Friday, May 26, 2017

ஈகையும் பொதுப்புத்தியும்


சமீபத்தில் ஒரு மின் சக்கர நாற்காலி வாங்கும் பொருட்டு நண்பர்களிடம் உதவி கோரி வந்தேன். இது குறித்து எழுதவும் செய்தேன். அப்போது ஒரு அறக்கட்டளை நடத்தும் நண்பரையும் நாடினேன். அவரது எதிர்வினை சுவாரஸ்யமாக இருந்தது: அவர் தயங்கினார்; உங்களுக்கு இவ்விசயத்தில் உதவினால் பிறர் கேள்வி கேட்பார்களே என்றார். எனக்கு அவரது கவலையின் காரணம் விளங்கியது. பரவாயில்லை என்றேன். வேண்டுமென்றால் கடனாக தருகிறேன் என்றார். அவர் நல்ல மனம் படைத்தவர். அதனால் கடன் தர முன்வருகிறார். ஆனால் ஊனமுற்றவருக்காக உபகரணம் வாங்க உதவுவதில் அந்த தயக்கம் எங்கிருந்து வருகிறது? இதை ஒரு குற்றமாக சமூகம் கருதும் என அவர் ஏன் அஞ்சுகிறார்?

 இதுவே நான் ஒரு ஏழை மாணவன்; எனக்கு பொறியியல் படிக்க பணம் வேண்டும் என்றால் உடனே கிடைத்திருக்கும். எனக்கு சிறுநீரகம் பழுதாகி விட்டது; அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டுமென்றாலும் கிடைத்திருக்கும். ஆனால் ஊனமுற்ற ஒருவருக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு உதவ நிறைய பேர் முன்வர மாட்டார்கள். இது ஏன்? ஸ்கூட்டர் ஒரு சொகுசு என மக்கள் நினைப்பார்கள். அது சிலருக்கு ஒரு அத்தியாவசிய தேவை, வாழ்க்கையை முழுமையாய் வாழ்வதற்கான அடிப்படை விசயம் என அவர்கள் நினைக்க மாட்டார்கள். ஊனம் இல்லாத ஒரு ஆளுக்கு ஸ்கூட்டர் ஒரு சொகுசு தான். அது இல்லாவிட்டால் அவர் பேருந்திலோ ரயிலிலோ போவார். நடந்தோ சைக்கிளிலோ போவார். ஆனால் ஊனமுற்ற ஒருவர் ஸ்கூட்டர் இல்லாவிட்டால் படிக்கவோ வேலை செய்யவோ, விளைவாக சாப்பிடவோ வீட்டு வாடகை கொடுக்கவோ முடியாது. இந்த வித்தியாசம் நம் பொதுப்புத்திக்கு புரியாது.
ஈகை உணர்வின் பின் உள்ளது அற உணர்வு அல்ல. செண்டிமெண்ட் தான். இந்த செண்டிமெண்ட் நம் பொதுப்புத்தியால் கட்டமைக்கப்படுகிறது. பண உதவியை பெறும் நபரின் பிரச்சனை உதவுபவருக்கு மனதளவில் உணர முடிவதாய் இருக்க வேண்டும். அது மீடியா வழியாக தொடர்ந்து ஒரு பொது சமூக பிரச்சனையாக, மனதை உலுக்கும் பிம்பமாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஊனமுற்ற ஒருவரின் பிரச்சனைகளை நம்மால் உணர்வுரீதியாய் புரிய முடியாது. அவர் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருக்கிறார். நம் உணர்வுகளை தூண்டுவது நமது புரிந்துணர்வு (empathy). நமது புரிந்துணர்வை உருவாக்குபவை நமது mirror neurons (பிரதிபலிக்கும் நரம்பணுக்கள்). பொதுவாக நமது அனுபவத்துக்கு சமானமான அனுபவங்கள் கொண்டவர்களுடன் நம்மால் எளிதில் தொடர்புறுத்த முடியும். என் பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டனர் என்றால் மற்றொரு புற்றுநோயாளியின் சிரமங்கள் எனக்கு எளிதில் புரியும். அவர்களின் சிரமங்கள், சிக்கல்கள், தேவைகள் என்னவென தெரியும். அப்போது அவர்கள் மீது அதிக கருணையும் ஏற்படும்.
ஒருவரது மூக்கில் இருந்து சதா ரத்தம் வடிகிறது. அவருக்கு ஒரு பெரும் வியாதி உள்ளது. அவரைக் கண்டதும் உதவுவோம். ஏனெனில் நமது mirror neurons அவர் இடத்தில் நம்மை வைத்து கற்பனை செய்ய தூண்டுகின்றன. நாம் பதறுகிறோம். ஆனால் அவருக்கு ரத்தம் வடியவில்லை. மாறாக மனச்சிதைவு நோயால் அவதிப்படுகிறார். அல்லது தீவிர மன அழுத்தத்தில் தவிக்கிறார். அவரால் சுலபத்தில் வேலைகள் செய்ய முடியாது. அவருக்கு மருத்துவ உதவிக்கும் வாழ்க்கையை நடத்தவும் பண உதவி தேவை. அவர் நிலையை எடுத்துக் கூறி மக்களிடம் பணம் பெற முடியாது. ஏன்? ஏனென்றால் அவருக்கு ரத்தம் வடியவில்லை. கிட்னி அழுகி விட்டது, நுரையீரல் பழுத்து விட்டது என்றால் கூட நம் mirror neurons வேலை செய்யும். ஆனால் மன அழுத்தத்தை உடல் வியாதி போல் கற்பனை செய்ய முடியாது. அதை நாம் உணர்வுரீதியாய் நெருங்கி பார்க்க முடியாது.
இதே பொதுப்புத்தி தான் கல்வித் தொண்டிலும் செயலாற்றுகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்பு சாதியாலும் வறுமையாலும் பீடிக்கப்பட்டு துன்புற்ற சமூகம் நாம். இந்திய விடுதலைக்குப் பிறகு கல்வி மூலம் தான் அடித்தட்டு மக்கள் மத்திய வர்க்கமாகவும், மத்திய வர்க்கம் மேல்மத்திய வர்க்கமாகவும் முன்னேறின. திறமையிருந்தும் வறுமையால் படிக்க முடியாதவர்களை நாம் பார்த்திருக்கிறோம். நம்மில் பலருமே அத்தகைய சூழலை தனிப்பட்ட முறையில் கடந்து வந்திருப்போம். நமது ஊடகங்களில் வறுமைக்கும் கல்விக்குமான உறவு தொடர்ந்து பேசப்படுகிறது. வறியர்களுக்கும் மேற்தட்டினருக்குமான இடைவெளியை குறைக்க அரசு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஊக்கத்தொகைகள் வழங்குகிறது. “ஜெண்டில்மேன்” போன்ற ஒரு படம் கல்வி மறுக்கப்படுவதை பெரும் சமூகத் தீமையாய் முன்வைக்கிறது. அடித்தட்டில் இருந்து படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவர் கதைகளை நாம் கைகளை தட்டி கேட்கிறோம். இது மெல்ல மெல்ல ஒரு தொன்மமாக உருப்பெறுகிறது. இதில் தவறில்லை. இது நிச்சயம் முக்கியமே.
ஆனால் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை நாம் வறுமை, கல்வி, வேலை, படிநிலையில் மேல்நிலையாக்கம் என்று சுருக்கிக் கொள்கிறோம். இது தான் பிரச்சனை. வறுமை, மருத்துவ சிகிச்சை என்பதைத் தாண்டி செயல்பட நமது அறக்கட்டளைகள் தயாரில்லை. ஏனென்றால் ஊனமுற்றவருடன் தம்மை இணைத்துப் பார்க்கும் உளவியல் நம்மவர்களிடம் இல்லை. அவர்களை பிறிதாக நினைக்கிறோம். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் உதவிகளை செய்வதில் நமக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. ஒரு கூண்டுப்பறவையை போல் அவர்களை வெளியில் இருந்து பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.
நான் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தான் கூடுதல் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர் ஒன்றை ஓட்ட ஆரம்பித்தேன். அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்திருந்த வேளை. கையால் ஓட்டும் ஒரு சைக்கிளில் ஒரு ஊனமுற்ற இளைஞன் என்னிடம் வந்தான். என்னுடைய ஸ்கூட்டரைப் பற்றி விசாரித்தான். அதைப் போல் ஒரு வண்டி தனக்கும் வாங்க வேண்டும் என்றும், நீண்ட தொலைவு சென்று கல்லூரிப் படிப்பு படிக்க வேண்டும் எனும் தன் கனவுகளை என்னிடம் விவரித்தான். ஆனால் அவன் கனவுகள் சுலபத்தில் நிறைவேறாது என எனக்கு அப்போது தோன்றியது. அவனுக்கு யாரும் சுலபத்தில் உதவ முன்வர மாட்டார்கள். அவனுக்கு வாகன வசதி வேண்டும். அன்றைக்கெல்லாம் கல்வி வளாகங்களில் ரேம்ப், மின் தூக்கி வசதிகள் கிடையாது. அவன் நிச்சயம் படிக்க முடியாமல் வீட்டுடன் முடங்கிப் போயிருப்பான். இன்றைக்கும் அவனைப் போன்றவர்களின் நிலை கிராமங்களில் அதே தான். அவன் எந்த அறக்கட்டளையை அணுகினாலும் கைகளை விரிப்பார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு இன்றும் என்னிடம் “இது போல் ஊனமுற்றோருக்கான ஸ்கூட்டர் வாங்க எங்கு போகலாம்? எவ்வளவு செலவாகும்? உதவி கிடைக்குமா?” என்று விசனமாய் விசாரிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றும் போக்கிடமில்லை. உதவ ஆளில்லை. ஏனென்றால் இத்தகைய தேவைகளை இன்றும் நம் சமூகம் ஒரு சொகுசாகப் பார்க்கிறது.
ஒரு உடல்நிறைவான மனிதருக்கு மிகையாக தோன்றும் ஒன்று உடல்குறை கொண்டவருக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். ஒரு உடல்நிறைவானவருக்கு சமத்துவம் என்பது கல்வி, மரியாதை, அந்தஸ்து, தனி அடையாளம் ஏற்கப்படுவது என்பதாய் இருக்கும். ஆனால் உடல்குறை கொண்டவருக்கு அது ஒரு நடைமுறை வசதியாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகச்சின்ன ஒன்றாக இருக்கும். ஆனால் உடல்குறை கொண்டோருக்கு அதுவே சமவாய்ப்புகளுக்கான சாவியாக இருக்கும். ரேம்ப் எனப்படும் சாய்வுப் பாதையை எடுத்துக் கொள்வோம். சக்கர நாற்காலி பயன்படுத்தாத ஒருவருக்கு எளிதில் அதன் முக்கியத்துவம் புரியாது. அது ஏன் எல்லா பொதுமக்கள் புழங்கும் எல்லா கட்டிடங்களிலும் இருக்க வேண்டும் என மாற்றுத்திறன் போராளிகள் வலியுறுத்துகிறார்கள் என புரியாது. நான் கடந்த சில வாரங்களாய் சக்கர நாற்காலியை தினமும் பயன்படுத்துகிறேன். அப்போது தான் எனக்கே ரேம்பின் அத்தியாவசியம் புரிந்தது. ரேம்ப் என்பது பெண்களுக்கான கழிவறை போல. ஒரு அலுவலகத்தில் பெண்களுக்கு கழிவறை இல்லை. ஆண்களுக்கே மட்டுமே உண்டு என்றால் அங்குள்ள பெண் ஊழியர்களின் நிலை என்னவாகும் நினைத்துப் பாருங்கள். பெண்கள் 8 மணிநேரம் அடக்கிக் கொள்ளட்டும் என மனிதவளத்துறை சொன்னால் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும். ஒரு கட்டிடத்தில் ரேம்ப் கட்ட நிதி இல்லை; மாற்றுத்திறனாளிகள் பொறுத்துக் கொள்ளட்டும் என நிர்வாகம் நினைப்பது இது போலத் தான்.
 ஒரு பெண் மாதவிலக்கான நாட்களில் தனக்கு விடுப்பு வேண்டுமென ஏன் கேட்கிறாள் என்பதை ஒரு ஆணால் சுலபத்தில் உணர்ந்து கொள்ள முடியாது. மாற்றுத்திறனாளிகள் தம் தேவைகளை அவர்கள் முன்வைக்கும் போதும் அவ்வாறே நிகழ்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு மனுஷ்யபுத்திரன் விமானத்துள் பயன்படுத்தப்படும் விசேட சக்கரநாற்காலியான aisle wheelchair சில விமானங்களில் இல்லாமல் போகும் போது ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். இது ஒரு பிரச்சனையா என்று தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இந்த சக்கரநாற்காலி இல்லை என்றால் ஒருவர் ஊர்ந்து விமானத்தில் ஏறும் நிலை ஏற்படும். இந்தியா முழுக்க மாற்றுத்திறனாளிகள் சிலநேரம் சந்திக்கும் அவலம் இது. மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவருக்கு இது ஒரு அற்ப பிரச்சனையாகத் தோன்றலாம்.
ஒரு கிராமத்தில் பெண்களுக்கு கழிப்பறை கட்ட ஒருவர் நிதி திரட்டுகிறார் என்றால் அதற்கு பணம் நல்க ஆயிரம் கைகள் நீளும். ஆனால் ஒரு திருநங்கை பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிதி உதவி வேண்டினால் எத்தனை பேர்கள் முன்வருவார்கள்? அத்தகைய ஒரு சிகிச்சை பலருக்கும் அநாவசியமாய் தோன்றும். ஆனால் திருநங்கைகளுக்கு அது வாழ்வா சாவா நெருக்கடி. ஒரு ஆணுடலில் வாழும் பெண் பாதி பிணம் தான். அதனால் தான் விபச்சாரம் செய்தும், கடன் வாங்கியும் பணம் திரட்டி அவர்களில் சிலர் இத்தகைய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். நம்மவர்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியாது என்பது மட்டுமல்ல, இதை பரிகாசம் செய்து கடந்து விடுவார்கள்.
 ஏனென்றால் நம் பொதுப்புத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கையருக்கும் சாதகமான தொன்மங்கள், செண்டிமெண்டுகள் மீடியாவாலோ சமூக மாற்றங்களாலோ கட்டி எழுப்பபடவில்லை. மேலும், ஒரு பிரச்சனையை பொதுப்புத்தி தாண்டி யோசிக்கும் விரிந்த பார்வை இலக்கியம் வாசிக்கும் பல அறிவாளிகளுக்கே இல்லை. கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் கடந்து தொண்டு செய்ய அவர்களாலே முன்வர முடிவதில்லை.
 இந்த சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு விதமான கட்டாயத் தேவைகள் உள்ளன. ஒருவருக்கு அது கண் அறுவை சிகிச்சையாக இருக்கலாம். இன்னொருவருக்கு காலில் அணியும் காலிப்பர் கருவியாக இருக்கலாம். நாங்கள் கண் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பணம் தருவோம். அதற்கு மட்டுமே உணர்ச்சி வசப்படுவோம் என்பது குறுகின மனப்பான்மை. மேட்டுப்பகுதியில் இருந்து புறப்படும் நீர் எல்லா பள்ளங்களுக்கும் விருப்புவெறுப்பின்றி பாய்வது போல் ஈகை செய்யும் மனம் இருக்க வேண்டும்.

 ஒரு மாற்றுத்திறனாளிக்கு, ஒரு திருநங்கைக்கு, ஒரு மூளை வளராத குழந்தைக்கு, மனநலம் குன்றிய ஒருவருக்கு மனத்தடை இன்றி உதவி செய்ய நாம் முன்வர வேண்டும். இதயம் பலவீனமான பத்து வயதுப் பையனைக் கண்டு மட்டுமே நாங்கள் பச்சாதாப்படுவோம் என அடம்பிடிக்கக் கூடாது. வாழ்க்கையை நடத்த வழியில்லாத ஒரு முழுநேர கலைஞனையும் ஒரு வறிய மாணவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் மனமுதிர்ச்சியை, மனவிரிவை நமது கொடையாளர்கள் பெற வேண்டும் என்பது தான் என் வேண்டுதல். கலைஞனிடம் போய் ”உனக்கு வேலை செய்து பிழைத்தால் என்ன?” என கேட்கக் கூடாது. இதே கேள்வியை நீங்கள் ஒரு மாணவனிடமும் கேட்கலாமே? பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின் வேலை செய்து சம்பாதித்து அப்பணத்தில் பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களை எனக்குத் தெரியும். அதே போல் எல்லா ஏழை மாணவர்களும் உழைக்க வேண்டும் என நீங்கள் கோருவீர்களா? மாட்டிர்கள். அதே போல ஒவ்வொரு கலைஞனும், படைப்பாளியும் வேலை செய்தபடி கலை சேவை செய்ய இயலாது. இதை திறந்த மனதுடன் உணர்ந்து செயல்படும் போது தான் நாம் நடத்துவது உண்மையான அறக்கட்டளையாக இருக்கும். நம்முடைய செண்டிமண்டுகளை பொறுத்து ஒரு பிரச்சனையை முக்கியமென்றும் மற்றொன்றை அநாவசியம் என்றும் முத்திரை குத்துவது ஈகை அல்ல, வன்முறை! 

No comments: