Sunday, July 16, 2017

நாவல் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது…

Image result for tolstoy
தல்ஸ்தாய்

சமீபத்தில் ஒரு நண்பர் தான் எழுதி வரும் நாவலைப் பற்றி பேசினார். “எவ்வளவு பக்கம் எழுதியிருக்கீங்க?”
“ஒரு நூறு பக்கம் போல”
“இன்னும் எவ்வளவு பக்கம்?”
“30 பக்கம்”
நான் அவரிடம் கூடுதலாய் ஒரு 120 பக்கங்களாவது எழுதக் கேட்டுக் கொண்டேன். இரண்டு காரணங்கள்.

1)   நாவல் என்பதன் சுவாரஸ்யம் கதையில் இல்லை. சிறு சிறு சம்பவங்களை நுண் தகவல்கள் கொண்டு விரித்தெழுதுவதிலே உள்ளது. அதைத் தான் வாசகன் சிலாகிக்கிறான். தல்ஸ்தாய் தனது போரும் வாழ்வும் நாவலின் துவக்கத்தில் ஒரு பிரபுக்குடும்பத்தில் நடக்கும் விருந்தைப் பற்றி விரிவாக எழுதுவார். அதை இளமையில் படிக்கும் போது எனக்கு அவ்வளவு குதூகலமாய் இருந்தது. கதை சொல்வதில் குறியாக இருக்கும் சில எழுத்தாளர்கள் ”விருந்து கோலாகாலமாய் நடந்து முடிந்தது” என ஒற்றை வரியில் அதை கடந்து விடுவார்கள். அது நாவல் எழுத்துக்கு நேர் எதிரான பாணி.
Image result for காடு ஜெயமோகன்

 ஜெயமோகன் தன் “காடு” நாவலில் மையப் பாத்திரம் காட்டில் தொலைந்து போகும் இடத்தை ஒரு தனி அத்தியாயமாய் எழுதியிருப்பார். அது போல் பல்வேறு சிறு சிறு காட்சிகளை அபாரமான நுண் விவரங்களுடன் கவித்துவத்துடன் விரித்து எழுதியிருப்பார். இக்காட்சிகளையே வாசகர்கள் கொண்டாடினார்கள். அந்நாவலின் கதையை நீங்கள் மூன்று அத்தியாயங்களில் முடித்து விடலாம். ஆனால் மூன்று அத்தியாயங்களை 25 அத்தியாயங்களாய் இலை விரித்து விருந்து பரிமாறுவது தான் நாவல் எழுத்து.
Image result for கரைந்த நிழல்கள்

சுருக்கமான நாவல்கள் சாத்தியமே. ஆனால் அசோகமித்திரன் போன்ற அபாரமான கலைஞர்கள் மட்டுமே “கரைந்த நிழல்கள்” எழுதி வெற்றி பெற முடியும். அந்நாவலில் அவர் 30 பக்க அத்தியாயத்தை 8 பக்க அத்தியாயமாய் சுருக்கி இருப்பார். வாசிக்கையில் நம் மனதில் சிறு அத்தியாயங்கள் ஒரு பறவை இறகுகளை தடதடத்து விரிப்பது போல் அகன்று விஸ்தாரமாகும். அதாவது அசோகமித்திரன் 150 பக்க நாவல் எழுதுவதில்லை. 300 பக்கங்களை 150 பக்கங்களாய் சுருக்குகிறார். அவரை அடுத்து இந்த கலை கைவரப்பெற்றவர் இமையம் மட்டுமே. மற்றவர்கள் விரிவாய் எழுத முயல்வதே பாதுகாப்பானது.
2)   நாம் கணினியில் எழுதும் நாவல் பிரசுரமாகும் போது 30% பக்கங்கள் எண்னிக்கையில் குறைந்து விடும். கையெழுத்துப் பிரதி என்றால் இன்னும் குறையும். 100 பக்கங்கள் 60 பக்கங்களாகும். இப்படி எழுதி விட்டு தாராளமாய் நீங்கள் அந்த பிரதியை திருத்தவும் தேவையில்லாத இடங்களை அகற்றவும் முடியாது. ஆனால் 250 பக்கங்கள் எழுதி விட்டு 180 ஆக சுருக்கலாம்.
நான் மேலே குறிப்பிட்ட நிலைமை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சாருவைப் பின்பற்றி எழுதி வரும் இளம் (பின்நவீனத்துவ) எழுத்தாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் நாவல் மெர்குரிரை தரையில் சிந்தியது போல் இயல்பாகவே நெகிழ்வாக வடிவமற்ற வடிவம் கொண்டதாய் இருக்கும். நீண்ட கவிதையுடன் இந்நாவல்களை ஒப்பிடலாம். ஆக, அவர்கள் நாவல்கள் 100 பக்கங்கள் என்றாலும் கூட மனதுக்குள் விரிவு பெறும்.
தற்போதைய இளம் எழுத்தாளர்களில் விநாயக முருகன் இயல்பிலேயே விரிவான களத்துடன் நாவல் எழுதக் கூடியவர். காரணம் அவர் (சமகால) வரலாற்றை எடுத்துக் கொள்வது. வரலாறு ஒரு நாவலுக்கு சுலபத்தில் நாவலுக்கான இயல்புகளை கொடுத்து விடும்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் நாவலை புதிதாய் எழுத முயல்கிறவர்கள் ஒன்று சிறுகதை அல்லது கவிதை வடிவில் அதிகம் பழகுகியவர்கள். அல்லது பேஸ்புக்கில் சிறு சிறு பத்திகளாய் எழுதுகிறவர்கள். அவர்கள் நாவல் என்பது சற்றே பெரிய கதை என தவறாக புரிந்து கொள்கிறார்கள். கதையை வேகமாய் சுவாரஸ்யமாய் நகர்த்த எத்தனிக்கிறார்கள். இது சிறுகதையின் அல்லது பேஸ்புக் கதையின் பார்முலாவை நாவலில் பிரயோகிப்பதாகும். இம்முயற்சிகள் வெற்றி பெறாது!

1 comment:

Anonymous said...

I'm more tһаn happy to uncover tһіѕ site.

I wanteԀ to tһank you for оnes time for
thiss рarticularly fantastic read!! I definitely likked every paгt of it ɑnd Ι
hаѵe you saved too fav to lο᧐k at neew infоrmation on your blog.