Sunday, May 21, 2017

மொழித் திணிப்பு 1


இந்தியை ஒரே தேசிய (அரசாங்க) மொழியாக்கி அனைத்து மாநிலத்தவரும் கற்க செய்யலாமா எனும் விவாதம் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் பொறுமையாக கேட்டால் இது பண்பாடு vs நடைமுறை தேவைகளுக்கு இடையிலான மோதல் என புரியும். எது முக்கியம்? பண்பாடா நடைமுறையா? இந்தியை 50% மேல் இந்தியர்கள் பேசுகிறார்கள் என ஒரு வாதம். இல்லையில்லை, இந்தி பேசும் மாநிலங்களில் கூட பல வட்டார மொழிகளே பிரதானமாய் பேசப்படுகின்றன. இந்தி ஒரு பொது தொடர்பு சாதனம் மட்டுமே என இன்னொரு வாதம். தென்னிந்தியர்கள் இந்தி பேசி என்ன நடைமுறை பயன்? இது ஒரு வாதம். இல்லை இல்லை, இந்தி அறிந்தால் தான் தேசிய ஒருமைப்பாடு நிகழும் என பதில் வாதம்.

 ஆனால் பண்பாடா நடைமுறையா என ஒரு போட்டி நடந்தால் பின்னது தான் வெல்லும்.
அனைவருக்குமான ஒற்றை தேசிய அடையாளம் உருவாக்க அனைவருக்குமான ஒற்றை பண்பாடு வேண்டும். இந்திய ஹிந்து தேசியம் பரவலாக இந்தியோ சமிஸ்கிருதமோ பரவலாக்கப்படுவது அவசியம். பசு என்பதும் ராமன் என்பதும் அனைத்து மாநிலங்களின் ஒருமித்த செண்டிமெண்டாக வேண்டும். இது பா.ஜ.கவின் அரசியல் தேவை. இன்னொரு பக்கம் இந்தி மொழி தேசியவாதிகள் இந்தி சர்வ வல்லமை பெறும் நாளுக்காக தவமிருக்கிறார்கள். இது பண்பாட்டுத் தேவை. தமிழ் மக்கள் கண்ணனையும் ராமனையும் கூட ஏற்றுக் கொள்ளும் காலம் எதிர்காலத்தில் வரலாம் (இப்போதே எங்கெங்கு நோக்கினும் பாபா கோயில்கள்). ஆனால் மக்கள் இந்த பண்பாட்டு தேசியத்தை மொழி அளவில் ஏற்க ஒரு நடைமுறை பயன் அவசியம். இதைத் தான் இந்தி ஆர்வலர்கள், வடக்கத்திய தேசியர்கள் புரிந்து கொள்ளவில்லை.
 இந்தியை அரசு பயன்பாட்டு மொழியாக்கினாலோ, பெயர்ப்பலகைகளை இந்திப்படுத்தினாலோ மைல்கற்களில் இந்தியை பொறுத்தாலோ மக்கள் அதை சிறிய எரிச்சலுடன் புறக்கணிப்பார்கள்.
எந்த மாதிரி நடைமுறை பயன்? தமிழர்கள் ஏன் பிரஞ்சு கற்கிறார்கள்? இப்போது ஏன் மாண்டரின் மொழியின் பின்னால் செல்கிறார்கள்? வேலை, வசதி, பணம். பொறியியல் படிப்பதை விட ஜப்பானிய மொழி கற்றால் கைநிறைய சம்பாதிக்கலாம். மத்திய அரசு ஒரு லட்சம் இந்தி ஆசிரிய / இந்தி மொழிபெயர்ப்பாளர்கள் பதவிகளை தமிழகத்தில் உருவாக்கட்டும். தமிழை தாய்மொழியாகக் கொண்டு, இந்தியை இரண்டாம் மொழியாக கற்றவர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர் என அறிவிக்கட்டும். துவக்க சம்பளமே ஐம்பதாயிரம் என சொல்லட்டும். ஐந்து வருடம் வேலை பார்த்தால் ஒரு லட்சம் என சொல்லட்டும். இந்தி மவுசு அதிகமாவதை பார்ப்பீர்கள். அதே போல தமிழ் பள்ளி மாணவர்கள் உத்தர பிரதேசத்திலோ தில்லியிலோ சில வருடங்கள் தங்கி படிப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கட்டும். அங்கு அவர்கள் இந்தியை ஒரு பாடமாய் கற்க வேண்டும் என சட்டம் உருவாக்கட்டும். மாதம் அதற்கு 30,000 உதவித் தொகை அளிக்கட்டும். அதே போல் இந்தி பேசும் மாணவர்களும் இங்கு வந்து தங்கி தமிழ் கற்க தேவையை உருவாக்கட்டும். நான் பரிந்துரைப்பது ஒரு 10% மக்களை இந்தியை நோக்கி ஈர்க்கும் விசயம். இதை விட பரவலாய் இந்தியை கொண்டு சேர்க்கும் திட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாய், மக்களுக்கு அதனால் பொருளாதார பலன் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த பண்பாட்டை நடைமுறைத் தேவையாக மாற்றுவதிலும் ஒரு எல்லை உண்டு. இந்தி எப்படியும் ஆங்கிலமோ ஜெர்மனோ அல்ல. இல்லாத ஒரு பொருளாதார நடைமுறை பயனை அதன் மேல் ஓரளவுக்கு மேல் திணிக்க முடியாது. ஆக, இந்தியை ஓரளவு தெற்கே பரவ வைக்கலாம். ஆனால் மிகக்கொஞ்சம் தான் முடியும். மைல்கற்களில், பெயர்ப்பலகைகளில், தஸ்தாவேஜுகளில் இந்தியை திணித்தால் மயிரளவு கூட இந்தி வளராது.
வடநாட்டு பண்பாடு கூட ஏனோ இங்கே ஆர்வம் கிளப்புவதில்லை. இந்தி படங்களைக் காண இன்னமும் சென்னை வாழ் மார்வாரிகள் மட்டுமே படையெடுக்கிறார்கள். தமிழர்கள் அல்ல. இது இந்தி வெறுப்பினால் அல்ல. என் சகோதரி பாலிவுட் படம் பார்த்து தான் இந்தி கற்றுக் கொண்டார். எனக்கு சின்ன வயதில் இருந்தே பாலிவுட் படங்கள் அலுப்பூட்டின. நான் அவற்றை பார்க்கவும் முயலவில்லை. இந்தி படப் பாடல்களில் எனக்கு சமீபமாய் தான் ஆர்வம் ஏற்படுகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான கேரள நண்பர்களுக்கு பாலிவுட் படங்களில் தமிழர்களை விட ஆர்வமிருக்கிறது. என் மனைவிக்கு ஓரளவு தெலுங்கு புரிகிறது. காரணம் தெலுங்குப் படங்கள்.

ஒரு புது மொழியை நீங்கள் அந்நிய சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் போது தேனில் தோய்த்து நாவில் வைக்க வேண்டும். தொண்டைக்குள் திணிக்கக் கூடாது. அதை இசை, நாடகம், சினிமா, கதை, மதம் சார்ந்த கதையாடல் (ஆன்மீக சொற்பொழிவுகள், இசை) என எப்படியும் செய்யலாம். எப்போதுமே மனிதனுக்கு ஒரு அயல் பண்பாட்டை, மொழியை அறிய ஆர்வமுள்ளது. ஒரு புது சொல்லை அறியும் போது ஒரு புதிய மனிதனுடன் கைகோர்க்கிறோம். புது அனுபவங்களை பகிர்கிறோம். ஆனால் ஒரு புது மொழி அறிமுகமாகும் போது எளிமையாக, சுவாரஸ்யமாக, உற்சாகமாக, பொழுதுபோக்காக அது அமைய வேண்டும். இந்திய விடுதலைக்கு பின் மத்திய அரசுகள் இதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லை. பாலிவுட் சினிமா அளவுக்கு கூட இவர்கள் இந்தி பரவலாக்கத்துக்காக கல் சுமக்கவில்லை.

No comments: