Sunday, May 7, 2017

அஜ்வா – இடைநிலை நாவல்களில் ஒரு மைல்கல்

Image result for அஜ்வா நாவல்

சரவணன் சந்திரனின் ஒரு சிறப்பு என்னவெனில் அவர் எப்போதும் எழுதுவதற்கு ஒரு புதுமையான விசயத்தை எடுத்துக் கொள்வார். அது ஒரு இளைஞன் கீழ்த்தட்டில் இருந்து மெல்ல மெல்ல போராடி உயர்தட்டுக்கு வரும் கதையாக இருக்கலாம் (”ரோலக்ஸ் வாட்ச்”). அதை அவர் பாலகுமாரன் தாக்கம் இல்லாமல் எழுதுவார். எந்த லட்சியவாதமும், அறமும் இல்லாத ஒரு தலைமுறையில் வாழ்க்கைப் போட்டி மனிதனை எப்படி புரட்டிப் போடுகிறது, சமூகமாக்கல் அவனுக்கு எப்படி அவசியமாகிறது என பேசுவார். அவர் பேசும் சமகால, காஸ்மோபொலிட்டன் உலகம், அதன் நுண்ணுணர்வு தமிழ் இலக்கியத்திற்கு புதிது. அவரது சமீபத்தைய நாவலான ”அஜ்வாவில்” வாழ்க்கையில் பட்டும்படாமலும் வாழும், எதிலும் உணர்வுபூர்வமாய் ஒன்ற முடியாத மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். உண்மையில், இந்நாவலை போதை மருந்து அடிமைகளின் கதை என்பதை விட இப்படி விளக்குவது தான் பொருத்தமாக இருக்கும்.

போதை மருந்து பழக்கம் பற்றின கதைகள் பொதுவாக போதையில் விழும் அவலப் படலம், போதைமீட்பு நிலையத்தில் போராட்டம் மற்றும் துன்ப படலம், போதையின் மயக்க உலகம், அதன் கழிவிரக்கம் என போகும். இது ஒரு தேய்வழக்கு. ஆனால் சரவணன் இந்த தேய்வழக்குக்குள் போகவில்லை. போதை மருந்து அடிமைகளின் நுண்ணுணர்வு எப்படியானது என சித்தரிக்கிறார். அவர்கள் எதிலும் பட்டுக்கொள்ள விரும்புவதில்லை. குடும்ப உறவுகள், வேலை ஆகியவற்றுக்கு உள்ளே இருந்தபடியே அவற்றுக்கு வெளியிலும் இருக்கிறார்கள். தாமரை இலை நீர்த்துளிகளாக. சிலர் வாழ்க்கையின் தீவிரத்தன்மை பிடிக்காமல் போதைக்குள் அடைக்கலம் புகுகிறார்கள். நாவலின் கதைசொல்லி அப்படியானவன்.
 நாவலின் கதைசொல்லி தன் பயத்தில் இருந்து தப்பிக்க போதைக்குள் விழுகிறான். கழிவிரக்கம், போதனை, விமர்சன பாவனை, மிகை அவலம் ஏதுமின்றி அவனது இந்த உலகை சரவணன் காட்டுகிறார். இது என்னை மிகவும் கவர்ந்தது. போதையாளர்களைப் போன்றே பட்டும்படாமல் நாவலை சரவணன் எழுதிப் போகிறார். இந்த உலகத்துக்கான மனநிலையை முதல் சில அத்தியாயங்களுக்கு உள்ளாகவே அழகாக கொண்டு வந்து விடுகிறார்.
எனக்கு இந்த நாவல் அறுபதுகளில் அமெரிக்காவில் உச்சத்தில் இருந்த beat தலைமுறை எழுத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஜாக் கெரவக்கின் On the Road நாவல். ஆனால் கெரவக், ஆலன் கின்ஸ்பெர்க் போன்றோர் ஜென் தத்துவத்துக்கு மிகுந்த இடம் அளித்தார்கள். கட்டுகள் இன்றி ஊர் சுற்றுவது, போதை மருந்துகள் பயன்படுத்துவது, விட்டு விடுதலையாக இருப்பது ஒரு தத்துவார்த்த நிலை என கருதினார்கள். சரவணன் இந்த தத்துவார்த்த தளத்துக்கு செல்வதில்லை. அவர் நடைமுறைவாத எழுத்தாளர். இயல்பான வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் நிம்மதி பெற முடியும் என நம்புகிறவர். அதனாலே அவர் நாவல்களில் வணிகம் மூலம், நண்பர்கள் மூலம், பணம் ஈட்டி வெற்றி பெறுவது ஒரு எழுச்சி நிலையாக, தேடல் நிறைவேற்றமாக சித்தரிக்கப்படுகிறது. இந்நாவலிலும் அப்படித் தான்.
 போதை அடிமையான தன் காதலியின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கும் கதைசொல்லி விவசாயத்தில் வென்று தன்னை மீட்க முனைகிறான். அதில் அவன் முதல் வெற்றியை சுவைப்பதுடன் நாவல் முடிகிறது.
இந்நாவலில் இரண்டு விசயங்களை சரவணன் அட்டகாசமாய் கையாண்டிருக்கிறார். ஒன்று பயம், மற்றொன்று பாலியல்.
”அஜ்வாவில்” கிட்டத்தட்ட எல்லா பிரதான பாத்திரங்களும் வெவ்வேறு வகைகளில் பயத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலைகாரனாய் இருப்பவன் கூட ஒரு கட்டத்தில் பயத்தினால் துரத்தப்பட்டு நொடிந்து போகிறான். கதைசொல்லிக்கும் அவன் அப்பாவுக்கும் ஏதோ விளக்க முடியாத பயம் இயல்பிலேயே இருக்கிறது. கதைசொல்லியின் சொத்தை அவன் தாய்மாமனான மந்திரி ஒருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவருக்கு அஞ்சி அவன் ஓடிக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவருக்கு பதவி போய் விட, குற்றவழக்குகளில் மாட்டி நொடிந்து போகிறார். அவரையும் ஒருவித பயம் இப்போது சூழ்ந்து கொள்கிறது. கதைசொல்லிக்கு இப்போது தன் மாமனை நேரிட்டு மோதி வெல்ல முடியும் என தெரியும். தன் சொத்தை மீட்க இப்போது அவனால் முடியும். ஆனால் அவன் அதை செய்வதில்லை. போதை மனநிலை அவனை எதிலும் இறங்க முடியாதவனாக ஆக்குகிறது.
கதைசொல்லியின் காதலியான டெய்ஸி வடக்கிந்திய பெண். பணக்கார குடும்பத்து வாரிசு. அவள் தீவிரமான உறவுகளில் மாட்டிக் கொள்ள அஞ்சுகிறாள். அது தன் சுதந்திரத்தை பறிக்கும் என பயப்படுகிறாள். காதல், செக்ஸ் ஒவ்வொன்றும் அவளுக்கு துன்பம் தான். இதற்கு ஒரு தீர்வாக அவள் போதைக்குள் வீழ்கிறாள்.
போதை அடிமைகளுக்கு இயல்பாகவே பாலுறவில் ஆர்வம் குறையும். அவர்கள் பாலியல் என்பது முத்தமிடுவது, அணைத்தபடி தூங்குவது என்கிற அளவில் தான் இருக்கும். ஒரு பெண்ணின் மீது இச்சை ஏற்பட்டாலும் உடலுறவின் போது குறியில் தளர்ச்சி ஏற்படும். கதைசொல்லிக்கு நாவல் பூராவும் இந்த சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் அவன் இதை இயல்பாகவே ஏற்றுக் கொள்கிறான். இத்தகைய ஆண்கள் பொதுவாக உள்ளாடை அணிய மாட்டார்கள் என கதைசொல்லி ஓரிடத்தில் சொல்கிறான். ஒரு பெண்ணுடன் அவன் உறவு கொள்ள துவங்கும் போது அவள் அவன் பேண்டுக்குள் எதுவும் அணிந்திருக்கவில்லை என அறிகிறாள். அது அவளை அருவருக்க வைக்கிறது. அவள் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். அவளால் அந்த ஒரு சிறு விசயத்தை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் ஜட்டி அணியாமல் இருப்பது ஒரு முக்கியமான சமிக்ஞை. தன் பாலுறுப்பை அவன் பொருட்படுத்தவில்லை, தன் ஆண்மையை அவன் கைவிட்டு விட்டான் என்பதை அது காட்டுகிறது. அப்பெண் இதை உள்ளுணர்வில் அறிகிறாள். அதனால் தான் அவளுக்கு அருவருப்பு ஏற்படுகிறது. ஆனால் ஏற்கனவே போதை அடிமையான டெய்ஸிக்கு கதைசொல்லியின் இந்த பற்றற்ற பாலியல் நிலை புரிகிறது. ஏனென்றால் அவளும் அப்படித் தான். எனக்கு நாவலில் மிகவும் பிடித்த இடம் இந்த நுணுக்கமான ஜட்டி விவகாரம் தான். நாவல் முழுக்க பாலியல் இதுவரை தமிழ் நாவல்களில் பேசப்படாத வகையில் சித்தரிக்கப்படுகிறது.
இந்த நாவலின் மையம் என்பது வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாத கதைசொல்லியின் தப்பியோட்டம் தான். அவன் இதை எப்படி வென்று மேலெழுகிறான், வாழ்க்கையுடன் கைகுலுக்குகிறான் என்கிற புள்ளியை நோக்கி இந்நாவல் நகரவில்லை. அதாவது கதைச்சரடு பாதியில் நின்று விடுகிறது. டெஸ்ஸியின் மரணம், அஜ்வா எனும் பேரிச்சம்பழ விவசாயத்தில் கதைசொல்லியும் அவன் நண்பன் ஆண்டனியும் பெறும் ஆரம்ப வெற்றி, கதைசொல்லி பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது ஆகிய “தரிசனங்கள்” மூலம் நாவலின் மையப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைத் தர சரவணன் முயல்கிறார். ஆனால் இந்த தீர்வு பொருந்தி வரவில்லை. கதைசொல்லிக்கு எப்படி மீண்டும் வாழும் உத்வேகம் கிடைக்கிறது என சரவணன் சொல்ல முயல்கிறார். ஆனால் வாழ்க்கை குறித்த அவனது ஆதாரமான ஒட்டாமை என்ன ஆகிறது என பேசுவதை தவிர்க்கிறார். இது கதைப்போக்கை துண்டுபட வைக்கிறது.
ஒன்று, இந்த ஒட்டாமை அவனை பல்வேறு நிலைகளில் எப்படி மேலும் மேலும் சிதைக்கிறது என பேசியிருக்கலாம். அல்லது அவன் வாழ்க்கையின் தீவிரத்தை கண்டு அஞ்சுவதை நிறுத்தி எப்படி துணிச்சலாக பெரும் பயங்களையும் கசப்புகளையும் எதிர்கொள்கிறான் என சித்தரித்திருக்கலாம். ஆனால் இந்த விவாதங்களுக்குள் நாவல் போவதில்லை. நாவலுக்குள் சில பின்னல்களை சரவணன் சந்திரன் முடிச்சிடாமலே விட்டுப் போகிறார். இந்நாவலின் சிறு குறையென இதைக் குறிப்பிடலாம்.
நான் இப்படி நாவலின் மையம் பற்றி இங்கு பேசுவதே சற்று விசித்திரமான விசயம் தான். ஏனென்றால் சரவணன் சந்திரன் தன் நாவல்களில் வழக்கமாய் சாரு நிவேதிதாவின் கதைகூறல் பாணியை பின்பற்றுவார். கதைசொல்லியின் பயணங்கள், அவன் சந்திக்கும் பல்வேறு மனிதர்களின் துண்டுதுண்டான கதைகள், அவர்களின் விசித்திரமான குணாதசியங்கள், அபத்தங்கள், அந்த அபத்தங்கள் மத்தியில் செயலற்று இருக்கும் கதைசொல்லி, அதன் நகைச்சுவை, பகடி – இவை தான் அவர் நாவல்களின் கதையம்சமாகவும் கதைத்தளமாகவும் இருக்கும். மேற்தட்டு வாழ்க்கை, அதன் சாகசங்கள், உன்மத்த கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் பேசுவார். சாருவின் பாணியை பின்பற்றினாலும் நாவலின் அடிப்படை நுண்ணுணர்வாக, சிக்கலாக, தேடலாக சரவணன் வேறு விசயங்களை எடுத்துக் கொள்வார். அதாவது சேத்தன் பகத், அரவிந்த் அடிகா போன்ற இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளும் பேசுபொருட்களான அடித்தட்டு இளைஞனின் மேல்நிலையாக்கம், நவநாகரிக வாழ்க்கையின் சிக்கல்கள் ஆகியவற்றை சாருவின் மொழியில் எழுதி செல்வார். இதனிடையே சரவணன் சந்திரனுக்கே உரித்தான பார்வைகள், அனுபவங்களும் இருக்கும்.
ஆனால் இந்த நாவலில் அவர் சாருவின் பின்நவீனத்துவ வடிவத்தையும் தமிழில் பெரும் வெற்றி பெற்ற எதார்த்த நாவலின் கதைபாணியையும் கலந்து பயன்படுத்தி இருக்கிறார். இதனால் தான் (பின்நவீனத்து நாவலுக்கு துவக்கம், முடிவு, தீர்வு எதுவும் தேவையில்லை என்றாலும்) சரவணன் சந்திரன் ”அஜ்வாவில்” கதைசொல்லியின் சிக்கல்களுக்கு ஒரு தீர்வை காட்டும் விதமாய் முடிவில் சில கிளைமேக்ஸ் காட்சிகளையும் வைக்கிறார் (பழனி மலை ஏறுவது, அஜ்வா செடி தளிர் விடுவது, டெஸ்ஸி மரிப்பது). இந்த எதார்த்த நாவலுக்கான எத்தனங்கள் சரவணன் சந்திரனை சாருவின் முழுக்க சிதறிச் செல்லும் கதைகூறல் பாணியில் இருந்து சற்றே விடுவித்திருகிறது.
சரவணன் சந்திரனை ஒரு நடுநிலை இலக்கியவாதி எனலாம். வணிக எழுத்துக்காக செண்டிமெண்டுகள், நாடகீயம், வாழ்க்கை போராட்டத்தை வெற்றி நோக்கிய நகர்வாக பார்க்கும் “வெற்றிக்கொடி கட்டு” நம்பிக்கை ஊட்டல்கள் அவரிடம் உண்டு. அதேவேளை இலக்கிய நாவலுக்கான எதிர்நிலை வாழ்க்கை, புனிதங்களை உடைப்பது, தனித்துவமான தீவிரமான உணர்வுநிலைகளை பேசுவது, விசித்திரங்கள், அபத்தங்களை தொட்டுக் காட்டுவது ஆகிய குணாதசியங்களையும் தன் எழுத்தில் கொண்டு வருகிறார். “அஜ்வா” இந்த வகையில் மிக முக்கியமான ஒரு முயற்சி எனலாம்.

நன்றி: தீராநதி, 2017

No comments: