதைகளில் (லா.சா.ர போல) உக்கிரமான வாழ்க்கை சித்தரிப்புகள் ஒன்றுமில்லை. (மௌனி போல) மிக கவித்துவமான, (பாலகுமாரன், ஜெயமோகன், இமையம் போல) நாடகீயமான தருணங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை (”நகரம்” போன்ற மிகச்சில கதைகளை தவிர்த்து). ஜெயமோகனின் ”ஜகன்மித்யை” போன்ற தத்துவார்த்த கனம் உள்ள கதைகளை அவர் எழுதியதில்லை. சுஜாதாவின் கதைகள் மிக மெல்லிய டாய்லெட் பேப்பர் போன்றவை. அக்கதைகளின் பலமே அவரது மொழி தான். மிக எளிய கருக்களை தனது அவதானிப்பு, புத்திசாலித்தனம், துடிப்பான மொழி கொண்டு அபூர்வமான கதைகள் ஆக்கி இருக்கிறார். இந்த மொழிக்காகத் தான் நாம் சுஜாதாவைப் படிக்கிறோம்.


 சுஜாதாவின் மொழி எப்படியானது?
நாம் பெரும்பாலும் பேச்சுமொழியில் இருந்து தான் எழுத்து மொழியை உருவாக்குகிறோம். நடைக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் எழுத்தாளர்கள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் ஒரு வாக்கியத்தின் அமைப்பு, அதில் ஒரு சொல் அமர வேண்டிய இடம், அச்சொல்லின் தொனி ஆகியவை குறித்து அக்கறை கொள்வார்கள். அந்த மொழியை பிரக்ஞைபூர்வமாய் செதுக்கி உருவாக்குவார்கள். நீங்கள் பாலகுமாரனின் மொழியை சுஜாதாவுடன் ஒப்பிட்டால், லா.சா.ராவை சு.ராவுடன் ஒப்பிட்டால், இந்த வித்தியாசத்தை பார்க்கலாம். பாலகுமாரன் தன் மனதில் பொங்கும் மொழியை அப்படியே எழுத்தாக்குகிறார். அவர் பெரும்பாலும் டேப் ரிகார்டரில் பேசி அதை பதிவு செய்து தட்டச்சு செய்து அனுப்புவார். அவர் நாவல்கள் அவர் பேசியவை தான். ஆக அவற்றில் அவரது குரல் ஒலிக்கும். லா.சா.ராவிடமும் இந்த குரலைக் கேட்கலாம். ஆனால் சுஜாதாவிடன் மொழி இப்படி உணர்ச்சிப் பிரவாகமாய் பொங்காது. சுஜாதாவின் நடையை போல் நீங்கள் தினசரி வாழ்வில் பேசவே முடியாது. அது அவர் உருக்கி வார்த்த நடை.

சுஜாதா தன் பாத்திரத்தின் உணர்ச்சியை அவர் விவரணையில் காட்ட மாட்டார். அதை வாசகனே உணர்ந்து கொள்ள வேண்டும் என நினைப்பார். அவரது எழுத்தில் மிக மிக அரிதாகத் தான் மனவோட்டம் வருகிறது. மனதின் சஞ்சலங்களை சொல்ல வேண்டுமென்றால் சுஜாதா வசனங்களை பயன்படுத்துகிறார். அதுவும் அரிதாகத் தான்.

 இந்த உலர்வான, கச்சிதமான, புறவயமான மொழி சுஜாதாவின் தனித்துவம். இதையே நாம் அசோகமித்திரனிடமும் பார்க்கிறோம். இருவருமே நடைமுறை சிந்தனையாளர்கள். பொருண்மையான உலகை சித்தரிக்கிறவர்கள். அமெரிக்க புனைவெழுத்தால் தாக்கம் பெற்றவர்கள். அமெரிக்க மினிமலிஸ எழுத்து பாணியை தமிழில் வெற்றிகரமாய் பயன்படுத்தியவர்கள். இந்த மினிமலிசம் பத்திரிகை அறிக்கைகளின் சாயல் கொண்டது. குறைவான சொற்களில் தெளிவான புறவாழ்க்கை சித்தரிப்பை தருவது.

 அசோகமித்திரனுக்கும் சுஜாதாவுக்கும் இவ்விசயத்தில் சில வித்தியாசங்கள் உள்ளன. அசோகமித்திரன் தன் பெருமூச்சு கூட கேட்டுவிடக் கூடாது என ஒலியின்றி எழுத கூடியவர். ஆனால் சுஜாதாவிடம் தன் வாளிப்பை, தளுக்கை, புத்திசாலித்தனத்தை காட்டும் மெனக்கெடல் உண்டு. அவரது பாத்திரங்களில் யாராவது போகிற போக்கில் வண்ணதாசன் பற்றி ஒரு வரி சொல்வார்கள். லோகாதாய தத்துவம் பற்றி ஒரு சம்பாஷணை வரும். ஆங்கில நாவல்கள் ஒரு மேஜையில் சிதறிக் கிடக்கும். அவற்றின் தலைப்புகளை குறிப்பிடுவார். இதை அசோகமித்திரன் செய்யவே மாட்டார்.

அடுத்து, சுஜாதாவிடம் ஒரு விடலைத்தனம், இளமைத் துடுக்கு, பெண்ணுடலை மையமிட்ட சீண்டல் விருப்பம் உண்டு. இதை அவரது கிட்டத்தட்ட எல்லா எழுத்துக்களிலும் ஒரு சரடைப் போல் பார்க்கலாம்.

”அருண் எழுந்தான். உயரம் ஐந்தடி பத்தரை அங்குலம். பெரும்பாலான கதாநாயகிகளின் தலை வகிடும் மார்பின் உள்ளாடைகளும் சுலபமாய் தெரியும் உயரம்.” (பக். 26, கனவுத் தொழிற்சாலை)

“பாஸ்கர் இருப்பதை பாராட்டாமல் அருண் தன் டி ஷர்ட்டை கழற்றி கைலியை உதறி விட்டு நிர்வாணமாய் நடந்து டவல் ஸ்டாண்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு அறைக்குள் இருந்த வாஷ்பேஸினில் அட்டகாசமாய் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டான். … பாஸ்கர் அவனுக்கு அவசரமாய் துடைத்துக் கொள்ள மற்றொரு துண்டு தந்தான். இல்லையென்றால், இடுப்புத் துண்டை உருவி துடைத்துக் கொள்வான். (பக். 27, கனவுத் தொழிற்சாலை)”

முதல் மேற்கோளில் உள்ள voyeurism சுவாரஸ்யமானது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள அருண் படப்பிடிப்பின் போது நடிகைகளுடன் நெருக்கமாய் பழக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவனுக்கு பெண் உறுப்புகள் மீதுள்ள அக்கறை பற்றி சுஜாதா ஒன்றும் சொல்வதில்லை. அதாவது ”மார்பின் உள்ளாடைகளும் சுலபமாய் தெரியும் உயரம்” என்பதில் “தெரியும் வசதி கொண்ட உயரம்” என்றால் அந்த உயரத்தின் அனுகூலத்தை அவன் ரசிக்கிறான் என புரிந்து கொள்ளலாம். ஆனால் சுஜாதா அச்சொல்லை பயன்படுத்தவில்லை.
 பிற்பாடு அருணின் ஷூட்டிங்கின் போதான மனநிலை வெளிப்பாடுகளை காண்கையில் அவனுக்கு பெண் உடல் மீதுள்ள எந்திரத்தனமான பார்வை புலப்படும். அவனுக்கு பெண்ணுடல் அதிகம் கிளுகிளுப்பு ஏற்படுத்தாத, பழகிப் போன சதைப்பிண்டம் மட்டுமே. அதனாலே அவன் ஆபாச ஜோக்குகள் சொல்வதை விரும்புகிறான். தேனிலவுக்கு மனைவியுடன் ஸ்விட்சர்லாந்த் போகும் போது அங்கே போர்ன் படங்களை அவளுடன் பார்க்க விரும்புகிறான். அதனாலே பெண்ணின் உள்ளாடைகள் சுலபமாய் கண்ணில் படக் கூடியவனாய் இருக்கிறான்; அதை பொருட்படுத்தக் கூடியவனாய் அல்ல. இந்த சிறு வித்தியாசம் முக்கியமானது. இதையே நாம் அடுத்து அவனுக்கு தன் உடல் மீதுள்ள அந்நியப்படுதலிலும் பார்க்கிறோம். தொடர்ந்து படக்கருவி முன் அழுதும், சிரித்தும், நடனமாடியும் அருண் தன்னையே வேறுடலாய் பார்க்கும் மனநிலைக்கு வருகிறான். 

இரண்டாவது மேற்கோளில் அவன் தன் உதவியாளர் முன் நிர்வாணமாய் நடப்பது இதனாலே. உதவியாளர் அவனது தொழிலை கவனிப்பவர். அவன் தொழில் அவன் உடலை முதலீடாய் கொண்டு நடப்பது. அவனுக்கு அந்த உடல் மீது எந்த தன்னுணர்வும் இல்லை. அவன் தனக்கே அந்நியப்பட்டு இருக்கிறான். இதை சுஜாதா ஒரு சின்ன வர்ணனையால் குறிப்புணர்த்தி விட்டு நகர்கிறார்.

இந்த இரண்டாவது மேற்கோளின் நீளமும் கவனிக்கத்தக்கது. அவரது பிற வாக்கியங்களுடன் ஒப்பிடுகையில் ஏன் இவ்வாக்கியம் மிகவும் நீளமாக உள்ளது? ஏனென்றால் எதிர்பாராமல் டவலை களைந்து துணியின்றி தன் முன் செல்லும் அருண் பாஸ்கரை அதிர்ச்சியடைய வைக்கிறான். விக்கித்துப் போய் செய்வதறியாது இருக்கும் பாஸ்கரின் பார்வை நீண்டு ஒரு பாம்பு போல் அருணின் நகர்வுகளையே பின் தொடர்கிறது. அவன் பார்வையின் நீளத்தை, தன் கட்டுப்பாட்டை மீறி நிலைமை செல்வதன் பரிதவிப்பை உணர்த்த சுஜாதா இவ்வாக்கியத்தையும் நீட்டிக் கொண்டே போகிறார்.ஒரு வாக்கியத்தின் நீளத்தை அதிகரிப்பது மூலம் ஒரு பாத்திரத்தின் மனநிலையை சுஜாதா எவ்வளவு நுணுக்கமாய் காட்டுகிறார் பாருங்கள்!

சுஜாதா உவமைகளை அதிகம் பயன்படுத்த மாட்டார். உருவகம் தான் அவரது தனிமுத்திரை. அதிலும் வித்தியாசமான உருவகங்களாக தேடி பயன்படுத்துவார்.

 “மாம்பலத்தில் பார்க்கிட் ரோட்டில் அந்த வீட்டு வாசலைப் பார்த்தால் பெரிதாய் தெரியாது. பெரிய கதவு, நிறைய செடி கொடிகள் எல்லாம் சேர்ந்து சதி செய்து உள்ளே இருக்கும் வீட்டின் பிரம்மாண்டத்தை மறைத்திருக்கின்றன” (ப. 21, கனவுத் தொழிற்சாலை).
 இரண்டாவது வாக்கியத்தில் “சதி செய்து” ஒரு உருவகம். தோட்டத்து செடிகொடிகள் வீட்டை மறைக்கும் சதி செய்கிறவர்கள் போன்றவை என்பது ஒரு வித்தியாசமான உருவகம். செடிகொடி என்றால் வழக்கமாய் வணிக எழுத்தில் அதை ரொமாண்டிக்காக வர்ணிப்பார்கள். ஆனால் சுஜாதா அதற்கு ஒரு எதிர்மறையான தொனி கொடுக்கிறார் பாருங்கள்.
அவரது உவமை கூட வித்தியாசமாய் சற்றே நகர வாழ்க்கையின் பிளாஸ்டிக் தன்மை கொண்டதாக இருக்கும். இது நாவலில் பாஸ்கர் பற்றி வரும் ஒரே வர்ணனை. மிக சுருக்கமாய் பாஸ்கரின் முகத்தில் மீசை, புருவங்கள், உதடுகளைப் பற்றி மட்டுமே கூறுகிறார். நாவலில் அவன் புறத்தோற்றம் பற்றின ஒரே வர்ணனை இது தான்.

“மிக மெலிசான மீசை; மெலிதான உதடுகள் புருவங்கள், அவசரமாய் வரைந்த ஸ்கெட்ச் போன்றிருந்தது அவன் முகம்; உணர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தாத முகம்.” (ப. 21, கனவுத் தொழிற்சாலை)

“அவசரமாய் வரைந்த ஸ்கெட்ச்” எனும் உவமையே போதும் பாஸ்கரின் முகம் நம் முன் பளிச்சென தோன்றி விடுகிறது.

 பாஸ்கர் தன் முகத்தில் உணர்ச்சியை காட்ட மாட்டான் என்பதால் இது மிக பொருத்தமான அதே சமயம் சற்றே விசித்திரமான உவமை. எப்போதுமே மனம் தத்தளிக்காமல் நிலையாய் கவனமாய் இருக்கும் சுபாவம் அவனுடையது. அதாவது அருணுக்கு நேர் எதிர். கோட்டோவியத்துக்கும் ஒரே நிலைத்த உணர்ச்சி தான். ஸ்கெட்ச் என்ற சொல் வித்தியாசமாகவும் அதேவேளை பொருத்தமாகவும் உள்ளது பாருங்கள். இன்னொரு விசயம்: அவர் “ஸ்கெட்ச்” என்றே சொல்கிறார். “கோட்டோவியம்” என்றல்ல. அவருக்கு அச்சொல் தெரியாமல் அல்ல. ஆனால் ”ஸ்கெட்ச்” என்ற சொல்லின் உடனடித் தாக்கம், நகைச்சுவை, ஒட்டாத பிளாஸ்டிக் தன்மை “கோட்டோவியத்துக்கு” இல்லை. கோட்டோவியம் சற்றே சீரியஸான, நீளமான வார்த்தை. ரெண்டுக்கும் பொருள் ஒன்று தான். ஆனால் உணர்வும் தொனியும் ஒலி அளவும் வேறு.

 பொதுவாக உரைநடை எழுத்தாளர்கள் சொற்தேர்வில் பெரிய கவனம் செலுத்த மாட்டார்கள். கவிஞர்கள் தாம் கூழாக்கல்லை கையில் வைத்து உருட்டுவது போல் ஒவ்வொரு சொல்லாய் கனம் பார்த்து, ஒலி அளவு பார்த்து வாக்கியத்தில் பொருத்துவார்கள். கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுஜாதா இந்த விசயத்தில் ஒரு கவிஞனைப் போன்றே மொழி மீது பிரக்ஞை கொண்டிருக்கிறார். இந்த கவனத்தை நீங்கள் அசோகமித்திரனிடம் காண இயலாது.

மேற்சொன்ன வர்ணனையில் வாக்கியங்கள் துண்டுத்துண்டாய் இருப்பதை கவனியுங்கள். ”மிக மெலிசான மீசை; மெலிதான உதடுகள் புருவங்கள், அவசரமாய் வரைந்த ஸ்கெட்ச் போன்றிருந்தது அவன் முகம்; உணர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தாத முகம்.” ”அவனது மீசை மெலிதாக இருந்தது” என அவர் எழுத மாட்டார். வாக்கியத்தில் இருந்து தலையையும் வாலையும் துண்டித்து விடுவார். சுஜாதாவின் மொழி மிக வேகமாய் நகர்வதற்கு ஒரு காரணம் இந்த வாக்கிய அளவு.
அடுத்து வாக்கிய அமைப்பில் அவர் பெயர்ச்சொல்லை வைக்கிற இடத்தை கவனியுங்கள். ”அவசரமாய் வரைந்த ஸ்கெட்ச் போன்றிருந்தது அவன் முகம்” என்பதை சம்பிரதாயமாய் “அவன் முகம் அவசரமாய் வரைந்த ஸ்கெட்ச் போன்றிருந்தது” என்று தான் எழுதுவோம். புதுக்கவிதையில் தான் அதை திருப்பிப் போட்டு எழுதுவார்கள். அதாவது:

அவசரமாய்
வரைந்த
ஸ்கெட்ச் போன்றிருந்தது
அவன் முகம்

சுஜாதாவின் பல அழகான வரிகளை இது போல் மடித்துப் போட்டு புதுக்கவிதை ஆக்க முடியும்.

“என்.எல் பிக்சர்ஸ் லட்சுமணன் … . ஐந்தடி அங்குலத்துக்கு, குறுக்கே நிறைய சதை போட்டிருந்தார்.” (பக். 23, கனவுத் தொழிற்சாலை)

“மார்புக்கு குறுக்கே” அல்லது ”மேலுடம்பில் சதை போட்டிருந்தார்” என எழுதுவோம். சுஜாதா தலையை துண்டித்து விட்டு “குறுக்கே சதை போட்டிருந்தார்” என மேலும் சுருக்குகிறார். இது போல் தன் கதை முழுக்க சுஜாதா ஒரு அதிர்ச்சியளிக்கக் கூடிய வாக்கிய அமைப்பை பயன்படுத்துகிறார். அவரைப் படிக்கையில் தொடர்ந்து அதிர்ச்சியும் நகைச்சுவையும் முரண் உணர்வும் ஏற்பட்டபடி இருக்கின்றன. இந்த அதிர்ச்சியின் இன்பத்துக்காகவே அவரைப் படிக்கிறோம்.

சுஜாதாவின் சுருக்கமான வாக்கியங்களின் வேகம் பற்றி குறிப்பிட்டேன். அவர் ஏ.வி.எம் ஸ்டுடியோவை முகவரியின் வடிவில் வர்ணிக்கிறார் பாருங்கள்:

“ஏ.வி.எம் ஸ்டுடியோ. ஒன்பது புளோர்கள், எடிட்டிங், பாடல் பதிவு, ரிக்கார்டிங், டப்பிங், பார் புரொஜெக்‌ஷன், மழை-புயல் எஃபக்ட், 38, ஆற்காடு ரோடு, சென்னை-26”. (பக். 29)

அவர் “38, ஆற்காடு ரோடு” என எழுதும் போது தான் நமக்கு முகவரியின் வடிவமாச்சே இது என உணர்வு ஏற்படும். இந்த ஆச்சரியம் அவர் எழுத்தின் தனி இன்பம். சுஜாதாவின் எழுத்துக்குள் எப்போதுமே இந்த விளையாட்டுத் தனம் இருந்து கொண்டே இருக்கும். அவரைப் படிக்கும் போது இவ்வாக்கியம் இப்படித் தான் இருக்கும் என நாம் கணிக்க முடியாது.

“அருமைராசன் ’பொலபொல’ வென்று கண்ணீர் உதிர்த்தான். வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பெரிசாக பொட்டு இட்டிக் கொண்டு பூப்போட்ட வாயில் சேலை அணிந்து ஓட்டலுக்குள் அலட்சியமாக சென்ற ஒரு பதிவிரதை சற்று நேரம் அருமை ராசனை நின்று பார்த்து விட்டுச் சென்றாள்.” (ப. 104)
“அருமைராசன் தலையை சுவரில் முட்டிக்கொள்ள, பக்கத்து அறையில், ‘யோவ், பேசின துட்டை வெச்சுட்டு போயிரு’ என்று அதட்டல் கேட்டது.” (பக். 105)

சுஜாதாவின் ஸ்டைலின் மற்றொரு அம்சம் அவர் வாக்கியத்தை மடித்து மடித்து பயன்படுத்தும் விதம். மேலே தந்துள்ள மேற்கோளைப் பாருங்கள். இது ஒரு புதுக்கவிதை பாணி. சுஜாதாவின் சற்றே நீண்ட வாக்கியங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது பகுதியில் ஒரு சிறு அதிர்ச்சி, முரண் இருக்கும். இது வாக்கியத்தை தீவிரத்தில் இருந்து தமாஷாக மாற்றும் அல்லது அலுப்பில் இருந்து, துயரத்திலிருந்து அதிர்ச்சி நோக்கி தடம் மாற்றும்.

இறுதியாக சுஜாதாவின் கலவை மொழி. ஒருமுறை சுஜாதா தன்னிடம் ”நீங்கள் எதையெல்லாம் படிப்பீர்கள்?” என்று கேட்டதாக ஜெயமோகன் என்னிடம் சொல்லி இருக்கிறார்.
Image result for ஜெயமோகன்

“எதையும் படிப்பேன். துண்டு நோட்டீஸ், செய்தித் தாள், சுவரொட்டி, புத்தகங்கள், பத்திரிகைகள்…”.
 சுஜாதா “வெரி குட். ஒரு எழுத்தாளன் அப்படித் தான் தரப்படுத்தாமல் படிக்க வேண்டும்.” என்றாராம்.
 தமிழ் மொழி என்பது ஒன்றல்ல. அது பல வகையானது. ஒவ்வொரு இடத்திலும் தேவையும் பின்னணியும் பொறுத்து தமிழ் பல வித்தியாசமான நிறங்களைக் கொள்கிறது. இதை கவனித்து ஆர்வம் காட்டியவர் சுஜாதா. தன் கதைகளில் அவர் பலவகையான தமிழ்களை பிரயோகிப்பார்.
கீழே வரும் மேற்கோள்களை பாருங்கள் (அனைத்தும் கனவுத்தொழிற் சாலை நாவலில் இருந்து):
அ) சினிமா வசனத் தமிழ்:
அருணும் பிரேமாலதாவும் ஹோட்டல் அறையில் இரவில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
“அருண், இதுவரை நாம ரெண்டு பேரும் மத்த பேர் எழுதிக் கொடுத்து பேசிக்கிட்டு இருந்தோம். இன்னிக்கு சொந்தமாய் ‘டைலாக்’ பேசலாமுன்னுட்டு…”
“சும்மா பேசத்தானே?”
“பேசறதிலே எவ்வளவோ வகை இருக்குது. உதட்டால கண்ணால…”
“ஹோல்டான் இந்த வசனம் எதிலேயோ பேசியிருக்கோம்!”
“கனவுக் கவிதை”
“ஆமாம் கதை என்ன?” (பக். 46)

ஆ) விளம்பரப் பலகைத் தமிழ்:
விருகம்பாக்கத்தில் மனோன்மணியின் வீடுள்ள பகுதி:
“ஒரு டீக்கடை, மளிகைக்கடை, இண்டர்நேஷனல் ஸ்டீல் ஒர்க்ஸ் பெட்டி தயாரிப்பாளர்கள், அதன் பின் ‘இவ்விடம் காகிதப்பூ, உடைகள், துப்பாக்கிக் குண்டு, லினோலியம் விக் முதலியவை சகாய விலைக்கும், குறைந்த வாடகைக்கும் கிடைக்கும்… தணிக்கைக்கு கதை-வசனம்’ டைப் அடித்து தரப்படும்’ என்று ஒரு ஆம்னி போர்டு…” (பக். 51)
இ) கையெழுத்துப் பத்திரிகை தமிழ்:
ஊருக்கு சென்று அருண் கல்யாணியை அவள் வீட்டில் பார்க்கிறான். அவள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை அவன் கையில் சிக்குகிறது. அதை புரட்டிப் பார்க்கிறான்:
“அட்டைப் படத்தில் சரஸ்வதி வீணை, ஆர்ட் பை கல்யாணி. முதல் பக்கம் சமர்ப்பணம் – என் அன்புத் தாய் தந்தையர்க்கு… புரட்டிக் கொண்டே வந்தான். “நான் சந்தித்த நடிகர்” என்று அருணின் போட்டோ ஒட்டி ‘எங்கள் சினிமா நிருபர்…
உங்களுக்கெல்லாம் அருண் பிரபல நடிகர். தென்னிந்தியாவின் முக்கிய தாரகை… ஆனால் எங்களுக்கோ அவர் விஜு. … ’அவந்திபுரம் என்ற ஊரில் அருணாதித்தன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான்’ ’கெ எழுதிய அரண்மனைத் தோட்டம்’” (பக். 66-67)

ஈ: கிறித்துவத் தமிழ்
புராதான சர்ச் அது. … தாயார் சகாய மேரியின் கையில் அந்த சிறு குழந்தை ஆதாம் ஏவாளின் மூலமாக அவர்களின் வாரிசுகளுக்கு வழிவழியாக வரும் ஜென்ம பாவத்தை நீக்கி கடவுளின் ஆசீர்வாத ஞான ஸ்நானத்திற்கு காத்திருந்தது. … பரிசுத்த எண்ணெய் தடவி குருவானவர் தன் பதிவுப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு தலையை நீரில் நனைத்து, ‘லூயிஸ் டாமினிக் அருமை ராஜன் பிசாசு தன் பரிசுத்த ஆவியின் பெயரால் உன்னை நான் கழுவுகிறேன். சொல்லும்மா சகாயமேரி.’
“என்னங்க சொல்ல?”
“குழந்தைக்குப் பேச வராதில்ல? நீதான் குழந்தை இப்ப சொல்லு. பிசாசையும் அதன் ஆரவாரங்களையும் விட்டு விட்டேன்”
“பிசாசையும் அதன் ஆரவாரங்களையும் விட்டு விட்டேன்” (பக். 68)
சில நாட்களில் குழந்தை இறந்து போகிறது. மற்றொரு தேவாலயம். மற்றொரு பாதிரியார்.
”அழாதேம்மா இந்தக் குழந்தை சர்வேசுவரனுடைய தேவதை மாதிரி. இது என்ன பாவம் செய்தது? ஒண்ணுமில்லே. இதற்கு எப்பேர்ப்பட்ட மோட்ச சாம்ராஜ்ஜியம் காத்திருக்குது தெரியுமா? குழந்தை இந்த ஸ்தூல சரீரத்தை விட்டு சூட்சும சரீரமாய் அந்த நாளில் எந்திரிக்கிற போது, இதைப் பரலோகத்து தேவதைகள் எல்லாம் தங்க வாசலில் தாங்கி வாங்கிக்கிடுவாங்கம்மா.” (பக். 105)

உ) தத்துவத் தமிழ்:
“இதென்ன லோகாயதம்” புத்தகத்தைப் பிரித்தான்.
“பாண்டத்தைப் பார்த்தவுடன் இதைச் செய்த குயவன் உண்டென அனுமானம் செய்யலாம். ஆனால் உலகத்தைப் பார்த்ததும் இதைப் படைத்த கடவுள் உண்டென்று அனுமானிக்க முடியாது. ஏனெனில் முதல் பகுதியை அனுபவத்தால் உறுதிப் படுத்தலாம். …” (பக். 77)
ஊ) திருமண அழைப்பிதழ் தமிழ்
“நிகழும் புரட்டாசி மாதம், 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருச்சிக லக்னம் பொருந்திய சுபதினத்தில், என் தங்கையும், உத்தமர் கோயில் சிவசங்கரரின் ஜேஷ்ட குமாரத்தியுமான சௌபாக்யவதி கல்யாணியை… .” (ப. 107)

எ) காமிக்ஸ் தமிழ்
“ ‘டார்ஸான் நீயா?’
’ஜேன், என்ன ஆச்சு?’
ஜேன் டார்ஸானின் மார்பில் பதிந்து திடீரென்று ‘நான் ஒரு பயங்கர மனிதனைப் பார்த்தேன். பெரிய கண்கள். … கறுப்பு முட்டாக்கு’” (பக். 95)

இவற்றோடு அருமைராசனுக்கு தன் பிள்ளை இறந்த பின் அசந்தர்ப்பமாய் தோன்றும் கவிதை வரிகளையும், தன் தங்கையை திருமணக் கோலத்தில் பார்க்கையில் சுந்தரத்தின் மனதில் தோன்றும் சூழலுக்கு பொருத்தமற்ற பெண்ணுடல் வர்ணனை கொண்ட சங்கக் கவிதை வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டுமே அபத்தத்தை கூட்டுகின்றன.


சுஜாதா அளவுக்கு நம் உரைநடையை புத்துணர்வு ஊட்டியவர்கள் மிகச்சிலர் தாம். வாக்கியங்களின் வடிவிலும் சொற்களின் இடப் பொருத்தத்திலும், புதுப்புது கலவை மொழிகளைக் கொண்டு விளையாடுவதிலும் அவர் கொண்டு வந்த புத்துணர்ச்சி முக்கியமானது. தொடர்ந்து நம் மொழியை கலைத்து கலைத்து உருவாக்குவதில் அவர் ஒரு குழந்தையை போல் களிப்பு கொண்டார். மொழியை எதிர்பாராத விதங்களில் படைப்பூக்கத்துடன் விளையாட்டுத்தனத்துடன் மிமிக்றி கலைஞன் போல் பயன்படுத்துவது ஒரு பின்நவீனத்துவ பாணியே. எழுபது எண்பதுகளில் அவர் இதையெல்லாம் சோதித்து பார்த்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. இதற்காகவே நம் வரலாற்றில் அவருக்கு என்றும் தனி முக்கியத்துவம் இருக்கும்!  

நன்றி: உயிர்மை

1 comment:

MANOHARAN1980 said...

Sir, Interesting and Depth Analysis. I am expecting more on Sujatha sir's work from you.