Sunday, May 7, 2017

ரூபாய் நோட்டு தடை: உண்மையான பொருளாதார நோக்கமும் அதன் பாலியலும்

   Image result for modi
ஆயிரம், 500 ரூ நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு (இதை நான் எழுதும் போது) 44 நாட்கள் ஆகின்றன. கறுப்புப் பணத்தை ஒழித்து, மொத்த பண பரிவர்த்தனையையும் டிஜிட்டலாக்கும் அரசின் நோக்கம் தொடர்ந்து ஒரு பக்கம் விதந்தோம்பப்படுகின்றன. இன்னொரு பக்கம் அவஸ்தைப்படுபவர்கள் இந்த பிரச்சாரங்களின் திசையில் காறித் துப்புகிறார்கள். பா.ஜ.கவின் ஆரம்ப கட்ட ஆதரவாளர்கள் கூட இன்று அமைதியாகி தலை குனிந்து விட்டார்கள்.
வீட்டின் நிலவறையில் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டு தொடர்ந்து அலறும் ஒரு பைத்தியத்தை போல் இந்த ரூபாய் நோட்டு விவகாரம் அவர்களுக்கு மாறி விட்டது. தம் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். பிறரையும் அவ்வாறு இருக்க தூண்டுகிறார்கள். ஆனால் ஒன்றுமே கேட்கவில்லை என பாவனை செய்ய அவர்களுக்கு இனியும் துணிச்சல் இல்லை. மோடி பக்தர்களுக்கும் பதற்றத்தில் கைகள் லேசாய் நடுங்குகின்றன.

 நிச்சயமாய், இந்திரா காந்தியின் நெருக்கடி பிரகடனத்துக்கு சற்றே நெருக்கமான ஒரு பிரகடனம் தான் இது. அரசின் மீது இரு குற்றச்சாட்டுகள் பிரதானமாய் வைக்கப்பட்டன. 1) போதுமான புது நோட்டுத்தாள்களை விநியோகிக்காமல் அரசு அவசரமாய் தடையை கொண்டு வந்து விட்டது.
2) முழுக்க இணையவசதியற்ற இந்த தேசத்தின் பல பகுதிகளை கணக்கில் கொள்ளாமல் பணமில்லாத பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என அரசு கனவு காண்கிறது. விளைவாக செலவு செய்ய எந்த வழியும் இன்றி மக்கள் கைகள் கட்டப்பட்டு தவிக்கிறார்கள். சிறுவியாபாரிகள் தினம் தினம் நஷ்டத்தில் மெலிகிறார்கள். கார்ட் மெஷின் இல்லாத கடைகள் அல்லாடுகின்றன. அவசரத்துக்கு மருந்து வாங்க கூட பணமின்றி மக்கள் தெருத்தெருவாய் அலைகிறார்கள்.
அரசின் அவசரக்குடுக்கை செயல்பாட்டினால் ஒரு தேசமே கோமணத்துடன் தெருவில் ஓடுவதாய் ஒரு சித்திரம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகை சித்திரம் அல்ல. எதார்த்தமே! ஆனால் அரசின் தவறு நடைமுறைபடுத்தலின் இயலாமை மட்டுமே தானா அல்லது இது வெறும் பாவனையோ என்பது தான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி.
 கடந்த சில நாட்களாக மத்திய வர்க்கத்தின் எளிய பிரதிநிதிகள் என கருதத்தக்க சிலரிடம் தொடர்ந்து இது சம்மந்தமாய் உரையாடுகிறேன். அவர்கள் அறிவுஜீவிகளோ அரசியல் ஆய்வாளர்களோ அல்ல. அவர்கள் மோடி பக்தர்களோ இடதுசாரிகளோ எந்த கட்சியின் ஆதரவாளர்களோ அல்ல. ஆனால் அவர்கள் ஒரு கருத்தை தெளிவாக கூறுகிறார்கள். குறைவான பணத்தை அச்சடித்து வங்கிகளில் பற்றாக்குறையை ஏற்படுத்துவது, ஏ.டி.எம், வங்கிகள் எங்கும் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தியது மத்திய அரசின் திட்டமிட்ட செயலே. இது எதேச்சையாய் நிகழ்ந்த ஒன்று அல்ல.
 அதாவது, மக்களிடம் புழங்க வேண்டிய பணம் இப்போது வங்கிகளின் இருப்புத்தொகைகளுக்குள் உலாவுகின்றன. இதன் மூலம் வங்கிகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கிறது. அதே போல் இணைய பணபரிவர்த்தனை செயலிகள், நிறுவனங்களுக்கும் கொள்ளை லாபம். மக்கள் சிறுவியாபாரிகளிடம் இருந்து சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி நகர்கிறார்கள். சிறு கடைகளில் நூறு ரூபாய்க்கு மேல் பொருள் வாங்க தயங்குகிறார்கள். இன்று சாமான்யர்களே இந்த புரிதலுக்கு வந்து விட்டார்கள்.
 மக்களுக்கு வழங்கும் அளவுக்கு போதுமான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க அரசுக்கு அவகாசம் இல்லை எனும் கதையை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை. ஒரு பாசாக்கார முரட்டு அப்பா தன் மகளுக்கு விருப்பத்துக்கு எதிராக ஒரு பிடிக்காத மாப்பிள்ளையை கட்டி வைத்து விட்டு ”உன் நன்மைக்காகத் தான் செஞ்சேன்” என திரும்ப திரும்ப வெள்ளை மீசையை தடவியபடி சொல்வது போன்ற செயல். இப்போது மகள் வாயிலும் கையிலும் குழந்தைங்களோடு தன் அப்பாவை நோக்கி திரும்ப கத்துகிறாள்: “நீங்க பார்த்து கட்டி வச்ச மாப்பிள்ளை குடிகாரன், போக்கிரி, உதவாக்கரை”. அப்பா மீண்டும் நரைத்த மீசையை தடவுகிறார். அவருக்கு இது ஏற்கனவே தெரியும். அவருக்கு வேறு சில நோக்கங்கள் இருந்தன. அவை நிறைவேறி விட்டன.
அவை என்ன?
இதையும் சாமான்யர்களே சொல்கிறார்கள். இந்த அரசு பெரும் சவடால்களுடன் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பொருளாதார நிலை மேம்படவில்லை. கறுப்புப் பண முதலைகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு கோடானுகோடிகளை வாராக்கடனாய் அளித்து விட்டு வங்கிகள் தடுமாறுகின்றன. தன் மானத்தை காப்பாற்றவும், வங்கிகளுக்கு தற்காலிக சுவாசம் அளிக்கவும் இந்த நோட்டுத் தடை உதவும் என அரசு கணக்கு போட்டது. அதனாலே குறைவான நோட்டுகளை அச்சிட்டு வழங்கி நெருக்கடியை உருவாக்கியது. அதனாலே மக்களை ரூபாய் தாள்களுக்காய் நீண்ட வரிசைகளில் நிற்க வைத்தது. அதனாலே வங்கியில் காசோலையை சமர்ப்பித்தால் அது இருப்புத்தொகையில் சேர மூன்று வாரம் ஆகும் என புது நடைமுறையை கொண்டு வந்தார்கள். வங்கிகளில் செல்லான் மூலம் நேரடியாய் பணம் எடுக்க முடியாது என்றார்கள். காசோலையை பயன்படுத்துங்கள் என்றார்கள். ஆனால் எல்லாரிடமும் தேவையான காசோலைகள் இல்லை என அரசுக்கு தெரியும். ஏ.டி.எம்களை மாதத்தில் 25 நாட்களும் மூடி வைத்தார்கள். மிச்ச ஐந்து நாட்களும் ரகசியமாய் சில மணிநேரங்கள் திறந்து வைத்தார்கள். எப்போதெல்லாம் ஏ.டி.எம்கள் திறந்துள்ளன என மக்களுக்கு சமிக்ஞை அளிக்கும் மொபைல் செயலிகள் தோன்றின. மக்கள் வங்கித் திருடர்களை போல ஏ.டி.எம்களை கண்காணிக்க துவங்கினார்கள். தமக்கு முன் அங்கு மற்றொருவர் வந்து பணத்தை காலி பண்ணி விடக் கூடாதே என பிரார்த்தித்தார்கள். இந்த அரசோ பணத்தை கையில் பார்க்கும் எல்லா வழிகளை மூடி, ரூபாய் தாள்களே இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் என மக்களை தூண்டினார்கள். மக்களை மூச்சு முட்ட வைத்தார்கள். இதன் எதிர்விளைவுகள் அரசுக்கு தெரியும். ஆனால் இந்திய தேசத்தின் தற்காலிக மறதியை இந்த அரசுக்கு பெருமளவு நம்பி இருக்கிறது.
அடுத்து என்ன?
 அடுத்த 6 மாதங்களில் 6 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அதற்குள் அந்த குறிப்பிட்ட மாநிலங்களிலேனும் அரசு போதுமான அளவு ரூபாய் தாள்களை விநியோகித்து விடும். கொஞ்ச நாட்களில் மக்கள் தமது சமீபத்தைய அவலங்களை மறந்து விடுவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது; மக்களுக்கு ஏற்பட்ட தற்காலிக அல்லல்களால் நாட்டுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது, பொருளாதார மறுமலர்ச்சி வந்து விட்டது என அரசு அப்போது பிரச்சாரம் செய்யும். ஆனாலும் மக்கள் அதை ஏற்பார்களா? இது தான் நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.
பா.ஜ.கவின் இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்கள் பெரும் கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதாய் செய்தி வருகிறது. அவர்கள் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புலம்பி இருக்கிறார்கள். மக்களின் இப்போதைய கோபம் தேர்தலில் தம்மை கவிழ்த்து விடுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால் அப்படி நிகழுமா? இங்குதான் நாம் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படும் மக்களுக்குமான உளவியல் உறவை புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வாதிகாரமும் மெஸோக்கிஸமும்
மோடி ஒரு சர்வாதிகாரியாக மக்களின் மெஸோக்கிச மனநிலையை பெருமளவு நம்பி இருக்கிறார் எனலாம். பொதுவாக சர்வாதிகாரிகளுக்கும் குடிமக்களுக்குமான உறவு சற்றே பாலியல் தன்மை கொண்டது. பாலுறவில் சித்திரவதைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. துன்புறுத்துற ஆளுக்கும் துன்பம் அனுபவிக்கிறவருக்கும் ஒரு அனுசரணையான உறவு உண்டு. போகத்தின் போது ஒரு பக்கம் கிள்ளல், கடித்தல்கள், அடி உதைகளை எதிர்த்து கத்திக் கொண்டு அதை இன்னொரு பக்கம் மனம் ரசிக்கவும் செய்யும். மோடி இந்த மெசோக்கிஸ உறவில் தன்னை ஆதிக்கம் செலுத்தும் ஆண் மகனாகவும் குடிமக்களை வலியில் லயித்து நெளியும் பெண்ணாகவும் கற்பனை செய்கிறார். அதனால் தான் தான் அளிக்கும் துன்பங்களை அவர்கள் ஏற்பார்கள் என அவர் நம்புகிறார்.
 உலகம் முழுக்க சர்வாதிகாரிகள் இந்த நடைமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பெரும் துன்பங்கள் நேரும். ஆனால் அவர்கள் அதை உள்ளூர ஏற்று கிளர்ச்சி கொள்வார்கள். அதை ஒரு பொது எதிரிக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை என அபத்தமாய் புரிந்து கொள்வார்கள். இலங்கையில் ராஜபக்‌ஷே ஆட்சியின் போதான இன அழித்தொழிப்புகள் அவரது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க அவருக்கு உதவியது. ஆனால் அதை நேரடியான மெஸோக்கிஸம் என்பதை விட மெஸோக்கிஸ போர்னோ கிளுகிளுப்பு எனலாம். தமிழ் உடல்களை சிதைத்து அதை காட்சிப்படுத்தி அந்த துன்பத்தின் பாலியல் இன்பத்தை ராஜபக்‌ஷே சிங்கள் குடிமக்களுக்கு (மீடியா இன்றியே) ஒளிபரப்பினார். அந்த பிம்பங்களில் அவர்கள் திளைத்தனர். ஆனால் ஓரளவுக்கு தான். ஒரு கட்டத்துக்கு மேல் சிங்களவர்களே வெறுத்து விட்டு நிறுத்துங்கள் என்றனர். அடுத்த தேர்தலில் ஒரு மிதவாதியை தேர்ந்தெடுத்தனர்.
 ஹிட்லர் யூதர்கள் மீது நிகழ்த்திய அழித்தொழிப்புகளும் தன் தேசத்தின் அன்றைய பொருளாதார நெருக்கடிகளை மூடி மறைக்கும் நோக்கம் கொண்டவை தான். தன் இன அழித்தொழிப்புகளை அவர் பகிங்கரமாய் நடைமுறைப்படுத்தியதுடன் அதை ஒரு கொள்கையாகவும் நியாயப்படுத்தினார். அவருக்கு யூதர்கள் மீது உள்ளார்ந்த வெறுப்பு ஏதும் இல்லை. சொல்லப் போனால் அவரது ஆட்சிக்காலத்தில் பெரும் யூத செல்வந்தர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெற்றிருக்கிறார். ஆனால் ஹிட்லர் ஜெர்மானிய தம் மக்களுக்கு ஒரு மெஸோக்கிஸ தேவை இருப்பதை உணர்ந்திருந்தார். இன அழித்தொழிப்பின் மூலம் அவர் லட்சம் யூத உடல்களை சிதைத்து இன்பம் காணும் உன்னத ஆண்மகனாக தெரிந்தார். அவர்கள் அவரை வழிபட்டனர். அவர் தேசத்தின் மேம்பாட்டுக்கு நேரடியாய் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால் உடல் மீதான வன்முறைக்கும் இன்பத்துக்குமான நுணுக்கமான உறவை அவர் புரிந்து கொண்டிருந்தார்.
 ஜெயலலிதா மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தும், அவர் பல அடாவடித்தனங்களை செய்தும் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தது இதனால் தான். தன் முன்பு வரிசை வரிசையாக ஆண்களை மண்டியிட்டு படுக்க வைத்த அவரது அந்த வதைக்கும் மனதை, அவர் ஒரு எம்.பியை கன்னத்தில் அறைவதை, பீதி நிலையை மாநிலமெங்கும் தக்க வைப்பதை, சிறு குற்றவாளிகள் மீதான என்கவுண்டர்களுக்கு விரல் சொடுக்கும் வேகத்தில் ஆணையிடும் அவரது வன்மத்தை மக்கள் உள்ளூர ரசித்தார்கள். அதனால் தான் அதிமுகவுக்கு இணையான மக்கள் நலத்திட்டங்களை, இலவசங்களை திமுகவும் அள்ளி வழங்கிய போது அது தேர்தலில் தோற்றது. மக்கள் மாலையேந்திய காதலனை விட சாட்டையேந்திய வன்முறையாளருக்காக ஏங்கினார்கள்.
மோடிக்கு இது நன்கு தெரியும். மக்கள் ஒரு சர்வாதிகாரியை விரும்புவது அவரது மிடுக்கும் அதிகாரத்துக்காகவும் மட்டும் அல்ல. அவர் அளிக்கும் துன்பங்களுக்ககாவும் தான். ரூபாய் நோட்டுத் தடை போன்ற முடிவுகள் அவர் மக்களின் பின்புறத்தில் அளிக்கும் செல்ல சாட்டையடிகள். அந்த வலியின் இன்பத்தில் அவர்கள் திளைப்பார்கள் என அவர் எதிர்பார்க்கிறார். தன் நியாயப்படுத்தல்களை, அதிகாரத்தை இந்த வன்முறையின் மூலம் மக்களை ஏற்க வைக்க முடியும் என நம்புகிறார்.
 பொதுவாக தம்மை துன்புறுத்துகிறவரின் இடத்தில் பாதிக்கப்படுபவர் தம்மை வைத்துப் பார்த்து துன்பம் தருபவரின் அதிகாரத்தை ரசிக்கும் மனநிலையும் இந்த இடத்தில் செயல்படுகிறது. இதையும் மோடி அறிவார் (இதுவும் பாலுறவின் ஒரு முக்கிய அம்சம் தான்). நேரடியான அரசியல் அதிகாரமற்ற, மாறும் காலத்தின் பண்பாட்டு தடுமாற்றங்களில் நிலையற்று தவிக்கும் ஒரு இளம் தலைமுறை ஒரு வலுவான வதையாளர் தம் மீது பிரயோகிக்கும் வன்முறையை ஏற்று கைதட்டுவார்கள்
 ஆனால் இந்த சுய-துன்ப விழைவுக்கும் ஒரு எல்லை உண்டு. சாட்டை விளாசிய இடங்களில் ரத்தம் கட்டி விட்டது. தோல் பிய்கிறது. குருதி எட்டிப் பார்க்கிறது. இனி விளையாட்டு வேறு திசையை எடுக்கும். தன் எல்லையை மோடி கடந்து விட்டார் எனத் தோன்றுகிறது.

அடுத்த வருடத்தின் தேர்தல்கள் அதை தெளிவாகவே சொல்லி விடும்.

நன்றி: உயிர்மை, டிசம்பர் 2016

1 comment:

Muthuvelavan said...

Very true.BJP won UP election inspite of all these things.