Tuesday, March 7, 2017

அநாவசியமாக…


மாதப்பத்திரிகை பத்திகளில் நான் விரும்பிப் படிக்கும் ஒன்று நஞ்சுண்டன் உயிர் எழுத்தில் எழுதும் ”செம்மைக் குறிப்பு”. வழக்கமான நம் பத்திகள் சமூக நிகழ்வு எதிர்வினை குறிப்புகள் அல்லது சுயவரலாற்று பதிவுகளாக இருக்கும். (சமூக நிகழ்வு எதிர்வினை பத்திகள் தாம் மிக மிக எளிது; ஒரு வார பேஸ்புக் செய்தியோடையை பத்து நிமிடம் பார்த்தால் உடனே எழுதி விடலாம்.) நஞ்சுண்டன் எழுதுவது நிபுணர் பத்தி எனலாம். நஞ்சுண்டன் காலச்சுவடுக்காய் பிழைதிருத்தம், செம்மைப்படுத்தல் பணிகளை செய்து வருகிறார். அத்துறையில் அவர் மிகத்திறமையானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பத்தியில் தனது செம்மைப்படுத்தல் அனுபவங்களைக் கொண்டு நடைமுறை இலக்கணம் பற்றி எழுதுகிறார். எப்படி எளிதாக துல்லியமாய் தெளிவாய் புரியும்படி எழுதுவது என விளக்குகிறார்.

 நான் தொழில்முறையில் ஒரு (ஆங்கில) எடிட்டர் என்பதால் எனக்கு இப்பத்தி மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. அலுவலகத்தில் நண்பர்களுடனும் பயிற்சி வகுப்பிலும் நாங்கள் விவாதிக்கும் விஷயங்களை ஒருவர் தமிழிலும் விவாதிப்பது படிக்க உவகை அளிக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் என்னிடம் “தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கணமே தெரியவில்லை” என குறைபட்டுக் கொண்டது நினைவிருக்கிறது. குறிப்பாக, subject-verb agreement தவறுகளை தமிழ் எழுத்தாளர்கள் கன்னாபின்னாவென செய்வதாய் அவர் குறிப்பிட்டார். அந்த பட்டியலில் நான் முதலில் வருவேன் என நினைக்கிறேன். எனக்கு தமிழ் இலக்கணத்தின் அரிச்சுவடி கூட தெரியாது. ஆங்கில இலக்கணம் மட்டுமே தெரியும். ஆக, நான் எழுதும் போது என் ஆங்கில இலக்கண அறிவை மட்டுமே பயன்படுத்துகிறேன். என் பிரதியை நான் திருத்தும் போது எனக்கு முதலில் கண்ணில் படும் தவறு (எழுத்துப்பிழைகள் தவிர) தவறான சொல் அடுக்கு. இதை ஆங்கிலத்தில் misplaced modifier என்பார்கள். இம்மாத பத்தியில் நஞ்சுண்டன் இவ்வாறு நாம் சொற்களை ஒரு வாக்கியத்தில் தவறான இடத்தில் பயன்படுத்துவதன் பிரச்சனைகளைப் பற்றி சொல்கிறார்.

பிரபஞ்சன் எழுதிய கதையொன்றின் முதல் பத்தி இது. இதன் கடைசி வரியை கவனியுங்கள்:
“அவன் எப்போதும் அந்த இடத்தில்தான் நிற்கச் சொல்வான். பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் பத்திரிகை, சிகரெட் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைக்கு பக்கத்தில். வெயில்படாமல் நிற்க, சார்ப்பு இருக்கும். தவிரவும், ஒரு வகையான மறைப்பு வேறு இருக்கும். அனாவசியமாக பயணம் போகும் தெரிந்தவர் கண்களில் விழ வேண்டும்.”
கடைசி வரியில் “அனாவசியமாக” எனும் சொல் “விழ வேண்டும்” என்பதற்கானது. ஆனால் அதை வாக்கியத்தின் முதலில் வைத்ததால் அது “பயணம் போவதை” குறிப்பது போல் ஆகி விடுகிறது. அதாவது ”தேவையில்லாமல் பயணம் செய்கிறவர்கள் கண்ணில் விழ வேண்டாம்” என பொருள் ஆகிறது. இது தான் misplaced modifier / dangling modifier. எழுதும் வேகத்தில் இது போல் தவறுகள் அதிகம் நடக்கும். குறிப்பாய், பேச்சு மொழியில் நாம் அழுத்தத்துக்காக சொற்களை முன்பின்னாய் பயன்படுத்துவோம். ஆனால் எழுத்து மொழியில் அந்த பாணியை கொண்டு வரும் போது தவறாகி விடுகிறது. இவ்வாக்கியத்தில் ”பயணம் போகும் தெரிந்தவர் கண்களில் அனாவசியமாக விழ வேண்டும்” என இருக்க வேண்டும். நான், தொழில்முறையாய், இது போன்ற நிறைய பிழைகளை ஆங்கில நூல்களில் திருத்தியிருக்கிறேன். வேலையிடத்தில் வெங்கட்ராமன் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தான் என்னிடம் வந்து இந்த விதிமுறை பற்றி அடிக்கடி பேசுவார். ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை கண்டுகொள்ள மாட்டேன். அவரிடம் பேசி பேசி எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டு நானும் இப்பிழைகளை அதிகம் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். பிறகு தமிழில் நான் எழுதும் வாக்கியங்களிலும் திருத்த ஆரம்பித்தேன். சொற்களை சரியான இடத்தில் வைக்கும் போது எப்படி வாக்கியம் துல்லியமாய், ஒரு ஜன்னலை திறந்து விட்டது போல வெளிச்சம் மிக்கதாக ஆகிறது என்பது பார்க்க வியப்பாக இருக்கும்.
”சு.ரா” என்பது ஒரு சுந்தர ராமசாமி என்பதன் சுருக்க வடிவம் (abbreviation). இதில் முற்றுப்புள்ளி வைக்கலாமா என்பதில் எனக்கு குழப்பம் உண்டு. ஆங்கிலத்தில் முற்றுப்புள்ளியை இவ்விசயத்தில் ஒழித்து விட்டார்கள். நான் எடிட் செய்யும் நூல்களிலும் வைப்பதில்லை. ஆனால் தமிழில் நாம் கலவையாய் பயன்படுத்துகிறோம். எனக்கு “சுரா” என எழுதுவதில் ஒரு தயக்கம் உள்ளது. அது ஒரு தனிப்பெயர் போல் ஆகி விடாதா என பயம் உண்டு. அதை முதலில் படிக்கும் ஒருவர் சுரா என்பது ஒரு எழுத்தாளனின் முழுப்பெயர் தான் என நினைத்துக் கொண்டால்? “அமி” (அசோகமித்திரன்) என படிக்க ஏதோ ஒரு வட இந்திய பெயர் போல் இருக்கிறது. ஆனால் “திமுக” என்பதை (பலரும் அறிந்த பெயர் என்பதால்) நான் முற்றுப்புள்ளிகள் இன்றி பயன்படுத்துவேன். நஞ்சுண்டன் புள்ளிகளை முழுக்க தவிர்க்கவே பரிந்துரைக்கிறார்.
இப்பத்தியில் நஞ்சுண்டன் ஒரே பத்தியில் காலங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதை (tense inconsistency) பற்றியும் எழுதுகிறார். (இன்றைய அலுவலக பயிற்சி வகுப்பில் நான் இதே தலைப்பில் வகுப்பெடுக்க போகிறேன்.) சு.ராவின் மனைவி எழுதிய நூல் ஒன்றில் இருந்து உதாரணங்களை தந்து நுணுக்கமாய் விளக்குகிறார். அதை நீங்களே இதழில் படித்துப் பாருங்கள்.
கடைசியாக தினமணியில் வந்த ஒரு கவனப்பிழையை சுட்டிக்காட்டுகிறார். “அமைதிக்கு அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு: மாதா அமிர்தானந்த மயி”. அமைதி என்பது ஒரு பிரச்சனை அல்ல. பிரச்சனைக்கு மட்டுமே தீர்வு. ”அமைதிக்கு அன்பு ஒன்றே வழி” என இருக்க வேண்டும்.
நான் அடிப்படையில் ஒரு ஆசிரியன். எனக்கு பிழைகளை கண்டால் கோபம் வராது. ஆர்வம் மட்டுமே ஏற்படும். அதனால் மொழிப்பிழைகளை கேலி செய்வதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். தலைமயிர் கலைவது போல மொழியும் கலையும். அப்போது இலக்கணப் பிழைகள் தோன்றும். அவற்றைக் களைவது ஒரு ஆர்வமூட்டும் பணி. ஆங்கிலத்தில் மிகப்பெரிய அறிஞர்களின் நூல்களில் நூற்றுக்கணக்கான பிழைகளை கண்டு திருத்தி இருக்கிறேன். நான் ஒரு 200 பக்க நூலை எடிட் செய்தால் குறைந்தது 250இல் இருந்து 500 மொழிப் பிழைகளையாவது கண்டுபிடித்து விடுவேன். ஒரு பக்கத்துக்கு குறைந்தது இரண்டு பிழை என்பது தான் என் கணக்கு. ஒப்பிடுகையில் நம்மைப் போன்றவர்களின் பிழைகள் பொருட்டே அல்ல. இதில் லஜ்ஜைப்பட ஒன்றுமில்லை.

நான் முதலில் தந்த பிரபஞ்சனின் மேற்கோளில் மூன்றாவது வரியில் மற்றொரு பிழை இருக்கிறது. நஞ்சுண்டன் ஏனோ அதை குறிப்பிட தவறி விட்டார். அதாவது subjectக்கும் வினைச்சொல்லுக்கும் நடுவே காற்புள்ளி வரக் கூடாது என்பது விதி. ஆகையால் “வெயில்படாமல் நிற்க, சார்ப்பு இருக்கும்.” எனும் வரியில் “நிற்க” என்பதற்கு அடுத்து வரும் காற்புள்ளியை நீக்கிட வேண்டும்.  

No comments: