Friday, April 14, 2017

எண்டமூரி வீரேந்திரநாத் – துளசி தளம்

Image result for எண்டமூரி வீரேந்திரநாத் துளசி தளம்

எனக்கு வணிக நாவல்கள் படிப்பதில் தனி ஆர்வம். தட்டையான மொழி, மிகையான சித்தரிப்பு, லாஜிக் சொதப்பல்களை மீறி அந்நாவல்களின் செண்டிமெண்டுகள், அவற்றில் பொதுமக்களின் உளவியல் தெரியும் விதம், வடிவம் ஆகியற்றை கவனிக்க பிடிக்கும். நேற்று அப்படித் தான் எண்டமூரி வீரேந்திரநாத்தின் “துளசி தளம்” என்ற பேய் / திகில் நாவல் படித்தேன். மூன்னூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் அரைநாளில் படிக்கும் விதம் விருட்டென்று பறக்கும் கதை.

 நாயகன் ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறான். மனைவி, ஒரு குழந்தை (துளசி) என நிம்மதியான வாழ்க்கை. அவன் ஒரு தர்க்கவாதி; மந்திர தந்திரங்களை மூடநம்பிக்கை என ஒதுக்குபவன். அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வாய்க்கிறது. நிறுவனத்தின் முதலாளி வெள்ளைகாரர். அவர் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவெடுக்கிறார். இந்திய சட்டப்படி அவர் தன் சொத்துக்களை எடுத்து செல்ல முடியாது. அவர் அதை சட்டத்தை மீறி எடுத்துப் போக நம் நாயகன் உதவ மறுக்கிறான். இதனால் முதலாளி ஒரு காரியம் செய்கிறார். பல லட்சங்களை (இக்காலத்தில் பல கோடிகள்) நாயகனின் குழந்தை மீது எழுதி வைக்கிறார். அவளுக்கு பத்து வயது பூர்த்தியாகும் போது முழுப்பணத்துக்கும் அவள் அதிபதி. ஆனால் அதற்கு முன் அவள் இறந்து போனால் பணம் முழுக்க ஒரு அனாதை ஆசிரமத்துக்கு போய் விடும். இந்த ஆசிரமத்தை நடத்தும் சாமியார் ஒரு போலி. அவரும் இரு அடியாட்களுமாய் சொத்துக்காக குழந்தை துளசியை கொல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்காக ஒரிசா மாநிலத்திற்கு சென்று ஒரு மந்திரவாதியை அமர்த்துகிறார்கள். அவன் குழந்தையை கொல்ல ஒரு தீவினையை ஏவுகிறான். நாயகனின் வேலைக்காரன் ராமைய்யா இதை அறிந்து மற்றொரு மந்திரவாதியின் உதவியுடன் சூனியத்தை முறியடித்து ஏவியவனையே அது சென்று தாக்கும்விதம் செய்கிறான். ஏவிய மந்திரவாதி துடிதுடித்து செய்கிறான். அவனது குரு ஒரு படுபயங்கர மந்திரவாதி. பல நூறு ஆண்டுகளாய் யாராலும் இயலாத வித்தைகளை சாதித்தவர். அவர் காஷ்மோரா என்றொரு பூதத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதை அவர் துளசி மீது ஏவுகிறார். 21 நாட்களில் குழந்தை பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி செத்து விடும். இதை ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் நாயகன் இறுதியில் குழந்தையின் கடைசி நாளன்று நம்பி ஏற்கிறான். அவன் அலைந்து திரிந்து ஒரு பக்கிரியை கண்டுபிடித்து அவரிடம் காஷ்மோராவை தடுத்து நிறுத்தும் முறையை கேட்டறிகிறான். அவர் அளிக்கும் செப்புத்தட்டுடன் ஒரிசா சென்று மந்திரவாதியை எதிர்கொண்டு அவர் துளசியின் மூச்சைப் பறிக்கும் இறுதி வித்தையை நடத்துமுன் அவரைத் தடுத்து செப்புத்தட்டால் அடிக்கிறான். கீழே சரியும் அவன் பற்கள் உடைந்து ரத்தம் சிந்துகிறான். காஷ்மோராவை ஏவியவன் தன் குருதியை பார்க்கக் கூடாது என்பது நம்பிக்கை. அவ்வாறு பார்த்தால் காஷ்மோராவை அதிருப்தியாகி விடும்; பேய்கள் ஒன்றாய் சேர்ந்து மந்திராதியின் ரத்தத்தை குடித்து கொன்று விடும். அவ்வாறே நடக்கிறது. மந்திரவாதி துடிதுடித்து இறக்கிறான். துளசி தப்பிக்கிறாள்.
இனிமேல் தான் ஒரு திருப்பம் வருகிறது. குழந்தையை மரணத்தின் விளிம்பு வரை தள்ளிய நோய் சூனியத்தால் ஏற்படவில்லை; ஒரு கருவி மூலம் ஹிப்னாடிஸ அதிர்வுகளை குழந்தைக்குள் பாய்ச்சியதனாலே இவ்வாறெல்லாம் நடந்தது என ஒரு உளவியலாளர் கண்டறிகிறார். இந்த அறிவியல் சதியை செய்தது அனாதை ஆசிரமத்தின் உரிமையாளரும் அவரது உதவியாளரான வேலைக்காரன் ராமைய்யாவும் எனும் ”படுபயங்கர” திருப்பமும் அடுத்து வருகிறது. குழந்தையின் உடலில் ஒரு தாயத்து கட்டப்பட்டுள்ளது. அது தான் ஹிப்னாடிஸ கருவியின் ஆண்டெனா போல் செயல்படுகிறது. இதை நீக்கிய நேரம் ஒரிசாவில் மந்திரவாதியும் கொல்லப்படுகிறான். உளவியலாளரும் நாயகனும் நடந்த அமானுஷ்யங்கள் அனைத்தும் அறிவியலால் விளக்கக் கூடியவையே என்கிறார்கள். ஆனால் அவர்களால் விளக்க முடியாத விசயங்களும் நாவலில் உள்ளன. இது தான் இந்நாவலில் எனக்கு பிடித்த அம்சம்.
அதாவது அமானுஷ்யங்களை சித்தரிக்கும் இடங்களில் வாசகனை அவை உண்மையே என விரேந்திரநாத் நம்ப வைக்கிறார். இல்லை அவை மூடநம்பிக்கையே எனும் வாதங்களுக்கும் இடம் அளிக்கிறார். இரண்டு கதையாடல்களும் கதைக்குள் வலுவாக உள்ளன. ஒரு வாசகர் இந்த ஹிப்னாடிசம் எல்லாம் சுத்த கதை, சூனியம் தான் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என நம்பலாம். (அப்படி நம்பி தனக்கென சூனிய வித்தை செய்யுமாறு வாசகர்கள் தனக்கு கடிதம் எழுதியதை வீரேந்திரநாத் முடிவுரையில் சொல்கிறார்.) அல்லது உண்மை இதற்கு நடுவில் உள்ளது என்றும் கூறலாம். ஆச்சரியமாக இந்நாவல் எனக்கு யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்” நாவலை நினைவுபடுத்தியது.
கூர்மையான, நுணுக்கமான நடையில், சுவாரஸ்யமான சம்பாஷணைகளுடன் அமைந்திருந்தால் இந்நாவல் ஒரு நல்ல இலக்கிய பிரதியாக கூட மாறி இருக்கும். வீரேந்திரநாத்தின் நம்பிக்கை என்ன என நாவலில் அவர் வெளிப்படுத்துவதில்லை. இது தான் சிறப்பு. மந்திரவாதம் பேசப்படும் இடங்களில் அவர் கதை தன்னையும் மீறி செல்ல அனுமதிக்கிறார். இலக்கிய வாசகர்களும் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

1 comment:

மகேஸ் said...

இவரின் "வம்சி கிருஷ்ணா" நாவல் படித்துப் பாருங்கள்.