Monday, March 13, 2017

அரசியல் கற்பிதங்கள் 2: இஸ்லாமிய பயங்கரவாத பீதி


இடதுசாரிகளின் போலியான முற்போக்குவாதம், அவர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களின் மதப்பிரச்சாரங்களை கேள்வி கேட்காதது தான் மக்கள் தேர்தல்களில் இடதுசாரிகளை புறக்கணிக்க காரணம் என ஜெயமோகன் சொல்வதுடன் (”முற்போக்கின் தோல்வி ஏன்”) ஜெயமோகனே இன்னொரு பக்கம் நம்ப மாட்டார். இஸ்லாமியருக்கு உலகை ஆளும் சர்வதேச கனவு உள்ளது, அவர்களால் உலக மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது ஆகிய கருத்துக்களை தினசரி பத்திரிகைகள் படிக்கும் எளிய மக்கள் கூட நம்ப மாட்டார்கள்.
 ஜெயமோகன் கூறுவது படியே கிறித்துவத்தில் (இஸ்லாத்தில் போல) வன்முறையால் உலகை வெல்லும் கொள்கை இல்லை தான். ஆனால் அதே கோணத்தில் நோக்கினால் காலனியவாதம் என்ற பெயரில் ஐரோப்பிய கிறித்துவ தேசங்கள் உலகம் முழுக்க போர் தொடுத்து ஆக்கிரமித்ததை எப்படி புரிந்து கொள்வது? இந்த போர்கள் கிறித்துவின் வேதத்தை பரப்பும் நன்னோக்கில் தான் நடந்தன. சிலுவைப் போர்களை எப்படி புரிந்து கொள்வது?

ஒரு மதத்தின் கொள்கைக்கும் வன்முறைக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதில்லை. பொருளாதார அழுத்தங்கள், வணிக நோக்கங்கள், அரசியல், பேராசை ஆகியன தான் போர்களை தூண்டுகின்றன. இன்றைய உலக சூழலில் ஒரு பெரிய தேசம் போர் தொடுத்தால் அது நீதிக்கான போராட்டமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய தேசத்துக்குள் ஒரு போராளிக்குழு போர் தொடுத்தால் அது தீவிரவாதம் ஆகிறது. சில நிலையற்ற ஆப்பிரிக்க தேசங்களிலும் தெற்காசிய தேசங்களிலும் இஸ்லாம் வேகமாய் பரவுவதையும் அங்கு உருவாகும் வன்முறையையும் நாம் மதப்போராக பார்க்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் இனக்குழுக்கள் இடையே அரசியல் ரீதியாய் அதிகாரப் போட்டி வலுக்கிறது. சில குழுக்கள் இஸ்லாத்தின் பெயரில் ஒன்று திரள்கின்றன. இஸ்லாம் அங்கு இல்லாவிட்டால் வேறு அடையாளத்தின் கீழ் திரளப் போகிறார்கள். அவ்வளவு தான்.
உலகம் முழுக்க இஸ்லாம் ஒரு வெறுப்பு அலையாய், வன்முறை நெருப்பாய் பரவி வருகிறது என்பது ஒரு கற்பனை மட்டும் தான். உலகம் முழுக்க அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் நிலையின்மை மிக்க தேசங்களில் மட்டுமே இது நிகழ்கிறது. அங்கு நிலையான அரசுகள் அமைந்ததும் தீவிரவாதம் ஒடுங்கி விடும். தீவிரவாத குழுக்கள் தேசிய ராணுவமாய் உருக்கொள்வார்கள்.
ஜெயமோகன் வேறு சில பீதிகளையும் கிளப்புகிறார். இஸ்லாம் ஒரு பிற்போக்கான மதம் அல்லவா? இஸ்லாம் நவீன தனிமனித உரிமைகளுக்கு எதிரானது அல்லவா? இஸ்லாம் உலகு முழுக்க பரவினால் மக்கள் அடிப்படைவாதிகளின் கீழ் அஞ்சி நடுங்கி அல்லவா வாழ வேண்டும்? இஸ்லாமியர் குறித்த மற்றொரு கற்பிதம் இது. இயல்பிலேயே பிற்போக்கான, இறுக்கமான சில தேசங்களில் இஸ்லாமிய அரசுகள் ஆட்சி அமைக்கும் போது அங்கு மக்களின் சுதந்திரம் பிடுங்கப்பட்டு ஒடுக்குமுறை நடைபெறுவது உண்மை தான். ஆனால் எந்த மதமோ ஆட்சியாளரோ மக்களின் பண்பாட்டை தான் பிரதிபலிக்கிறார்கள். ஒரு முற்போக்கான, தனி மனித சுதந்திரத்தை மெச்சும் தேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் அது முற்போக்கான ஒன்றாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
 மக்கள் தாம் ஒரு மதத்தை வடிவமைக்கிறார்கள். மதம் மக்களின் உளவியலை தீர்மானிப்பதில்லை. இந்த விசயத்தில் தான் ஜெயமோகன் தவறு செய்கிறார். அவர் ஒரு அமைப்பியல்வாதியை போல் சிந்திக்கிறார். ஒரு கருத்தியலை சுற்றி சமூகம் அமைகிறது என நம்புகிறார். ஆனால் உண்மையில் சமூகத்தின் போக்கிற்கு ஏற்றாற் போல் கருத்தியல்கள் மாறுகின்றன.
உலகம் இப்போது எதிர்கொள்ளும் முக்கியமான சவால் மத பயங்கரவாதம் அல்ல. போதாமை. பணப்பற்றாக்குறை, பசி, கல்வியின், வளர்ச்சியின், வசதிகளின், வாய்ப்புகளின் போதாமை. பல்வேறுவிதமான ஒடுக்குமுறைகள், பற்றாக்குறைகள், பரிதவிப்புகள் உலகம் முழுக்க மக்களை சூழ்கின்றன. வயிற்றில் நெருப்பெரியும், உரிமைகள் நசுக்கப்படும் இந்த உலக மக்களுக்காய் நாம் யோசித்தால் போதும். இஸ்லாமிய பயங்கரவாதம் இதோ பரவி வருகிறது எனும் பீதி எல்லாம் அவசியமற்றது.


6 comments:

Ethicalist E said...

"ஒரு முற்போக்கான, தனி மனித சுதந்திரத்தை மெச்சும் தேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் அது முற்போக்கான ஒன்றாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை."
.
உங்களுக்கு இஸ்லாமிய ஆட் சி என்பதன் வரையறை தெரியவில்லை . இஸ்லாமியன் ஒருவன் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆடசி ஆக முடியாது . இஸ்லாமிய குரானிய சட்ட்ங்கள் முழுமையாக கடைப்பிடிக்கபப்டும் ஆடசியே இஸ்லாமிய ஆடசியாகும்.
அவ்வகையான அடசியில் தனி மனித சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

Palanivel said...

அன்புள்ள அபிலாஷ்,

உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வருபவன் நான்; ஜெயமோகனையும். நான் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் கடந்த பதினோரு வருடங்களாக இருக்கிறேன். அம் மக்களுடன் பேசி வருகிறேன். மேலும் உலக அரசியலையும் கவனித்து வருகிறேன். இந்த நிலையில் உங்களுடைய அரசியல் கற்பிதங்கள் 2 தவறு என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும்.
ஜெயமோகன் கட்டுரையில் சொல்லியிருப்பது நுறு சதவிகிதம் சரியானதே என்பதை ஒவ்வொரு நிலையிலும் கேட்டு, உணர்ந்து, புரிந்துவருகிறேன்.

பழனிவேல்

பாகை இறையடியான் said...

மத்தாளத்திற்க்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் இன்றைய இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் தீவிர மதவாதிகளாலும், மறுபுறம் ஜெமோ,பத்ரி போன்ற தீவிர வலதுசாரி எழுத்தாளுமைகளாலும் இடிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
இதில் மதவாதிகளின் இடிகளை காட்டிலும் மோசமானது எழுத்துகளால் தொடுக்கப்படும் வன்ம வரைவுகள் வெகுஜன மனசாட்சியில் திரிப்பை ஊடுருவச் செய்யும் இதனை எதிர்கொள்ள அதே அளவீடுகளில் இஸ்லாமிய சார்பை அதன் தொன்மத்தை எடுத்து வைக்கும் எழுத்தாளுமைகள் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!. மனுஷ் போன்ற ஒன்றிரண்டு ஆளுமைகள் எழுத்துலகில் இருந்தாலும் அவர்கள் தாம் சார்ந்த சமூக பிரதியாய் என்றும் இருந்ததில்லை.

ஒரு சமூகத்தை பற்றி பொத்தாம் பொதுவாய் பொதுவெளியில் ஒரு பிம்பத்தை ஜெமோ போன்றவர்கள் கட்டமைக்கும் முன் அவர்கள் முன்னெடுத்த அளவீடுகளை அங்கே அறம் சார்ந்து பதிய வேண்டும். அல்லது தாம் பின்பற்றும் ஒரு சமூகத்தை முன்னிறுத்தி தாம் மேற்கொண்ட அளவீடுகளை பதியச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் நடப்பது என்ன?. தாம் சார்ந்த ஒரு சமூக கூட்டின் மேல் முற்போக்கின் கூரோடு கல்லெறியும் போது வரும் சீற்றம், இன்னொரு சமூக கூட்டின் மீது எவ்வித முன்னறிவும் இன்றி தீயை வைக்கிறோம் எனும்போது மட்டும் ஏன் தோன்றவில்லை?.

ஒரு சமூக குழுவின்மீது ஒரு விமர்சனத்தை வைக்கும் முன் அதன் பிரதிநிதிகளிடம் விமர்சனத்தை எடுத்து வைத்து பதிலை பெற்று அந்த பதிலீட்டில் தாம் பெற்றதை வைத்து தம் வாதத்தை எடுத்து வைப்பது ஒரு எழுத்தாளனின் அறச் சார்பு எனலாம். ஆனால் இங்கு ஒரு சார்போடு தம் கருத்தை மட்டும் திணிப்பது எவ்வனவில் ஏற்றதாக இருக்க கூடும்.அதைத்தான் ஜெமோ தொடர்ந்து பதிவீட்டி வருகின்றார்.

அவர் இதுவரை எந்த ஒரு இஸ்லாமிய அறிஞர்களிடமும் அவருக்கான விமர்சனங்களை கொடுத்து பதில் பெற்றதாய் தெரியவில்லை அல்லது அவர்களுடைய விவாத அழைப்பை ஏற்றதாய் தெரியவில்லை ஆனால் பொதுவெளியில் தம் சுயசார்புடைய விமர்சனங்களை ஒருசார்பாய் மட்டும் செய்கிறார். இது அவர் சார்ந்த துறையின் ஆளுமைக்கு உகந்ததா? என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும்.

rangarajanadvocate said...

in the name of Islam, terrorist activities have taken place for creating separate islamic nation by splitting Russia, china, India, turkey, Thailand, Burma, Ethiopia, Sudan, Somalia, Afghanistan,Pakistan, Indonesia, Belgium, France, etc.. Don't fail to see the truth..

Sam Gideon said...

பாகை இறையடியான் கருத்து சரியானதே. அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரை தொடர்பான பார்வை மார்க்சிய நோக்கில் அமைந்து இருந்தால் கூடுதல் பொருத்தப்பாட்டோடு அமையும்.நன்றி

Sam Gideon said...

பாகை இறையடியான் கருத்து சரியானதே. அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரை தொடர்பான பார்வை மார்க்சிய நோக்கில் அமைந்து இருந்தால் கூடுதல் பொருத்தப்பாட்டோடு அமையும்.நன்றி