Sunday, March 5, 2017

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா?


அறிவியல் ஆக்கபூர்வமானதா அழிவுநோக்கம் கொண்டதா என மனுஷ்யபுத்திரனுக்கும் பி.ஏ கிருஷ்ணனுக்கும் கடுமையான விவாதம் ஒன்று நடந்து வருகிறது. இரண்டு பாஷை புரியாதவர்கள் இடையிலான பேச்சு போல் இருக்கிறது இது. மனுஷ் சொல்வது பி.ஏ கிருஷ்ணனுக்கு ஒரு போதும் புரியாது. பி.ஏ கிருஷ்ணனின் நிலைப்பாடு மனுஷுக்கு நிச்சயம் அபத்தமாக தோன்றும். ஏன் என்று சொல்கிறேன்.

 பி.ஏ கிருஷ்ணன் ஐரோப்பிய புத்தொளி காலத்தை சேர்ந்தவர். அறிவியல், தத்துவம், ஆட்சி அமைப்புகள், நிர்வாக அதிகாரம் என ஒவ்வொன்றுமே மனித முன்னேற்றத்துக்கானது என புத்தொளி காலத்தினர் நம்பினார்கள். உலகப்போர்கள் வந்த பின்னர் தான் அறிவியல், கோட்பாடுகள், அரசியல் தத்துவங்கள், மதம் ஆகியவை மீது ஐரோப்பாவில் கேள்விகளும் அவநம்பிக்கையும் பிறந்தது. அதுவரை ஐரோப்பாவில் அறிவியல் கடவுளுக்கு நிகராக வழிபடப்பட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தாம் ஐரோப்பா மொத்த உலகையுமே காலனிய ஆதிக்கம் செய்ய உதவின. துப்பாக்கி, குண்டுகள், அதன் பிறகு அணு குண்டுகள் மூலம் சிறிய தேசங்கள் சுலபத்தில் பெரிய மக்கள் தொகை கொண்ட ஆசிய தேசங்களை அழித்து அடக்க முடியும் என ஐரோப்பா புரிந்து கொண்டது. இன்னொரு பக்கம் ஐரோப்பியர்களின் இதனால் வாழ்க்கைத்தரமும் பெருமளவு உயர்ந்தது. கல்வியையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் வாழ்க்க்கை முன்னேற்றத்துக்கான, அதிகாரத்துக்கான ஒரே சிறந்த வழியாக கண்டனர். அறிவியல் எந்தளவுக்கு பிரபலமானது என்றால் அங்கு நூற்றாண்டுகளாக மதத்துக்கும் அறிவியலுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்தியாவில் இது என்றுமே நடந்ததில்லை. இங்கு அறிவியல் அறிஞர்கள் கூட சுலபத்தில் புட்டபர்த்தி பாபாவின் காலடியில் உட்கார்ந்து விடுவார்கள். இது ஐரோப்பாவில் நடந்ததில்லை. அங்கும் அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று நிகரானவை. முரணானவை.
அமெரிக்காவில் அறிவியல் எந்தளவு வழிபடப்பட்டதென்றால் தூக்குத்தண்டனை கொடூரமானது எனும் சர்ச்சை அங்கு எழுந்த போது தூக்குத்தண்டனையை ஒழிக்கலாம் என நம்மைப் போல் அவர்கள் பேசவில்லை. மாறாக அறிவியல் மூலம் ஒரு கண்ணியமான கொலைத்தண்டனையை கண்டுபிடிக்கலாம் என நம்பினர். அப்படித் தான் மின்சார நாற்காலி கொலைத்தண்டனை நிலுவையில் வந்தது. அதைக் கண்டுபிடிப்பதற்காக ஜார்ஜ் பெல் என்பவர் நூற்றுக்கணக்கான நாய்களை மின்சாரம் பாய்ச்சி கொன்று ஆராய்ச்சிகள் செய்தார். அவருடன் பின்பு நாம் அமெரிக்காவின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாளர் என போற்றும் தாமஸ் எடிஸன் (மின்விளக்கை கண்டுபிடித்தவர்) இணைந்து கொண்டார். மின்சார நாற்காலிக்கு எந்த மாதிரி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இரண்டு பேருக்கு இடையில் கடும் போட்டியே நடந்தது. அதாவது மனிதனை எப்படி கொல்வது என்பது அறிவியல் அறிஞர்கள் இடையிலான போட்டியை பாருங்கள். நம்மூரில் இதையெல்லாம் கற்பனை பண்ண முடியுமா? கடைசியில் ஒரு குதிரைக்கும், நான்கு கன்றுக் குட்டிகளுக்கும் மின்சாரம் பாய்ச்சி மனிதனை கொன்று, மனிதனைக் கொல்ல 1000 வால்ட் மின்சாரம் தேவை என கண்டுபிடித்தார்கள். ஆனாலும் முதன்முறையாய் மின்சார நாற்காலி கொலைத்தண்டனை நிறைவேற்றப்பட்ட போது 1000 வால்ட் மின்சாரம் போதவில்லை. ஆள் சாகவில்லை. அடுத்து 2000 வால்ட் பாய்ச்சினார்கள். அவரது ரத்த நாளங்கள் வெடித்தன. அவரை கொல்ல 8 நிமிடங்கள் எடுத்தன. அதைப் பார்த்த ஒரு பத்திரிகை நிருபர் இதற்கு பதிலாக அவரை ஒரு கோடாலியில் வெட்டிக் கொன்றிருக்கலாம் என்று எழுதினார். இன்று அமெரிக்காவில் மின்சார நாற்காலி கொடூரமானது, மனிதத்தன்மை அற்றது என சர்ச்சை எழுந்ததால் விஷ ஊசி போட்டு கொல்கிறார்கள். ஆனால் விஷ ஊசி எல்லாவற்றையும் விட கொடூரமானது என்கிறார்கள். இதை எதற்கு எழுதுகிறேன் என்றால் பொதுவாக அறிவியல் வழியாக எந்த கொடூரத்தை நிறைவேற்றினாலும் அது கண்ணியமானது, நேர்த்தியானது, சரியானது என நாம் நம்பி விடுகிறோம். அறிவியல் மூலமாய் கொல்லலாம். அது குற்றமல்ல. அது தேவை தான் என நம்புவோம். தவிர்க்க முடியாதது என கூறுவோம். உலகப்போரின் போது அணுகுண்டு விழுந்து ஜப்பான் சிதைந்த போது அதை அறிவியலின் தவறான பயன்பாடு எனத் தான் நாம் கருதினோம். அணு உலைகள் வெடித்து அல்லது கசிந்து பெரும் அழிவுகள் நேரும் போது நாம் அறிவியலின் தவிர்க்க முடியாத பிழையாகவே அதை பார்க்கிறோம். அறிவியல் பக்தி அப்படியானது! இன்று தடுப்பூசிகள் எந்தளவு ஆபத்தானவை என ஒரு ஆய்வுகள் கூறுகின்றன. தடுப்பூசிகளால் நோய்கள் மறையவில்லை. சில நோய்க்கிருமிகள் தாமாகவே தோன்றி சில காலம் மறையும் தன்மை கொண்டவை என ஒரு ஆய்வு கூறுகிறது. தடுப்பூசிகள் உண்மையில் எந்த பலனும் அளிப்பதில்லை; மாறாக நம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை கடுமையாய் பாதிக்கிறது என்கிறார்கள். ஆனால் அறிவியல் பக்தர்கள் இத்தரப்பை கடுமையாய் எதிர்ப்பார்கள்.
அறிவியலுக்கு நிச்சயம் ஒரு நேர்மறையான பக்கம் உண்டு. நம்முடைய இன்றைய வசதியான வாழ்க்கைக்கு அறிவியலின் பங்களிப்பு அபாரமானது. ஆனால் அதே அறிவியல் அதிகாரத்தின் கைப்பிடியில் இருக்கும் போது ஒரு ஆபத்தான கருவியாகி விடுகிறது. குறிப்பாக ஆயுதங்கள், அணு உலை போன்றவை. இவற்றுக்காக எவ்வளவு கோடானு கோடிகள் செலவிடப்படுகின்றன தெரியுமா? மக்கள் உணவுக்காக, கழிப்பறையோ, தங்கிமிடமோ இல்லாமல் தவிக்கும் ஒரு நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் எவ்வளவு கோடிகள் வீணாக்கப்படுகின்றன தெரியுமா? உதாரணமாய் பாகிஸ்தானை சென்று தாக்கும் ஒரு ஏவுகணையை தயாரிக்க அல்லது வாங்க எவ்வளவோ கோடிகளை செலவழிக்கிறோம். இதனால் எளிய மக்களுக்கு என்ன பயன்? ஆயுதக் கண்டுபிடிப்புகளால் ஆயுத வியாபாரிகள் மட்டுமே இதுவரை பயனடைந்து உள்ளார்கள். ஆனால் அறிவியல் பக்தர்கள் ஒருநாளும் இதை எதிர்த்ததில்லை.
 அறிவியல் எந்தளவுக்கு இந்த உலகில் மக்களின் ஆயுளை நீட்டித்து, நோய்களில் இருந்து அவர்களை காப்பாற்றி உள்ளதோ அந்தளவுக்கு மக்களை கொன்று குவித்துள்ளது. உலகப்போர்களின் போதும், சமீபத்தைய ஈராக், அப்கானிஸ்தான் போர்கள், ஈழப்போர், ஐ.எஸ் தீவிரவாதிகளின் போர் ஆகியவற்றில் இறந்த மக்களுக்கு, அழிந்த அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு யார் பொறுப்பு? மருந்துகளையும் கணிப்பொறியையும் கண்டுபிடித்த அதே அறிவியல் தானே!
அறிவியலின் இந்த கோர முகம் இந்தளவு வெளிப்படுவதற்கு காரணம் அறிவியல் பக்தி தான். உதாரணமாய், அணுகுண்டுகளால் மக்கள் கொலையுண்டதற்கு, சிதைந்ததற்கு அரசாங்கங்களின் தவறான போக்கு தான் காரணம் என பி.ஏ கிருஷ்ணன் எழுதுகிறார். அப்படி என்றால் அணு குண்டின் கண்டுபிடிப்பு எந்த நோக்கத்திலானது? இட்லி வேக வைக்கவா? ஏவுகணைகள் ஏன் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன? இவற்றுக்கான தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிகளை செய்பவர்கள் விஞ்ஞானிகள் தானே? இவர்களின் அறம் என்பது என்ன? மின்சார நாற்காலிக்காக உழைத்த எடிசனின் அறம் என்ன? அறிவியல் பக்தி தான் இக்கேள்விகளை கேட்காமல் அறிவியலை மகத்துவப்படுத்த நம்மை தூண்டுகிறது.
 இதைக் குறித்து நீட்சே விரிவாக எழுதியிருக்கிறார். அறிவியலின் அடித்தளம் என்பது பகுத்தறிவு. பகுத்தறிவும் தர்க்கமும் மனிதனின் நம்பிக்கைகள், கற்பனை, உணர்ச்சிகளுக்கு அப்பாலானது என நாம் நம்புகிறோம். அதனாலே ஒரு அப்பழுக்கற்ற உண்மை நிலை என நாம் அறிவியலைக் காண்கிறோம். ஆனால் உண்மையில் நமது அறிவியலும் பகுத்தறிவும் நமது விருப்பு வெறுப்புகள், கற்பனை, ஆழ்மன ஆசைகளின் வெளிப்பாடு மட்டுமே என நீட்சே நிறுவினார். தத்துவார்த்தமாக அறிவியலுக்கு எதிரான முதன்மையான நிலைப்பாடு நீட்சேவுடையது தான்.
இதன் பிறகு நவீன காலத்தில் கலைத்துறைகளில், தத்துவவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் அறிவியலுக்கு எதிரான அவநம்பிக்கையை கொண்டார்கள். பின்நவீனத்துவ காலத்தில் அறிவியலும் ஒரு புனைவே எனும் நம்பிக்கை வலுத்தது. அறிவியல் புனைகதைகளில் அறிவியல் வளர்ச்சியின் எதிர்மறையான பக்கம் தான் வலியுறுத்தப்படுகிறது. இது ஏன் என பி.ஏ கிருஷ்ணன் போன்றவர்கள் யோசிக்க வேண்டும்.
மனுஷ்யபுத்திரன் மட்டுமல்ல அவருக்கு முன்பு எழுதினவர்கள், அவருக்கு பின்பு வருகிறவர்கள் அனைவருமே அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களே. ஏனென்றால் நவீன இலக்கியம், பின் நவீனத்துவ கோட்பாடுகள் ஆகியவை அறிவியலின் ஆபத்தை வலியுறுத்துபவை. எனக்குத் தெரிந்து எந்த தீவிர தமிழ் இலக்கியவாதியும் இதுவரை அறிவியலை முற்றுமுழுக்க கொண்டாடியதில்லை. அணு உலையை ஆதரித்ததில்லை. அப்படி என்றால் பி.ஏ கிருஷ்ணன்?
பி.ஏ கிருஷ்ணன் நமது நவீன / பின்நவீன பரப்புக்குள் வராத ஒரு எழுத்தாளர். இதை ஒரு குறையாக அல்ல ஒரு இயல்பாகத் தான் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்து அவர் எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. எந்த தீவிர இலக்கியம் குறித்தும் எழுதியதில்லை. அவருக்கு வரலாற்றில் ஆர்வமுண்டு. ஆனால் நவீனத்துவ / பின்நவீனத்துவ நுண்ணுணர்வை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவர் ஒரு ”வெளியாள்”. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படுவதை வாசிக்கிறார். இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். ஆனால் நமது கடந்த எழுபதாண்டு கால தீவிர இலக்கிய மரபில் அவரை எங்குமே பொருத்த முடியாது. அவரது ”புலிநகக்கொன்றை” ஒரு முக்கியமான நாவல். ஆனால் அதன் அடிப்படையான பார்வை அகிலனின் ”சித்திரப்பாவையில்” உள்ளது தான் – லட்சியவாதத்தின் தோல்வியும் கசப்பும். வரலாற்றின் முன் மனிதன் அடையும் தனிமையையும் தொடும் இடங்களில் அது நவீன நாவல் ஆகிறது. ஆனால் அது கூட எதேச்சையாகத் தான் நிகழ்கிறது. பி.ஏ கிருஷ்ணனின் இரண்டாவது நாவலும் இதே பிரச்சனையை தான் பேசியது. சமூக முன்னேற்ற கருத்தியல்களை நம்புகிற (ஒன்று காந்தியவாதி அல்லது இடதுசாரி) ஒருவன் சமகால இந்தியாவில் தன் நிலைப்பாடு (லட்சியவாதம்) தோற்றுப் போவதை கண்டு வேதனையுறுகிறான். இது தான் அவர் நாவல்களின் ஆதார சுருதி. ஆச்சரியமாக நீங்கள் அசோகமித்திரன், சு.ரா, ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ரா என யாருடைய தாக்கத்தையும் தொடர்ச்சியையும் பி.ஏ கிருஷ்ணனிடம் பார்க்க முடியாது. இவர்கள் லட்சியவாதியின் தோல்வியையும் எழுதியதில்லை மாறாக, லட்சியவாதிகள் சமூக அமைப்புகள் மாட்டிக் கொண்டு தம்மை அறியாது அமைப்புக்கு சாதகமாக மாறும் கொடுமையை பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் பி.ஏ கிருஷ்ணன் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை விமர்சித்து என்றும் எழுதியதில்லை. அவர் தொடர்ந்து சித்தாந்தவாதி ஒருவனின் செயல்பாட்டால் சமூகத்தை மேம்படுத்த முடியாதா என்றே யோசிக்கிறார். எந்த சித்தாந்தமும் தேவையில்லை எனும் நிலைப்பாட்டை சு.ரா எழுபதுகளிலேயே எடுக்கிறார். அவரது அடுத்த தலைமுறையினர் முன்னேற்றம் என்பதெல்லாம் வெறும் கற்பனை என நம்பியவர்கள். பி.ஏ கிருஷ்ணன் இந்த தரப்புகளுக்கு எல்லாம் முழுக்க வெளியே நிற்கிறார். வலுவான சமூக கட்டமைப்புகள், தகவல்களின் ஆதாரம், கருத்தியல்களின் பின்புலம், அறிவியல் நம்பிக்கைகள் சமூகத்தை மேம்படுத்தும் என நம்புகிறார். இந்த நிறுவனங்களை சரியாக பயன்படுத்தும் ஒரு தனிமனிதனால் சமூகத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என நம்புகிறார். அப்துல் கலாமை வெகுஜன மீடியாவில் இந்த காரணங்களால் தான் முன்வைத்து கொண்டாடினார்கள். ஆனால் கலாம் மீது கடும் விமர்சனங்கள் தீவிர சிந்தனையாளர்கள் வசம் இருந்தது. ஏன் என்றால் கலாம் கண்மூடித்தனமாய் அதிகார வர்க்கத்தை, அரசியல் அமைப்புகளை, நிறுவனங்களை நம்பினார்.
 பி.ஏ கிருஷ்ணனை ஜவஹர்லால் நேருவின் காலகட்டத்தை சேர்ந்தவர் எனலாம். கிட்டத்தட்ட அவர் நேருவை போன்றே சிந்திக்கிறார். சமகால ஒப்பீடு செய்வதானால், பி.ஏ கிருஷ்ணன் சற்று அதிக வாசிப்பும் நுணுக்கமும் சாமர்த்தியமும் கொண்ட, எலைட்டான ஒரு அப்துல் கலாம்.

பி.ஏ கிருஷ்ணனும் நம் தீவிர இலக்கியவாதிகளும் இருவேறு வரலாற்று காலங்களை சேர்ந்தவர்கள். இருவரும் இருவேறு மொழிகளில் பேசுகிறார்கள். இரு தரப்பும் விவாதிப்பது சாத்தியமே அல்ல. மனுஷ்யபுத்திரனும் பி.ஏ கிருஷ்ணனும் மோதிக் கொள்வது சுவரில் முட்டிக் கொள்வதற்கு இணையானது. “கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா?” என இருவரும் வேண்டுமானால் டூயட் பாடிக் கொள்ளலாம்!