கவிஞர் மனுஷிக்கு வாழ்த்துக்கள்

Image result for மனுஷி பாரதி

இவ்வருடத்துக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெறும் கவிஞர் மனுஷிக்கு வாழ்த்துக்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, மனுஷியின் முதல் தொகுப்பு வெளியான சமயம், மதுரையில் கவிதைக்கான ஒரு கூட்டம் நடந்தது. அப்போது மேடையில் நானும் மனுஷ்யபுத்திரனும் பேசினோம். மனுஷியை அப்போது தான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். அவரது கவிதைகளை வாசித்துக் கேட்ட போது அதில் ஒரு தனித்துவத்தை, தீவிரத்தை, புதிய மொழியை கவனித்தேன். அன்று அறிமுகமான சில கவிஞர்களில் மனுஷி மட்டுமே எனக்கு முக்கியமாய் பட்டார். நான் இதை மனுஷ்யபுத்திரனின் செவியில் குறிப்பிட, அவரும் உடனே தலையாட்டினார். “இவரிடம் தனியாக ஒரு பொறி தென்படுகிறது” என்றார். மனுஷியின் அடுத்த கட்ட வளர்ச்சி ஆச்சரியமான வேகத்துடன் இருந்தது. அவரது தொகுப்புகள் தொடர்ந்து உயிர்மையில் வெளியாகின. அவர் இலக்கிய கூட்டங்களில் தீவிரத்துடன் பங்கேற்றார். பலருக்கும் அவர் கவிதைகள் பிடித்திருந்தன. என் ஊகம் பலித்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தனி உவப்பு இருந்தது. நானும் அவரது தொகுப்புக்கு விமர்சனம் எழுதினேன். பின்னர் நான் நடத்தின இன்மை இணையதளத்திலும் மனுஷி பங்களித்தார். ஒரு எழுத்தாளனிடம் ஆவேசமும் தீவிரமும் உழைக்கும் ஆர்வமும் இருந்தால் அவரை யாராலும் தடுக்க முடியாது; உன்னதத்தை எட்டுவார் என்பதற்கு மனுஷி ஒரு சிறந்த உதாரணம். ஏனென்றால் அவருக்கு என்று இலக்கிய குழுக்களில் நாற்காலியோ, பதிப்பாளரின் முன்னெடுப்போ, எந்த ஒளிவட்டமோ இல்லை. எழுத்து தான் நமது ஒரே அடையாளம்; அது மட்டுமே போதும் என்பதை மனுஷி நிரூபித்திருக்கிறார்.

தமிழ் பெண்ணிய கவிதைகளின் பரப்பில் மனுஷியின் இடம் என்ன என அலசி இம்மாத உயிர்மையில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Comments