Saturday, May 6, 2017

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?

நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும்.

 இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் மீது இந்த வெறுப்பை தாராளமாய் கக்குவார்கள். மது சந்திப்புகளின் போது ஒரு கொள்கை ரீதியான கேள்வி கேட்கிறேன் எனும் போர்வையில் உங்களை காயப்படுத்தும் ஒரு கருத்தை சொல்வார்கள். இதை சொல்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள். மிகுந்த மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களை காயப்படுத்த எந்த காரணமும் இராது. ஆனாலும் ஒரு கண்மூடித்தனமாய் மூட்டமான கோபத்தை உங்கள் மீது அவர்கள் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்கவுண்டர் செய்வர்கள். என்கவுண்டருக்கு முன்பும் பின்பும் ஒரு பரிசுத்தமான புன்னகையை உதட்டில் தவழ விடுவார்கள். பல ஹாலிவுட் படங்களில் வரும் சைக்கோ கொலைகாரர்களைப் போல் இனிமையான குரலை கொண்டிருப்பார்கள்.
இலக்கிய வட்டாரத்தில் பலருக்கும் ஏற்படும் கசப்புக்கு, காயங்களுக்கு இந்த வெறுப்பே காரணம். யாருக்கும் யார் மீது தனிப்பட்ட கோபம் இல்லை; புகார்கள் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் டிராகுலாவாக தயங்க மாட்டார்கள். கடித்த பின்பும் உங்கள் மீது டிராகுலா முழுமையான காதலுடனே இருப்பார். உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். ஆனால் இருட்டில் மீண்டும் தனியாக மாட்டினால் கடிக்க தவற மாட்டார். இந்த வன்மத்துக்கு தீர்வே இல்லை.
இதற்கு விதிவிலக்கு உண்டா?
1)   வெள்ளந்தியான எழுத்தாளர்கள், 2) எல்லாரிடமும் நட்பு கொள்வதில் இயல்பான ஊக்கம் கொண்டவர்கள், 3) லட்சியவாதிகள்.
4) தினமும் பக்கம்பக்கமாய் எழுதுகிறவர்களும் விதிவிலக்கு (நிறைய எழுதும் போது மனதில் உள்ள விஷம் தீர்ந்து விடும்). தமிழில் அதிகமாக சர்ச்சையில் மாட்டும் எழுத்தாளர்களிடம் இந்த வெறுப்பு உண்மையில் இல்லை. அவர்களை நம்பி நீங்கள் எந்த பாதாளத்திலும் கூட செல்லலாம். இத்தகையோரை இனம் காண ஒரு சுலப வழி உண்டு.
நீங்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டினால் அதில் சற்றும் சம்மந்தப்படாத சிலர் எங்கிருந்தோ எழுந்து வருவார்கள். உங்களை கடுமையாய் சாடி எழுதுவார்கள். அல்லது அப்படி உங்களை சாடும் படி பிறரை தூண்டுவார்கள். உங்கள் மீது கண்டனங்கள் எழும் போது அவர்கள் அப்படி மகிழ்ச்சி கொள்வார்கள். இத்தனைக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இராது. வெளியே பார்த்தால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் நீங்களாக சென்று பேசினால் நட்பு பாராட்டுவார்கள். ஆனால் உங்களை காயப்படுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பொந்தில் இருந்து எழுந்து வருவார்கள்.
இவர்களின் பிரச்சனை என்ன?
1)   பொதுவாக எழுத்தாளன் துக்கத்தாலும், எரிச்சலாலும், கசப்பாலும் பீடிக்கப்பட்டவன். இந்த எதிர் உணர்வுகள் தாம் படைப்பு சக்தியாக அவனுக்குள் மாற்றம் கொள்கின்றன. ஆனால் எழுதாத போது இந்த எதிர் உணர்வுகள் எழுத்தாளனை அரித்துத் தின்னத் துவங்கும். அப்போது யார் மீது பொறாமை கொள்கிறார்களோ அல்லது யார் சொல்லும் கருத்து தமக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறதோ அவர்கள் மீது அல்லது சும்மா எதிரில் மாட்டும் யாராவது ஒருவர் மீது கசப்பை கக்குவார்கள். Zodiac படத்தில் வரும் சீரியல் கொலைகாரன் சொல்வான்: “எனக்கு தலைவலி அதிகமாகும் போது கொலை செய்வேன். தலைவலி உடனே போய் விடும்.” இவர்கள் அந்த வகை.
2)   இவர்கள் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள். அதை இலக்கிய வட்டத்திலும் பலரும் படித்து விட்டு வேண்டுமென்றே தன்னை உதாசீனிப்பதாய் கற்பிதம் கொள்வார்கள். அந்த கற்பிதத்தை வலுவாக நம்புவார்கள். ஆக, தன் தொகுப்பு பற்றி பேசாதவர்கள் அனைவரையும் கடும் விரோதத்துடன் காண்பார்கள். அல்லது நீங்கள் அவரை பாராட்டியிருப்பீர்கள். ஆனால் அதை ஒரு விமர்சனமாய் எழுதி பதிவு செய்ய உங்களுக்கு அவகாசம் இருக்காது. உங்களை சாகடிக்க முடிவெடுப்பார்கள். இப்படி ஒரு அற்ப காரணம் தான் வெறுப்பின் பின்னிருக்கும். பத்திரிகை ஆசிரியராய் இருப்பவர்கள், விமர்சகர்கள் இது போன்ற வெறுப்பாளரிடம் சிக்க வாய்ப்புகள் அதிகம்.
3)   கருத்து சொல்பவர்களை இவர்களுக்கு கண்டாலே அலர்ஜி. நீங்கள் உகாண்டாவின் அரசியல் பற்றி ஒரு பின்னூட்டமோ நிலைத்தகவலோ இட்டிருக்கலாம். ஆனால அதன் மூலம் உங்களை ஜென்மவிரோதியாய் கருதும் பலபேர் தோன்றி காத்திருப்பதை அறிய மாட்டீர்கள்.
4)   முகாம் அரசியல். நீங்க இன்ன முகாமை சேர்ந்தவர் என முத்திரை குத்தி விட்டால் உங்களுக்கு எங்கு அடி விழுந்தாலும் அதைக் கண்டு கைதட்ட பத்து பேர் தோன்றுவார்கள். பிறகு அவர்கள் கூட்டு சேர்ந்து நாலு ஊமைக்குத்து குத்துவார்கள். என்ன பிரச்சனை என்றே பல சமயம் அடிப்பவர்களுக்கு தெரிந்திராது. ”நீ என் நண்பனின் நண்பனின் எதிரின் நண்பனின் விரோதி, அதனால் சாவுடா” என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கும்.

இந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?
இன்று முகநூல் மூலம் இந்த வெறுப்பு பதிவாகிறது. ஒரு கருத்துப்போர் நடக்கிறது எனும் போர்வையில் தனிப்பட்ட வஞ்சமே வெளிப்படுகிறது. உங்கள் மீதான தாக்குதலுக்கு நீங்கள் பதிலளிக்கையில் நீங்களும் இந்த பாவனையில் பங்கு கொள்ள நேரிடும். முதல் படியாய், இது போன்ற பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் கூறக் கூடாது. மாறாக, இவர்களை நேரில் கண்டோ போனில் அழைத்தோ பேசி விட வேண்டும். பதிவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க மாட்டார்கள். நேரில் பேசும் போது அவர்களின் பொய் அம்பலம் ஆகி விடும். உங்கள் மீதான வெறுப்பு அவர்கள் குரலில் வெளிப்பட்டு விடும். மேலும் பொதுவெளியில் வைத்து உங்களை வறுத்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்படும். இன்னொரு சிறந்த வழி உள்ளது. இவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம், இவர்களின் உயரதிகாரியை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் புகார் செய்யுங்கள். அல்லது நேராக இவர்களின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் பேசுங்கள். இது கேட்க சிறுபிள்ளைத்தனமாய் தெரியலாம். ஆனா இலக்கிய வெறுப்பாளர்களின் வாலை ஒட்ட நறுக்க இம்மூன்றும் சிறந்த வழிகள். இவை நான் கண்டுபிடித்தவை அல்ல. சில இலக்கியவாதிகள் ஏற்கனவே பிரயோகித்து வெற்றி கண்டுள்ள மார்க்கங்கள் இவை. நான் முதல் வழியையே இப்போதெல்லாம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் நம் மீது வெறுப்பை துப்புபவர்கள் நம் நண்பர்களே. நேரடியாய் நாம் விசாரிக்கும் போது அவர்களுக்கு லஜ்ஜையாய் இருக்கும். குறைந்தது, இவனைப் பற்றி திட்டி எழுதினால் போனைப் போட்டு காதைக் கடிப்பானே என தயங்குவார்கள். எழுத்தில் பதில் சொல்லவே கூடாது.


No comments: