தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: யார் சிறந்த கலைஞன்?

Image result for tolstoy dostoevsky

அன்புள்ள அண்ணன்,

உங்களுடைய டால்ஸ்டாய் தாஸ்தாவஸ்கி கட்டுரையை முழுவதும் வாசித்தேன். இந்த கட்டுரைக்காக எத்தனைக் கடைகளில் தீராநதியை தேடி தேடி அலைந்தேன் தெரியுமா. ஏன் என்று தெரியவில்லை இத்தனைக் காலமும் இந்தக் கட்டுரையை நான் பார்க்காதவாறு ஏதோ ஒன்று என்னை தடுத்துக் கொண்டிருந்தது. நேற்று ஒரு ரம்மியமான ஒரு உணவர்வு தாஸ்தாவஸ்கியின் படைப்புகள் மீது ஏற்பட்டது. அது குறிப்பாக தாஸ்தாவஸ்கி என்னும் ஆளுமையின் மீதே ஏற்பட்டது என சொல்லலாம். அந்த ரம்யமான உணர்வு இதுதான்: தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். இதுவும் என்னை அதிகம் பாதித்தது. மேற்கத்திய இலக்கியத்தில் நாம் ஜாய்ஸ் ஐயும் ஹெம்மிங்க்வேயையும் கலைஞர்கள் என்று நாம் முன் யோசனை எதுவுமின்றி சொல்லிவிடுவோம். நேற்றைய முன்நாள் வரை இந்த குறிப்பிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டதே கிடையாது. தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். அவன் ஒரு கலைஞன்
என்னுடைய டாபில் பக்தினின் போயட்டிக்ஸ் ஆஃப் தாஸ்தாவஸ்கியின் முன்னுரையை வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அந்த மெல்லிய உணர்வே முன்னுரையாக இருக்கக் கண்டேன். பக்தின் சொல்லுகிறார், தாஸ்தாவஸ்கி ஒரு தத்துவாதி கிடையாது. அவன் ஒரு கலைஞன். தத்துவ தரிசனங்கள் இருக்கலாம் எனினும் அவன் ஒரு கலைஞன். இதையே டால்ஸ்டாய் கலைஞனா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லையென்றுதான் சொல்லுவேன். என் ஆய்வுக்காக ஆன் லைனில் அன்னா கரினினாவைப் பற்றிய் கட்டுரைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மேத்திவ் அர்னாட்ல்டு அன்னா கரினினா நாவலைப் பற்றி எழுதின ஒரு விமர்சனக் கட்டுரையை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்னா கரினினா ஒரு கலைபடைப்பு என்று நாம் சொல்லமுடியாது என்கிறார், அனால் அது செறிவான வாழ்க்கையை தனக்குள் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். டால்ஸ்டாயை ஒரு உன்னதமான படைப்பாளி என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அந்தஸ்தை என்னால் தாஸ்தாவஸ்கிக்கு கண்டிப்பாக கொடுக்கவே முடியாது. இருப்பினும் தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன் அந்த கலைத்திறனை டால்ஸ்டாயால் அடையவே முடியாது
மீண்டும் மீண்டும் இந்த ஒரு எதிரொலிப்பு எனக்குள் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன் அவனிடம் செல். இது கட்டளையா அல்லது உந்துதலா என்பது இன்னும் எனக்கு விளக்கவில்லை. எனினும் உங்களுடையக் கட்டுரை அதை ஒரு கட்டளை என்றே ஊர்ஜிதப்படுத்திவிட்டது
நன்றி
அன்புடன்
அருள் ஸ்காட் 

அன்புள்ள அருள்
நன்றி!
தல்ஸ்தாய் ஒரு கலைஞனா என்பது சுவாரஸ்யமான கேள்வி. கரைபுரண்ட வெள்ளம் போன்ற எழுத்து இருக்க வேண்டும் எனும் பின்நவீனத்துவ வரைமுறைப் படி ஒருவேளை தஸ்தாவஸ்கி தல்ஸ்தாயை விட மேலான கலைஞன் எனத் தோன்றலாம். ஏனெனில் தல்ஸ்தாயின் நாவல்கள் முழுக்க தல்ஸ்தாயின் பார்வை வெயில் போல் படர்ந்து கிடக்கிறது. அவரது அகத்தின் ஒளிக்கீற்றுகள் மூடிய கதவுகள், ஜன்னல்கள், பாதாள அறைகளையும் துளைத்து இருளில் ஒளிப்புள்ளிகளாய் மிதக்கிறது. எங்கும் நிறைந்து நிற்கும் ஒரு கனிவான பார்வை, பிரக்ஞை அவரது குறையா என்று கேட்டால் இல்லை என்று நான் சொல்வேன். பியர் போன்ற ஒரு பாத்திரம் துயரத்தில் மூழ்கும் போதும், தன் மீட்சிக்காய் போராடும் போதும் தல்ஸ்தாய் தன்னை மறந்து எழுதுவதை நாம் உணர முடியும். ஆனால் உடனே அடுத்தடுத்த அத்தியாயங்களில் தத்தளிக்கும் படகை மாலுமி நிலைப்படுத்த முயல்வது போல் தல்ஸ்தாய் மீள வந்து விடுகிறார். “அன்னா கரினீனாவில்அன்னா தன் குற்றவுணர்வால் தன்னையே மெல்ல மெல்ல தண்டித்து தற்கொலைக்கு இட்டுச் செல்லும் இடங்களில் அதே போல் அபாரமான தன்னுணர்வற்ற நிலையில் தல்ஸ்தாயால் எழுதப்பட்டவை. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ எழுத்து பாணிகள் இரண்டிலும் பிரக்ஞையை கடந்து ஒரு கலைஞன் செயல்பட நிச்சயம் முடியும். (பின்நவீனத்து எழுத்தில் சிலநேரம் “கட்டற்ற எழுத்துஒரு பாவனையாக கட்டமைக்கப்படுகிறது. அதைக் கண்டு நாம் ஏமாறவும் கூடாது.)

நான் தல்ஸ்தாயை ஒரு கலைஞனாக புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு ”சின்ன வார்த்தை”. தல்ஸ்தாய் அதையும் கடந்தவர்.
 எங்கள் பல்கலையின் ஊடகத்துறை மாணவர்கள் என்னை பேட்டி எடுத்தார்கள். “உங்களுக்கு பிடித்த நாவலாசிரியர் யார்?” எனக் கேட்ட போது நான் தல்ஸ்தாயின் பெயரையே சொன்னேன். “தல்ஸ்தாய் கிட்டத்தட்ட கடவுளைப் போன்றவர். அவர் வெறும் எழுத்தாளர் அல்ல. அவர் உருவாக்கும் அகண்ட பரப்பில் தோன்றாத மனிதர்களே இல்லை; பேசப்படாத பிரச்சனைகளோ நெருக்கடிகளோ தொடப்படாத ஆழங்களோ இல்லை. (நீங்கள் ரஸ்கோல்நிக்கோவின் துயரத்தின், கேள்விகளின் ஒரு முன்மாதிரியை கூட தல்ஸ்தாயில் கண்டுபிடிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.) அவர் ஒரு குட்டிப் பிரபஞ்சத்தை உண்டு பண்ணுகிறார். ஒரு மேஜையில் எறும்புகளை பிடித்து வந்து போட்டு அவை குறுக்குமறுக்காய் ஓடுவதை ஒரு குழந்தை வேடிக்கை பார்ப்பது போல் தல்ஸ்தாய் உலகின் அத்தனை மனிதர்களையும் தன் நாவலுக்குள் தத்தம் போக்குகளில் அலைபாய விடுகிறார். அவர்களின் தீமைகளை, நன்மைகளை, இழிவுகளை, மேன்மைகளை சற்றே விலகி நின்று கனிவுடன் கவனிக்கிறார். இந்த கனிவு அவரை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது.” 
நீங்கள் சொல்வது சரி தான்: தஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். ஆனால் தல்ஸ்தாய் கடவுள்!
நான் தல்ஸ்தாயை எனது 17 வயதில் படிக்கத் துவங்கினேன். உங்களைப் போல் “போரும் வாழ்வும்” நாவலை திரும்பத் திரும்ப ஆங்கிலத்திலும் தமிழ் மொழியாக்கத்திலும் படித்தேன். அதன் பிறகு நான் படித்த உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் எவையும் “போரும் வாழ்வும்” நாவலின் ஒரு சிறு அத்தியாயமே எனும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. குறிப்பாய், பிரித்தானிய, அமெரிக்க இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளைப் படிக்கையில் “சின்னப் பையன்கள் சின்னதாய் ஏதேதோ முயற்சி பண்ணியிருக்கிறாங்க” என்று தான் தோன்றும். மார்க்வெஸ், லூல்போ போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் தான் நம் ரஷ்ய மேதைக்கு கொஞ்சமே கொஞ்சம் பக்கத்தில் வந்து பார்த்தவர்கள் என நினைப்பேன். எந்த நாவலைப் படித்தாலும் “அதான் தல்ஸ்தாய் இதை எழுதி விட்டாரே” என எனக்கு தோன்றாத நாள் இல்லை. உலகில் எழுதப்பட்ட, எழுதப்பட வேண்டிய அத்தனை நாவல்களையும் அவர் அந்த ஒரே நாவலுக்குள் (வெண்ணெய் விழுங்கிய கண்ணனின் வாய்க்குள் பிரபஞ்சம் போல்) அடைத்து விட்டார். நாம் இப்போது நம் படைப்புகளில் நிகழ்த்துவதெல்லாம் தல்ஸ்தாய் உருவாக்கிய மனிதர்களின் நிழல் அசைவுகளை, நடனங்களை, பாய்ச்சல்களைத் தான்.

அன்புடன்
ஆர். அபிலாஷ்


Comments