Wednesday, March 15, 2017

காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம்

Image result for romance cartoon

எனக்கு 17 வயதிருக்கும் போது நானும் சில இலக்கிய நண்பர்களுமாய் ஒரு அரசியல் கருத்தரங்கில் கலந்து கொள்ள ரயிலில் சென்னை கிளம்பினோம். நண்பர்கள் வயதில் என்னை விட இருபதும் முப்பது வருடங்கள் மூத்தவர்கள். ஊரில் கூட்டங்களிலோ நேரிலோ சந்திக்கையில் அவர்கள் அரசியல், இலக்கியம், சமூகம் அன்றி வேறெதையும் உரையாடியதில்லை. ஆனால் ரயிலில் ஒன்று சேர்ந்ததும் பேச்சு முழுக்க பெண்கள் பற்றியதாக மாறியது. தீவிர விசயங்களை முழுக்க உதறி அவர்கள் தம் பால்யத்துக்கு திரும்பினார்கள். ஒரு மார்க்ஸிய அறிஞர் தான் பார்த்த புளூ பிலிம் பற்றி பேசினார். வேறு சிலர் தம் இளமைக்கால காதலிகள் பற்றி அசை போட்டபடி திளைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இவர்கள் மத்தியில் தனி ஆளாய் தத்தளித்தேன். சற்று நேரம் கழித்து நானும் என்னை விட பத்து வயது மூத்த ஒரு கவிஞருமாய் எழுந்து ரயிலுக்குள் உலாத்த துவங்கினோம். செகண்ட் கிளாஸ் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார இளைஞர் அமர்ந்திருப்பது பார்த்து ஆர்வம் கொண்டு அவரிடம் சென்று பேச்சு கொடுத்தோம். வயது இருபதுக்குள் இருக்கும். அவர் இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டிருந்தார். நாங்கள் எடுத்த எடுப்பிலே ”நீங்கள் முதன்முதலில் எந்த வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள்?” என்று உடைந்த ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டோம். அவர் எந்த தயக்கமும் இல்லாமல் “பதினாலு வயதில் என் முதல் செக்ஸ் அனுபவம் நிகழ்ந்தது” என்றார். ஏதோ முதன்முதலில் சைக்கிள் விடப் பழகியதை போல் அதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று இருபது வருடங்களுக்கு பிறகு இதே பதிலை ஒரு இந்திய இளைஞன் கொஞ்சம் அலட்டல், கர்வத்தோடு கூறுகிறான். இன்று பெண்ணுடலோ செக்ஸோ யாருக்கும் திகைப்பான காரியம் அல்ல.
மனித உடலை சமூகம் கண்காணிக்கும் நெருக்கடியில் செக்ஸ் காணாப்பொருளாக, அபூர்வமாய், அதனாலே அச்சமூட்டுவதாய், புனிதமானதாய் நமக்கு முன்பு தோன்றியது. இன்று அது தலைகீழாகி விட்டது.

 செக்ஸ் தான் காதலின் அடிப்படை. அதனால் காதலையும் சேர்த்து பிற விசயங்களும் இன்று சாதாரணமாகி விட்டன.
பெண்ணுடன் உரையாடுவது அபூர்வமாய் இருந்த சமூக சூழலில் அது தவமிருந்து பெற்ற வரமாய் கருதப்பட்டது. எண்பது, தொண்ணூறுகளின் சினிமாவில் இந்த சித்திரம் காதல் பற்றி இருந்தது. ஒரு பெண்ணிடம் ஒரு சொல் மனம் திறந்து பேசும் தன்னம்பிக்கை இல்லாத முரளிகள் ஏராளம் தோன்றினார்கள். அவர்கள் கடைசி வரை மருகிக் கொண்டே இருந்தார்கள். இலக்கியத்தில் இத்தகைய ஒரு ஆண்நிலையை தி.ஜா “மோகமுள்” நாவலில் உருவாக்கினார்.
தொண்ணூறுகளின் இறுதியில் தாராளமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, ஊடக பெருக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் நம் சூழலை புரட்டிப் போட்டன. இந்த புது சமூக வெளிகளில் ஆணும் பெண்ணும் தடையின்றி ஓரளவு உரையாட முடிந்தது. இந்த கட்டத்தில் செக்ஸ் குறித்த திகைப்பு விலக ஆரம்பித்தது. காதல் என்பது ஒரு பெண்ணை துரத்தி அடையும் காரியம் அல்ல, காதல் ஒரு பெண்ணுடன் பகிரும் அன்பு, இச்சை, உரையாடல் எனும் புது சித்திரம் ஒன்று ஆண்களுக்கு ஏற்பட்டது. சங்கரின் “காதலன்” படத்தை “பாய்ஸுடன்” ஒப்பிட்டால் தொண்ணூறுகள் துவங்கி ரெண்டாயிரத்தின் முதல்பாதி வரையிலான இந்த மாற்றத்தை நாம் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும். ”காதலன்” படத்தில் தன் காதலியை நெருங்கி பேசவே நாயகன் போராடி பல நாட்கள் காத்திருப்பான். காதலியின் ஒரு மயிரிழையை பாதுகாத்து அதைப் பற்றி பாடி டான்ஸ் எல்லாம் ஆடுவான். ஆனால் ”பாய்ஸில்” பதின்வயது பையன்கள் தம் காதலியரை அறிமுகமான குறைந்த காலத்திலேயே தியேட்டர், மால் என ஜாலியாய் சுற்றுகிறார்கள். சுவாரஸ்யமாக, இப்பெண்கள் “காதல் வேண்டாம், நட்பு போதும்” எனும் நிபந்தனையின் பேரில் தான் உறவை ஏற்பார்கள். பையன்கள் தொடர்ந்து இப்பெண்களை தொட முயன்று கொண்டே இருப்பார்கள். நட்புக்கும் இச்சைக்கும் இடையிலான காதலின் கட்டம் இது. இந்த உறவுநிலை மாற்றம் மூன்று விதமான சிக்கல்களையும் உருவாக்கின.
பெண்ணுடல், அதன் மீறல், மீறலின் ஒழுங்கீனம் குறித்து சமூகத்தில் பரவலாய் சர்ச்சைகள் தோன்றின. நாற்பது வயதுக்கு மேலானோர் இளம் தலைமுறையின் கட்டுப்பாடின்மை குறித்து பதற்றம் கொண்டனர். ”பாய்ஸ்” படத்தின் ஆபாசம் குறித்து அன்று நிகழ்ந்த சர்ச்சைகள் இதன் விளைவு தான். இதனால் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாயின. பொறியியல் கல்லூரிகளில், தனியார் பள்ளிகளில், பொதுவெளிகளில் பெண்கள் கடுமையாய் கண்காணிக்கப்பட்டனர். இந்த கட்டுப்பாடுகள் அதிகமுள்ள கல்லூரிகள் தம் மகள்களை சேர்ப்பதில் பெற்றோர் சிரத்தை எடுத்தனர். இருபது வருடங்கள் முன்பு வரை சமூகத்துக்கு இந்த கவலை இருந்ததில்லை.
காதலின் சுதந்திரம் அடுத்து நம் சாதியமைப்பை சற்றே அசைத்துப் பார்த்தது. உளவியல்படி மனித மனம் சுலபத்தில் வேறு குழுவை (சாதியை) சேர்ந்தவர்கள் மீது இச்சை கொள்ளும். இதனால் தான் மற்ற விசயங்களில் இறுக்கமான சாதியவாதிகளாய் இருக்கும் நாம் மாற்றுசாதியினர் மீது காதல் கொள்வது அதிகமானது. காதலுக்கு முன்பும் பின்பும் நாம் சாதியத்தை கடைபிடிக்க தவற மாட்டோம். காதல் செய்யும் காலம் மட்டுமே விதிவிலக்காக இருக்கும். கௌரவக் கொலைகள், காதலை ஒட்டிய சாதிய வன்முறைகளின் காலம் உச்சம் பெற்றது. சாதி மீறிய காதலர்களை சமூகம் ஊர் ஊராய் துரத்தி நிர்மூலமாக்கியது. பிணங்களை காட்சிப்படுத்தி எச்சரிக்கை செய்தது. இந்த கொடுமை இன்று வரை தொடர்கிறது.
 இந்த சிக்கலுக்கு பெரும்பாலான தமிழ் காதலர்களின் எதிர்வினை என்ன? அவர்கள் எதற்கு வீண் பிரச்சனை என நினைத்தார்கள். இந்த சன்மார்க்க சமரச கோணத்தில் பார்த்து சாதி கடந்த காதல் அல்லது பெற்றோரின் விருப்பத்தை மீறிய காதலுக்கான தீர்வைப் பேசும் ”காதலுக்கு மரியாதை”, “காதல்” போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
மூன்றாவதாய், சுதந்திரமான பெண்ணுடல் ஆண்களில் ஒரு பகுதியினருக்கு கசப்பை, ஏமாற்றத்தை, குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த பெண்களுடன் நேரடியாய் பழகும், அவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பற்ற ஏராளமான ஆண்கள் இருந்தார்கள். இவர்கள் இப்பெண்களை ஒழுக்கமற்றவர்கள் எனப் பழித்தார்கள். அல்லது ஆசிட் வீசுவது, பலாத்காரம் செய்வது, தாக்குவது என வேறு வழிகளில் எதிர்வினை ஆற்றினார்கள். ”என்னை ஏன் நீ பொருட்படுத்தவில்லை” என இவர்கள் பெண்களிடம் குரோதத்துடன் கேட்டார்கள். ஆனால் இப்பெண்களை அணுகி உரையாடும் மொழி இந்த ஆண்களுக்கு தெரியவில்லை. ஆம், சமூகத்தின் அனைத்து வெளிகளிலும் பெண்கள் புழங்கத் துவங்கினார்கள். ஆனால் அவர்களின் மனம் எப்படியானது, அவர்கள் ஆண்களில் இருந்து உணர்வுரீதியாய் வேறுபட்டவர்கள் என ஆண்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் இத்தனை நூற்றாண்டுகளாய் பெண்களை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 2012இல் தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்த ஆண் குரோதத்தின், அறிவீனத்தின் உச்சம். இதை ஒரு கசப்பேறிய, கண்மூடித்தமான இச்சையின் வெளிப்பாடு என்றும் பார்க்கலாம். பெண்களை எப்படி அணுகுவது என்றே அறியாத ஆண்கள், அதனால் ஏமாற்றமடைந்து, மனம் திரிந்து, பெண்களை துன்புறுத்துபவர்களாக மாறினார்கள். இந்த ஆண் தரப்பினரின் காதலை நல்லவிதமாய் காட்ட முயலும் படம் வந்தது. தனுஷ் நடித்த “ராஞ்சனா”. இப்படத்தில் தன்னை புரியவோ ஏற்கவோ செய்யாத ஒரு பெண்ணுக்காய் ஹீரோ அலைந்து திரிந்து மன்றாடுவான். தியாகங்கள் செய்வான். சிறுக சிறுக தன்னை அழித்துக் கொள்வான். அப்பெண் ஒரு வில்லியாகவே இறுதியில் காட்டப்படுவாள். Stalkingஐ (பெண்களை பின்னால் நடந்து தொந்தரவு செய்யும் குற்றம்) இப்படம் கொண்டாடுகிறது என பெண்ணியவாதிகள் விமர்சித்தார்கள்.
எழுபது, எண்பதுகள் வரை பாலியல் கருவியாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண்ணுடல் தொண்ணூறுகளுக்குப் பிறகு சமூக, அரசியல் தளங்களில் வைத்து பேசப்பட்டது. நம் அரசியல், சாதி, மதம், பண்பாடு, கல்வி, வேலையிடங்கள் என ஒவ்வொன்றுமே சுதந்திரம் பெற்ற பெண்ணுடலை முன்வைத்து மீளுருவாக்கம் செய்யப்பட தேவையிருந்தது. மீண்டும் சினிமாவையே நாம் எடுத்துக் கொண்டால், ரெண்டாயிரத்துக்கு முன்பு வரை சாதியும் மதமும் காதலுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பற்றி தமிழ் படங்கள் பேசின. ஆனால் ரெண்டாயிரத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா படங்களுமே காதல் ஏற்படுத்தும் சமூக பிரச்சனைகளை பேசின. முழுக்க காதலைப் பற்றி சிலாகித்து பேசின படங்கள் இக்காலகட்டத்தில் மிக மிக குறைவு. ஏனென்றால் சமூகத்துக்கு காதல் ஒரு பெரும் ”தொந்தரவாக” மாறியது.
அதே போல, பெண்களை கடுமையாய் பழிக்கும் படங்கள் இக்கட்டத்தில் தோன்றின. ஏனென்றால் ஆண் சமூகம் தன்னை சமமாக பாவிக்க கோரும் பெண்கள் ஏற்படுத்திய ”இடர்களை”, தம் ஈகோவை இவர்கள் தொடர்ந்து புண்படுத்தியதை தாங்க முடியாது துடித்தது. ஒரு பக்கம் காதலை கொண்டாடிக் கொண்டே இன்னொரு பக்கம் காதலை கடுமையாய் வெறுத்து ஒதுக்கும் முரண் மனநிலையும் தோன்றியது. காதல் பாடல்களை விட காதலை தூற்றும் பாடல்கள் ஹிட் ஆயின. இந்த மனநிலையை சுவாரஸ்யமாய் சித்தரித்த “காதலில் சொதப்புவது எப்படி?” வெகுவாக ரசிக்கப்பட்டது.
இறுதியாய், காதலை பொறுத்து நாம் இன்று வந்து நிற்கும் இடம் என்ன? காதலை நாம் இன்று ஒரு வீடியோ கேம் போல் பார்க்க துவங்கி விட்டோம். (மணிரத்னம் இதை சுட்டும் விதமாய் தன் ”ஓ காதல் கண்மணி” படத்தில் நாயகனை ஒரு வீடியோ gamerஆக சித்தரித்தார்.) இன்று காதலை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் மனநிலையில் இருக்கிறோம். இரண்டு சம்பவங்களை உதாரணமாய் தருகிறேன்.
வேலையிடத்தில் லிப்டில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு பெண் தன் நண்பரிடம் மற்றொரு பெண்ணை கடுமையாய் தூற்றிக் கொண்டு வருவதை கவனித்தேன். என்ன பிரச்சனை என விசாரித்தேன். தூற்றப்படும் பெண் ஒரு அலுவலகத்தில் ஒரு பையனை காதலிக்கிறார். அதற்கு என்ன? அப்பையனுக்கு வேறு ஒரு காதலி இருக்கிறாள். பையன் என்ன ரெட்டை வால் குருவியா? அவள் சொன்னாள் “அது கூட பரவாயில்லீங்க. அந்த பொண்ணுக்கும் இன்னொரு லவ்வர் இருக்கு. ரெண்டு பேரும் சின்ஸியரா லவ் பண்றாங்க. அந்த லவ்வரை எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல பையன். இந்த பொண்ணுக்கு இப்போ ஆபீசில் இப்படி ஒரு எக்ஸ்டிரா லவ் தேவையா சொல்லுங்க?” நான் நிஜமாகவே குழம்பிப் போனேன். பையனுக்கும் பெண்ணுக்கும் அலுவலகத்துக்கு வெளியேயும் உள்ளேயும் தனித்தனி காதலர் இருக்கிறார். எல்லா காலத்திலும் இது போன்று பிறழ் உறவுகள் இருக்கும். ஆனால் ஒரே வித்தியாசம் இன்று பிறழ்வுகள் கூட சீரியஸாக இல்லை. இந்த கூடுதல் காதல் தோன்றக் காரணமே முதல் லவ்வர் வேறு நிறுவனத்துக்கு வேலை வாங்கி சென்றது தான். அலுவலகத்தில் போரடிக்க இங்கு ஜாலிக்கு ஒரு உபரி காதலை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனாலும் இருவரும் இது விளையாட்டுக்குத் தான், உண்மையான காதல் ஏற்கனவே தமக்கு அலுவலகத்துக்கு வெளியே உள்ளது தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வப்போது விளையாடி முடிக்க வேண்டிய ஒரு மொபைல் போன் விளையாட்டாக நாம் காதலை மாற்றி விட்டோம். காதலும் கடந்து போகும் என்பது தான் இத்தலைமுறையின் டேக் லைன்.
அடுத்து, காதல் என்பது ஆண் – பெண்ணுக்கு இடையிலானது மட்டுமே எனும் இறுக்கமான எண்ணம் இன்று நெகிழ்ந்து வருகிறது. லெஸ்பியன் காதலர்களை இன்று வெளிப்படையாக பார்க்க முடிகிறது. பொதுவெளியில் காதலியின் இடுப்பைத் தழுவி கூந்தலை வருடி விடுகிறார்கள். கொஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தம் மாற்று பாலுறவை வெளிப்படையாய் ஏற்கும் துணிச்சல் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. அதனால் பெயருக்கு ஒரு ஆண் காதலனை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்பெண்கள் காதலனிடம் இருப்பதை விட தம் காதலியின் அருகாமையில் தான் உற்சாகமாய், மலர்ச்சியாய், இயல்பாய் இருக்கிறார்கள். தமிழ் சினிமா முழுக்க ஆண்வயமானது என்பதால் இவர்களின் காதல் பேசப்படவில்லை. ஆனால் ஆண்களுக்கு இடையிலான காதல் போன்ற நெருக்கத்தை (bromance) கதிர், ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றவர்கள் சித்தரித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

காதலை பொறுத்தமட்டில் நாம் மெல்ல மெல்ல அனைத்து இறுக்கங்களை தளர்த்தி ஒரு கொண்டாட்ட நிலைக்கு நகர்ந்து வருகிறோம். அதேநேரம் முன்பிருந்ததை விட அரசியல், சமூக தளங்களில் கடும் நெருக்கடியை காதல் சந்திக்கிறது. இந்த முரண் தான் இன்றைய காதல்!
நன்றி: தடம், பிப்ரவரி, 2017

2 comments:

Chellappa Yagyaswamy said...

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் எப்படியிருக்கும் என்று சுவைப்பதற்கு இந்திய இகைகனுக்கு ஆசை. ஆனால், அப்படி ஆசைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளை எவ்வளவு இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? செக்ஸ் ஒரு விளையாட்டு என்று தான், அதிலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்யப்படும் திருட்டு விளையாட்டு என்ற நிலைக்குத்தான், இன்றைய நாகரிகம் வளர்ந்திருக்கிறது, ஆண்களைப் பொறுத்தவரை. அதன் பின்விளைவுகளை- பெரும்பாலும் அபாயகரமானவை- அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நிலை மாற இன்னும் ஒரு தலைமுறையாவது ஆகும்-provided, சாதிவெறியர்கள் permit.

- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

http://ChellappaTamilDiary.blogspot.com

Madhav Anandhan said...

சங்க காலம் தொட்டு, முரணான நம் மரபுகளை மீறும் காதல்கள் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. மோக முள் காலத்திலும் இளமை ஊஞ்சலாடும் காதல் இருந்தே வந்துள்ளது. ஆனால், அந்த காலத்திய கதை ஆசிரியர்கள் அந்த காதல்களை தம் கதை மாந்தர்களின் குணாதிசியமாக கொள்ளவில்லை. கும்மி, நாட்டுபுறக்கலைகளில் அவை பதியப் பட்டு இருக்கலாம். sanskritisation of feminism could be one reason