Saturday, March 11, 2017

மீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா?


வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இன்று மாறி உள்ளது. வடிவேலுவின் சவடால் நாயகனான ”கைப்புள்ள” தொன்மம், பிற நகைச்சுவை காட்சிகள், மக்களுக்கு அரசியல் அரட்டைகளில் பங்கெடுக்கையில் கிடைக்கும் ஒரு திருவிழா மனநிலையின் குதூகலம், அரசியல் மாற்றங்களை வெறும் அபத்தமாய், வேடிக்கை விநோதமாய் காணும் ஆசை, அரசியல் நாயகர்களை தம்மை விட மட்டமானவர்களாய் சித்தரிக்கையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் சில-நிமிட அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புது அலையை தோற்றுவித்துள்ளது.

இந்த இணைய மீம் (meme) அலை வேறொரு வடிவில் பகடி கோட்டோவியங்களாய் முன்பு நம் பத்திரிகைகளில் இருந்தது. ஆனால் அவை எப்போதுமே ஒரு எலைட்டிஸ்டான, புத்திசாலித்தன அணுகுமுறை கொண்டிருந்தன. அவற்றில் ஒரு மறைமுக தார்மீக கோபம் இருந்தன. அவை ஒரு சமூக விமர்சனமாகவும் இருந்தன. ஆனால் இன்றைய மீம்களில் இந்த அம்சம் சுத்தமாய் இல்லை. சமீபத்தில் பிரசித்தமான ஒரு மீம் பன்னீர் செல்வத்தின் அம்மா சமாதி முன்பான தியானம் பற்றியது. வடிவேலு கைப்புள்ள தன் வண்டியில் அமர்ந்து ஆவேசமாய் எதிரிகளை பழிவாங்கும் லட்சியத்துடன் படை சூழ கிளம்ப அதைப் பார்க்கும் ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்: “அய்யய்யோ ஒ.பி.எஸ் அம்மா சமாதிக்கு கிளம்பிட்டாரு. இன்னிக்கு எவ்வளவு பிரேக்கிங் நியூஸ் வரப் போகுதோ?” ஒ.பி.எஸ் முதன்முறை அம்மா சமாதிக்கு சென்று தியானம் செய்து விட்டு சசிகலாவிடனான தன் போரை அறிவித்த போது அதில் ஒரு மாஸ் இருந்தது. ஆனால் இரண்டாவது முறையும் அவர் அதை செய்யப் போகும் அது காமிடியாகி விட்டது. அதை விட முக்கியமாக, ஆர்.கெ லக்ஷ்மணின் அல்லது மதனின் கோட்டோவியங்களில் உள்ள கருத்தோ சமூக விமர்சனமோ இதில் இல்லை. கலாய்க்க வேண்டும்! அதன் மூலம், நீ ஒரு சாதாரண வேடிக்கைப் பாத்திரம் என முன்னாள் முதல்வரை நோக்கி சொல்ல வேண்டும். இதில் பொதுமக்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் உள்ளது.
அதே போல், சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் திமுக எம்.எல்.ஏக்கள் தன் கையை பிடித்து இழுத்ததாய் புகார் செய்ய மீண்டும் வடிவேலு மீம் புறப்பட்டது:
“கைய புடிச்சு இழுத்தியா?”
“என்ன கைய புடிச்சு இழுத்தியா?”
இதில் சமூக கோபம் ஒன்றும் இல்லை என்பது மட்டுமல்ல சமூக கோபம் வர வேண்டிய செய்திகள் மீம்ஸ் ஆக மாற்றப்படுவதும் இல்லை. உதாரணமாய், ரூபாய் நோட்டு தடை மீது மீம்ஸ் அதிகம் வரவில்லை. மக்களின் அல்லல்கள் பற்றி சில மீம்ஸ் வந்திருக்கலாம்.
