கே. என் செந்திலின் வாசக சாலைப் பேட்டியும் கருத்துக்களும்


கே.என் செந்திலின் வாசக சாலை பேட்டியில் துவக்கத்தில் அவர் கூறும் கருத்துக்களை விடுத்து எனக்கு அவரது பேட்டி பிடித்திருந்தது. கேள்விகளும் அபாரம். இத்தகைய பேட்டிகளை (ஒரு நூல் வெளியானதை ஒட்டி அதை மையமிட்டு வெளியாகும் பேட்டிகள்) நான் ஆங்கிலத்தில் தான் கண்டிருக்கிறேன். இது ஒரு மிக நல்ல முயற்சி. குறிப்பாக, செந்திலின் நூலைப் படித்து அதில் இருந்து விமர்சனபூர்வமாய் கேள்விகள் எழுப்பியுள்ளதற்காக வாசக சாலை நண்பர்களை பாராட்டலாம். செந்திலும் ஆழமாய் நேர்த்தியாய் சுவாரஸ்யமாய் பேசியுள்ளார். படித்த பின் எனக்கு அவரது நூலை வாங்கிப் படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. இதுவே ஒரு பேட்டியின் வெற்றி.
இனி செந்திலின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் (இலக்கிய தீர்ப்புகளுக்கு) வருவோம். செந்தில் அவரது இலக்கிய கருதுகோள்களை பொறுத்தமட்டில் எனக்கு இளங்கோ கிருஷ்ணனை நினைவுபடுத்துகிறார். இருவருமே இலக்கியம் மேலான, தரமான ஒரு பண்பாட்டு நிகழ்வு என நம்புகிறார்கள். எழுத்து ஒரு சாதி அமைப்பென்றால் இலக்கிய எழுத்து தான் பிராமணன். அதன் அருகில் வேறெதையும் வைக்கக் கூடாது. அதை அசுத்ததப்படுத்தக் கூடாது. அதை பவ்யமாய், மரியாதையுடன் நடத்த வேண்டும். அதன் பூணூலை வேறு யாரும் அணிய விடக் கூடாது என வலியுறுத்துகிறார்கள்.

 இந்த கோணத்தில் தான் அவர் சரவணன் சந்திரன், சீனிவாசன் நடராஜன், அராத்து, ஆத்மார்த்தி, விநாயக முருகன், கணேச குமாரன், ஜி. கார்ல் மார்க்ஸ் என ஒரு பட்டியலைத் தந்து இவர்களை வணிக எழுத்தாளர்கள் என்றும், இவர்களை ஒருவர் பாராட்டுவது குமட்டலையும் முகச்சுளிப்பையே மற்றவர்களிடம் ஏற்படுத்தும் என்கிறார். ஆத்மார்த்தியையும் விநாயக முருகனையும் “மொழியைக் கையாளத் தெரியாத இலக்கியம் கிஞ்சித்தும் கைவரப்பெறாத நபர்கள் ” என முத்திரை குத்துகிறார். இவர்களை முன்னெடுத்தமைக்காக மனுஷ்யபுத்திரன், முருகேச பாண்டியன் ஆகியோரை சாடுகிறார். சுஜாதாவை மகத்தான படைப்பாளி என அழைக்கலாமா என பழையதொரு புகாரையும் தூசு தட்டி எடுக்கிறார். மேற்சொன்ன எழுத்தாளர்களை வெளிச்சம் பெற வைத்த இணையம் எனும் ஊடகத்தையும் சபிக்கிறார். இந்த பேட்டியில் அபத்தமாகப் பட்டது இந்த பகுதி மட்டும் தான்.
ஒட்டுமொத்தமாய், இந்த கண்டனங்களை பார்க்கையில் கே.என் செந்தில் குறித்து எனக்கு கிடைக்கும் சித்திரம் ஒரு எண்பதுகளை சேர்ந்த நவீனத்துவவாதியுடையது. திருக்குறளையும் பாரதியையும் இலக்கியவாதிகள் அல்ல என பிடிவாதமாய் மறுத்த சு.ராவுடையது. காலாவதி ஆகிப் போன ஒரு குறுகின பார்வையின் எச்சமாய் செந்தில் தன்னை வைத்துக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது.
ஒரு இடைநிலை எழுத்தாளனை இலக்கியவாதியாக கருதுவதன் சிக்கல் எனக்கு புரிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் இடையில் தரம் பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் அளவுகோலின் படி வணிக எழுத்தாளனும், இடைநிலை எழுத்தாளனும், தீவிர இலக்கிய எழுத்தாளனும் தத்தம் அளவில் நம் பண்பாட்டுக்கு வளம் சேர்க்கிறார்கள். சுஜாதாவையும் பாலகுமாரனையும் (எண்டமூரி வீரேந்திரநாத்தைக் கூட) நான் கவனமாய் படிப்பேன். அவர்கள் நமது மையப் பண்பாட்டின் ஆன்மா என்பேன். அவர்களை கவனிப்பது நம் மக்கள் தொகையின் உளவியலை, பண்பாட்டு பாய்ச்சல்களை, வினோத பாவனைகளை, சமூக உளவியல் கூறுகளை அறிய உதவும். சினிமாவிலும் கிம் கி டுக்கின் படங்களைப் போன்றே சங்கரின் படங்களையும் நான் ஊன்றி கவனிப்பேன். குளத்து நீரில் ஒரு சாம்பிள் எடுத்து வந்து அதை நுண்பெருக்கியில் துளியாக விட்டு நுண்ணுயிர்கள் அசைவதை பார்த்து வியந்து பகுத்தறியும் ஆய்வாளனின் அணுகுமுறை என்னுடையது. என்னைப் பொறுத்தமட்டில் எல்லா பாக்டீரியாக்களும் முக்கியமே – அது பாலகுமாரன் பாக்டீரியா ஆனாலும், சு.ரா பாக்டீரியா ஆனாலும் சரிசமமாய் முக்கியமானவை.
ஒரு இலக்கிய எழுத்தாளன் வணிக எழுத்தாளன் செய்யும் பணியை இன்னும் சிக்கலாய், தீவிரமாய், உக்கிரமாய் செய்கிறான் என்பதில் மாறுபாடில்லை. ஆனால் ஆழம் என்பதில் தான் நான் செந்திலுடன் மாறுபடுகிறேன். செந்தில் சு.ராவின் பள்ளியை சேர்ந்தவர் என்பதால் இலக்கியத்தில் ஆழம் ஒரு கலைஞனால் பிரக்ஞைபூர்வமாய் “செய்யப்படுகிறது” என நம்புகிறார். நான் ஆழம் ஒரு படைப்பில் தானே நிகழ்கிறது, பல்வேறு கலாச்சார, தத்துவக் கூறுகள் முயங்கும் போது இயல்பாகவே ஆழம் உருவாகிறது என நம்புகிறேன்.
 ஒரு எழுத்தாளன் தன்னை முழுக்க ஒரு பண்பாட்டுத் தளத்துக்கு சமர்ப்பிக்கும் போது அல்லது அவன் தன்னை மறந்து இயங்கும் போது ஆழம் விளைகிறது.
 ஒரு வணிக எழுத்தாளன் சமரசம் செய்வதில்லையா? ஆம். ஆனால் அதையும் மீறி அவன் படைப்பு ஒரு ஆழம் நோக்கி செல்லும். அதை கூர்ந்து வாசிக்க நமக்கு தெரிந்தால் போதும். வணிக எழுத்தை நோக்கி கண்ணை இறுக்க மூடுவது ஒரு நல்ல வாசகனின் அடையாளம் அல்ல. உ.தா, சு.ரா போன்ற ஒருவர் இடைநிலை எழுத்தாளரான தி.ஜாவையோ ரொமாண்டிக்கான எழுத்தாளரான வண்ணதாசனையோ இலக்கிய வரையறைக்குள் வராதவர்கள் என கருதியிருக்கலாம். ஆனால் இன்றைய வாசகன் இவர்களை மிகவும் ஆர்வமூட்டும் படைப்பாளிகளாய் கருதுகிறான். சொல்லப் போனாலும் சு.ராவையும் கடந்து இந்த எழுத்தாளர்கள் வாசகனுக்கு ஆர்வம் ஊட்டுகிறார்கள். ஏனென்றால் இலக்கிய அடையாளங்கள் வெறும் அலங்காரங்கள் மட்டுமே என இன்றைய வாசகன் கருதுகிறான். இதை ஒரு சீரழிவாக நான் பார்க்கவில்லை; இதுவே ஒரு சரியான வாசிப்பு முறைமை.
ஆக, இலக்கிய எழுத்து, இடைநிலை எழுத்து, வணிக எழுத்து ஆகியன முறைமைகள் மட்டுமே. எழுத்து அடிப்படையில் ஒன்று தான். அதேநேரம் இலக்கிய எழுத்துக்கும் இலக்கியமற்ற எழுத்துக்கும் வேறொரு வித்தியாசமும் உண்டு. (1) இலக்கிய எழுத்தாளன் சிலநேரம் ஒரு தத்துவவாதியாக, சிந்தனையாளனாக ஒரு புனைவுக்குள் செயல்படுவதுண்டு. காம்யூ, சார்த்தர், தஸ்தாவஸ்கி, நம்மூரில் ஜெயமோகன், சு.ரா ஆகியோரை உதாரணம் காட்டலாம். இவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமன்றி ஒரு சிந்தனைப் பள்ளியாக இருப்பார்கள்; ஒருவித அறிவார்ந்த கட்டமைப்பை புனைவுக்குள் உருவாக்குவார்கள். (2) இன்னொரு பக்கம் அசோகமித்திரன், இமையம் ஆகியோர் தமது படைப்பில் கலைநுணுக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பிரதான இலக்காக வைத்திருப்பார்கள். அழகியலே அவர்களின் பிரதியின் ஆன்மாவாக மாறும். அதாவது பண்பாட்டு ஊடுபாவல், சமூக மனம் ஆகியவை வெளிப்படுத்துவது பிரதியின் கலைநுணுக்கத்துக்கு இடம்பட்சமாகவே இவர்களிடம் இருக்கும். இந்த இரண்டு முனைப்புகளையும் நாம் வணிக/இடைநிலை படைப்பாளிகளிடம் காண முடியாது. உதாரணமாய், சுஜாதாவை சொல்லலாம். தனது மொழியில் அவர் காட்டிய அக்கறை, அவரது உளவியல் மற்றும் மொழி சார்ந்த அவதானிப்புகளே அவரை முக்கிய படைப்பாளி ஆக்குகிறது. சிந்தனாவாத ஆளுமையோ, கலைநுணுக்கமோ அல்ல. தனக்கென ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கவோ தன் படைப்பை ஒரு கச்சிதமான அழகியல் பிரதியாக்கவோ அவர் மெனக்கெடுவதில்லை.
ஒரு நாட்டுப்புற கலைஞன் சாதகம் செய்தும், பல்வேறு கலைநுணுக்கங்கள் பயின்றும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு கர்நாடக இசைக்கலைஞனைப் போல் அமர்க்களப்படுத்த முடியாது. அவன் இசையில் பிசிறுகள் இருக்கும்; அவன் குரல் எப்போதும் அவன் இச்சைக்கு ஏற்ப துல்லியமாய் ஒலிக்காது. ஆனால் மனமும் குரலும் ஒரு புள்ளியில் இணையும் வேளை அவனால் கர்நாடக இசைக்கலைஞனுக்கு இணையாக செயல்பட முடியும். வணிக படைப்பாளியும் சில தருணங்களில் இலக்கிய படைப்பாளிக்கு இணையாக உன்னதங்களை தொட முடியும். இலக்கிய படைப்பாளியிடம் தொடர்ந்து ஒருவித நேர்த்தியும் முனைப்பும் இலக்கு நோக்கிய பாய்ச்சலும் இருக்கும். அவன் கலை சுருதி சேராத போதும் இந்த இயல்புகளால் படைப்பில் ஒரு மின்சாரத்தை தக்க வைப்பான். ஆனால் வணிக படைப்பாளி கல்யாண வீட்டு சமையல்காரர் போல. கொஞ்சம் உப்பு கூடும், புளி குறையும், சோறு கூடுதலாய் குழையும். ஒன்றிரண்டு பட்சணங்கள் அற்புதமாய் இருக்கவும் செய்யும்.
இலக்கிய படைப்பாளி எப்போதும் ஆழமாய் எழுதுகிறான் என்பது ஒரு பாவனை மட்டுமே. இந்த தோற்ற மயக்கம் வணிக எழுத்தாளனிடம் இல்லை. அவன் தன் முந்தானை சரிவதை எண்ணி கவலைப்படாமல் அரங்கில் துள்ளி ஆடுவான். இலக்கிய எழுத்தாளன் தன் ஆடை நழுவாமல் எப்போதும் பார்த்துக் கொள்வான்.
ஒருவகை எழுத்து மகத்துவமானது, இன்னொன்று குப்பை, ஒன்று சாதனை, இன்னொன்று கூலிக்கு மாரடிப்பது என பாகுபடுத்துவது – என்னைப் பொறுத்தமட்டில் – சிறுபிள்ளைத்தனமானது. ஓடையும் நதியும் சாக்கடையும் நீரின் பல வடிவங்கள்; இறுதியில் கடலில் சேர்ந்த பின் அவை உப்பு நீராகின்றன. இடையில் அவை என்னவாய் இருந்தால் என்ன?
இதனால் தான் இடைநிலை எழுத்தாளர்கள் என்னை கவர்கிறார்கள். சரவணன் சந்திரனையும் விநாயக முருகனையும் நான் ரசித்து பாராட்டியிருக்கிறேன். சீனிவாசன் நடராஜனையும் கணேச குமாரனையும் ஏன் செந்தில் இவர்களுடன் இணைக்கிறார் என எனக்குப் புரியவில்லை. இருவருமே இலக்கிய எழுத்தாளர்கள். இருவரின் நாவல்களைப் பற்றியும் நான் பாராட்டி எழுதியிருக்கிறேன். தத்தம் பாணியில் சமகால இலக்கிய எழுத்துக்கு முக்கியமான பங்களிப்பாளர்கள் இவர்கள்.

ஒரு நல்ல நுணுக்கமான முதிர்ச்சியான வாசகன் தீட்டு பார்க்க மாட்டான் என்பதை மட்டும் நான் இங்கு கே.என் செந்திலுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். உதாரணமாய், வணிக எழுத்தாளராய் கருதப்பட்ட அலெக்ஸாண்டர் டூமோவின் கவுண்ட் ஆப் மாண்டிகிறிஸ்டோ நாவல் பற்றி அசோகமித்திரன் வெகுவாய் சிலாகித்து எழுதியிருக்கிறார். ஏனென்றால், அசோகமித்திரன் ஒரு நவீனத்துவர் என்றாலும் ஒரு முதிர்ச்சியான வாசகர். அவரது சாதிய மனப்பான்மை கொண்டவர் என அவரது ஒரு பேட்டியை ஒட்டி விமர்சனம் எழுந்ததுண்டு. ஆனால் ஒரு வாசகராய் அவர் தீட்டுப் பார்த்ததில்லை.

Comments

Pearl said…
கே.என்.செந்தில் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கான முதல் தீவிர,மற்றும் எதிர்பார்த்த பதிலாக நான் காண்பது இதைத்தான். நன்றி.

விமர்சனங்களுக்கான பதில்கள் இவ்வாறு இருப்பது நல்லது.