Wednesday, July 26, 2017

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: கதறி அழுவதும் மயங்கி எழுவதும்


Image result for tolstoy dostoevskyதல்ஸ்தாய்க்கும் தஸ்தாவஸ்கிக்குமான வேறுபாடுகள் என்ன? ரஷ்ய இலக்கிய வாசகர்கள் அடிக்கடி இக்கேள்வியை கேட்டுக் கொள்வார்கள். இருவரில் யார் மேல் என்ற கேள்வி அடுத்து எழும். இது கிட்டத்தட்ட விஜய்-அஜித் ரசிகர்களின் மோதல் போலத் தான் (நான் தல்ஸ்தாயையும் தஸ்தாவஸ்கியையும் இவர்களுடன் ஒப்பிடவில்லை; ரசிகர்களின் விளையாட்டுத்தனமான மோதலை குறிக்க சொன்னேன்.) ஆனாலும் இரு எழுத்தாளர்களையும் துல்லியமாய் வரையறுக்கவும் புரிந்து கொள்ளவும் இக்கேள்விகள் முக்கியம் தான்.

நான் பால்யத்தில் இருந்தே தல்ஸ்தாயின் விசிறி. எனக்கு பிரம்மாண்டமான விரிவான நாவல்கள் மீது எப்போதும் ஒரு மையல் உண்டு. அந்த விதத்தில் எனக்கு அகிலனை விட சாண்டியல்யனை பிடிக்கும். தஸ்தாவஸ்கியை நான் சற்று தாமதமாக கல்லூரிக் காலத்தில் இளங்கலையின் போது படித்தேன். முதலில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. அவரிடம் உள்ள உணர்ச்சி பெருக்கு, நாடகீயம் எனக்கு உவப்பாக இருக்கவில்லை. ஏன் “குற்றமும் தண்டனையும்” நல்ல நாவல் இல்லை என ஜெயமோகனிடம் வாதிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. தஸ்தாவஸ்கி தன் சிந்தனைகளை வெளிப்படையாய் விவாதிக்கிறார், கிட்டத்தட்ட நம் மீது திணிக்கிறார் என குற்றம் சாட்டினேன். ஜெயமோகன் என்னிடம் அந்நாவலில் உள்ள நுட்பமான உபபிரதிகளை சுட்டிக் காட்டினார்.
அடுத்து முதுகலை படிக்க சென்னை கிறித்துவக் கல்லூரி வந்த போது விடுதியில் ஒரு சீனியரின் அறையில் தஸ்தாவஸ்கியின் The Idiot நாவலை பார்த்தேன். ஏற்கனவே அந்நாவலின் ஒற்றை வரியை இணையத்தில் படித்திருந்தேன். ஒருவன் இரண்டு பெண்களை காதலிக்கிறான். இருவரையும் சமமாக விரும்புகிறான். இதுவே அவனுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அவனால் இருவரையும் ஏற்க முடியாத நிலை இதனால் ஏற்படுகிறது. இந்த அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த நாவலுக்குள்ளும் என்னால் பயணிக்க முடியவில்லை. கோடை விடுமுறையில் “கரமசோவ் சகோதரர்கள்” படித்தேன். அது எனக்கு பிடித்திருந்தது என்றால் முழுக்க உவப்பாக இல்லை. அது நாடகீயமான நாவல் என தோன்றியது. அதன் பிறகு வேலை பார்க்க துவங்கிய காலத்தில் “சூதாடி”, “வெண்ணிற இரவுகள்” ஆகியவற்றை தமிழில் வாசித்தேன். தாஸ்தாவஸ்கியிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என நான் முடிவு கட்டினேன். அவரை என்னால் ஏற்க முடியவில்லை.
 ஆனால் இதற்குள் நான் தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” மற்றும் “அன்னா கரினீனா” நாவல்களை இரண்டு முறையில் லயித்து படித்திருந்தேன். தல்ஸ்தாயிடம் சிலநேரம் போதனைகள் உண்டு என்றாலும் அவர் அதிகம் குறுக்கிடாமல் இருக்கிறார் எனப் பட்டது. மேலும் அவரது உளவியல் பார்வையில் உள்ள நுணுக்கம், வாழ்க்கையை அகலமான தளத்தில் வைத்து பார்க்கும் விதம், பலவிதமான பாத்திரங்கள் என்னை கவர்ந்தன. தல்ஸ்தாயின் பாத்திரங்களின் தத்தளிப்புகள் எனக்கு இயல்பாகவும் தஸ்தாவஸ்கியின் பாத்திரங்களின் துயரம் எனக்கும் மிகையாகவும் பட்டது. எங்கள் கிராமத்தில் மேடை நாடகங்கள் அடிக்கடி அரங்கேற்றுவார்கள். அதில் கூவி அழுது பிதற்றும் பெண் பாத்திரங்கள் எனக்கு தஸ்தாவஸ்கியை நினைவுபடுத்தினார்கள். நிஜவாழ்வில் அப்படியான மனிதர்களை நான் கண்டதும் இல்லை, இருக்கவும் முடியாது என நினைத்தேன்.
இருபத்தைந்து வயதுக்கு மேல் நான் நிஜமான வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளத் துவங்கினேன். முதலில் என் நம்பிக்கைகள் ஒவ்வொன்றாய் சிதைந்தன. எடையற்ற இறகை போல் உணர்ந்தேன். எங்கும் பிடிப்பற்று அலைந்தேன். சகமனிதர்களின் குரூரம், எனது தனிப்பட்ட தீமை, கற்பிதங்கள் குறித்து யோசித்தேன். ஏன் வாழ்க்கை எதிர்பாராமல் வந்து நம் பிடரியில் அடிக்கிறது? ஏன் தடுக்கி விழ செய்கிறது? ஏன் வாழ்க்கை நியாயமாக இல்லை? ஏன் சகமனிதர்கள் இவ்வளவு வெறுப்பை காட்டுகிறார்கள்? இந்த கேள்விகள் என்னை தத்துவ நூல்கள் பக்கம் செலுத்தின. உளவியல், சமூகவியல் என்னை ஈர்த்தன. வாழ்க்கையின் ஆதார பிரச்சனை பொருளாதார சமகுலைவு மட்டும் அல்ல என உறுதியாக தோன்றியது. அதனால் மார்க்ஸியம் மட்டும் தீர்வாக முடியாது என நினைத்தேன். மனிதனின் மனதில் அடிப்படையாக ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது. தப்பையும் சரியையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் அவன் உடனே தப்பையே தேர்கிறான். வாழ்க்கையும் குருட்டுத்தனமாய் அநீதியாளர்களை ஆதரிக்கிறது. தவறு செய்யாதவனை முடமாக்குகிறது. இளமையில் தீரா வியாதியை தருகிறது. கடுமையாய் உழைப்பவனை சதா ஏழ்மையில் வைத்திருக்கிறது. போரிலும் சாதிய வன்முறையிலும் இயற்கை பேரிடர்களிலும் மனிதர்களை கொத்துக்கொத்தாய் பலி கொடுக்கிறது. இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. அப்படி என்றால் ஏன் வாழ்க்கையை முன்னேற்றம் நோக்கிய பயணமாய் கற்பிக்க வேண்டும்? ஏன் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என நம்ப வேண்டும்? எதிலும் அர்த்தமில்லையா?
நான் மனிதனையும் வாழ்க்கையையும் தனித்தனியாய் பார்க்க துவங்கினேன். தல்ஸ்தாய் வாழ்க்கையை பெரும் வரலாற்று நகர்வாய் சித்தரிக்கிறார். பெரும் வரலாற்று துயரங்கள் மனிதனை நிதானமும் முதிர்ச்சியும் கொள்ள வைக்கும் என்றார். நமது உள்ளார்ந்த தடுமாற்றங்கள் ஒருநாள் முடிவுக்கு வரும் என்றார். ஆனால் எனக்கு பிற்பாடு வாழ்க்கை ஒரு குரூரமான வேட்டை மிருகம் என தோன்றியது. மனிதனும் எப்போது வேண்டுமெனிலும் தன்னையே அழிக்கும் இச்சை கொண்டவன் தான். வாழ்க்கை பிரேக் இல்லாமல் பாய்ந்து செல்லும் கார். அதனுள் கைகள் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டிருகும் ஓட்டுநர் தான் மனிதன். இப்படி கற்பனை செய்து கொண்டேன். வாழ்க்கை அனுபவங்கள் தொடர்ந்து எனக்கு இது தான் உண்மை என நிரூபித்தன. அப்படித் தான் நான் தஸ்தாவஸ்கி நோக்கி சென்றேன்.
இந்த கட்டத்தில் இருத்தலியம் சார்ந்த சிந்தனைகள், படைப்புகள் என்னை ஈர்த்தன. நீட்சேயையும் சார்த்தரையும் வாசிக்க துவங்கினேன். இப்போது தஸ்தாவஸ்கியை நெருங்குவது எனக்கு சுலபமாய் இருந்தது. தஸ்தாவஸ்கி வரலாற்றை வேறுவிதமாய் பார்க்கிறார். அவருக்கு வரலாறு என்பது உணர்வற்ற ஒரு எந்திரம் மட்டுமே. அவர் மனிதனை வரலாற்றின் அங்கமாய் காணவில்லை. ”தேவனின் சொர்க்கராஜ்ஜியம்” தனிமனிதனின் இதயத்திற்க்கு உள்ளே தான் என அவர் நம்பினார். வாழ்க்கையின் சாட்டை அடிகளை சகித்துக் கொண்டு அவன் தன் விடுதலையை தேடி பயணிக்க வேண்டும். தனக்குத் தானே எனும் இந்த அணுகுமுறை எனக்கு அந்த காலகட்டத்தில் அணுக்கமாய் பட்டது. வாழ்க்கை அர்த்தமற்றது தான். ஆனால் பிறரது துன்பத்தை ஏற்று, பிறரது அன்பில் கலப்பது மூலம் இந்த அர்த்தமின்மையை எதிர்கொள்ள முடியும் என அவர் காட்டினார்.
மேலோட்டமாய் பார்க்கையில் தல்ஸ்தாய் ஒரு இறைநம்பிக்கையாளர் என்றும் தஸ்தாவஸ்கி அவநம்பிக்கையாளர் என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் தல்ஸ்தாய் தான் இறைநம்பிக்கை அற்றவர். அவர் ஒரு ஒழுக்கவாதி. அவர் மதம் முக்கியம் என நம்பினார். ஆனால் கடவுளை நம்பினாரா என்பது கேள்வியே. கடவுள் இடத்தில் அவர் வரலாற்றை வைத்தார் எனலாம். ஏனென்றால் கடவுள் இருக்கும் பட்சத்தில் பிரஞ்சுப் படையெடுப்பில் உருக்குலையும் ரஷ்ய சமூகம் தத்தளிக்காமல் நம்பிக்கையை இறுக்க பற்றிக் கொண்டு மேம்பட்டிருக்கும். ஆனால் கடவுள் இல்லை என்பது தான் ரஷ்ய சமூகம் முழுக்க அப்போது கைவிடப்பட காரணம். அதனாலே அந்த சமூகத்தின் தத்தளிப்பின் தவிப்பின் பயணத்தை பதிவு செய்ய தல்ஸ்தாய் “போரும் வாழ்வும்” எழுத நேர்கிறது. வாழ்வின் போக்கோடு இயைந்து போவதே அவசியம். அதை எதிர்த்து சுயதேடலினாலோ திட்டமிடலாலோ மனிதன் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாது என அவர் சித்தரிக்கிறார். உதாரணமாய், ரஷ்யாவை ஆக்கிரமிக்க நெப்போலியன் வகுக்கும் திட்டங்கள் தோல்வியடைகின்றன. எதிர்பாராமல் சீதோஷ்ண நிலை மாற்றங்களால் பிரஞ்சு படைகள் தாமே அழிகின்றன. ரஷ்ய படையின் பிரதான தளபதி குட்டுசோவ் நெப்போலியனுக்கு நேர்மாறானவர். அவர் எந்த திட்டமிடலிலும் நம்பிக்கையற்றவர். போர் வியூக ஆலோசனைக் கூட்டங்களில் தூங்குபவர். போரை எந்த வரைமுறைப்படியும் நடத்த முடியாது. அதற்கு என்று ஒரு முனைப்பும் போக்கும் உள்ளது என அவர் நினைக்கிறார். போரின் போக்குக்கு நாம் போக முடியுமே அன்றி அதை நம் வழிக்கு கொண்டு வர முடியாது என்கிறார். அவரது இந்த ஜென் அணுகுமுறை இறுதியில் ரஷ்யா வெல்ல உதவுகிறது. தனிமனித போராட்டங்களும் இந்நாவலில் இவ்வாறே முடிகின்றன. வாழ்க்கையின் பேரலைகளை எதிர்த்து நீந்தாமல் அதில் மிதந்து செல்பவர்களே கரையேறுகிறார்கள்.
ஆனால் மனிதன் இயல்பில் குற்றத்தை நாடும் இச்சை மிகுந்தவன் என்று தஸ்தாவஸ்கி நினைத்தார். தனது துன்பங்கள் பற்றின மிதமிஞ்சிய பிரக்ஞையே அவனை குற்றம் செய்யவும் பாவத்தில் விழவும் செய்கிறது. இந்த பிரக்ஞையை அவன் கடந்தால் அவனுக்கு மீட்சி கிடைக்கும். எப்படி அதை சாதிப்பது? பிறரது துன்பங்களுக்காய் இரங்குவதே ஒரே மார்க்கம் என்றார் தஸ்தாவஸ்கி. மனிதனின் துன்பமே கடவுளின் இருப்புக்கான ஒரே நிரூபணம் என்பது தஸ்தாவஸ்கியின் பார்வை.
 முழுக்க தீமையின் பக்கம் நின்று பேசுவதால் தஸ்தாவஸ்கியின் இந்த இறையியல் நம் பார்வையில் எளிதில் படுவதில்லை. மனிதனால் நன்மையின் வடிவமாய் இருக்க முடியாது என்றார் அவர். இது தான் அவரை வழமையான கிறித்துவ சிந்தனையில் இருந்து தனித்து காட்டியது. மனிதன் சாத்தானின் சந்ததி தான். ஆனால் பிறரது தீமையை ஏற்று கருணை காட்டும் போது அவன் மீண்டு அநீதியையும் துன்பத்தையும் கடந்து போக முடியும் என்று அவர் தன் நாவல்களில் திரும்ப திரும்ப பேசினார். தஸ்தாவஸ்கியினுடையது ஒருவித இருண்மையின் இறையியல்.
தல்ஸ்தாயை போல் தஸ்தாவஸ்கிக்கு வாழ்வின் பலவிதமான சிக்கல்களை, மனித இயல்புகளை முன்வைப்பதில் ஆர்வமில்லை. அவரது பெரும்பாலான பாத்திரங்கள் ஒரே குரலில் தான் பேசும். ஒரே பிரச்சனையை பல தொனிகளில் எதிர்கொள்ளும். அன்பை பற்றி கேலியாக, நம்பிக்கையாக, அவநம்பிக்கையாக, கண்ணீர் தளும்ப, குழப்பமாக, நடைமுறையின் கரார்த்தன்மையுடன் என பலவிதமாய் எதிர்கொண்டு பேசும் பாத்திரங்களை ஒன்றாய் உறவாட, மோத விடுவார். எல்லாரும் ஒரே சிக்கலை பல திசைகளில் எதிர்கொள்வார்கள். ”கரமசோவ் சகோதரர்கள்” இதற்கு ஒரு உதாரணம். தனது உள்ளார்ந்த தீமையை மனிதன் எவ்வாறு எதிர்கொண்டு மீள்வான்?
 1) கடவுளை நாடுவதன் மூலம்
 2) நன்மையை வெறுத்து தீமையை கொண்டாடுவதன் மூலம்
 3) தீமையை அழிக்க முனைவதன் மூலம்
 4) கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், போதையின் வழி.
 இந்த ஒவ்வொரு மார்க்கத்துக்கும் தஸ்தாவஸ்கி ஒரு பாத்திரத்தை உருவாக்குகிறார். இரண்டாவது மார்க்கத்தின் உருவகம் தந்தை கரமசோவ். மிச்ச வழிகளை அவரது பிற மகன்கள் பிரதிநுத்துவம் செய்கிறார்கள். இதில் எந்த வழி வெல்லும் என நாவலின் முடிவு பேசுகிறது.
தஸ்தாவஸ்கியின் நாவல் என்பது ஒரு தீவிரமான தத்துவ விவாதத்தின் நாடகீய வடிவம் மட்டுமே, விவாதம் என்றால் என்ன? ஒரு பிரச்சனைக்கான பல காரணங்கள், தீர்வுகளை பரிசீலிப்பதற்கான ஒரு வடிவமே விவாதம். அது எப்படி பரிசீலிக்கப்படுகிறது? மாறுபட்ட கருத்துக்களை மோத விடுவதன் மூலம். ”நீயா நானா” நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிரதான சுவாரஸ்யமே மனித மனங்களின் மோதல் தானே. அதற்கு முன் விசுவின் ”அரட்டை அரங்கமும்” இதையே செய்தது. மோதல் ஏற்படும் போது நாடகம் தோன்றும். உணர்ச்சிரமான நிலைப்பாடுகள் விளையும். தஸ்தாவஸ்கியின் நாவல்களில் மிதமிஞ்சிய நாடகீயம் இதனாலே தோன்றுகிறது. இதையே நாம் தமிழில் ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை காணலாம்.
தஸ்தாவஸ்கியின் தத்துவ சரடு பிடிபட்டதும் அவரது நாடகீயமும் மிகை உணர்ச்சியும் எனக்கு ஏற்புடையதாகின. மேலும் நாவலில் மனித மனத்தை வெளிப்படையாய் விவாதிப்பது பாத்திரம் தானே ஒழிய தஸ்தாவஸ்கி அல்ல என்றும் புரிந்து கொண்டேன். தல்ஸ்தாயில் இருந்து முழுக்க மாறுபட்ட தஸ்தாவஸ்கியின் அழகியலும் கருத்துநிலையும் எனக்கு இப்போது உவப்பாகின. நான் தஸ்தாவஸ்கியின் ரசிகன் ஆனேன்.
இந்த இரு மேதைகளையும் ஒரே சமயம் படிக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவரிடம் உங்களை நீங்கள் ஒப்புக் கொடுத்து விட வேண்டும். “இடியட்” நாவலில் வருவது நாயகனுக்கு ஏற்படுவது போன்ற குழப்பம் இது: ஒரே போன்று தான் விரும்பும் இரு பெண்களில் யாரை நேசிப்பது?
என் நண்பர் அருள் ஸ்காட் ஒரு தீவிர தஸ்தாவஸ்கி வாசகர். அவர் சமீபத்தில் தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து விட்டு மிகுந்த மன எழுச்சியுடன் என்னிடம் நாவலை வாசித்து முடித்த அந்த மனநிறைவை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இந்த இரு எழுத்தாளர்களுக்குமான வேறுபாடுகள் என்ன என எதேச்சையாய் அலசத் தொடங்கினேன். இரு மாறுபாடுகள் முதலில் தோன்றின. அதில் ஒன்றை தான் இதுவரை நான் விவாதித்தது.
இன்னொரு வித்தியாசம் என்ன?
நான் நண்பரிடம் சொன்னேன் “தஸ்தாவஸ்கியின் பிரதான பாத்திரங்கள் ஒரு உச்சநிலையில் எப்போதும் இருப்பார்கள். மிதமிஞ்சிய துயரம் அல்லது கேளிக்கை அல்லது சுய அழிவு அவர்களை வழிநடத்தும். எப்போது வேண்டுமானாலும் கதறி நெஞ்சில் அறைந்து அழ தயாராக இருப்பார்கள். துயரத்தை கூவி கத்தி உலகுக்கு அறிவிப்பார்கள். முடியாவிட்டால் தேவையில்லாமல் ஒருவரை கொன்று குருதியின் மொழியில் தம்மை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தல்ஸ்தாய் நாவலில் அய்யோ என யாரும் மனமுடைந்து அழ மாட்டார்கள். அப்பா இறந்து, காதலன் கைவிட்டு, அனாதையாக்கப்பட்டு, போர்க்கைதி ஆனாலும் கூட நிதானம் தவற மாட்டார்கள். முடியாத பட்சத்தில் துக்கத்தில் சற்று நேரம் மயங்கி விழுந்து விட்டு எழுந்து கண்ணியமாய் நம்மிடம் பேசுவார்கள்.

நன்றி: தீராநதி


No comments: