Thursday, June 22, 2017

மற்றொரு மட்டமான சர்ச்சை

மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் அளிக்கப்பட்டதை ஒட்டி ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சை அபத்தமாகவும் மட்டமாகவும் உள்ளது. மனுஷி எழுதுவது காகிதக் குப்பை, தட்டையான எழுத்து என முத்திரை குத்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். ஒரு வாசகனாக அவரது குறுகின மனப்பான்மையை தான் இது காட்டுகிறது. எனக்கு இந்த மதிப்பீட்டு முறை (அப்படி ஒரு முறைமை இதற்கு இருக்குமென்றால்) ஆச்சரியம் அளிக்கவில்லை.

 நமது சிறுபத்திரிகை மரபு நீண்ட காலமாய் இப்படித் தான் இருந்து வருகிறது. ஒருவர் தேவதேவனை குப்பை என்பார், இன்னொருவர் தேவதச்சனை மறுப்பார், ஒருவர் மனுஷ்யபுத்திரன் எழுதுவது கவிதையல்ல, நகலெடுப்பு என்பார், இன்னொருவர் பெண் கவிதைகள் எழுதுவது போர்னோ என்பார். இவர்கள் அடுத்து விக்கிரமாதித்யன் அல்லது யவனிகா ஸ்ரீராம் போல ஒருவரை (ஒரு உதாரணத்துக்கு) தனியாக எடுத்து நீட்டி இவர் எழுதுவது மட்டுமே கவிதை என்பார்கள். ஒரு வாசகனாக நமக்கு விருப்புவெறுப்பு இருக்கும், ஆனால் அதைக் கடந்து பலவகையான எழுத்துக்களை வாசிக்கப் பழக வேண்டும்
கவிதையில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று மனுஷி பாரதியுடையது.
 நான் செல்வது மட்டுமே சரியான வழி, மிச்ச ஆட்கள் பயணிப்பது படுபாதாளம் நோக்கி என நினைப்பவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. இத்தகையோர் கராறாக வாசிக்கிறோம் எனும் தோரணையில் ஒரு சிறிய தரப்பை விடுத்து பிறரது எழுத்துக்களை கவனிக்க தவறுகிறார்கள். கவிதை இப்படித் தான் அமைய வேண்டும் என ராணுவ நீதிமன்றம் போல் நடந்து கொள்கிறார்கள். எந்த இலக்கிய கூட்டத்தில் நம்மவர்களைக் கண்டாலும் ஏதாவது ஒரு மூத்த படைப்பாளியை நிராகரித்து தரையில் போட்டு தேய்ப்பதை சாதாரணமாக காணலாம். வாசிப்பில் மதிப்பீடு உண்டு தான்; ஆனால் மதிப்பீட்டின் அடிப்படையில் வாசிப்பு நிகழ்வதில்லை. இரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.
 நான் பொதுவாக இத்தகைய குறுகின உரையாடல்கள் கண்டும் காணாதது போல் நகர்ந்து விடுவேன். ஆனால் ஒருவருக்கு விருது கிடைத்துள்ள மகிழ்ச்சியான வேளையில் இளங்கோ இப்படி விஷம் கக்குவது வருத்தமளிக்கிறது.
இளங்கோ சிலநேரங்களில் அறுபது, எழுபதுகளின் நவீனத்துவவாதிகளை எனக்கு நினைவுபடுத்துகிறார். குறுகின மனப்பான்மை, அரையடி ஸ்கேலால் எல்லாரையும் அளக்கும் அவசரம், (க.நா.சு போல்) இவர் தேறுவார், அவர் தேற மாட்டார் என டிக் அடிக்கும் விருப்பம் என வேறொரு முதிய தலைமுறையை சேர்ந்தவராக இருக்கிறார். நமது ஆரம்ப கால நவீனத்துவவாதிகளிடம் ஒரு பிராமணியத்தை காணலாம். இளங்கோவிடமும் இதே மடி பார்க்கும் குணம், பிராமணியம் தெரிகிறது. சமகால வாசிப்பு மிகப்பெரிய அளவில் மாறி வந்துள்ளது என அவருக்கு புரியவில்லை. இன்று எழுத்தில் பல தரப்பட்ட நுண்ணுணர்வுகளும் நம்பிக்கைகளும் பண்பாட்டு அணுகுமுறைகளும் மொழிகளும் கலந்து வெளிப்படுகின்றன. அதனாலே கராறாய் பூணூல் பார்த்து தரம் பிரிக்காமல் எல்லாரையும் ஆர்வமாய் கவனித்து படிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்று நீங்கள் யாரையும் நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஒருமுறை ஒரு உரையாடலில் இளங்கோவுக்கு புரிய வைத்து தோற்று தெண்டனிட்டு விட்டேன். ஜுராசிக் பார்க்கை விஞ்ஞானிகள் உருவாக்கியதை போல் இளங்கோவும் நாற்பது வருடங்களுக்கு பிந்தைய ஒரு உலகில் வாழ்கிறார். (எனவே நான் இப்போது சொல்வதையும் அவர் சுத்த அபத்தம் எனத் தான் கருதுவார்.)
நான் தமிழில் கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களையும் கவனித்து ரசித்து படிக்கிறேன் (இளங்கோ உட்பட). இவர்களில் யார் சிறந்தவர் என்பதில் எனக்கு கருத்து உண்டு. ஆனால் இவர்களில் யாரும் குப்பையாக எழுதித் தள்ளவில்லை என்பதை உறுதியாக சொல்வேன். மனுஷி முதல் தொகுப்பு வெளியிட்ட காலத்தில் இருந்தே அவரை ஒரு முக்கிய இளம் கவிஞராகத் தான் கருதி வந்திருக்கிறேன். அவரைப் பற்றி விரிவாக எழுதவும் செய்திருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக நாம் அடுத்தவர் எழுத்தை குப்பை என கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும். எழுத்தை மதிப்பவர் அவ்வாறு கூற மாட்டார்.
பின்-குறிப்புகள்: 1) மனுஷியின் “குப்பை எழுத்துக்கு” விருது கொடுப்பதன் மூலம் சாகித்ய அகாதெமி இந்தியா முழுக்க இதுவே சமகால தமிழின் முகம் என விளம்பரம் செய்யப் போகிறதே என இளங்கோ அங்கலாய்க்கிறார். அவருக்கு நிதர்சனம் தெரியவில்லை. யுவ புரஸ்கார் விருது பெறும் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பாவதில்லை. பிரதான அகாதெமி விருதுக்கே அந்த சாத்தியம் உள்ளது.
2) ஒருவரை தாக்கும் போது கூட நாலு பேரையும் சண்டையில் இழுத்து விடுவது ஒரு மலினமான உத்தி. இளங்கோ மனுஷிக்கு பதில் வெய்யில், நரென், சபரிநாதன் போன்றோருக்கு விருது கொடுத்திருக்கலாம் என ஒரு பட்டியல் நீட்டுகிறார். இப்படியான மாற்றுப் பட்டியலை எல்லா விருதுத் தேர்வின் போதும் நீங்கள் நீட்டலாம். அதில் அர்த்தமில்லை. சாகித்ய அகாதெமி விருது என்பது ஒரு அரசாங்க அங்கீகாரம். அவ்வளவே! அது ஒரு சமூகத்தின் அறுதியான இலக்கிய முடிவு அல்ல. தமிழின் இன்றைய உச்ச படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ரா, கோணங்கி, சாரு, தேவதச்சன், தேவதேவன் (இப்படி என்னிடம் நீண்ட பட்டியல் உண்டு) அகாதெமி விருதே வாங்கவில்லை. அதனால் அவர்களுக்கு மாற்று குறைந்து போனதா? அவர்கள் அளவுக்கு புகழும் வாசக அங்கீகாரமும் வேறு யாருக்குண்டு? எந்த விருதுக்கும் ஓரளவுக்கு மேல் அதற்கு மதிப்பளித்து அதை வைத்து சர்ச்சை செய்வது அபத்தம். வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் தான் இதை செய்வார்கள்.
 எனக்கு யுவ புரஸ்கார் அளிக்கப்பட்ட போது அவ்விருது லஷ்மி சரவணகுமாருக்கே சென்றிருக்க வேண்டும் என நான் நம்பினேன். அதை எழுதவும் செய்தேன். எனது பணிவினால் நான் அப்படிக் கூறவில்லை. அது என் உண்மையான உணர்வு. ஆனால் அதனால் லஷ்மிக்கு ஒன்று குறைந்து விடவில்லை. அடுத்த வருடம் அவர் வாங்கினார். (வாங்கியிராவிட்டாலும் அவர் முக்கியமான சமகால படைப்பாளியே.) இதே போல வரும் ஆண்டுகளில் முறையே வெய்யிலும் நரனும் சபரியும் யுவ புரஸ்கர் பெறுவார்கள் என நம்புவோம். இல்லாவிட்டால் பிரதான சாகித்ய அகாதெமி விருதை அவர்கள் ஒருநாள் பெறக் கூடும். அதற்கான கோரிக்கைகளை எழுப்புங்கள்.

உங்களுக்கு ஒரு எழுத்தாளனை பிடிக்கும் என்றால் அவரைக் கொண்டாடி தொடர்ந்து எழுதுங்கள்; பேசுங்கள். அது போதும். இன்னொருவர் மீது சேற்றை வீசி, அவருடன் இவரை ஒப்பிட்டு புகழ வேண்டியதில்லை. அது ஒருவித சின்னத்தனம். ஜெயமோகனுக்கு தேவதேவன் என்றால் கிட்டத்தட்ட கடவுள். அவர் தேவதேவனைப் பற்றி ஒரு தனி புத்தகம் எழுதினார். அதில் நவீன கவிதையின் குற்றங்குறைகளுக்கு தீர்வே தேவதேவனில் இருக்கிறது என அவதானித்தார். பின்னர் தேவதேவனைப் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதினார். இளங்கோ நீங்கள் மேற்சொன்ன மூவர் பற்றியும் தலா நூறு பக்கங்கள் எழுதுங்கள். கூட்டங்கள் நடத்துங்கள். புத்தகங்கள் வெளியிடுங்கள். மனுஷியை காறித் துப்பி இவர்களை பாராட்ட ஏன் முயல்கிறீர்கள்? இல்லை மனுஷியை காறித் துப்ப இவர்களை ஒரு சந்தர்ப்பமாக, சாக்காக பயன்படுத்துகிறீர்களா? கொஞ்சம் பாஸிட்டிவாக செயல்படுங்கள் பாஸ்!

3 comments:

couponsrani said...

வணக்கம் நண்பரே
உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
வாழ்த்துக்கள்
discount coupons

authorofthisblog said...

hi sir,

கமெண்ட் எழுதி நாளாகி விட்டது. சும்மா ஒரு கமெண்ட்.
எனக்கு தேவையான உண்மைகளை என்னால் சுயமாகவே சிந்திக்க முடிகின்றது.எழுதியும் வைத்துள்ளேன். அவை மிக மிக சாதாரணமான உண்மைகள். எனக்கு தேவையானவற்றில் ஒன்றிரண்டு உங்கள் பிளாகிலோ சில புக்ஸ்சிலோ பார்த்துள்ளேன். ஆனால் நான் எழுதி வைத்துள்ள சாதாரண உண்மைகளில் நிறைய புக்ஸியிலோ உங்கள் போன்ற ரைட்டர்ஸ் பிளாகிலோ இல்லை. எனக்கு தேவையானதை புக்ஸ்சில் எல்லாம் தேடினால் வேஸ்ட் தான். பின் நீங்கள் எல்லாம் எதை எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள்?

rameez4l said...

அன்புள்ள அபிலாஷ்,
நேர்மறையான உங்கள் அணுகுமுறைக்கும் நேர்மையுணர்வுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் எம் கல்லூரிக்கு (ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி – 20) வந்தபோது ஒரு பார்வையாளனாக அந்த அரங்கில் அமர்ந்து உங்கள் பேச்சை ரசித்திருக்கிறேன். (கடந்த பதினைந்து ஆண்டுகளாக அக்கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியனாகப் பணியாற்றி வருகிறேன். மரபார்ந்த மற்றும் வானம்பாடி இயக்க வாசிப்புக்குப் பின் ’எழுத்து’லகத்தை நான் வாசிக்க ஆரம்பித்துச் சில வருடங்களே ஆகின்றன. தேவதேவனைக்கூட ஜெயமோகனின் எழுத்துக்கள் வழியாகத்தான் கண்ட்டைந்தேன். இன்றென் ஆதர்சம் அவர்தான் என உணர்கிறேன். இற்றை நாள் எழுதிவரும் எழுந்து வரும் இளம் படைப்பாளிகளின் நூற்களை இனிமேல்தான் நான் வாசிக்கத் தொடங்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். உங்களுடைய இந்த வலைப்பூவிற்கே ஒருவாரமாகத்தான் வந்துகொண்டிருக்கிறேன். என் நண்பரும் இளம் பேராசிரியருமான உத்தமப்பாளையம் ரஃபீக் (புனை பெயர் மானசீகன்) இவ்வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்தினார். அடியேனும் ஒரு வலைப்பூ நடத்தி வருகிறேன். பிரபஞ்சக்குடில் என்று பெயர் (pirapanjakkudil.blogspot). அதில் சில பதிவுகளைப் படித்து இரண்டு மூன்று முறை ஜெயமோகன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். வாய்ப்பிருந்தால் படித்துப் பார்த்துவிட்டு என் எழுத்து தேருமா என்று சொல்லுங்களேன். எனது இ-மெய்ல் trameez4l@gmail.com. (please take care. it is 4l and not 41).

ரமீஸ் பிலாலி.