Monday, July 31, 2017

போதையில் பல வகை

Image result for addiction

போன வாரம் இங்கே ஒரு கூட்டம் நடந்தது. இணைய (போர்னோகிரபி, சமூக வலைதளங்களின்) போதை பற்றி ஒருவர் விரிவாக பேசினார். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டது தான். இணையம் நமது நரம்பணுக்களின் சர்க்யூட்டை மாற்றி அமைக்கிறது. உடனடி கிளர்ச்சிக்காய் மனம் ஏங்கத் துவங்குகிறது. எதையும் ஊன்றி பொறுமையாய் கவனிக்க முடியாமல் மனம் சிதறுகிறது, தத்தளிக்கிறது, அலைபாய்கிறது. இது தான் இணைய போதை. இது நம்மில் கணிசமானோருக்கு மிதமான அளவில் உண்டு. நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயமோகன் என்னிடம் இணைய போதை பற்றி எச்சரித்தார்.

அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கணினி மையங்களுக்கு போய் காளைவண்டி போல் ஓடும் இணையத்தை மேய வேண்டும். ஆனால் அப்போதே தினமும் மணிக்கணக்காய் இணையத்தில் மூழ்கி படிப்பை தொலைத்த ஒரு இளைஞரைப் பற்றி ஜெயமோகன் என்னிடம் கூறினார். நான் சென்னை வந்த பின் யாஹூ அரட்டை, திண்ணை இணையதளம் என தினமும் சில மணிநேரங்கள் கணினி மையத்தில் செலவழிக்க துவங்கினேன். இணைய போதை என்றால் என்ன என நான் உணர ஆரம்பிக்க கட்டம் அது. என் நண்பர் ஒருவர் தினமும் சாப்பாட்டுக்கு வைத்திருக்கும் பணத்தில் பாதியை கணினி மையத்தில் செலவழித்து விடுவார். காலை உணவு இல்லை. சிலநாட்கள் இரவு மட்டுமே சாப்பிடுவார்.

  ஆனால் இன்று இந்த மாதிரி சில மணிநேரங்களை இணையத்தில் செலவழிப்பது இயல்பாகி விட்டது. நாள் முழுக்க இணையத்திலே இருப்பது, அதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது தான் இன்று இயல்பற்றதாய் கருதப்படுகிறது.

மேற்சொன்ன கூட்டத்தில் பார்வையாளர் விவாதத்தின் போது ஒரு நண்பர் கோபத்துடன் எதிர்கருத்துக்கள் தெரிவித்தார்: “எது தாங்க போதை இல்லை? புத்தகம் வாசிப்பது மட்டும் போதை இல்லையா? ஏன் இணையத்தை மட்டும் பழிக்கிறீங்க?” உடனே அவருக்கு மறுப்பு தெரிவித்தவர்கள் “இல்லை இல்லை புத்தக வாசிப்பு நம் மூளையில், நடவடிக்கைகளில் மாற்றங்கள் உண்டு பண்ணுவதில்லை. அதனால் அது போதை அல்ல” என்றார்கள். எனக்கு அந்நண்பரின் தரப்பில் ஒரு நியாயம் உள்ளது எனத் தோன்றியது.
 நாம் புத்தக வாசிப்பு சிரமம் என்பதாலே அதில் போதை இருக்க முடியாது என எளிய முடிவுக்கு வருகிறோம். ஆனால் புத்தக அடிமைகளை நான் பார்த்திருக்கிறேன். மிதமிஞ்சிய வாசிப்பினால் எழுத முடியாமல் போனவர்கள், வேலையில் ஈடுபட முடியாதவர்கள், சமூகத் தொடர்புகள் அற்றவர்களை எனக்குத் தெரியும்.
மனிதனுக்கு திரும்பத் திரும்ப செய்யும் எதுவும் போதை தான். நானே இதற்கு சிறந்த உதாரணம். நான் ஒருவரிடம் ஆர்வமாய் ரெண்டு நாள் பேசினால் அவர்களின் அடிமையாகி விடுவேன். அவர்களே என் மனதை முழுக்க ஆக்கிரமிப்பார்கள். அதே போல் எந்தவொரு திகைப்பூட்டும் அனுபவத்துக்கும் உடனடியாய் அடிமையாகி விடுவேன். இது உங்களுக்கும் பொருந்தலாம். ஒரு சின்ன பரிசோதனை பண்ணிப் பாருங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில் ஒரே ஆளை (ஒரு அழகான / வசீகரமான ஆணை / பெண்ணை) சந்தித்து பேசுங்கள். அப்படிப் பேசுவது ரொம்ப இயல்பான பின்பு அவரை அங்கு வர வேண்டாம் எனக் கூறுங்கள். நீங்கள் மட்டும் அங்கு சென்று இருங்கள். அந்த இடமும் நேரமும் அவர் பற்றின எண்ணங்களை உங்கள் மனதில் நிரப்பும். அவரால் அவர் இன்றியே ஆட்கொள்ளப்படுவீர்கள். போதை அடிமைக்கு மது அருந்தாத போது நேர்வது போல் உங்களுக்கும் கை பரபரக்கும். கண்கள் சுற்றிலும் தேடும். லேசாய் மூச்சு முட்டுவது போல் இருக்கும்.
இந்த விசயத்தை நான் கல்லூரி மாணவனாய் விடுதியில் தனிமையில் தங்கி இருந்த காலத்தில் தான் உணர்ந்தேன். பேசுவது, பழகுவது, சும்மா இருப்பது, தூங்குவது என ஒவ்வொன்றுமே புதைமணல் போல் நம்மை இழுத்துக் கொள்ளும் போதைகள். இந்த மாதிரி போதைகள் சாத்தியமில்லாமல் போகும் போது தான் மதுவும் கஞ்சாவும் நமக்குத் தேவையாகின்றன. வாசிப்பும் மேற்சொன்ன போதைகளில் ஒன்று. என்ன சற்று அதிகமான உழைப்பை கோரும் போதை அது!
இதை எனக்குத் தெளிவாய் புரிய வைத்தவர் எம்.ஸி.ஸியில் எனது ஆங்கிலப் பேராசிரியரான திரு. நிர்மல் செல்வமணி. நான் அப்போதெல்லாம் செறிவான வாசிப்பே ஒருவனை சிறந்த எழுத்தாளனாக்கும் என நம்பிக் கொண்டிருந்தேன் (இன்றும் அப்படி பலரும் நம்புகிறார்கள்). இது பற்றி சொன்ன போது நிர்மல் என்னிடம் கேட்டார் “ஒரு கால்பந்தாட்ட வீரன் எப்படி பயிற்சி செய்கிறான்?”
நான் சொன்னேன், “மைதானத்தில் போய் பந்தை உதைத்து”
அவர் சொன்னார், “அவன் ஏன் டிவியில் கால்பந்தாட்டம் பார்த்து பயிற்சி செய்யவில்லை? ஒரு எழுத்தாளன் ஆக விரும்புபவன் வாசித்தே அப்படி ஆக முடியும் என நம்புவது ஒரு கால்பந்தாட்ட வீரன் டீவி பார்த்து பயிற்சி செய்ய முடியும் என்பது போலத் தான்.”
நான் அப்போது தான் வாசிப்பை குறைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். வாசிப்பு குறைந்ததும் நான் ஆக்கபூர்வமான ஆளாக மாறத் துவங்கினேன். இது உங்களுக்கு படிக்க விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.
வாசிப்பு உங்களை ஒரு வாசகனாக நுண்ணுணர்வு கொண்டவனாக, நீண்ட நேரம் மனம் குவிக்க முடிகிறவனாக, வாசிப்பில் கற்பனை விரிக்கக் கூடியவனாக ஆக்கும். ஆனால் இந்த திறன்களை நீங்கள் வேறு வாழ்க்கைத் தளங்களில் எளிதில் கடத்திட முடியாது. அதாவது ஒரு நுட்பமான வாசகன் ஒரு நுட்பமான சிந்தனையாளனாக, நுட்பமான எழுத்தாளனாக, கற்பனை மிக்க காதலனாக, வேலையில் நீண்ட நேரம் மனம் குவிக்க முடிகிறவனாக இருக்க அவசியம் இல்லை. சைக்கிள் நன்றாக விடுகிற ஒருவர் அந்த அனுபவம் கொண்டு காரோட்ட முடியாதே! சிறந்த வாசகர்கள் சிறந்த சிந்தனையாளனாகவோ சிறந்த எழுத்தாளனாகவோ இருக்க முடியாதது இதனால் தான். சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் முற்றிலும் வேறு வகையான பயிற்சி தேவைப்படுகிறது.
வாசிப்பு மற்றொரு செயலுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கலாம். என் முதல் நாவலை நான் எழுதிய காலத்தில் முராகாமியை வாசித்தது ஒரு சிலாக்கியமான மனநிலைக்குள் என்னை வைத்திருந்தது. எனக்கு இன்றும் நூலகத்தில் புத்தகங்கள் மத்தியில் இருந்து எழுதப்பிடிக்கும். கடந்த வாரம் இயக்குநர் ஸ்ரீகணேஷ் எங்கள் பல்கலைக்கு வந்திருந்த போது அவரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். தனது “எட்டு தோட்டாக்கள்” படத்தின் திரைக்கதையை எழுதும் போது எம்.எஸ் பாஸ்கரின் பாத்திரத்தை வடிவமைப்பதற்காய் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வாசித்து தன்னை உருவேற்றிக் கொண்டதாய் சொன்னார். இது போல் நிச்சயம் வாசிப்பு உதவும். ஆனால் வாசிப்பில் இருந்து கிடைக்கும் நுண்ணுணர்வை, அறிவை, அனுபவத்தை மற்றொரு துறைக்கு கடத்த முடியும் என நான் நினைக்கவில்லை எனச் சொன்னேன். ஒரு சிறந்த இயக்குநர் நல்ல இலக்கிய வாசகராய் இருக்க அவசியமில்லை என்றேன். வேண்டுமென்றால் வாசிக்கலாம்; கட்டாயமில்லை.
வாசிப்பின் ஒரு பிரச்சனை அது செயலூக்கமற்ற நடவடிக்கை என்பது. அதாவது அதில் ரிஸ்க் அதிகம் இல்லை. அதற்காய் நீங்கள் உங்களை இழக்கவோ மாற்றிக் கொள்ளவோ தேவையில்லை. அதனாலே ஒரு கதை எழுதிக் கற்றுக் கொள்வது போல் கதையை படித்துக் கற்றுக் கொள்ள இயலாது. ஏனென்றால் வாசிப்பது மழையில் குடை பிடித்து பத்திரமாய் நடந்து செல்வது போன்ற நடவடிக்கை. ஒரு கதையை அல்லது கட்டுரையை எழுதும் போது உங்கள் குறைகளை, போதாமைகளை, குழப்பங்களை நீங்கள் உணர்வது போல் வாசிப்பில் எதிர்கொள்வதில்லை. வாசிப்பு உங்களை கொஞ்சம் சொகுசாக வைத்திருக்கிறது. அதனாலே அது போதையாகவும் மாறுகிறது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தி.ஜாவின் “மோகமுள்” நாவலில் வருகிறது. அதில் பாபுவால் தனக்கு யமுனாவின் மீதுள்ள உக்கிரமான மோகத்தை, உன்மத்தமான இச்சையை நேரடியாய் எதிர்கொள்ள முடிவதில்லை. அவளை சந்தித்து அடுத்த சில நாட்கள் அவளைக் காணாமல் இருக்க முயல்கிறான். அதற்கு மாற்றாக, இசையில் மிகுந்த தீவிரத்துடன் ஈடுபடுகிறான். இசை அவனுக்கு சுயமைதுனம் போல் ஆகிறது. அவனது உடல் இச்சையின் தீவிரம் இசையின் வழி வடிகிறது. அதன் பின்னர் யமுனாவை விட்டு ஓடித் தப்பித்து நகரத்துக்கு வருகிறான். யமுனாவை பார்ப்பது நின்றதும் இசையும் அவனை விட்டு விலகுகிறது. இசையும் காமமும் இன்றி ஒரு வறட்டுத்தனமான பாபுவாக அவன் மாறுகிறான். அதன் பின்னர் எதேச்சையாய் மீண்டும் யமுனா அவன் வாழ்க்கையில் தோன்றுகிறாள். அவனைத் தேடி வருகிறாள். யமுனாவிடம் பழக ஆரம்பித்ததும் அவன் வாழ்க்கையில் மீண்டு இசை ஆர்வம் துளிர்க்கிறது. அவனது காமம் தூண்டப்பட்டதும் அது இசையில் மீண்டும் தளும்பி வழிகிறது. தினமும் லயித்துப் பாடுகிறான். பயிற்சி எடுக்கிறான். அவன் பாடுவதைக் கேட்டு சிலாகிக்கும் வித்வான் பாலூர் ராமு அவனுக்கு சபாக்களில் பாட வாய்ப்பு வாங்கித் தருவதாய் கூறுகிறார். அவன் பாட ஆரம்பித்தால் பெரிய வித்தகனாய் பேரெடுப்பான் என்கிறார். ஆனால் பாபுவால் இசையில் இறங்கி நீராட முடியாது. யமுனாவுக்குள்ளும் அவனால் இறங்கி நீச்சலடிக்க முடியாது. அவளுடன் முதன்முதலாய் உடலுறவு கொண்ட பின் அந்த உக்கிரம் அவனை மீண்டும் அலைகழிக்கிறது. அவன் பாடகனாவதை தவிர்த்து இந்துஸ்தானி இசை கற்க வடக்கே போக முடிவெடுக்கிறான். பாபுவால் அப்படித் தான் முடியும். காமத்தில் இருந்து இசைக்கு, இசையில் இருந்து காமத்துக்கு அவன் அலைபாய்ந்தபடியே தான் இருப்பான். அது அவன் இயல்பு. அதனால் இதை “மோகமுள்” என்றார் தி.ஜா.

தீவிர வாசகர்களும் பாபுவை போலத் தான். “என்னால முடியல, இதுக்கு மேல முடியல. நெஞ்சு அடைக்குது” என்று ஓடிக் கொண்டே இருப்பார்கள். இது போதை இல்லையா என்ன?

No comments: