Tuesday, April 11, 2017

முடிவுக்கு வரும் கிரிக்கெட்டோகிராஃபி தொடர்

குமுதத்தில் நான் எழுதி வந்த கிரிக்கெட்டோகிராஃபி தொடர் முடிவுக்கு வருகிறது. 60வது கட்டுரையாக சச்சின் பற்றி எழுதுகிறேன். இது ஏற்கனவே திட்டமிட்டது: இறுதியாக முத்திரையாக சச்சினைப் பற்றி எழுத வேண்டும் என இத்தொடர் துவங்கிய போதே நினைத்தேன். ஆனால் சச்சினுக்கு முன்பு காம்பிளி பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் காம்பிளியை மட்டுமே தவற விட்டேன்.

நான் ஸ்டைலையும் அதிரடியையும் மிக முக்கியமான நினைப்பவன். அதனால் எனக்கு பார்க்கப் பிடிக்காத வீரர்களைப் பற்றி எழுத மிகவும் தயங்கினேன். காலிஸ் பற்றி எழுதவில்லை. ஆனால் சடகோபன் ரமேஷ் பற்றி எழுதினேன். பொலாக்கை தவிர்த்தேன். ஆனால் ஆலன் டொனால்டை கொண்டாடினேன். மேலும், நான் நேரலையாக பார்க்காத வீரர்களைப் பற்றியும் எழுதவில்லை. ஏனெனில் நான் எழுதுகிற வீரர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிரியமானவர்களாய் இருக்க வேண்டும். பார்த்து ரசித்து எனக்குள் ஊறியவர்களாக இருக்க வேண்டும். கேள்விப்பட்டு படித்து அறிந்து கொண்டவர்களாய் இருக்க கூடாது என நினைத்தேன். கவாஸ்கர், டெஸ்மெண்ட் ஹெயின்ஸ் போன்ற சில முக்கிய நட்சத்திரங்களை இவ்வாறு தவிர்த்தேன்.
இத்தொடர் 25 வாரங்களுடன் முடியும் என்றே நினைத்தேன். ஆனால் தொடர்ந்து எழுதத் தூண்டிய ப்ரியா கல்யாணராமன் 60 வாரம் வரை இதை கொண்டு செல்ல பிரதான காரணமாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். நான் அவரை இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் ரொம்ப கூலான, துணிச்சலான மனிதர் என அவதானிக்கிறேன். இத்தொடரை நிறுத்தும்படி அவருக்கு வற்புறுத்தல்களை சிலர் அளித்த போது அவர் பிடிவாதமாய் என்னை தொடர்ந்து எழுத வைத்தார்.
இத்தொடரில் நான் கற்றுக் கொண்டது என்ன? 400 வார்த்தைகளுக்குள் எழுதக் கற்றுக் கொண்டேன். வணிகப் பத்திரிகையில் பதற்றமில்லாமல் ஒரு வருடத்திற்கு மேல் எழுத பழகிக் கொண்டேன். தகவல்களை குறைத்து அதிகமான அலசலும் அவதானிப்புகளுடனும் எழுதினேன். ஆரம்பத்தில் இத்தொடரை எப்படி வடிவமைப்பது என எனக்கு சில குழப்பங்கள் இருந்தது. போகப் போக எனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டேன்.எனக்கு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை கதையாய் சொல்லிக் கொண்டு போவதில் அலுப்புண்டு. ஏனென்றால் எல்லா வீரரின் கதையும் நம்மைப் போன்றதே. ஷோயப் அக்தர், காம்பிளி போன்ற சிலர் வித்தியாசமான போராட்டமான பின்னணியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் சேவாக் போன்ற ஒருவரின் சாகசங்கள் அவரது வாழ்க்கையில் இல்லை. களத்திலேயே இருந்தது. நான் ஒரு வீரரின் பலம் என்ன, தொழில்நுட்பம் என்ன, குறை என்ன, அவரை எப்படி வகைப்படுத்தலாம் என்றே அலச விரும்பினேன். 400 வார்த்தைகளுக்குள் அதை செய்வது மிக மிக சிரமம். என்னால் இயன்றை செய்தேன் என திருப்தி உள்ளது.
குமுதத்துக்காக என் மொழியையோ பாணியையோ நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் முன்னோடியாய் கருதுகிற எந்த எழுத்தாளனும் வணிகப்பத்திரிகையில் தொடர் எழுதிய போது தன் மொழியை மாற்றவில்லை. அதற்கு அவசியமில்லை என நான் இத்தொடருடன் புரிந்து கொண்டேன்.
நான் 2007இல் உயிர்மையின் இணைய பத்திரிகைக்காக எழுத ஆரம்பித்த போது மனுஷ் என்னிடம் சொன்னார்: “நீங்கள் இன்னும் இரு வருடங்களுக்குள் வணிகப் பத்திரிகைகளில் எழுதப் போகிறீர்கள். உங்கள் ஸ்டைல் வெகுஜன் எழுத்துக்கு நன்றாய் பொருந்தும்.” எனக்கு அவர் அப்படி சொன்னது வியப்பாய் இருந்தது. ஏனென்றால் வணிக மீடியா என் இலக்காகவே இருந்ததில்லை. நான் தொடர்ந்து இடைநிலை இதழ்களில் எனக்கு மனதுக்கு கிளர்ச்சியான மூளைக்கு சவால் அளிக்கிற விசயங்களைப் பற்றித் தான் எழுதினேன். யாருக்காகவும் நான் என்னை மாற்றிக் கொண்டதில்லை. இதை எழுதினால் இவருக்கு பிடிக்குமா என குழம்பவில்லை. எனக்கு சுவாரஸ்ய்மாய் பட்டால் வாசகனும் ஆர்வமாய் படிப்பான் என நம்பினேன்.
தினமணியிலும் குமுதத்திலும் எழுத வாய்ப்புகள் கிடைத்த போது அதை தவற விட விரும்பவில்லை. அந்த அனுபவம் எப்படி இருக்கும் என நெருங்கிப் பார்க்க விரும்பினேன். மனுஷின் ஆருடம் பத்து வருடங்களுக்கு பிறகு பலித்தது. ஆக, இந்த தொடர் ஒருவேளை புத்தகமாய் வருமானால் நான் அவருக்கே இதை சமர்ப்பிப்பேன்.
மொழியை பொறுத்தமட்டில் நான் இணையத்தின் குழந்தை. இணையத்தில் எழுதிப் பழகும் யாருக்கும் சரளத்தன்மை கிடைக்கும். ஆக இடைநிலை இதழ்களில் இருந்து வெகுஜன இதழுக்கு தாவுவது ஒன்றும் அசகாய சாதனையாக இல்லை. இதையே சுரேஷ் கண்ணனுக்கும் சொல்லலாம். நாங்கள் இருவரும் உயிர்மையிலும் எழுதுகிறோம், குமுதத்திலும் எழுதுகிறோம். அதே மொழி, அதே அணுகுமுறை. இரண்டுக்கும் வெவ்வேறு வாசகர்கள் என்பதால் எழுத்தாளன் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.

நான் மூன்று வருடங்கள் முழுநேரமாய் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் எனக்கு நிறைய அவகாசம் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் பொறுமையாக புரூஸ் லீ புத்தகமும் ரசிகன் நாவலும் எழுதினேன். அதன் பின்னர் நான் ஒரு கட்டாயம் காரணமாய் வேலைக்கு செல்ல துவங்கிய போது இரண்டு தொடர் வாய்ப்புகளும் (தினமணி + குமுதம்) அமைந்தன. அதுவும் நான் ஒரு நேர்முகத்துக்கு சென்று வேலைக்கு தேர்வாகி வீட்டுக்கு வந்து உட்கார்ந்த போது சரியாய் ப்ரியா கல்யாணராமன் அழைத்து “கிரிக்கெட் பற்றி தொடர் எழுதுகிறீர்களா?” எனக் கேட்டார். அடுத்த வாரம் வேலைக்கு போக வேண்டும். அடுத்த வாரம் ஒரு தொடரையும் ஆரம்பிக்க வேண்டும்.
வேலை செய்து கொண்டே அவ்வப்போது பேஸ்புக்கில் எழுதலாம். உயிர்மையில் கட்டுரை கூட எழுதலாம். ஆனால் வாரத் தொடர் எழுதுவது மிகவும் சிரமம். முழுநாளும் வேலை செய்த அலுப்பில் தூங்கலாம் என கண்கள் சொக்கும். ஆனால் இரவு முழித்திருந்து ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் எனக்கு எழுத மனநிலை அமைய நேரம் பிடிக்கும். அதற்காக வார்ம் அப்பாக பிளாகில் ஒரு கட்டுரை எழுதுவேன். அதன் பிறகு அதே சரளத்துடன் என் தொடர் கட்டுரையை ஆரம்பிப்பேன். இரவு உறங்க செல்லும் போது மணி மூன்றாகி விடும். காலையில் லேட்டாக எழுந்து எப்படிடா இன்று வேலைக்கு செல்வது என கண்ணை திரும்பும் போது இரண்டாவது பத்திரிகையின் எடிட்டர் அழைத்து “ஏன் இன்னும் பத்தியை அனுப்பவில்லை? அரைமணியில் அனுப்புங்கள்” என்பார். அதற்கு என்ன எழுத வேண்டும் என யோசித்தபடி சாப்பிட்டு பல் தேய்த்து குளித்து விட்டு அவசர ஆராய்ச்சி செய்து வேகவேகமாய் அதை எழுதி அனுப்பி அலுவலகம் போய் அமரும் போது எப்போதுடா ராத்திரி வரும், படுக்கையில் விழலாம் என இருக்கும். அதேநேரம் இந்த சவால் ஒரு ஜாலியான அனுபவமாகவும் இருந்தது.

இறுதியாக ஒரு விசயம்: நம் மீடியாவுக்கு விளையாட்டு பற்றி எழுத ஆட்கள் கைவசம் இல்லை. அதனால் என்னை எழுத வைக்கிறார்கள். (இப்போது ஐ.பி.எல் பற்றி வாராவாரம் எழுத இரு பத்திரிகைகளில் கேட்டிருக்கிறார்கள்!) அடுத்த பத்து வருடங்களில் என் இடத்தில் கிரிக்கெட் நிபுணர்கள் தமிழில் வந்து விடுவார்கள் என நம்புகிறேன். (பேஸ்புக்கிலும் பிளாகிலும் கிரிக்கெட் பற்றி ஆர்வமாய் எழுதும் புது ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நம் எடிட்டர்கள் கண்ணில் படவில்லை.) அதுவரை நான் இந்த தேசிய நெடுஞ்சாலையில் என் இலக்கிய காளை மாட்டு வண்டியை ஓட்டுவேன். 

No comments: