Sunday, May 7, 2017

ஐ.பி.எல் 2017 – ரெண்டாவது வாரம்


 நான் இதை எழுதும் போது எட்டு புள்ளிகளுடன் வெற்றிப்படிக்கட்டில் முதல் படியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதற்கு சற்று பின்னால் ஆறு புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி உள்ளது. தில்லி, பூனே, பஞ்சாப், ஹைதராபாத் (சன் ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் அடுத்த இடத்தை வகிக்கின்றன. ஆக வலுவான அணிகள் முன்னிலையில் உள்ளன.

 ஆனால் இந்த புள்ளி விபரம் கூறுவது போல் முன்னிலை எப்படி அத்தனை துல்லியமாய் இருக்கவில்லை. வெற்றி தோல்விகள் கலவையாக அமைந்தன. மும்பை, கொல்கொத்தா போன்ற வலுவான அணிகள் மண்ணைக் கவ்வவும் செய்தன. சிறிய அணிகள் ஜொலிக்கவும் செய்தன. ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும் போது மும்பை, கொல்கொத்தா அணிகளின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்கள் தத்தம் அணிகளை கரைசேர்த்தனர். ஆனால் சிறிய அணிகளுக்கு இந்த சௌகர்யம் இருக்கவில்லை. பூனே அணி ஸ்மித்தையும் பவுலர்களையும் முழுக்க நம்பி இருக்கிறது. பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஒன்று சேர்ந்து சிறப்பாய் ஆடும் போது அட்டகாசமான அணிகளாகவும் சொதப்பும் போது ஒன்றாய் நீரில் மூழ்கும் கப்பலாகவும் தோன்றுகின்றன. அணி தடுமாறும் போது பல்வேறு கட்டங்களில் தோள் கொடுத்து மீட்கும் ரட்சகர்கள் இந்த அணிகளில் குறைவு.
 தில்லி அணியை பொறுத்தமட்டில் சஹீர்கானின் அணித்தலைமையும், கள அமைப்புகளும், ஒரு வேகவீச்சாளராக அவரது கட்டுப்பாடும் கலை நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. சஹீர் பந்து வீசுவதைக் காணும் போது தற்போது இந்திய அணியில் ஆடி வரும் வேகவீச்சாளர்களை விட சிறப்பாய் வீசுகிறாரே, இவர் ஏன் ஓய்வு பெற்றார் என நமக்கு ஏக்கம் ஏற்படாமல் இல்லை.
பாதாளத்தில்…
இரண்டே புள்ளிகளுடன் அதர பாதாளத்தில் கிடக்கும் இரு அணிகள்: பங்களூர் மற்றும் குஜராத்.
பங்களூர் அணியின் கேப்டன் கோலி ஆட்டத்தொடரின் துவக்கத்தில் காயம் காரணமாய் விலகினார். அவர் இடத்தில் வாட்சன் தலைமை தாங்கினார். இப்போது கோலி திரும்ப ஆடத் துவங்கி உள்ளார். முக்கியமான பேட்ஸ்மேன் எ.பி டிவில்லியர்ஸும் முழுமையான உடல்திறத்துடன் இல்லை. கிறிஸ் கெய்லின் ஆட்டநிலை சிறப்பாக இல்லை. இப்படி பேட்டிங், அணித்தலைமை எதிலும் ஸ்திரத்தன்மை இல்லாதது பங்களூர் அணியை பாதித்துள்ளது.
குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் அவரது குழந்தை உடல்நலமற்று இருந்தது. இது ரெய்னாவை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்தது. அவரும் காயமுற்றார். ரஞ்சி கோப்பையிலும் ரெய்னா ஆடவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்காய் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தும் ரெய்னா நீக்கப்பட்டார். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள ரெய்னாவின் உடல்நிலையும் ஆட்டநிலையும் சிறப்பாக இல்லை. ரெய்னா இப்போது பார்க்க தொப்பையுடன் தஞ்சாவூர் பொம்மை போல் இருப்பது காண அவரது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கும். ரெய்னாவின் தடுமாற்றங்கள் அவரது அணியை பாதித்துள்ளன. மேலும் குஜராத் அணி என்பது ஒரு சமநிலையான அணி அல்ல. அந்த அணியில் போதுமான மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. பிஞ்ச், டுவெய்ன் ஸ்மித் போன்ற துவக்க வரிசை பேட்ஸ்மேன்கள் மத்திய வரிசையில் ஆடுவது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பூரிக்கான கிழங்கை எடுத்து சமோசா செய்தது போன்ற அணி இது. விளைவாக அவர்களின் ஆட்டம் பரிதாபமாய் உள்ளது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் ஒரே ஆறுதல். அவரது பேட்டிங் பட்டாசாக உள்ளது.
அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன்களில் மும்பை அணியின் ரானா முன்னிலையில் இருக்கிறார். இவர் ஒரு அதிரடியான அதேவேளை நிலையான பேட்ஸ்மேன். தனது நிலைத்த ஆட்டம் மூலம் மும்பை அணியின் முதுகெலும்பாக மாறி உள்ளார். இவரை அடுத்த கம்பீர், ஸ்மித், பொலார்ட், சாம்ஸன் ஆகியோரின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. தில்லி அணியில் ஆடும் சாம்ஸன் கேரளாவை சேர்ந்தவர். அவர் பூனே அணிக்கு எதிராக 63 பந்துகளில் அடித்து 102 ஒரு அற்புதமான சதம். சற்றும் அலுங்காமல் நலுங்காமல் அவர் சிக்ஸர் அடிக்கும் பாணி, பந்துக்கு முன் கூட்டியே தயாராகி நின்று நினைத்த இடத்தில் அட்டகாசமாய் டைமிங் செய்து அவர் சிக்ஸர் விளாசுவது பார்க்க கோடி கண்கள் வேண்டும். அதே போல் கொல்கொத்தா அணிக்காக ஆடும் மனீஷ் பாண்டே மும்பைக்கு எதிராக 47 பந்துகளில் அடித்த 81 குறிப்பிடத்தக்கது. ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் ஆரம்பத்தில் டைமிங் இன்றி திணறிய பாண்டே மெல்ல மெல்ல பார்முக்கு வந்து இறுதியில் தன் அசகாய ஹிட்டிங் மூலம் அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு போனார். முறையே 10 மற்றும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார் மற்றும் இம்ரான் தாஹிர் பவுலர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்கள்.

வரும் வாரத்தில் மும்பை, கொல்கொத்தா அணிகள் மேலும் வெற்றிகளை குவிக்குமா அல்லது சிறிய அணிகளான பூனே, தில்லி, சன்ரைசர்ஸ் ஆகியவை முன்னிலை பெறுமா என காண்போம்.
நன்றி: கல்கி

No comments: