உதவி கோருவதன் அகவிடுதலை


உதவி கோர மிகவும் தயக்கம் கொண்டவன் நான். பள்ளியில் படிக்கையில் (ரெண்டாம் வகுப்பு என நினைக்கிறேன்) இரண்டு கால்களிலும் காலிப்பர் அணிந்திருப்பேன். எனக்கு டாய்லட் போக வேண்டுமெனில் ஆயாக்கள் யாராவது தூக்கி செல்ல வேண்டும். எனக்கு அவர்களை அழைத்து சொல்ல மிகவும் சங்கடமாக இருக்கும். அடைக்கிக் கொள்வேன். ஒருநாள் அடக்க முடியாமல் கால்சட்டைக்குள் மலம் கழித்து விட்டேன். நாற்றம் அடிக்க சக மாணவர்கள் என்னை கேலி செய்தார்கள். விரைவில் வகுப்பில் செய்தி பரவி பிறகு ஆசிரியர் மூலம் ஆயாவை அழைத்து அவர் என்னை தூக்கி சென்று அலம்பி விட்டார். எனக்கு உடம்பு நடுக்கம் வீட்டுக்கு சென்ற பின்னும் நிற்கவில்லை.

பதினான்கு வயதிருக்கும் போது அப்பா என்னை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். நான்கு தெருக்கள் சுற்றி நடக்க வேண்டும். ஒரு தெருவில் அப்பா என்னை தனியே விட்டு கடைக்கு சென்று விட்டார். தனியே நடக்க முயன்ற நான் களைப்பில் விழுந்து விட்டேன். எனக்கு ஊரில் அதிகம் பேரிடம் பழக்கமில்லை. யாரிடம் உதவி கேட்க எனத் தெரியவில்லை. எதிரே ஒரு ஓட்டல். அங்கே இருப்பவர்கள் பலரும் என்னை வேடிக்கை பார்த்தனர். அவர்களுக்கு என் நிலைமை புரியவில்லை. விழுந்து விட்டேனா அல்லது தரையில் படுத்துக் கிடக்கிறேனா என குழம்பி இருப்பார்கள். நான் கத்தி யாரையாவது அழைத்திருக்கலாம். ஆனால் நா எழவில்லை. அதன் பிறகு அப்பா வந்து தூக்கி அழைத்து சென்றார்.
வளர்ந்து தனியே சென்னை வந்து படித்து வேலை பார்த்து 17 வருடங்கள் ஓடி விட்டன. இந்த வருடங்களில் எத்தனையோ கரங்கள் என்னை கேளாமலே தூக்கி உதவி இருக்கின்றன. பெயர் தெரியாத பல மனிதர்களின் இளகிய மனங்களை, கருணையை, அன்பை காணும் அதிர்ஷடம் வாய்த்திருக்கிறது. ஊனமுற்றிருப்பதன் ஒரு நல்லூழ் மனிதர்களின் கட்டற்ற கருணையை அணுக்கமாய் காண முடிவது; அதற்கு சுலபத்தில் பாத்திரமாக இயல்வது.
 அதே நேரம் மனிதர்களிடன் சுலபத்தில் உதவி கோர முடியாத இறுக்கமும் என்னிடம் இன்னமும் உள்ளது. கடந்த மாதம் கடற்கரை மணலில் நடந்து விட்டு சாலையில் நிறுத்தி இருந்த என் பைக்குக்கு மீண்டேன். திண்டான பகுதியில் இருந்து கீழே இறங்க வேண்டும். என்னால் தனியாய் முடியாது. கடந்து போகும் ஆட்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் மூவர் யார் கவனத்தையாவது ஈர்க்க முயன்றேன். ஆனால் யாரும் கவனிக்கவில்லை. சத்தமெழுப்பி கவனம் பெறவும் மனமில்லை. பதினைந்து நிமிடங்கள் சிரமப்பட்டு நின்றபடி இருந்தேன். கடைசியில் ஒருவர் அருகில் வர அவரிடம் உதவி கோரினேன்.
மனிதர்களுக்கும் எனக்குமான இடைவெளியில் ஒரு பனிப்பாறை போல் “உதவி” எனும் சொல் இருக்கிறது. அதைச் சொல்ல அப்படி ஒரு சங்கோஜம். இந்த சங்கோஜம் மறையும் போது என் அகங்காரமும் கலைகிறது. மனம் லேசாகிறது. உதவி கேட்கும் போது சகமனிதருடன் சாத்தியமாகும் அணுக்கம், மனம் கொள்ளும் அகங்காரமற்ற நிலை முக்கியமானது. அது உதவியை விட அதிக மனநிறைவை தருவது. அதற்காகவே இந்த தன்னுணர்வை கடக்க விரும்புகிறேன். சில நேரம் என்னையும் அறியாமல் எனக்கு அது சுலபத்தில் சாத்தியப்படுகிறது.

இந்த வாரம் என் அத்தியாவசியான பயன்பாட்டுக்காக ஒரு மின் சக்கர நாற்காலி வாங்க நண்பர்கள் பலரின் பண உதவியை நாடினேன். மொபைலில் இருந்த ஒவ்வொரு தொடர்பு எண்ணாக சுழற்றினேன். அனேகமாய் எல்லா நண்பர்களும் உதவ முன்வந்தார்கள். அப்போது நான் உணர்ந்தது இது: இதற்கு முன் இது போன்று பணம் கோரும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்போது அதில் இழிவு உள்ளதாகவும் நான் கருதவில்லை. மாறாக எனக்கு வெகு அருகில் வர, அவர்களிடம் மனத்தடையின்றி உறவாட எங்களுக்கு பரஸ்பரம் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. உதவி கோரிய போது நான் எந்த சங்கடத்தையும் இப்போது உணரவில்லை. ஒரு குழந்தையின் கன்னத்தை கிள்ளுவது போல் நெருடலின்றி பேசினேன். அவர்களும் மிக இயல்பாய் இதை கையாண்டார்கள். இவ்வளவு தான். சில வினாடிகளின் தொலைவு தான். ஆனால் சில நேரம் அது 37 வருடங்களின் தொலைவாக இருக்கிறது.

Comments