Monday, March 27, 2017

அசோகமித்திரனும் நம் குற்றவுணர்வும்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி உரையின் உணர்ச்சிகரமான சாராம்சம் மீது எனக்கு முழு உடன்பாடே. சொல்லப்போனால் அப்பேச்சு என்னை மிகவும் நெகிழ வைத்தது.

ஆனால் அப்பேச்சின் மைய உணர்ச்சியை, சாரமான சேதியை விடுத்து விட்டு அசோகமித்திரன் டீ வாங்கி வருவது, கார் ஓட்டுவது போன்ற பணிகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என ஜெயமோகன் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு அது உண்மையா என நாம் கொந்தளிப்பதும் சர்ச்சிப்பதும் நகைமுரணானது. நாம் ஏன் கொதிக்கிறோம்? அ.மி அவமதிக்கப்பட்டார் என்றா? ஆனால் ஜெயமோகனின் உரை முழுக்க அ.மியின் மேதைமையை, பங்களிப்பை, இலக்கிய லட்சியவாதத்தை புகழும்பட்சமாகவே இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தலைகீழாக புரிந்து கொள்ளலாகாது. ஒருவேளை ஜெயமோகன் சொல்வது போல் அ.மி கீழான பணிகளை தன் பிழைப்புக்காக செய்யாதிருந்திருக்கலாம். இத்தகவல்கள் ஜெயமோகனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அ.மியை பழிக்கும் வண்ணம் அவர் இதை சொல்லவில்லையே? அ.மியின் எழுத்து வாழ்வின் போராட்டங்களை, தமிழ் சமூகம் அவரை பேணாததன் அவலத்தை சுட்டிக் காட்டத் தானே இதை சொல்கிறார்?

இங்கு நாம் ஏன் கொந்தளிக்கிறோம்? அவர் மொண்ணையான சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் நம்மை கருதுவதாலா? அவரது பேச்சு நம்மை கழிவிரக்கம் கொள்ள செய்கிறதா? புதுமைப்பித்தனின், பாரதியின் வறுமையைப் பற்றி கண்ணீர் வடிக்கும் போது நமக்கு இதே குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் அது வேறொரு சமூகம், வரலாற்றுக் காலம். இது நம் காலம். இப்பொழுது எழுத்தாளன் நியாயமாய் கவனிக்கப்படுவதாய் நம்ப விரும்புகிறோம்.

ஆனால் அது உண்மையல்ல. அசோகமித்திரன் தன் கடைசிக் காலத்தின் தன் பிள்ளைகளின் கவனிப்பினால் மட்டுமே சௌகர்யமாய் இருந்தார். அவர்கள் வளர்ந்து நல்ல வேலையில் அமர்ந்ததால் அவர் முதுமையில் துயருறாமல் பார்த்துக் கொண்டனர். தமிழ் சமூகம் அளித்த ராயல்டி பணத்தினால் அவர் என்றும் சொகுசாய் வாழவில்லை.
இப்போது நாம் அ.மியின் வறுமையை மறக்க விரும்புகிறோம். அவரை ஒரு இலக்கிய தொன்மமாய் மாற்றி வழிபட்டு கடக்க தவிக்கிறோம். ஜெயமோகன் அ.மியின் பொருளாதார சிரமங்களை பேசும் போது நமக்கு எரிச்சலாகிறது. உடனே அவர் அ.மியை பழிப்பதாய் பிரச்சனையை திருப்பிப் போடு கும்முகிறோம். இதற்கெல்லாம் அவசியமில்லை.

ஜெயமோகன் பேச்சின் சாராம்சம் உண்மையானது. அ.மியின் வறுமையும் அவமானங்களும் இச்சமூகம் அவருக்கு அளித்தவையே. முக்கியமான விசயம் என்னவெனில் நாம் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்து கோபப்பட வேண்டியதில்லை.

அ.மியை அல்லல்பட வைத்த சமூகம் நாம் அல்ல. அதற்கு நாம் பொறுப்பாக வேண்டியதில்லை. அ.மியின் வறுமைக்கு பொறுப்பு நம் வரலாறு தான். நாம் அனைவரும் வரலாற்றின் ஒரு பகுதி. நாம் அதை மாற்ற முடியாது. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் அதனால் இல்லை.

3 comments:

Chellappa Yagyaswamy said...

சமூக வலைத்தளங்களில் ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும் கிண்டல் செய்தும் குறைசொல்லியும் எழுதுவதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் குழு ஒன்று உருவாகியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?

- ஆனால் இந்த முறை, ஜெயமோகன் கூறிய சில கருத்துக்கள தவறு போலத்தான் தோன்றுகிறது. தேநீர் வாங்கிவருதல் போன்ற சிறு வேலைகளைச் செய்து பிழைக்கும் அளவுக்கு அசோகமித்திரன் வறுமையில் இருந்ததில்லை என்று அவரது சகோதரரின் மகள் திருமதி கீதா சாம்பசிவம் முகநூலில் எழுதியிருக்கிறார். எனக்கு கீதா அவர்களைத் தெரியும். எனவே ஜெயமோகன் அந்த ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.

இராய செல்லப்பா நியூஜெர்சி

சோ சுப்புராஜ் said...

அபிலாஸ் என்கிற எழுத்தாளரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரின் இலக்கிய மேதைமையை தமிழ் சமூகம் கொண்டாடவில்லை என்கிற ஆதங்கத்தினால் அவரின் மரணத்தின் போது தன்னுடைய நொண்டிக் கால்களினால் - இப்படி எழுதுவதற்கு தயவு செய்து மன்னிக்க வேண்டும் - பிச்சை எடுத்து சாப்பிடும்படி அவரை இந்தச் சமூகம் நிர்ப்பந்தித்தது என்று நான் உளறிக் கொட்டினால் அதை நீங்கள் ரசிப்பீர்களா அபிலாஸ். ஜெயமோகனின் அஞ்சலி முழுவதும் அத்தகைய உளறல்கள் தான். சம்பந்தமே இல்லாமல் திராவிடக் கட்சியினரை இழிமகன்கள் என்று ஏன் குறிப்பிடுகிறார்? இலக்கியம் என்பது இப்போதும் பிராமிணர்களின் ஆளுமைகளிடம் தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அசோகமித்திரன் பிராமிணர் என்பதற்காக வஞ்சிக்கப்பட்டதாக சீன் போடுகிறார்! இங்கு ஏதோ பிறஜாதி எழுத்தாளர்கள் எல்லாம் சுகமாக வாழவைக்கப் பட்டிருந்ததைப் போல. பிரபஞ்சன் போன்றவர்கள் எல்லாம் சொகுசாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் எழுத வாய்ப்புக் கிடைத்த ஜெயமோகன் போன்றவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் சுகமாக வாழ நேர்ந்திருக்கலாம். எழுத்தை தன் ஜீவனத்திற்கான உபாயமாகக் கைக் கொள்வது என்பது அதுவும் வெகுஜன ரசனையின் பாற்படாத இலக்கியத்தை வைத்து சம்பாதித்து சாப்பிட்டு விடமுடியும் என்று நம்பி இறங்குவது தற்கொலைக்குச் சமமான முடிவு. அதைப் பாவித்து வாழ்ந்தவர்கள் எல்லோருமே கஷ்ட ஜீவனந்தான் வாழ்ந்து இறந்து போனார்கள். இன்னும் அப்படித் தான் நேரும்? அதை விடுத்து அசோகமித்திரன் பற்றி இவர் ஏன் புதிய புனைவுகள உருவாக்கி உலவ விட வேண்டும்? வாய்க்கு வந்ததையெல்லாம் கண்ணால் பார்த்ததைப் போல அடித்து விட வேண்டியது. அப்படியெல்லாம் இல்லை என்று சம்பந்தபட்டவர்களே மறுக்கும் போது அதையெல்லாம் தன்னுடைய தளத்திலிருந்தே நீக்கிவிட வேண்டியது. இதெல்லாம் என்ன மாதிரியான அறமென்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் ஜெயமோகன் புனைகதைகளை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை அவர் மிகவும் சிறப்பாக செய்கிறார். ஆனால் அஞ்சலி உரையிலெல்லாம் புனைவுகளைப் புகுத்துவது அந்த எழுத்தாளனுக்கே அது நல்லதல்ல.
ஒருவேளை வேண்டுமென்றே தான் எல்லோராலும் தான் திட்டப்பட வேண்டு மென்று தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரோ ஜெ.மோ. என்று தோன்றுகிறது. இந்த சமூகத்தில் தன்னுடைய ஆகிருதியை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தான் ஒரு எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? பாவம் தான் ஜெ.மோ போன்ற சுயமோகிகள் இல்லையா நண்பரே!

Chellappa Yagyaswamy said...

நீங்கள் சொல்வதுபோல், வரலாற்றை நாம் மாற்றமுடியாது. அசோகமித்திரன் மட்டுமல்ல, ஜெயகாந்தனும் கூட, வெறும் எழுதிச் சம்பாதித்து சுகவாசியாய் ஆனவர்கள் இல்லை. இதைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் ஜெயமோகன் சொல்லியிருக்கவேண்டும். ஜெயமோகனுக்கு எதிராக எழுதுவதன் மூலம் cheap popularity தேடும் ஒரு முகநூல் கும்பல் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கெல்லாம் நீங்கள் மறுப்பு எழுதி உங்கள் சிந்தனையை வீணாக்க வேண்டாம் இளம் நண்பரே! சுய படைப்புகளை நீங்கள் மேலும் மேலும் தரவேண்டும். இளமை என்பது இறைவனின் கொடை. எழுத்து என்பது முன்னோர்களின் கொடை. இரண்டும்பெற்றுள்ள நீங்கள் நிறைய புதுப் படைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அதே சமயம், எழுத்தினால் மட்டும் உயிர் வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். அசோகமித்திரனின் ஆன்மா உங்களைச் சும்மா விடாது!

- இராய செல்லப்பா நியூஜெர்சி