பெங்களூர் வாசம்


நான் ஒரு சோம்பேறி என்பதால் ஒரு முக்கியமான தகவலை நண்பர்கள் பலருக்கும் தெரிவிக்காமல் விட்டு விட்டேன். ஒன்றரை மாதங்களுக்கு முன் சென்னையை பிரிந்து பெங்களூர் வந்து விட்டேன். இங்கே கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவி பேராசிரியராக வேலை.
முகநூலிலாவது ஒரு தகவல் போடலாம் என்றால் “நாளை பார்த்துக் கொள்ளலாம்” என தள்ளி வைத்து தள்ளி வைத்து ஒரு மாதம் கடந்து விட்டது. இலக்கிய கூட்டத்தில் பேசுவதற்காய் இரண்டு மூன்று நண்பர்கள் அழைத்து கேட்க அவர்களிடம் சொல்லி ஆச்சரியப்படுத்தினேன். இது நியாயமில்லை என்பதால் இப்போது எழுதுகிறேன்: இனி சென்னை கூட்டங்களில் என்னைப் பார்க்க முடியாது.

 என் சொந்த ஊரான தக்கலை, பத்மநாபபுரத்தை விட எனக்கு சென்னையில் நண்பர்கள் பல மடங்கு அதிகம். 17 வருடங்களில் அந்த ஊரோடு பின்னிப் பிணைந்து விட்டேன். பெங்களூருக்கு வந்தது கோழிக்கூட்டில் இருந்து வெதுவெதுப்பான முட்டை குளிர்சாதனப்பட்டிக்குள் வந்து சேர்ந்தது போல் இருக்கிறது: இங்கே அந்த உற்சாகமூட்டும் வெம்மை இல்லை; ஆட்களிடம் கொதிப்பும் நாடகீய கோபமும் உணர்வுத் தூண்டலும் இல்லை. விட்டால் நாள் முழுக்க தூங்கலாம் எனத் தோன்ற வைக்கும் இதமான குளிர்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆசிரியத் தொழிலுக்கு மீள்வது உற்சாகம். இங்கு வேலைக்கு சேரும் முன் ஆளாளுக்கு எச்சரித்தார்கள். வேலைப்பளு, மாணவர்களின் திமிர்த்தனம் என. நேர்முகத்தில் கூட சொன்னார்கள். உலகிலேயே மிக சொகுசான வேலை ஆசிரியர்களுடையது என்றேன் பதிலாக. அவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள்.
 நான் சொல்வது உண்மை. பல சின்ன வேலைகள் மிகக் கடுமையானவை. இரவுநேர கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிக்காக முன்பு விண்ணப்பித்து அந்த வேலையும் கிடைத்தது. அதன் சிரமங்களை புரிந்து கொண்டேன். உயிர்மையில் சப் எடிட்டராக இருப்பது கூட ஜெ.என்.யுவில் பேராசிரியராக இருப்பதை விட அதிக நெருக்கடி கொண்ட பணி. கிரைஸ்டில் வேலை பார்த்த இந்த சொற்ப காலத்தில் என் எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் படித்து விட்டு மூன்று நான்கு மணிநேரம் பேசுவது ஒன்றும் சிரமம் இல்லை. அதுவும் மாணவர்களை அசர வைப்பது எளிது. அவர்கள் எதிர்பாராத வகையில் கேள்விப்பட்டிராத ஒரு தகவலை நைஸாக சொல்லி விட வேண்டும். பெண்கள் குழந்தைகளாக இருப்பதை ஆண்கள் விரும்புவதை, அதனால் அந்த குணம் மரபணு ரீதியாக பெண் மொழியில் வெளிப்படுவதை ஒரு வகுப்பில் குறிப்பிட்டேன். உடனே பல மாணவிகள் அதை மறுத்து தலையாட்டினார்கள். அடுத்த நொடியே அதை விடுத்து eternal puppyhood, நாய்கள் ஏன் வளர்ந்த பின்னரும் காது தொங்க குட்டி நாய் போன்றே தோன்றுகின்றன என பேசினேன். வாயைப் பிளந்து கேட்டார்கள். உண்மையில் பேராசிரியராக இருப்பது பேஸ்புக்கில் எழுதுவதை விட எளிது.
இங்கு பெரும்பாலும் படிப்பில் வெகுசமர்த்தாக உள்ள மாணவர்களே இடம் பெறுகிறார்கள். (இவர்களிலும் உதவாக்கரைகள், ஆர்வமற்றவர்கள், சோம்பேறிகள், ஆணவமும் குறும்பும் மிகுந்தவர்கள் என ஒரு சாரார் இருக்கிறார்கள்.) குறிப்பாக, நான் சமூகவியல், உளவியல் படிக்கும் மாணவர்களின் வகுப்பொன்றுக்கு (ஆங்கிலம்) கற்பிக்கிறேன். அபாரமான மாணவர்கள். மீனா கந்தசாமியின் கவிதை ஒன்று. அதற்கு முன்னோட்டமாய் லூயி டூமோவின் Homo Hierarchicus மற்றும் அம்பேத்கரின் The Annihilation of Caste ஆகிய நூல்களின் சாரமான கருத்துக்களை இரு வகுப்புகளிலாய் விவாதித்தேன். மாணவர்களின் கூர்மை, பங்களிப்பு, ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தன. வகுப்பு முடிந்த பின்னரும் கேள்விகளால் அம்புப்படுக்கை செய்து என்னை படுக்க வைத்து விடுகிறார்கள். நான் முன்பு குருநானக் கல்லூரியில் ஒரு வகுப்பில் “பெரியார் என்றால் யார்?” எனக் கேட்டேன். 70 பேர்களில் ஒருவருக்குக் கூடத் தெரியவில்லை. இங்கேயோ தமிழ்மண்ணிலேயெ கால் வைத்திராத மாணவர்களுக்கு பெரியாரைத் தெரிகிறது.
முன்பு நான் செய்து வந்த வேலைகளில் ஒரு நிமிடம் கூட வேறு சிந்தனையில் மனம் தடமாறக் கூடாது. எந்திரம் போல் ஒன்றையே செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் கல்லூரி வேலையில் வசதி நிறைய படிக்கலாம் என்பது. மூன்று மணிநேரம் வகுப்பு என்றாலும் மீதமுள்ள மூன்று நான்கு மணிநேரம் படிக்கவோ எழுதவோ முடிகிறது. அஸைன்மெண்ட், தேர்வுத்தாள் திருத்துவது, பாடத்தை படித்து வகுப்புக்காய் தயாரிப்பது, துறை சார்ந்த கூட்டங்கள், பாடத்திட்ட வரைவு தயாரிப்பது என பல்வேறு உபரி வேலைகள் உண்டு தான். ஆனாலும், இவற்றையெல்லாம் முடித்து விட்டு, எனக்கு வாசிக்க நேரம் கிடைத்து விடுகிறது.
 வேலைப்பளு அதிகமான நாட்களில் மாலையில் நான்கு மணிக்கு மேல் நூலகத்தில் தங்கி விடுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முன்பு வேலையிடத்தில் படிக்கவோ எழுதவோ முடியாது. வீட்டில் எனக்கென நிரந்தர எழுதுமிடம் இல்லை. நிதானமாய் படித்து எழுத கோட்டூர்புரம் நூலகம் போக வேண்டும். காபி டே போகலாம். முடியாவிட்டால், மதியம் அலுவலகம் போகும் வழியில் என் பைக்கை சாலையோரம் நிறுத்தி விட்டு ஒரு டீ வாங்கி குடித்தபடி பைக்கில் இருந்த நிலையில் லேப்டாப்பில் எழுதுவேன். இப்போது அந்த இடப்பிரச்சனை இல்லை. நான்கு மணிக்கு எல்லாரும் போன பின் நான் துறையில் தனியாக 7-8 வரை இருப்பேன். பயமாக இருந்தால் (எனக்கு பேய் பயம் அதிகம்) கிளம்பி பல்கலைக்கழக நூலகம் செல்வேன்.
சீதையும் லட்சுமணனும் அனுமனும் (என் நாய் ஜீனோ) இன்றி இங்கு இலங்கையில் தனித்திருப்பதால் வீட்டுக்கு போகவே மனம் வருவதில்லை. காலை 8 மணியில் இருந்து இரவு 7 வரை பல்கலைக்கழகத்திலேயே கூடு கட்டி இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் வேலையிடத்தில் இவ்வளவு நேரம் கழிப்பது இதுவே முதன்முறை.
ஆசிரிய வேலையில் மற்றொரு வரப்பிரசாதம் மாணவர்களின் பிரியமும் உரையாடலும். நாள் முழுக்க நூற்றுக்கணக்கானோருடன் பேச முடிகிறது. அதுவும் எழுத்தாளன் என்றால் தனி மரியாதை. ஒவ்வொரு முதல் வகுப்பிலும் என்னை அறிமுகப்படுத்தும் போது நான் எட்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன் என குறிப்பிடும் போது தவறாது மாணவர்கள் கைதட்டுகிறார்கள். எட்டு புத்தகங்களா என வியக்கிறார்கள். நான் நினைப்பேன் “ஜெயமோகன், சாரு, எஸ்.ரா எல்லாம் இங்கு தோன்றி தமது நூல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டால் இந்த மாணவர்கள் மயக்கம் போட்டு விடுவார்கள்” என. எழுத்து வட்டத்தில் நாம் புத்தக பிரசுரத்தை ஒரு தேவையற்ற பாரமாய் கருதுகிறோம். ஆனால் இங்கு அதை பெரும் சாதனையாக கருதுகிறார்கள்.
இங்கே ஆய்வுக் கட்டுரை, நூல்கள் எழுத ஊக்குவிப்பும் நிதியுதவியும் தாராளம். Monograph எனப்படும் ஒரே தலைப்பிலான சிறு ஆய்வு நூல் ஒன்று எழுத திட்டமிட்டிருக்கிறேன்.
 இரு வாரங்களுக்கு முன் ஊடகத் துறையின் கூட்டமொன்றில் பேச அழைத்தார்கள். பிளேட்டோவின் Euthyphro பற்றி பேசினேன். தத்துவம் பற்றிய என் முதல் உரை. சாக்ரடீஸ் தர்க்க விவாதம் மூலம் நமது அன்றாட நம்பிக்கைகளின் பிழைகளை எப்படி சுட்டிக் காட்டுகிறார் என விளக்கினேன்.
இப்படி சென்னையையும் குடும்பத்தையும் பற்றி மனம் அழற்றுவதை மறக்க முடிந்தளவு பரபரப்பாக இயங்குகிறேன். இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.
நான் முன்பு வேலை செய்த குருநானக் கல்லூரியில் வகுப்புகள் பெரும்பாலும் தரைத்தளத்திலேயே இருக்கும் என்பதால் என் வண்டியிலேயே வகுப்பு வாசல் வரை போய் விடுவேன். அதன் பிறகு பணி புரிந்த கல்லூரியின் கட்டிட அமைப்பு வட்டவடிவிலானது. பலதளங்களிலானது. ஒரு வகுப்புக்கு செல்ல மின் தூக்கில் ஏறி முட்டி வலிக்க நடந்து செல்ல வேண்டும். இரு வகுப்புகளுக்கு இடையிலான ஐந்து நிமிடங்களில் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை. புகார்கள் எழுந்தன. நான் வேலையை விட்டு விட்டு முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தேன். அதன் பிறகு அடுத்து ஆசிரியப் பணியை எப்படித் தொடரப் போகிறேன் என பயமாக இருந்தது. ஏனென்றால் பெரும்பாலான கல்லூரிகளில் அமைப்பு இப்படித் தான் இருக்கிறது. கிறைஸ்டிலும் அப்படியே. ஆனால் கிறைஸ்டில் ஒரு வசதி எல்லா கட்டிடங்களும் மாற்றுத்திறனாளிகள் நுழையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மின்சார சக்கர நாற்காலி ஒரு வரமாய் அமைந்து விட்டது. அதில் அமர்ந்து மொத்த வளாகத்தையும் (பிள்ளையார் உலகை சுற்றினது போல்) சுற்றி வந்து விடுகிறேன். இந்த சக்கரநாற்காலி வாங்க பண உதவி செய்த நண்பர்களையும் என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளரையும் இந்த தருணத்தில் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். வகுப்பில் எனக்கு நின்று பேசவே விருப்பம். பெரிய வகுப்புகள் என்பதால் (80-100 மாணவர்கள் வரை) ஊடாக அவ்வப்போது நடந்து மாணவர்களை வேவு பார்க்க வேண்டும். ஒரு வகுப்பு முடிந்ததுமே என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு இடுப்பு மரத்து விடும். சக்கர நாற்காலி தான் அப்போது பெரிய ஆறுதல்!
இங்குள்ள சகபணியாளர்கள் வித்தியாசமானவர்கள். பார்த்த அடுத்த நிமிடமே ஏதோ யுகாந்திரமாய் பழகியது போல் பேசுகிறார்கள். ஒரே வாரத்தில் பல நல்ல நண்பர்களை சம்பாதித்து விட்டேன். ஒரு நிமிடம் கூட நான் தனியாய் உணர அவர்கள் விடுவதில்லை.
பெங்களூரில் நான் அதிகம் சுற்றினதில்லை. ஜெ.பி நகரில் இருந்து பனேர்கட்டா சாலையில் டயரி சர்க்கிள் வரை போய் வருகிறேன். இந்த குறுகின பயணத்தில் நான் அறிந்து கொண்டதென்னவென்றால் இங்குள்ள வாகன ஓட்டிகள் பயங்கர நிதானமாய் இருக்கிறார்கள். வரிசையில் போகிறார்கள். இடதுபக்கம் திடுதிப்பென ஓவர்டேக் செய்வதில்லை. வாகன நெருக்கடி அதிகமாகும் போது நெருக்குகிறார்கள் தாம். ஆனால் சென்னை அளவுக்கு மோசமில்லை. சென்னையில் நாம் கால்களை சற்றே அகட்டினால் அதன் வழியே ஒருவர் சைக்கிளை நுழைப்பார். இங்கே என்னை இன்னமும் சென்னையும் நியாபகப்படுத்துவது ஆட்டோக்காரர்கள் தாம். அவர்களை திசைகளை கடந்தவர்களாக இருக்கிறார்கள், எங்கு போனாலும்.
நான் ஒரு தேநீர் வெறியன். சென்னையைப் போல் இங்கு தேநீர்க் கடைகள் இல்லை. (ஆனால் பார்கள் ஏராளம்.) தேநீரை பேக்கரிகளில் பிளாஸ்கில் வைத்து தருகிறார்கள். ஆரம்பத்தில் இது குறித்து வருத்தம் இருந்தாலும் அந்த டீ நன்றாகவே இருக்கிறது. சொல்லப் போனால் சென்னையை விட இங்கு தேநீர் சுவையாக இருக்கிறது. நல்ல கெட்டியான பால். தேநீரில் அதன் மெல்லிய நெய்வாசனை அடிக்கிறது.
இங்கும் நான் பேலியோ உணவு முறையையே பின்பற்றுவதால் உணவு சார்ந்த அவதிகள் இல்லை. காலையில் ஒரு ஆப்பிள். நடுநடுவே காப்பி, தேநீர், மதியம் ஒரு நேந்திரம் பழம். இரவில் மூன்று முட்டைகள் அல்லது கொஞ்சம் சிக்கன். இதை வைத்து எங்கு போனாலும் சமாளித்து விடுவேன்!

தனிமை தான் இங்கு ஒரே சிக்கல்! வேலை, வாசிப்பு, எழுத்து இதை விட்டால் எனக்கு இன்னொரு உலகம் இல்லை. அந்த இன்னொரு உலகில் என் நாய்க்குட்டியும் என் மனைவியும் மகனும் இல்லை. மனம் கனத்தால், கசந்தால் போய் கதவைத் தட்ட மனுஷ்யபுத்திரன் வீடு இல்லை. சோர்வான புன்னகையையும் இனிய குரலுமாய் வரவேற்க அவர் இல்லை. அந்த வெறுமையை தான் தாங்க முடியவில்லை.

Comments

gomathy said…
good decision. Best of luck.
S.Selvaraj Kolkata
Senthil Prabu said…
Welcome to Bengaluru!! Im in whitefield.

I will come and meet you oneday.. Hope you are keeping the same no.
வாழ்த்துக்கள் அபிலாஷ் ! (புதிய வேலைக்காக)
உங்களுக்காய் மிகவும் சந்தோசப்படுகிறேன்.