Monday, March 13, 2017

அரசியல் கற்பிதங்கள் 1: இடதுசாரிகளின் தோல்வி


உ.பி தேர்தலில் பா.ஜ.க பெற்ற பெருவெற்றியைப் பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் வலதுசாரி அரசியலின் எழுச்சியை பற்றி அவர் வினவினார். வலதுசாரிகள் ஏன் சமீபமாய் உலகெங்கும் அதிகாரத்தை கைப்பெற்றுகிறார்கள்? மக்கள் முற்போக்கு அரசியலில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
நான் அவரிடம் கேட்டேன்: அடுத்த அல்லது அதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் தோற்றால் நீங்கள் வலதுசாரி அரசியல் வீழ்ச்சியுற்றதாய் கூறுவீர்களா? டிரம்ப் போன்ற ஜனாதிபதிகள் முன்பு இருந்ததில்லையா? வலதுசாரிகள் இதற்கு முன் உலகில் கோலோச்சியதில்லையா?

ஒரு தேர்தல் அல்லது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு மக்களின் அரசியல் விருப்பங்கள், நம்பிக்கைகளை அளப்பது முழங்கையை கொண்டு வானை அளப்பது போன்ற செயல். டிரம்ப் வலதுசாரி என்பதால் அமெரிக்கர்கள் அவருக்கு ஓட்டளிக்கவில்லை. அவரது துணிச்சலான, முரட்டுத்தனமான, தான் தோன்றித்தனமான பிம்பம் அம்மக்களுக்கு பிடித்திருந்தது; தம் சிக்கல்களை, எரிச்சல்களை அவர் பிரதிநுத்துவப்படுத்துவதாய் நம்பினர்.
 உ.பி தேர்தலைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க சீரான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி ஆகிய விசயங்களை தான் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தியது. மதவெறியை அல்ல. ஆக, இத்தேர்தல் முடிவுகளை நாம் இந்துத்துவாவுக்கான மக்களின் முத்திரையிடலாக பார்க்க முடியாது. மேலும் தேர்தல் என்பது ஒரு அறிவார்ந்த விவாத நிகழ்வு அல்ல. தேர்தலில் சரி தவறுகளை யாரும் கூட்டிக் கழித்து ஓட்டளிப்பதில்லை. அது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு. உணர்ச்சிநிலைக்கு நீங்கள் தர்க்க விளக்கங்கள் அளிக்க இயலாது. அதை மக்களின் மனநிலை வெளிப்பாடு என்று மட்டுமே கூற இயலும்.
இன்னொரு விசயம் இந்தியாவில் வலதுசாரிகள் என்றுமே ஒரு தனி கட்சியினராய் இருந்ததில்லை. சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகளின் வலுவான தாக்கம் இருந்தது என ராமசந்திர குஹா எழுதுகிறார். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் தடை விரைவில் நீக்கப்பட்டது. காங்கிரஸ் ஒரு மென்–இந்துத்துவா கட்சியாகவே திகழ்ந்தது. திகழ்கிறது. தேசியவாதம் பேசும் சிவசேனா, திராவிட கட்சிகள் ஆகியவற்றிடம் ஒரு மென் வலதுசாரித்தனம் உண்டு. பெரியாரிடம் ஐரோப்பிய (புத்தொளிக்கால) பகுத்தறிவு தாக்கம் இருந்தது. இடதுசாரிகளின் சாயலும் இருந்தது. இந்த புள்ளியில் தான் சிவசேனாவும் திராவிட கட்சிகளும் (தேசியவாத, இனப்பெருமை பேசும் கட்சிகளாய் இருந்தும்) மாறுபடுகின்றன. திராவிட கட்சிகள் சற்றே வலதுசாரி உதட்டுச்சாயம் பூசின இடதுசாரிகளாகவே தமிழகத்தில் வளர்ந்து வந்திருக்கிறார்கள். இங்கு இடதுசாரிகளால் அதிகம் ஜொலிக்க முடியாதத்தற்கும் இது ஒரு காரணம். ஆக, இந்தியாவில் வலதுசாரிகளை முழுக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவுடன் மட்டும் அடையாளப்படுத்த முடியாது. வலதுசாரிகள் என்றுமே இங்கு இருந்திருக்கிறார்கள். இன்று ஒரு வலுவான நிர்வாக கட்டமைப்பாக அவர்கள் திரண்டிருக்கிறார்கள் என்பது தான் வித்தியாசம்.
இடதுசாரிகளின் வீழ்ச்சி எனும் பார்வையிலும் எனக்கு உடன்பாடில்லை. இடதுசாரிகளின் நெருக்கடி உலகமயமாதலுடன் துவங்கி விட்டது. அச்சித்தாந்தத்திற்கு ஏற்ற சமூகவியல், பொருளாதார சூழல் இன்று உலகெங்கும் மறைந்து வருகிறது. அதனாலே இடதுசாரிகளும் அரசியல் வெளியில் தம் இடத்தை இழக்கிறார்கள். அது அவர்களின் தவறு அல்ல. மேலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலை, உற்பத்தி கட்டமைப்புகளுக்கும் இடதுசாரிகளுக்கும் தவிர்க்க முடியாத உறவு உண்டு. மார்க்ஸியம் ஒரு பொருளாதார கொள்கை. அது வறுமையை உறிஞ்சி வளரும் சித்தாந்தம். வெளிப்படையான சமூக ரீதியான வறுமை அதன் நிலைப்பாட்டுக்கு அவசியம். இந்தியாவை எடுத்துக் கொண்டோம் என்றால் தொழில் வளர்ச்சி என்றும் அபரிதமாய் இருந்திராத வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் செழித்தது ஒரு விதிவிலக்கு அல்ல. இந்த இரு மாநிலங்களும் மத வழிபாட்டை தீவிரமாய் முன்னெடுக்கும் மாநிலங்கள். மரபையும் நவீனத்தையும் சமமமாய் வைத்து கொண்டாடும் மாநிலங்கள். அங்கு இடதுசாரிகள் பொருளாதார சமூகவியல் தாக்கத்தை மட்டும் செலுத்தினார்கள். மார்க்ஸையும் கடவுளையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து வழிபடுவதில் அம்மக்களுக்கு சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கு கார்ப்பரேட்வாதம் தலைதூக்கிய போது இடதுசாரிகள் வெளியேற வேண்டி வந்தது.
இடதுசாரிகளின் பிரச்சனை அவர்கள் அல்ல. காலம். காலம் அவர்களை வாசலைத் தாண்டி வர அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து விட்டது. வரலாறு அவர்களை காலாவதி ஆக்கி விட்டது. அவர்கள் என்ன தான் மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு களத்தில் இறங்கி போராட முயன்றாலும் தத்துவார்த்தமாய் தம் அரசியலை தகவமைப்பது இனி எளிதல்ல. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் ஒரு மார்க்ஸியவாதிக்கு சொல்ல என்ன இருக்கிறது? காவிரி நீர் பங்கீட்டில் இடதுசாரித் தத்துவத்துக்கு விளக்க ஒன்றும் இல்லை. இன்றைய அரசியல் என்பது அடையாள அரசியல். அன்றாட தேவைகளுக்கான அரசியல். கொள்கை, சித்தாந்தங்கள் அற்ற அரசியல். எந்த சித்தாந்தமும் அற்ற, மக்களின் உணர்வுநிலைகளை மட்டும் பிரதிபலிக்கும் ஒரு தலைவன் மட்டுமே இன்று ஜெயிக்க முடியும்.
இடதுசாரிகளின் சறுக்கல் அவர்களின் தவறு அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களுக்கு இன்று ஒரு போலியான சமத்துவ உணர்வை அளிக்கின்றன. வாடிக்கையாளர் முதல் ஊழியன் வரை கார்ப்பரேட்டுகளால் தான் நியாயமாய் நடத்தப்படுவதாய் நம்புகிறான். இந்த நம்பிக்கை தான் இடதுசாரிகளுக்கு கிடைத்த மரண அடி. அதாவது பழைய நிலப்பிரபுத்துவ சூழலில் ஒரு தொழிலாளி தன் தொழிலுக்கும் தான் பணி செய்யும் நிலத்துக்கும் தனக்குமான இடைவெளியை வெளிப்படையாக உணர்ந்தான். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்று உங்கள் வேலையின் இறுதி பயன்மதிப்பு என்ன என உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதாய் நம்புகிறீர்கள். உங்கள் மீது நேரடியான அதிகாரம் செலுத்தப்படுவதில்லை. உங்கள் முதலாளியை நீங்கள் நேரில் பார்ப்பதில்லை. இன்று எல்லாமே பொம்மலாட்டம் போல் மறைமுகமாக நடக்கிறது. நீங்கள் கசக்கி பிழியப்படும் போதும் உங்களுக்கு நோவதில்லை. நீங்கள் மிகையாக விலை செலுத்தி ஒரு பொருளை வாங்கும் போது நீங்கள் ஏமாற்றப்படுவதாய் நீங்கள் உணர்வதில்லை. மாறாக ஒரு வாடிக்கையாளனாய் உங்களுக்கு என்று தனி உரிமைகள், அதிகாரம் உள்ளதாய் நம்புகிறீர்கள். சமகால முதலாளியம் உங்களை பூர்ஷுவா, கூலிக்காரன் என உணர வைப்பதில்லை. அது உங்களுக்கு முதலாளி என பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி இன்னொரு பக்கம் தொழிலாளியாக்கி வேலை வாங்குகிறது. இச்சூழலில் இடதுசாரிகள் மூச்சுமுட்டி திணறுவதில் வியப்பில்லை.

 இன்றைய சூழலில் இடதுசாரிகளின் ஒரே பிடிமானம் தொழிற்சங்கங்கள் மட்டும் தான். அவையும் கைநழுவினால் அவர்கள் முழுக்க துடைத்து அகற்றப்படுவார்கள். ஆனாலும் இடதுசாரி தத்துவம் பிற கட்சிகளின் கொள்கைகள் வழி வாழும் என்றே நம்புகிறேன். 

No comments: