Friday, April 14, 2017

மறைந்து வாழும் மதவாதம்


Image result for modi rss flagImage result for ambedkar

இன்றைய ஆங்கில ஹிந்துவில் சஞ்சய் ஹெக்டெ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட பசுவதையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை பற்றி ஒரு நடுப்பக்க கட்டுரை எழுதியிருக்கிறார். முக்கியமான விவாதம் இது. அம்பேத்கர் தனிப்பட்ட முறையில் பசுவை புனிதமாக்குவது தீண்டாமையை வலுப்படுத்தும் செயல் என நம்பியவர். அவர் அதை தன் The Untouchables: Who Were They and Why They Became Untouchables? என்ற நூலிலும் பதிவு செய்கிறார். மாட்டுக்கறி உண்பதே தலித்துகள் மீதான குற்றச்சாட்டாக வைத்து அவர்களை பிராமணர்கள் தீண்டத்தகாதோர் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கர் தான் இயற்றிய சட்டத்தின் முதல் வடிவில் பசுவதை சட்டத்தை சேர்க்கவில்லை. அவர் அப்படி ஒரு சட்டத்துக்கு அடிப்படையில் எதிரானவர். ஆனால் 1948ஆம் வருடம் அரசியல் சட்டமைப்பின் மீது நடந்த பாராளுமன்ற விவாதங்களில் வலதுசாரிகள் பசுவதை சட்டத்தை சேர்க்க வேண்டும் என வாதிடுகிறார்கள். ஆச்சரியமாக அம்பேத்ர்கர் இவர்களை கடுமையாய் எதிர்த்து வாதிடவில்லை. ஆனால் பசுவதையை மத நம்பிக்கையின் பெயரில் குற்றமாக்க முடியாது என மறுக்கிறார்.உடனே வலதுசாரிகள் விவசாயத்தில் மாட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்திய தேசத்தின் பொருளாதாரத்தை தக்க வைக்க மாடுகளை பாதுகாப்பது அவசியம் என வாதிடுகிறார்கள். இந்த கோணத்தில் மாட்டைக் கொல்வதை தண்டனைக்குரிய செயலாக்கும் சட்டப்பிரிவு 48 உருவாக்கப்படுகிறது.


பொருளாதாரத்தின் போர்வையில் நம் அரசியலைமைப்பு சட்டத்திற்குள் புகுந்த மதவாதம் இந்த சட்டப்பிரிவு. இதை அம்பேத்கரும் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் இதை ஏன் கடுமையாய் அப்போதே எதிர்க்கவில்லை என்பது முக்கியமான கேள்வி. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இராவிட்டால் கடந்த பத்தாண்டுகளில் மாட்டின் பெயரில் மக்கள் அடித்து கொல்லப்படுவதும் கலவரங்கள் நடத்தப்படுவதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏன் அம்பேத்கர் ஒரு நச்சுப்பாம்பை நசுக்காமல் உள்ளே அனுமதித்தார்?


அம்பேத்கர் அரசியல் சட்டமைப்பை உருவாக்கியவராக முடிந்தளவு புறவயமாய், நேர்நிலையாக செயல்பட முயன்றிருக்கிறார். அதனாலே பிற மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு செவிசாய்த்திருக்கிறார். ஒரு சிந்தனையாளனாக, அரசியல்வாதியாக, எழுத்தாளனாக அவர் தன் கருத்துக்களை துணிச்சலாய் முன்வைத்தார். ஆனால் அரசியல் சட்டமைப்பை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவர் தலையில் வைக்கப்பட்ட பின் அவரால் அதே துணிச்சலை, மூர்க்கத்தை காட்ட முடியவில்லை. அவர் அனைவருக்கும் பொதுவான ஒரு நபராக இருக்க தலைப்பட்டார். அதனாலே அவர் காவித் தலைவர்களுக்கும் செவி சாய்க்க வேண்டி வந்தது. வரலாற்று பொறுப்பு என்பது பல சமயங்களில் நம்மை விரும்பாத காரியங்களையும் செய்ய வைக்கக் கூடியது.


அம்பேத்கர் மதசார்பற்ற தேசத்துக்கான அடிப்படையை உருவாக்கினார். ஆனால் அவரால் கூட அரசியலில் இருந்து முழுக்க மதத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை. ஏனென்றால் நம் சட்டப்பிரிவுகள் முகமூடி அணிந்து ஏமாற்றுபவை. அவற்றை உள்நோக்கத்துடன் வளைக்க முடியும். சட்டப்பிரிவு 123 மதம், சாதி ஆகிய அடையாளங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறது. ஆனால் நம் அரசியல் கட்சிகளால் சாதியை பயன்படுத்தாமல் மக்களை திரட்டவே முடியாது. தொண்ணூறுகளில் பா.. ராமர் கோயில் விவகாரத்துடன் எழுச்சி பெற்றது. ஒரு மதத்தின் பிரதிநிதியாக தன்னை முன்வைக்காமல் மோடி இந்தளவு வளர்ந்து பிரதமர் ஆகியிருக்க முடியாது. 1992இல் இவ்வாறு தேர்தலின் போது மதவாதத்தை பயன்படுத்தி வென்றவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஜெ.எஸ் வர்மா ஹிந்துத்துவா என்பது வாழ்வியல் நெறி. அது மதம் அல்ல என கூறினார். இது போன்ற விசித்திரமான அர்த்தப்படுத்தல்கள் சாத்தியமாகும் போது எப்படியான சட்டம் வந்தாலும் பயன்படாது.


மதத்தின் அடிப்படையில் ஒரு கட்சி அமையக் கூடாது (மதச்சடங்குகளில் ஒரு பிரதமர் பங்கேற்க கூடாது, மதத்தின் நிறத்தையோ சின்னத்தையோ கொடியில் பயன்படுத்தக் கூடாது, மதத்தின் தொன்மங்களையோ மொழியையோ பயன்படுத்தக் கூடாது, சாமியார்கள் அரசிய்லில் ஈடுபடக் கூடாது ) என மிகக்கடுமையான தடை ஒன்று அம்பேத்கர் கொண்டு வர விரும்பியிருப்பாரா? இருக்கலாம். ஏனென்றால் அவர் காலத்திலே ஆர்.எஸ்.எஸ் தாய் அமைப்பினர் மதத்தின் பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். காந்தியின் படுகொலையில் அவர்களின் சதி இருந்ததாய் கூறப்பட்டது. அன்றைய காங்கிரசுக்குள் பல ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் இருந்ததாய் ராமசந்திர குஹா தன் நூலில் (காந்திக்கு பின் இந்தியா) எழுதுகிறார். ஆக, மதவாதம் அரசியலில் கலப்பதன் சிக்கலை அவர் அறிந்திருப்பார். ஆனால் அவரால் மதவாதத்தை முழுக்க அரசியலில் இருந்து தடை செய்யும் ஒரு சட்டப்பிரிவு உருவாக்கி செயல்படுத்தி இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதற்கு கடுமையான எதிர்ப்பை காங்கிரசில் உள்ள வலதுசாரிகள் தெரிவித்திருப்பார்கள். (வல்லபாய் பட்டேலின் லாபியிங் காரணமாய் தான் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை பின்னர் காங்கிரசால் நீக்கப்பட்டது.)


அதே போல் இந்த அரசியலமைப்பு சட்டத்தின் இன்னொரு சிக்கல் மிதமிஞ்சிய அதிகாரத்தை பிரதமர், முதல்வர் போன்றோருக்கு அளிப்பது; மைய அரசின் கைப்பாவையாக மாநில அரசை மாற்றியது இந்த மையவாத அதிகாரம். இதற்கு அனுகூலமாக ஆளுநர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அதிகாரம் முழுக்க உங்களுடையது அல்ல, இந்த வீட்டின் உரிமையாளர் நான் தான் என மாநில அரசுக்கு அவ்வப்போது உணர்த்துவது போல் அமைந்தது ஆளுநர் பதவி. மாநில அரசின் அரசியல் நகர்வுகள், உட்கட்சி எதிர்ப்புகள் பற்றி மைய அரசுக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்புவது, மாநில அரசை கவிழ்க்கும் சதித்திட்டங்கள் தீட்டுவது தான் ஆளுநரின் பணி. ஆளுநர் என்பவர் ஒரு கௌரமான ஒற்றர் படை தலைவர். இந்தியாவில் இதுவரை தானாகவே அரசுகள் கவிழ்ந்ததில்லை. மத்திய அரசின் தூண்டுதலால், ஆளுநரின் ஒருங்கிணைப்புகளால் தான் அரசுகள் கவிழ்கின்றன. ஆக அரசு கவிழ்ந்தால் ஆட்சியை கையில் எடுக்க ஆளுநர் எனும் வாதம் பிழையானது. ஆளுநர் இல்லாவிட்டால் ஆட்சியே கவிழாது. இந்த பதவி ஒரு அதிகார துஷ்பிரயோக மார்க்கம் என அம்பேத்கர் யோசிக்கவில்லையா?


இந்த சட்டங்களை அம்பேத்கர் எழுதி 27 வருடங்களில் இந்திரா காந்தி இதே சட்டத்தை பயன்படுத்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். ஏன் இத்தகைய ஒரு அதிகாரம் ஒரு தனிநபருக்கு கிடைக்கும் விதமாய் அம்பேத்கர் இயற்றினார்? அன்றைய காலத்தில் இந்தியா துண்டுதுண்டாய் சிதறிப் போகும் நிலை இருந்தது. அல்லது அப்படி ஒரு அச்சம் இருந்தது. அதே போல் சமூகம் முழுக்க கல்வி பெற்று, அறிவியல் பொருளாதார வளர்ச்சி பெறும் வரை ஒரு வலுவான (கிட்டத்தட்ட சர்வாதிகார வலிமை கொண்ட) அரசு தேவை என அம்பேத்கர் நம்பி இருக்கலாம். அல்லது அப்படி நம்பியவர்கள் அவர் மீது கடும் அழுத்தம் செலுத்தி இருக்கலாம். விளைவாக நெருக்கடி நிலை, ஆளுநர் பதவி போன்ற மைய அரசு அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இடம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை அவர் அனுமதித்தார்.


அம்பேத்கர் ஒரு நடுநிலையாளராக இருந்ததன் விளைவே மதவாதமும் சர்வாதிகாரமும் இங்கே தலைதூக்க வித்திட்டது. ஆனால் அவர் இடத்தில் ஒரு முழுமையான வலதுசாரி இருந்து நம் சட்டங்களை இயற்றியிருந்தால் என்னவாகி இருக்கும் யோசியுங்கள். பாகிஸ்தான் போல் நம் தேசம் ஒரு ஹிந்துஸ்தான் ஆகியிருக்கும். அந்த விதத்தில் அம்பேத்கர் கையில் சட்டம் இயற்றும் பொறுப்பு சென்றது நம் அதிர்ஷ்டம் தான். அம்பேத்கரால் முழுமையாக அம்பேத்கராக இருக்க இயலவில்லை என்பது தான் துரதிஷ்டம்!


No comments: