Thursday, May 4, 2017

முற்போக்கும் கடவுள் நம்பிக்கையும்

 Image result for சமஸ்
சமீபத்தில் சமஸ் தமிழ் ஹிந்துவில் எழுதின “நான் இந்துவாக வாழ்வதாலே மதவாதி ஆகிவிடுவேனா?” அவரது மிகச்சிறந்த கட்டுரை என்பேன். அவர் எழுதியதிலேயே சற்றே தத்துவார்த்தமான, சிக்கலான கட்டுரையும் தான் இது. அதனாலே அதன் மைய வாதம் எளிய வாசகர்கள் பலருக்கும் புரிந்திருக்காது. பலரும் அது இந்துத்துவாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை என எளிமையாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நேர்மாறாக இந்துத்துவாவை எதிர்கொள்ள சிறந்த வழி ஒன்றை அக்கட்டுரை முன்வைக்கிறது. குறிப்பாக முற்போக்காளர்கள் மக்களின் உளவியலை, பண்பாட்டை புரிந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மத நம்பிக்கையை பழிக்காமல் இருப்பது அவசியம் என்கிறது.

 பொதுவாகவே, முற்போக்கு என்றாலே இந்து மதத்தை முழுக்க நிராகரிப்பது தான் என கறுப்பு வெள்ளையாக புரிந்து வைத்திருக்கும் எளிய சிந்தனையாளர்களுக்கு இக்கட்டுரை கசப்பாக உள்ளது. ஏனென்றால் இக்கட்டுரை அவர்களை நேரடியாக தாக்குகிறது.
இவர்களில் இரு தரப்பினர் இருக்கிறார்கள். 1) இடதுசாரிகள் – இவர்கள் மதம் மக்களை அடிமைப்படுத்தும் போதை என கருதுகிறார்கள். மேலும் மார்க்ஸியம் ஒரு பொருளியல் கோட்பாடு. அபௌதிகவாதத்துக்கு எதிராக பௌதிகவாதத்தை முன்வைப்பது. ஆக, ஆன்மீக சிந்தனையுடன் ஒரு மார்க்ஸியவாதி ஒன்றிணைவது மிக மிக சிரமம். ஆனால் இந்திய மண்னின் நம்பிக்கைகள், தொன்மங்கள், கலாச்சார குறியீடுகள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்து மதம் இருக்கிறது. மதச் சடங்குகளில் பங்கெடுப்பதன் வழி, அவற்றை தமக்கு ஏற்றபடி தகவமைப்பதன் வழி, நம் முற்போக்காளர்கள் இடதுசாரி அரசியலை இந்தியாவில் மீட்டுருவாக்கம் செய்ய முடியும்.
2) தலித்துகள் – சாதியம் இந்து மதம் உருவாக்கிய கட்டமைப்பு எனும் நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. ஆனால் இந்து மதம் எனும் அமைப்பே இருபதாம் நூற்றாண்டில் தோன்றியது தான். இங்கு இந்து மதம் என்ற பெயரில் பல்வேறு ஆன்மீக தரப்புகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சில சாதியத்துக்கு ஆதரவான நியதிகளை ஏற்படுத்தி ஊக்குவித்தன. ஆனால் சாதி அமைப்பு மனு ஸ்மிரிதிகளால் மட்டும் தோன்றிய ஒன்று அல்ல. அது நமது அடையாள உருவாக்க உளவியலுடனும், நிலப்பிரபுத்துவ அமைப்புடனும் பின்னிப் பிணைந்து உருவான ஒரு சிக்கலான அமைப்பு. ஒரு இந்தியர் அண்டார்டிக்கா சென்று ஒரு புது மதத்தை தழுவினாலும் கூட அவர் சாதி உறவுகளை கைவிட மாட்டார். இது ஒன்றைக் காட்டுகிறது: சாதியை உருவாக்கி தக்க வைப்பது மதம் அல்ல. இந்து மதம் இல்லாவிடிலும் இங்கு சாதி இருக்கும். தமிழகம் சிறந்த உதாரணம். இங்கு பெரியாரின் கடவுள் மறுப்பு சிந்தனைக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. ஆனால் அதனால் சாதி ஒழிய வில்லை. மாறாக மத்திய சாதிகள் வலுப்பட்டனர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் தலித்துகளை மேலும் ஒடுக்கினர். திராவிட கட்சிகள் என்ன தான் தலித் ஆதரவு அரசியலை முன்னெடுத்தாலும் அக்கட்சிகள் இன்னொரு பக்கம் சாதி அமைப்புகளை வலுவாக்கி இரும்புக் கோட்டைகள் ஆக்கவே செய்தன. அதன் வழியாக தம் வாக்கு வங்கிகளை உறுதிப் படுத்தினர்.
 ஆக கடவுள் மறுப்பு சிந்தனை இங்கு சாதியை சிறிது கூட அசைக்கவில்லை. வலுப்படுத்தவே செய்தது. இது ஒன்றைக் காட்டுகிறது. நாம் மத நம்பிக்கையையும் சாதியையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.
மனு எழுதி வைத்ததால் சாதி உருவாகவில்லை. பிராமணர்கள் பூணூல் அணிவதால் சாதி உருவாகவில்லை. மனுவும் பிராமணர்களும் இல்லாவிடிலும் சாதி இருக்கும்.
இதை ஒட்டி மற்றொரு கேள்வி: சாதியை உருவாக்கியது இந்து மதம் என்றால் இந்திய தேவாலயங்களுக்குள் இருக்கும் சாதியை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம்? குமரி மாவட்டத்தில் கிறித்துவ நாடார்கள் கிறித்துவ தலித்துகள் இடையே மண உறவுகள் இல்லை. கிறித்துவ தலித்துகள் அங்கு பிஷப் ஆவதும் இல்லை. ஏன் இச்சூழல் அங்கு ஏற்பட்டது? கர்த்தர் சாதியை போற்றி பாதுகாக்க சொன்னாரா? இல்லையே?
ஆனால் இந்து மதமே ஒரே வில்லன் என நம்பும் சில தலித் சிந்தனையாளர்கள் சாதியை மிக மிக எளிமையாக புரிந்து கொள்கிறார்கள். தலித்துகளுக்குள் உள்ள பல்வேறு பிரிவுகளை, அவர்களுக்குள் நிலவும் ஒடுக்குமுறையை எப்படி புரிந்து கொள்ள? சாதியத்தின் முக்கிய தந்திரம் இது: அது ஒரு வைரஸ் போல யாரையும் தாக்கி தன்னுடைய கருவியாக்கும். ஒரு தலித்தையும் தாக்கி அவரை ஒரு “உயர் சாதியாக” சிந்திக்க வைக்கும். அவருக்கு கீழ் மற்றொரு தலித்தை “கீழ் சாதியாக” உருவாக்கிக் கொடுக்கும் (தலித்துகள் மத்தியிலும் படிநிலை உள்ளது). அல்லது இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் செய்வது போல இந்து மத அடையாளங்களை ஏற்பதன் மூலம் தலித்துகள் இந்த சாதி அமைப்பில் அதிகாரம் பெறுவது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கும். சாதி நமக்குள் குடியேறி நம் சுபாவத்தை மாற்றி நம்மை உறிஞ்சு வாழும் ஒரு வைரஸ். அதை வெளியே தேடி கொல்ல முயல்வதில் அர்த்தமில்லை. அடுத்த பத்து வருடங்களில் இங்கு இந்துத்துவா வளரும் என்றால் அதனால் அதிக ஆபத்து திராவிட கட்சிகளுக்கு அல்ல. தலித் கட்சிகளுக்குத் தான். ஆக, மதத்தை அரவணைப்பதே தலித்துகளின் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான சிறந்த வழியாக இருக்கும். உதாரணமாய், அயோத்திதாசர் செய்தது போல் இந்த மண்ணின் பூர்வீக மதம் தலித்துகளின் மதம் தான் என அவர்கள் பேச வேண்டும். பல தெய்வ சடங்குகளை அவர்கள் அவ்வாறு மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலையை இந்துத்துவாவாதிகள் செய்து தலித் அமைப்புகளை காலி செய்வார்கள்.
இந்த முக்கியமான பார்வையை தான் சமஸ் தன் கட்டுரையில் அளிக்கிறார்.
சமஸ் இன்னொரு முக்கியமான அவதானிப்பையும் செய்கிறார். இந்துத்துவர்களுக்கும் கிறித்துவ மிஷினரிகளுக்குமான ஒற்றுமை. இதைப் பற்றி நான் சில வருடங்களுக்கு முன்பு உயிர்மையில் ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். அதில் இந்துத்துவர்களும் இடதுசாரிகளும் ஹெகலிய முரணியக்க கோட்பாட்டின் வழி வந்தவர்கள். ஆனால் அசலான இந்திய சிந்தனை இந்த முரணியக்கத்தை கடந்த ஒன்று என்று அக்கட்டுரையில் பேசி இருந்தேன். எதையும் சரி, தவறு, நம்மவர், அடுத்தவர் என எதிரிடையாக பிரித்துப் பார்ப்பது ஒரு ஐரோப்பிய பார்வை. இந்து தேசியத்தில் உள்ள தேசியம் கூட ஒரு இந்திய கருத்தாக்கம் அல்ல. காலனிய காலத்தில் ஐரோப்பிய கல்வி பெற்ற இந்துமகாசபையினர் இந்து என அடையாளத்தின் கீழ் கிறித்துவ மிஷினரிகளின் கட்டமைப்பை பின்பற்றி இந்துத்துவாவை உருவாக்கினர். எப்படி தேவாலயங்கள் பன்மைத்ததுவத்தை சாத்தானாக கட்டமைப்பதனவோ அதே போல் இவர்கள் கிறித்துவர்களையும் இஸ்லாமியர்களையும் மற்றமையாக, சாத்தானாக கட்டமைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்தனர். இந்துத்துவாவின் முக்கிய பிரச்சனையே அது இந்து மதத்துக்கு எதிரானது என சமஸ் சரியாக குறிப்பிடுகிறார். இந்துத்துவா ஒரு கிறித்துவமயமாக்கப்பட்ட இந்துக் கோட்பாடு என்கிறார். இது மிக முக்கியமான பார்வை.

இது போன்ற ஒரு கட்டுரை எழுதினால் கடுமையான எதிர்வினைகள் வரும் என சமஸ் எதிர்பார்த்திருப்பார். முற்போக்காளர்கள் தன்னை துரோகி என விரல் சுட்டுவார்கள் என ஊகித்திருப்பார். ஏனென்றால் மனிதர்கள் தமக்கு சௌகர்யமான கட்டமைப்புக்குள் சிந்திக்கவும் புழங்கவும் குடியிருக்கவும் விரும்புவார்கள். அந்த கட்டமைப்பை யாராவது உடைத்து உண்மையை காட்டினால் அவர்கள் கடுங்கோபம் கொள்வார்கள். அக்கோபத்தை எதிர்கொள்ள துணிச்சல் வேண்டும். சமஸின் இத்துணிச்சலை பாராட்டுகிறேன். என்றும் இதே துணிச்சலுடன் அவர் எழுதுவதற்கு என் வாழ்த்துக்கள்!

1 comment:

தமிழானவன் said...

ஜாதி என்பது இந்து மதத்திற்குச் சொந்தம் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இந்தியாவைத் தாண்டியும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. இன்னும் மனுதர்மத்திலிருந்துதான் பார்ப்பனர்களிடமிருந்துதான் ஜாதியை அனைவரும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது.

ஜாதி வெறியற்ற மிகச்சில இந்துக்களையும் மதவெறியர்களாக்கி, இந்துத்துவாவாதிகளிடம் தள்ளிவிட்டதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள் சாதனை. பெரும்பான்மை இந்துக்களால் நிராகரிக்கப்படும் பாரதிய
ஜனதாக கட்சியை வளர்த்துவிடுவதற்கு இந்தப் போக்கும் ஒரு காரணம். இதை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஜாதி உணர்வில்லாத மத நம்பிக்கை அதிகமாக உள்ள முஸ்லிம்களை எந்தவொரு நெருடலுமில்லாமல் இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இஸ்லாமியர்களைத் தோழர் என்றே அழைக்கிறார்கள். அவர்களின் மதப்பரப்புரைகளையும் மதப்பெருமிதங்களையும் மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அதே வழிமுறையை இந்துக்களிடம் அவர்கள் செய்வதில்லை. இஸ்லாமிய மதவாதத்தை ஒரு விமர்சித்தாலே அவரைக் "காவிகள்" என்னுமளவிற்கு அவர்கள் இஸ்லாமியர்களை வளர்த்து விட்டுள்ளனர். சமீபத்தில் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய, விமர்சித்த பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அம்மதத்தைச் சேர்ந்த ஐந்தாறு காட்டுமிராண்டிகள் படுகொலை செய்தனர். அதைக் கூட கண்டிக்காத முற்போக்கு பெரியாரியவாதிகள் இருக்கின்றனர். கொல்லப்பட்டவன் பெரியாரிய இயக்கத்தில் இருந்தால் கூட அம்மதத்தை விமர்சிப்பது தீட்டுப் பட்டுவிடும் போலும். மற்றபடிக்கு, அவர்கள் இண்டு இடுக்கெல்லாம் இந்துத்துவ அடையாளங்களை நோண்டியெடுத்து அடையாளங்காட்டுகிறவர்கள். இதெல்லாம் எங்கு போய் முடியும் ?