சசிகலா சிறைக்கு போனது தமிழ் சமூகத்துக்கு ஊழல் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையை, மகிழ்ச்சியை, உத்வேகத்தை கொடுத்திருக்க வேண்டும். இங்கு ஊழலுக்கு எதிராய் மற்றொரு இயக்கத்தை ஆரம்பிக்க யாராவது தலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, நம் மீடியா ஜெயிலில் சசிகலா என்ன சாப்பிட்டார் (புளியோதரை), அவர் பக்கத்து செல்லில் யார் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் (சயனைட் மல்லிகா) என்கிற தகவல்களையே தொடர்ந்து அளித்தன. சயனைட் மல்லிகா உடனே பொதுமக்கள் கற்பனையை ஆக்கிரமித்துக் கொண்டார். அவர் ஒரு கொடூரமான குற்றவாளி. ஆனால் அவரையும் வேடிக்கையாய் பார்க்கவே நமக்கு ஆர்வம். “சயனைட் மல்லிகாவும் சசிகலாவும் சந்தித்துக் கொண்டார்கள். மல்லிகா புன்னகைத்தார். ஆனால் சசிகலா பதிலுக்கு புன்னகைக்கவில்லை.” இது உண்மை செய்தியா தெரியவில்லை. ஆனால் கரகாட்டக்காரனில் இருந்து ஒரு காட்சி உடனே மீம் ஆக்கப்பட்டு “வெளியூர் ஆட்டக்காரங்க நம்ம ஊருக்கு வரும் போது உள்ளூர் ஆட்டக்காரங்க அவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்” என வசனத்துடன் சமூக வலைதளங்களில் கிளம்பியது.
தற்போது பட்டையை கிளப்பும் இந்த மீம்ஸ் கலாச்சாரத்தை நாம் கேரளாவில் எண்பது, தொண்ணூறுகளில் பிரபலமாய் இருந்த மிமிக்றி, ஸ்கிட் ஆகிய வெகுமக்கள் கலைவடிவங்களுடன் ஒப்பிடலாம். இந்நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் கேரளாவின் பிரசித்தமான அரசியல் தலைவர்கள், முதல்வர், மந்திரிகள் என ஒருவர் விடாமல் போல செய்து கலாய்ப்பார்கள். டிவியிலும் பின்னர் இவை ஒளிபரப்பாகின. முதல்வர் பார்வையாளராய் அமர்ந்திருக்கையிலேயே அவரை மேடையில் மிமிக்றி செய்து கலாய்ப்பார்கள். அதை முதல்வர் ரசித்து சிரிக்கவும் செய்வார். அதிகாரமற்ற மக்களும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களும் சமநிலைக்கு வரும் ஒரு அரிய சந்தர்ப்பம் இது. தமிழில் இப்போது இது (அரசியல் தலைவர்களின் பங்கேற்பு இன்றி) நடக்கிறது எனலாம்.
கேரளாவில் நிறைய அரசியல் பகடிப் படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன. அரசியலை பகடி செய்வதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கலாம்; அதில் திளைக்கலாம் என அந்த ஊர் மக்கள் சில பத்தாண்டுகள் முன்பு கண்டுகொண்டதை போல் இன்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். அரசியல் பகடி பெரும் சமூக ஆர்வம் அற்றவர்கள் கூட அரசியலில் பங்கு கொள்ளும் ஒரு தளத்தை உருவாக்கித் தருகிறது (வெகுஜன கதைகள் இலக்கிய கதைகளுக்கு வாசலாக திகழ்வது போல). கேரளாவில் அரசியல் என்பது வெகுமக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் விவாதிக்கும் ஒரு தரப்பாய் மாறியதற்கு இடதுசாரி அமைப்புகளின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு அடுத்ததாய் இத்தகைய மிமிக்றிகளுக்கும் ஒரு பங்கு உள்ளது. இதில் தமிழிலும் நிகழுமா? நிச்சயம் வாய்ப்புண்டு!
தமிழகத்தில் இந்நாள் வரை குடும்பம், உறவுகள், நெடுந்தொடர், சினிமா பாடல், தொடர்கதைகள், துணுக்குகள், கோயில் தாண்டி பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இன்று அந்நிலை மெல்ல மெல்ல மாறுகிறது. அரசியல் என்றாலே புருவம் தூக்கும் படித்து, வேலைக்கு போகும் இளம் பெண்கள் இப்போது முழுநேரமும் ஒ.பி.எஸ், சசி, எடப்பாடி, ஸ்டாலின் பற்றின மீம்ஸ்களை பகிர்ந்து தமக்குள் மகிழ்கிறார்கள். உடனுக்குடன் அரசியல் மாற்றங்களை அறிந்து தம் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். நான் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிய துவங்கியதில் இருந்து ஒருமுறை கூட என் சகபணியாளர்களான இளைஞர்கள், அதிலும் குறிப்பாய் பெண்கள், இவ்வளவு ஆர்வமாய் பத்திரிகை செய்திகளைப் பற்றி உரையாடி பார்த்ததில்லை. நித்தியானந்தா ஆபாச சர்ச்சை போன்ற விசயங்கள் மட்டுமே விதிவிலக்கு.
 இளவரசன் கொல்லப்பட்ட அன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் அப்போது வேலை செய்த கல்லூரியில் அதை யாருமே பொருட்படுத்தவில்லை. என் சக ஊழியர்களில் பலருக்கும் அச்செய்தியே தெரியவில்லை. நானும் தமிழ்த்துறையை சேர்ந்து திருநாவுக்கரசு என்ற நண்பரும் மட்டும் கசப்புடன் ஏமாற்றத்துடன் சில சொற்களை பகிர்ந்து கொண்டோம். எங்கள் முகங்களில் மட்டுமே இருட்டு இருந்தது. அதன் பிறகும் எவ்வளவோ முக்கிய அரசியல் மாற்றங்கள், திருப்பங்கள், தேர்தல்கள் – இளைய தலைமுறையினர், என் சக ஊழியர்கள் எவரிடமும் நான் சலனங்களை கண்டதில்லை. தேர்தலில் வென்றது திமுகவா அதிமுகவா என்று அறியக் கூட அவர்கள் அறிய தலைப்பட வில்லை.
ஆனால் சமீபத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் தமிழர்களின் உளவியலில் ஸ்விட்ச் போட்டாற் போல் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் பெருவெள்ளத்தில் கலப்பதில், அதில் பங்கெடுப்பதில் ஒரு சுவையை, பரபரப்பை அவர்கள் முதன்முதலில் அனுபவித்தார்கள். அதைப் பற்றியே பேசினார்கள்; அதற்காக ஒன்று கூடி போராடினார்கள். அதற்கு அடுத்து நடந்த அதிமுக அரண்மனை சதி சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்கொண்டார்கள். குறிப்பாய் இளைய தலைமுறையினர், பெண்கள், மத்தியில் அரசியல் ஒரு ஜாலியான விளையாட்டாகி விட்டது. கபாலி படம் வெளியாகும் பரபரப்புடன் அவர்கள் ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் விவாதிக்கிறார்கள்; கருத்து தெரிவிக்கிறார்கள்; உச்சு கொட்டுகிறார்கள்; உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
 ஆனால் இதற்கு முன்பு நாம் அரசியலை பின் தொடர்ந்ததற்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இதற்கு முன்பு நாம் அரசியலை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டோம். ஆனால் இப்போது ஒரு அரசியல் செய்தியில் எந்தளவுக்கு வேடிக்கை அம்சம் இருக்கிறதோ அந்தளவுக்கு மட்டுமே மக்கள் அதை ரசிக்கிறார்கள்; வரவேற்கிறார்கள். வடிவேலு, கவுண்டமணி மீம்ஸ் கொண்டு அதை கொண்டாடுகிறார்கள். இன்று காலை என் மனைவி என்னிடம் ஒரு மீம்ஸ் காட்டினாள். வடிவேலுவிடம் ஒரு குள்ள நடிகர் டீ கொடுத்து விட்டு “அண்ணே எனக்கு கல்யாணம் முடிவாயிருச்சு” என்பார். அந்த அதிர்ச்சியில் வடிவேலு டீயை துப்புவார். “உனக்கே கல்யாணமுன்னா நானெல்லாம்?” என்கிற வடிவேலுவின் சங்கடமும் வெறுப்பும் தான் அதன் நகைச்சுவை. அந்த குள்ள நபர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் வடிவேலு ஸ்டாலின் என்றும் குறிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி சொல்கிறார்: “அண்ணே நான் சி.எம் ஆகிட்டேன்”. நான் என்ன தான் அரசியல் செய்திகளை கடந்த சில நாட்களாக ஆர்வமாய் கவனித்து வந்தாலும் மேற்சொன்ன நகைச்சுவை காட்சி மறந்து போனதால் மீம் எனக்கு உடனடியாய் புரியவில்லை. “அடச்சே” என மனைவி என்னை நொந்து கொண்டாள். “நீயெல்லாம் வேஸ்ட்” என்று தலையில் அடித்துக் கொண்டாள். நான் உண்மையில் போன தலைமுறை ஆள் தான் என உணர்ந்து கொண்டேன்.
 இது ஒரு விசித்திரமான சூழல். அதிமுக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டமன்றத்தில் அமளி நடப்பது பற்றின செய்தியை டிவியில் பார்த்து விட்டு வெளியே வருகிறேன். தெருவில் ஒருவர் இன்னொருவரிடமும் எப்படி ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரின் மேஜையை தூக்கி வீசினார் என நடித்துக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். ”ஐயகோ சட்டமன்றம் இப்படி கேலிக்கூத்தாகி விட்டதே” என்றெல்லாம் யாரும் புலம்புவதில்லை. ஒரு அற்புதமான பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை கூத்தாகவே அரசியல் திருப்பங்களை மக்கள் பார்க்கிறார்கள்.
முன்பு அரசியல்வாதிகளை நம் தலைவர்களாய் உயரத்தில் வைத்து விவாதித்தோம். திட்டினாலும் பாராட்டினாலும் அவர்கள் வேறு, நாம் வேறு எனும் பிரக்ஞை இருந்தது. இன்று ஒரு முதல்வரை கூட நமக்கு இணையாக வைத்து கேலி செய்ய நாம் ஆசைப்படுகிறோம். நம்மை விட பலமடங்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள். அவர்கள் சிறுசிறு முடிவுகள் நாளை நமது மாத செலவுகளை, பயணங்களை, பாதுகாப்பை தீர்மானிக்கும். அதை நாம் அறிவோம். ஆனாலும் நாம் அவர்களுடைய அதிகாரத்தை மீடியா வழி பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். மீம்ஸ் இதற்குத் தான் பயன்படுகிறது. தொடர்ந்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் யாராவது ஒரு அரசியல் தலைவரை பரிகசித்து காறித் துப்பி புளகாங்கிதம் கொள்கிறோம். வடிவேலுவை கண்டு சிரித்ததை விட சமீபத்தில் நாம் அதிகமாய் சசிகலா மற்றும் ஒ.பி.எஸ் பற்றியான மீம்ஸ்களை கண்டு சிரித்திருக்கிறோம். இதன் மூலம் நாம் வடிவேலுவையும் அரசியல் தலைவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கிறோம்.
ஒரு அதிமுக நண்பரிடம் பேசும் போது அவர் இந்த மீம்ஸ் மற்றும் பேஸ்புக் கேலிப் பதிவுகள் மீது எவ்வளவு கோபமாய் இருக்கிறார் என்பதை கவனித்தேன். அவரது கோபம் இந்த மாற்றம் சமூக கலாச்சார மீதானது தான். ஏனென்றால் இதற்கு முன்பு அரசியல் இப்படி ஒரு பொழுதுபோக்கு நுகர்வுப் பொருள் ஆனதில்லை. இதற்கு முன்பு அரசியல்வாதிகளை தோளில் கையிட்டு கேலி செய்ய மக்கள் துணிந்ததில்லை. ”சசிகலாவை கேலி செய்யும் இந்த மீம்ஸ் ஒவ்வொன்றும் பல லட்சம் செலவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு தேசிய கட்சி இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்கிறது.
எங்களுக்கு பத்து கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இப்போது மீம்ஸ் போட்டு வேடிக்கை செய்யும் சொற்ப இணைய பயன்பாட்டாளர்களும் ஒன்று அல்ல. எங்கள் தொண்டர்களுக்கு இன்றும் அதிமுக என்றால் இரட்டை இலையும் அம்மாவும் தான்” என்றார் அவர்.
 நான் அவரது ஒவ்வொரு சொல்லாக மனதில் ஓட்டிப் பார்த்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றின கசப்பும் கேலியும் பொதுமக்கள் திரளை தீண்டவில்லை என அந்த நண்பர் நம்ப விரும்புகிறாரா? அம்மக்கள் வேறு இம்மக்கள் வேறு என சொல்ல விழைகிறாரா? மீம்ஸ் ஒருவேளை சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்படலாம்; ஆனால் அவற்றை பகிர்ந்து களிக்கும் மக்கள் யாரிடமும் பணம் பெறவில்லையே? அவர்களின் கேலிக்கு பின்னுள்ள சினம் உண்மையானது தானே?
 ஒரு கட்சியின் தலைமை மீது இவ்வளவு ஏமாற்றமும் ரௌத்திரமும் கேலியும் இப்போதுள்ள தீவிர கதியில் முன்பு ஏற்பட்டதில்லை. முன்பு இன்றுள்ள மீடியா பெருக்கமில்லை. கட்டற்ற மீடியா வசதிகள் மூலம் அரசியல்வாதிகளை துடைப்பத்தால் விளாசி கேள்வி கேட்கும் சாத்தியங்கள் அன்று இல்லை. அப்படி கேள்வி கேட்பதன், அவர்களை கோமாளிகளாய் பார்ப்பதில் உள்ள கிளுகிளுப்பை, அதிகார சுவையை மக்கள் முன்பு அறிந்திருக்கவில்லை. மக்களின் இந்த புது அதிகாரம் அதிமுக நண்பரை அச்சுறுத்துகிறதா?
அதே நேரம், இந்த ஆர்வப் பேரலையை நான் மக்களின் தார்மீகக் கோபத்தின், சமூக உணர்வின் உண்மை வெளிப்பாடு, அதனால் புரட்சி வரும் என்றெல்லாம் அர்த்தப்படுத்த மாட்டேன். ஜல்லிக்கட்டுக்காக திரள முடிந்த லட்சக்கணக்கான மக்களால் எப்படி சில நாட்களில் அதை மறந்து சசிகலா, ஒ.பி.எஸ், எடப்பாடி, ஸ்டாலின் என திசை திரும்ப முடிந்தது? ஜல்லிக்கட்டு தடை முழுக்க நீங்கியதா என ஏன் யாரும் கேட்கவில்லை? ஏனென்றால் ஜல்லிக்கட்டு அப்போதைக்கு மக்கள் திரள்வதற்கான ஒரு சந்தர்ப்பம். நாளை இது போல் இன்னொரு உணர்ச்சிகரமான சூழலிலும் மக்கள் திரளலாம். அப்படி ஒரு பொது விசயத்துக்காய் உணர்ச்சிவசப்படுவதில், கேலி, பகடி, மீம்ஸ் என அதில் பங்கெடுப்பதில் ஒரு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் சுவையை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். அதனால் தான் அவர்கள் பிரேக்கிங் நியூசுக்காக தவிக்கிறார்கள்.
மக்கள் இப்போதைக்கு ஏங்குவது புரட்சிக்காகவோ சமூக பிரச்சனைகளின் தீர்வுக்காகவோ அல்ல. அவர்களுக்கு என்று ஒரு குரல், அந்த குரல் ஒலிக்க ஒரு இடம், அந்த குரலுக்கு என ஒரு மதிப்பு. சுருக்கமாய் அவர்களுக்கு என்று ஒரு அதிகாரம், அதற்கான ஒரு திறப்பு வேண்டும். அத்திறப்பு கிடைக்கும் வழியிலெல்லாம் அவர்கள் புகுந்து ஒன்று திரள்வார்கள்.

உண்மையில், சட்டசபையில் அமளியின் போது சபாநாயகரின் கையை பிடித்து இழுத்தது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல, பொதுமக்கள் தாம்! அவர்களிடம் “கைய பிடிச்சு இழுத்தியா?” என கேட்க முடியாது. அவர்கள் ”வடிவேலுவை” கூட்டி வந்து விடுவார்கள்.
நன்றி: உயிர்மை, பிப்ரவரி 2017

1 comment:

பரிவை சே.குமார் said...

நல்ல பகிர்வு.
மீம்ஸ் என்பது ஏதோ கலாய்த்தலுக்கானது என்பதாய் மட்டுமே ஆகிவிட்டது.