Tuesday, June 27, 2017

அசோகமித்திரன்: “ஏன் என்னைப் போய் பார்க்க வரீங்க?” -

  Related image
அசோகமித்திரனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் அவரைப் படிக்கலாம். யாரும் சுலபத்தில் நுழையும் அளவுக்கு லகுவான கதைமொழி அவருடையது. ஆனால் இலக்கியத்தை நுணுகி வாசித்து பழகாதவர்களுக்கு அவரது கதையை படித்து முடித்ததும் கூட்டத்தில் ஏதோ ஒரு மிருதுவான பெண் உடலை உரசிய உணர்வு இருக்கும். கையில் கிட்டியும் கிட்டாத ஒரு நுணுக்கமான அனுபவமாக அவரது கதை தோன்றும்.
இலக்கிய எழுத்துக்கள் பழகும் முன்னரே அவரை வாசிக்க துவங்கிய எனக்கு இந்த உணர்வு தான் ஏற்பட்டது. அவரது எளிமையான, அலங்காரமற்ற, அங்கதமும் கரிப்புணர்வும் கலந்த மொழி வெகுவாக கவர்ந்தது.

அசோகமித்திரனின் மொழி தனித்துவமானது என அக்காலத்தில் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எண்பதுகளில் அவரது மொழி பல எழுத்தாளர்கள் மீது தாக்கம் செலுத்தியது என்றும் படித்திருக்கிறேன். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த காலத்தில் தான் எனக்கு அசோகமித்திரனின் மொழியின் மூலம் ஹெமிங்வே மற்றும் ரேமண்ட் கார்வர் என புரிந்தது. இருவரின் பத்திரிகைத்தனமான மினிமலிச மொழி மற்றும் ஆல்பர்ட் காம்யுவின் இருத்தலியமும் கலந்தால் அசோகமித்திரன் தோன்றுகிறார் என ஒரு வரையறையை அப்போது உருவாக்கிக் கொண்டேன். அசோகமித்திரனை ஒரு விமர்சன அணுகுமுறையுடன், தர்க்க மனதுடன் நான அணுக ஆரம்பித்தது அப்போது தான். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு அவரை நேரில் சந்தித்து உரையாடிய நாட்களில் அவரைப் பற்றின இந்த தர்க்கப் பார்வை எனக்குள் முழுக்க மாறியது. பதின் வயது துவங்கி இப்போது முப்பதுகளிலான இந்த காலகட்டம் வரை அசோகமித்திரன் குறித்த எனது பார்வை தொடர்ந்து மாறி வந்திருக்கிறது. அதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன். சில எழுத்தாளர்களை சந்திக்காமல் இருந்தால் அவர்களை அறிவது இன்னும் சுலபமாகும். அசோகமித்திரன் அப்படி அல்ல. அவரது எழுத்தும் ஆளுமையும் ஒன்று தான். அவர் தான் அவர் எழுத்து.
கல்லூரிக் காலத்துக்கு பிறகு பல சந்தர்பங்களில் அசோகமித்திரனை மீள மீள படித்து வந்தேன். நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்த காலத்தில் அசோகமித்திரன் எவ்வளவு உன்னதமான கலைஞர் எனும் உணர்வு எனக்கு அழுத்தமாக ஏற்பட்டது. சிறுகதை என்பது கவிதையை போன்ற கற்பனையை ஒரு புள்ளியில் குவிக்கும் சற்றே அரூபமான கலை. அசோகமித்திரன் முழுக்க நடைமுறை வாழ்வின் அல்லல்கள் பற்றி எழுதும் பெரும் விருப்பம் கொண்ட கதையாளர். பொதுவாக நடைமுறை சிக்கல்களை பற்றி அதிகம் தமிழில் எழுதியவர்கள் சமூக எதார்த்தவாதிகள் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள். உதாரணமாய், நீல பத்மநாபன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோரை சொல்லலாம். இவர்களின் கதைகள் எறும்புத் தின்னி போல பூமியை சுரண்டி சிறு சிறு பூச்சிகளை தேடிக் கொண்டிருக்கும். பறந்து மேலெழாது. இன்னொரு பக்கம் மௌனி, லா.ச.ரா, சு.ரா போன்றவர்கள் அதிகமும் மனவெளியில் திளைப்பவர்கள். வயாக்ரா சாப்பிட்டது போன்று இக்கதைகள் நடைமுறை உலகுடன் தொடர்பற்ற அசந்தர்ப்ப விரைப்பு நிலையில் மிதந்தபடி இருந்தன. நடைமுறைவாதமும் கவித்துவமும் தமிழில் இப்படி இருவேறு துருவங்கள். இந்த இரு உலகுக்குமான ஒரு அபூர்வ இணைப்புப் புள்ளியாய் அசோகமித்திரன் இருந்தார். அசோகமித்திரனிடம் தான் அன்றாட வாழ்வியல் துயரங்கள் ஒரு கவிதைக்கான உச்சத்தை அதிசயமாக அடைந்தன. ஒருவன் கார் பழகும் போது கியர் மாற்ற வர மாட்டேன் என்கிறது. எவ்வளவோ முயல்கிறான். முடியவில்லை. வெறுத்துப் போகிறான். ஒருநாள் எதேச்சையாய் காரை ஓட்டி வரும் போது ஒரு திருப்பத்தில் கார் சட்டென அவர் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. அழகாய் கியர் விழுகிறது. இது ஒரு அன்றாட நடைமுறை நிகழ்வு. நம்மில் பலருக்கும் இது போல் அனுபவங்கள் இருக்கும். அசோகமித்திரன் இதை சிறுகதையாக்கும் போது கார் வசப்படும் அனுபவத்தை ஒரு மனத்திறப்பாக, ஒரு எளிய தரிசனமாய், வாழ்க்கையில் எதேச்சையாய் நாம் எதிர்கொள்ளும் அதிசயங்களின் குறியீடாய் மாற்றுகிறார். தமிழின் மற்றொரு சிறந்த நடைமுறைவாத எழுத்தாளரான புதுமைப்பித்தனால் கூட இவ்வளவு அனாயசமாய் அன்றாட வாழ்வின் எளிய விசயங்களை குறியீடாக்க முடிந்ததில்லை.
அசோகமித்திரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் அல்ல; அவரது எழுத்து பாணி நாவல் வடிவுக்கு ஏற்றது அல்ல எனும் பிம்பம் எனக்குள் ஆரம்பத்தில் இருந்தது. கடந்த பத்து வருடங்களில் என் எண்ணம் எவ்வளவு தவறானது என உணர்ந்து கொண்டேன். அவரது நாவல்கள் மடிப்பு விசிறியை போன்றவை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கு உள்ளும் பத்து அத்தியாயங்களை மடித்து வைத்திருப்பார். தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் ஆகிய படைப்புகள் நாம் விரிவாக விவாதிக்க வேண்டியவை.
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நான் அசோகமித்திரனை படித்த போது என் அணுகுமுறை மாறி இருந்தது. அப்போது நான் பெரும்பாலான படைப்புகளை வடிவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து அணுகி வாசிப்பதை நிறுத்தி அவை பேசும் தத்துவம், அரசியல், கருத்தியல் என்ன என யோசிக்க ஆரம்பித்திருந்தேன். அசோகமித்திரனின் தத்துவார்த்த தளத்தை மட்டும் கவனிக்க ஆரம்பித்தேன். (அவருக்கு அப்படி ஒரு தளம் இருந்ததாகவே நான் முன்பு நம்பவில்லை.)
அசோகமித்திரனின் புனைவில் செய்த முக்கிய சாதனை அவரது ஒரு கண்டுபிடிப்பு என எனக்குத் தோன்றியது. அது இந்திய இருத்தலியம். அதென்ன இந்திய இருத்தலியம்? ஐரோப்பாவில் இருத்தலியவாதிகள் (காம்யு, சார்த்தர்) கடவுள் அற்ற ஒரு உலகை பற்றி சிந்தித்தனர். அந்த உலகில் மனிதன் எடுக்கும் முடிவுகளுக்கு, மனிதனின் இருப்புக்கு மனிதன் மட்டுமே பொறுப்பாக முடியும். உலகப் போர் எனும் மாபெரும் உயிர் பலிக்கு தனி மனிதர்கள் எப்படி பொறுப்பாக முடியும்? கடவுள் அற்ற உலகம் அர்த்தமற்றதாய் மாறியது. அதனால் உலகமே அபத்த மேடை என இருத்தலியவாதிகள் கருதினர். ஆனால் கணிசமான இந்திய மக்கள் இந்த பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகினர். மிகப்பெரிய தத்துவ விசாரங்கள், நெருக்கடிகள், கேள்விகளை எதிர்கொள்ள இங்கு மக்களுக்கு அவகாசமில்லை. மாலையில் பேருந்து கிடைத்து அதில் ஏறி வீட்டுக்கு சென்று சேர்ந்து உணவருந்துவதுடன் ஒரு நாளைய சாகசங்கள் முடிந்து போகின்றன. அடுத்த நாள் விடிகாலையில் தண்ணீர் பம்பில் தண்ணீர் வருமா என்பதில் புது நெருக்கடிகள் துவங்கும். இந்த நெருக்கடி எனும் தொடர் ரயில்களில் சதா தலையை கொடுப்பவனாக எளிய இந்தியன் இருக்கிறான். அவனுக்கு சிந்திக்கவே நேரமில்லை. அவன் தன் இருப்பை இந்த நடைமுறை போராட்டங்களில் மறந்து போகிறான். தன் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு என்று அவன் வினவுவதில்லை.
இந்திய மத்திய வர்க்க வாழ்வில் நிறைய அபத்தங்கள் நேர்கின்றன. ஆனால் அபத்தங்களை பற்றி யோசிக்க முடியாத நெருக்கடியும் அதே வாழ்வில் இருக்கிறது. இந்த இருத்தலியத்தை தான் அசோகமித்திரன் சித்தரித்தார். இதைப் பற்றி அம்ருதாவில் ஒரு கட்டுரை எழுதினேன். நான் அந்த கட்டத்தில் அசோகமித்திரனை சந்திக்க துவங்கி இருந்தேன். தொடர்பில் இருந்தேன். அசோகமித்திரன் என் அம்ருதா கட்டுரையை படித்து விட்டு பாராட்டி எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். பின்னர் அப்பத்திரிகையில் நான் எழுதிய “சந்தர்ப்பம்” எனும் சிறுகதையை அவர் சிலாகித்து அவர் ஒரு குறுந்தகவல் அனுப்பினார். என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாராட்டு. குறுந்தகவலையும் அவர் இன்னும் சுருக்கமாக தன் பிரத்யேக ஸ்டைலில் எழுதுவார். V. Good, A.Mitran அவ்வளவு தான்.
அசோகமித்திரன் ஒரு “சந்திக்கத்தக்க” எழுத்தாளர் அல்ல. நிமிடத்துக்கு நிமிடம் அலாரம் கடிகாரம் போல் அலுப்பும் கசப்பும் ஒலிக்கிற மனிதர் என ஒரு சித்திரத்தை என் நண்பர்களை அவரைப் பற்றி உருவாக்கினார்கள். ஜெயமோகன் நேர்மாறாக அசோகமித்திரன் வெகு சுவையான உரையாடல்காரர் எனும் சித்திரத்தை எனக்குள் ஏற்படுத்தினார். ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு நகைச்சுவையாய் பேசுவார். தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு இளைஞனை ஒரு முதியவர் எதற்கோ கடுமையாக வைகிறார் என்றே தோன்றொம். ஆனால் நாமோ குலுங்கிக் குலுங்கி சிரிப்போம் என்றார் என்னிடம் ஜெயமோகன்.
. அசோகமித்திரனுக்கு உடல் நலமில்லை என அறிந்து கவிஞர் சுகுமாரன் மிகுந்த கவலையுடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து செல்ல நினைக்கிறார். முதலில் போன் செய்து விசாரிக்கிறார்கள். அசோகமித்திரன் தனக்கு உடல் நலக்குறை ஒன்றுமில்லை, வர வேண்டாம் என்கிறார். ஆனாலும் விடாப்பிடியாய் அவர் அனுமதி பெற்று வீட்டுக்கு செல்கிறார்கள். அசோகமித்திரன் வீட்டை அடைந்து கதவை தட்டுகிறார். அசோகமித்திரனே வந்து கதவைத் திறக்கிறார். பிறகு உரையாடலின் போது அவர் சுகுமாரனிடம் தன் தேய்ந்த குரலில் கேட்கிறார் “உடம்பு சரியில்லாதவங்களே வந்து கதவை திறக்கும் போது ரொம்ப ஏமாற்றமாக இருக்கும் இல்லையா?”
நான் என் “கால்கள்” நாவலை அவருக்கு வாசிக்க கொடுத்த போது அதன் ஐநூற்று சொச்சம் பக்கங்களைக் கண்டு இமைகளை தூக்கி வியப்பை காட்டினார். என் பக்கத்து மாநிலத்து நாவலாரிசியர் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டார். “உயரமா திடகாத்திரா ஒருத்தர் வந்து தன் நாவலை கொடுத்து முன்னுரை வேணும்னார். நான் உடனே சரீன்னுட்டேன். எண்ணூறு பக்கத்துக்கு மேல இருக்கும் நாவல். பத்து நாள்ல எழுதிக் கொடுத்தேன். வந்து வாங்கிண்டு போனார். ஆனால் சரியா ஒரு வருசம் கழிச்சு இன்னொரு நாவலோட வந்தார். இது 1600 பக்கம்.”
இந்த கரிப்பான நகைச்சுவையும் அங்கதமும் அவரது பேச்சில் எப்போதும் மறையாது தொனிக்கும்.
நான் சந்தித்த பெரும்பாலான மூத்த எழுத்தாளர்களிடம் தம் கதைகள் அல்லது கவிதைகளை தாமே சிலாகிக்கும் சுபாவம் உண்டு. தம் படைப்புக்கு தாமே ஒரு விளக்கவுரை நல்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அசோகமித்திரனிடம் தன் கதை பற்றின சுயசிலாகிப்புகள் இருககாது. அவரது கதை ஒன்றை பற்றி நீங்கள் சிலாகித்தால் கூட அது உண்மையில் நடந்த ஒரு சம்பவம் என சொல்லி முடித்து விடுவார். கராறாக தன் கதையை விளக்கவோ அர்த்தம் காணவோ வாய்ப்பளிக்க மாட்டார். தன் கதை என்பது படித்து உணர வேண்டிய ஒன்று, தர்க்கரீதியாய் விளக்க வேண்டியதல்ல என அவர் நம்பினார். அதே போல பிற இலக்கியவாதிகள் பற்றி வம்பளக்கவோ உலக இலக்கிய படைப்புகள் பற்றி உரையாடவோ அவர் விரும்ப மாட்டார். நாம் வணிக இலக்கியம் என நம்புகிற நாவலை திடீரென குறிப்பிட்டு (Count of Montichristo) அதில் வரும் சம்பவங்களைச் சொல்லி ஏதோ தன் ஆத்ம நண்பனுக்கு நடந்தது போல் வருந்துவார். தமிழில் பேரிலக்கியம் என கருதப்பட்ட நாவல்களை பொருட்படுத்த மாட்டார். அவர் தனக்கென தனித்துவமான ஒரு வாசிப்பை வைத்திருந்தார். நாம் கேள்விப்பட்டிராத ஒரு லத்தீன் அமெரிக்க படைப்பாளியை திடீரென குறிப்பிடுவார்.

நான் அவரை ஒவ்வொரு முறை பார்க்க செல்லும் போதும் “ஏன் என்னைப் போய் பார்க்க வரீங்க?” என புலம்பல் தொனியில் கேட்க தவற மாட்டார். ஆனால் எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நமது அருகாமைக்காக எவ்வளவு ஏங்குகிறார் என்பதையும் உணர வைப்பார்.
எனக்கு அசோகமித்திரன் பற்றி யோசிக்கும் போது எல்லாம் அவர் ஒரு ஆண் யமுனா எனத் தோன்றும். ஏனென்றால் ”மோகமுள்” நாவலில் மருகி உருகி பாபு கேட்கிற கேள்விகளுக்கு யமுனாவின் பதில்கள் எப்போதுமே நடைமுறை எதார்த்ததை கன்னத்தில் அறைந்து உணர வைப்பது போல் தான் இருக்கும். பாபு ஒரு கற்பனாவாதி. உணர்ச்சிகளின் ஆற்றொழுக்கில் அடித்து செல்லப் படுகிறவன். அதைப் பற்றி கவலைப்படாதவன். யமுனா அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளை கடந்து யோசிக்காதவள். பிடிவாதமானவள். இறுக்கமானவள். எதையும் மறுத்தே பழகியவள். அளக்க முடியாத ஆழம் கொண்டவள். பூடகமானவள். தன்னைச் சுற்றி கண்ணாடி சுவர்களை எழுப்பிக் கொண்டவள். தனிமைக்குள் தவமிருந்தவள். தமிழ் இலக்கிய உலகில் அசோகமித்திரனும் யமுனாவைப் போன்று உதிரியாக இருந்தார். அவரை ஆழ்ந்து நேசிக்கும் பாபுக்கள் சுற்றிலும் இருந்தார்கள். ஆனால் கண்ணாடிச் சுவரைத் தாண்டி அவர்களின் குரல்கள் அவருக்கு கேட்கவில்லை. வயோதிகம் தளர்த்திய பின் சில பத்தாண்டுகள் அவர் சென்னையின் ஒரு மையமான இடத்தில் வாழ்ந்தும் கூட அவர் தனிமையில் தான் இருந்தார். அவராக மனிதர்களை நாடுபவர் அல்ல. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின், நண்பர்களின் அருகாமையை அவர் அப்போது மிகவும் எதிர்பார்த்தார் என நான் அவதானித்தேன்.

அவரைச் சுற்றி இளம் எழுத்தாளர்கள், வாசகர்களின் ஒரு படை என்றும் இருந்ததில்லை. முக்கிய காரணம் அவர் தன்னை தன் கதையளவில் நிறுத்திக் கொள்ள விரும்புவார். அந்த கதைகளுக்கு வெளியே ஒரு எழுத்தாளனாய் அவர் தன்னை நிகழ்த்தியதில்லை.
மற்றொரு காரணம் அன்றாட வாழ்வின் சின்ன சின்ன தேவைகள், பிரச்சனைகள் குறித்த அக்கறை முக்கியம் என அவர் நினைத்தார். இலக்கிய, தத்துவ அரூப உலகில் மிதப்பதை அவர் விரும்பவில்லை. தத்துவார்த்தமாக அவர் இதற்கு எதிரானவர்.
 வாழ்க்கையை அதன் பருண்மையான தளத்தில், நடைமுறையின் நெருக்கடிகள் மத்தியில் எதிர்கொள்ள வேண்டும் என அவர் நம்பினார். அதுவே உண்மையான வாழ்க்கை என்றார். லட்சியவாதங்கள், சுயதேடல், பிரம்மாண்டமான வரலாற்று நகர்வுகள், சமூக மாற்றங்கள் மிகையான மேற்பூச்சு என அவர் நினைத்தார். நீங்கள் மதிய உணவுக்கு பிறகு ஒரு இனிப்பை எடுத்து கடிக்கிறீர்கள். அதன் சுவை தான் உங்களது அப்போதைய உலகம். அதைத் தாண்டி நீங்கள் யோசிப்பதில்லை. ஆனால் உங்கள் காலடியில் விழும் இனிப்பு துகள்களுக்காக நூற்றுக்கணக்கான எறும்புகள் சாரிசாரியாய் கீழே அணி வகுப்பதை நீங்கள் கவனிப்பதில்லை. அசோகமித்திரன் பெரும் வரலாற்று மாற்றங்களுக்கு பின்னால் இந்த எறும்புகளின் அலைபாய்ச்சல் போன்றே எளிய மனிதர்களின் வாழ்க்கை இருப்பதை சித்தரிக்க முயன்றார். அதையே அவர் நேரடி உரையாடல்களிலும் வலியுறுத்தினார்.
அசோகமித்திரனின் கச்சிதம், கரார்தனம், மொழிச்சிக்கனம், உணர்வுவயப்படாத விலகின தொனி ஆகியவை அவரது ஆளுமையின் ஒரு பகுதி என்பதை நான் அவரது சந்திப்புகளின் போது தான் அறிந்து கொண்டேன். ஹெமிங்வே மற்றும் ரேமண்ட் கார்வரின் நீட்சியாக அசோகமித்திரனை பார்க்க தேவையில்லை; அவர் தனது இயல்புக்கு ஏற்றபடி ஒரு ஸ்டைலை வகுத்திருக்கிறார் என புரிந்து கொண்டேன். அவரது நடைமுறைவாத வாழ்க்கைப் பார்வை தான் அவரது படைப்புகளின் தரிசனமாகவும் உள்ளது.
ஒரு கட்டத்தில் அவரை பார்க்க செல்வதை குறைத்துக் கொண்டேன். கடந்த எட்டு வருடங்களில் நான் அவரை அவர் வீட்டில் சென்று பார்க்கவில்லை. முதன்முறையாய் என்னை அசோகமித்திரனின் வீட்டுக்கு அழைத்து சென்ற நண்பர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைப் போய் பார்த்திருக்கிறார். அப்போது அவர் என்னை நினைவு வைத்து விசாரித்ததாய் நண்பர் சொன்னார்.
அசோகமித்திரனை நாம் பார்க்க செல்லும் போது “ஏன் என்னை பார்க்க வரீங்க?” என தவறாமல் கேட்பார். அதன் உண்மையான பொருள் “ஏன் என்னை பார்க்க வர மாட்டேங்கிறீங்க?” என்பது தான் என அத்தருணத்தில் எனக்குள் விளக்கெரிந்தது. யமுனா எப்போதுமே அப்படித் தானே. தனக்குத் தேவையானதை நேரடியாய் கேட்க மாட்டாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்றே சொல்வாள்.

அசோகமித்திரனை மீண்டும் போய் சந்திக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் காலம் எங்களுக்கு முன்பு அவர் கதவை போய் தட்டி விட்டது. வீட்டுக் கதவை திறந்ததும் அசோகமித்திரன் காலத்திடம் அலுப்பாய் கேட்டிருப்பார்: “ஏன் என்னைப் போய் பார்க்க வரீங்க?”

நன்றி: உயிர்மை, 2017

No comments: