Monday, February 27, 2017

இந்துமதம் தாக்கப்படுகிறதா?


ஜெயமோகனின் ஜக்கி கட்டுரைகளுடன் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே. கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகி வந்ததன் வரலாற்றுவாத காரணங்களை சொல்கிறார். அவர்கள் சாமியார்கள் அல்ல, நவீன, எளிய உளவியலாளர்கள், ஒரு கலாச்சார தேவையை நிறைவேற்றுகிறாரக்ள் என்கிறார். அத்தகைய சாமியார்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தான் ஏற்பதில்லை என்பதையும் கடைசியில் சொல்கிறார். நான் இதை ஏற்கிறேன்.
ஏற்க முடியாதவை இவை:
சூழலியல் குற்றச்சாட்டுகள் முக்கியமானவை என்று விட்டு அக்குற்றங்களை அரசியல் தலைவர்களும் கல்லூரி முதலாளிகளும் செய்யவில்லையா, அவர்கள் ஏன் நீங்கள் விமர்சிப்பதில்லை என கேட்கிறார். ஒரு குற்றத்தை எப்படி இன்னொரு குற்றம் நியாயமாக்கும்? மேலும் மீடியாவில் எப்போதும் ஒட்டுமொத்தமாய் எல்லாரது குற்றங்களையும் பேச இயலாது. ஒரு சந்தர்ப்பம் உருவாகும் போது தான் பேச இயலும்.

 அதே போல் நில ஆக்கிரமிப்பு பிரச்சனை கூட ஜெயமோகன் சொல்வது போல் ஒரு நிலமதிப்பு சம்மந்தமான சிக்கல் மட்டும் தானா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. போகிற போக்கில் நாம் மதிப்பிட வேண்டிய ஒரு சாதாரண பிரச்சனை அல்ல இது. கார்ப்பரேட்டுகள் வசம் வனங்கள் சுலபத்தில் செல்வது, அதற்கு முதல்வர் முதல் பிரதமர் வரை மறைமுக ஆதரவு நல்குவது மிக மிக ஆபத்தானது.

நான் இங்கு முக்கியமாய் குறிப்பிட விரும்புவது வேறொன்று:
ஜெயமோகனுக்கு ஒரு கற்பனை அச்சம் உள்ளது: ”இந்து மதம் கிறித்துவ பிரச்சாரங்களால் அழிக்கப்படுகிறது, கிறித்துவ பிரச்சார அமைப்புகளுக்கு சர்வதேச ஆதரவு உள்ளது, அதை நம் மீடியாவும் முற்போக்காளர்களும் கேள்வி கேட்பதில்லை. இந்து மதம் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறது, அதற்கு பதில் கூற முடியாது இந்துக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.”
இந்த எதிர்ப்பலைக்கு மறு தரப்பாக, எதிர்விசையாக ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகிறார்க்ள் என்கிறார் ஜெயமோகன். இது மிகை. அப்படி ஒரு இந்துமத எதிர்ப்பலையே இங்கு இல்லையே! ஜெயமோகனின் (மார்க்ஸிய இயங்கியல்) வாதம் உண்மையெனில் எங்கு இந்துமத எதிர்ப்பு அதிகமாய் உள்ளதோ அங்கு தான் கார்ப்பரேட் சாமியார்கள் அதிகம் வளர வேண்டும். கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தான் இவர்களின் மையமே இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. தமிழகத்தில் இந்து எதிர்ப்பலை ஓரளவு அரசியல்ரீதியாய் இருந்த அறுபது எழுபதுகளில் இங்கு விவேகானந்தர்கள் தோன்றியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே!
குமரி மாவட்டத்தில் கூட ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சி என்பது சாதிய மோதல்களின் பின்னணியில் தான் நடந்தது (இந்து நாடார்கள் – கிறித்துவ நாடார்கள், நாயர்கள் – கிறித்துவ நாடார்கள்). இன்னொரு பக்கம் தலித்துகளுக்கு இந்து அந்தஸ்து தேவைப்பட அவர்களும் இந்துத்துவா பக்கம் ஆவேசமாய் அங்கு நகர்ந்தார்கள். கிறித்துவ மிஷினரிகள் ஆர்.எஸ்.எஸ் அலைக்கு எதிர் முனையாய் அங்கு இருந்ததில்லை.
 கார்ப்பரேட் சாமியார்களின் எழுச்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசியவாத எழுச்சியின் விளைவு மட்டுமே. மேலும் இது ஒரு சிறந்த வணிகசூத்திரமும் தான். மதத்தை வைத்து நீங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும். எல்லா மதங்களிலும் வணிக சுழிப்புகள் உண்டு. அதில் ஒன்று தான் ஜக்கியின் அமைப்பு.
உண்மையில் இது போல் ஒரு தீவிர இந்துமத அழிப்பு பிரச்சாரம் நடைபெறுகிறதா என்பதில் எனக்கு சிறுவயதில் இருந்தே வியப்புள்ளது. நான் பள்ளி, கல்லூரிகள் எங்கும் நிறைய கிறித்துவர்கள், இஸ்லாமியர் மத்தியில் தான் படித்து வந்தேன். எவரும் ஒருமுறை கூட என்னிடம் இந்து மதம் குறித்து ஒரு பழிப்போ கேள்வியோ முன்வைத்ததில்லை. மேலும் என் காலத்தில் இங்கே பெரியாரியம் ஒரு அமைப்பாக வீழ்ச்சி அடைந்து விட்டது. திமுக, அதிமுக கூட இந்து மதத்தை நோக்கி முகம் சுளிப்பதில்லை. அதிமுக ஒரு மென்-இந்துத்துவா இயக்கமாகவே திகழ்கிறது. ஆக, எனக்கு அறிவு ஏற்பட்ட காலத்தில் இருந்தே ஊரிலும் சென்னையிலும் இந்து பெரும்பான்மைவாதத்தின் திளைப்பையும் கொண்டாட்டத்தையுமே காண்கிறேன். இந்துக்கள் சிறுகுகிறார்கள் எனும் ஒரு பதற்றத்தை அடிக்கடி பா.ஜ.க ஏற்படுத்த முயல்வதை காண்கிறேன். ஆனால் இதற்கு புள்ளிவிபரங்களோ ஆதாரங்களோ இவர்களிடம் உள்ளதா? உதாரணமாய் முன்பு 95% இருந்த இந்துக்கள் இன்று 70% ஆகி விட்டார்கள் என்று ஆதாரபூர்வமாய் சொல்ல முடியுமா?

உண்மை வேறானது. தொண்ணூறுகளுக்கு பிறகு இந்து தேசியவாதம் வலுப்பெற்றிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி, உலகமயமாதல் ஆகியவை இதற்கு உதவியிருக்கின்றன. காங்கிரஸ் அலை தளர்ந்திட இந்துத்துவா மேலெழுந்திருக்கிறது. பொருளாதார ரீதியாய் வலுப்பெறும் எந்த சமூகத்துக்கும் ஒரு கலாச்சார மையம், ஒன்று திரள ஒற்றை அடையாளம் ஒன்று தேவைப்படும். அப்படித் தான் தொண்ணூறுகளில் இந்து மதம் வேறொரு வடிவில் மீட்டெடுக்கப்பட்டது. இதற்கு மீடியா, கார்ப்பரேட் சாமியார்கள், இந்துத்துவா அரசியல் ஆகியவை நிச்சயம் உதவின. மதமாற்ற அரசியலுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என நான் உறுதியாய் கூற இயலும். மதமாற்றும் கிறித்துவ பேச்சாளர்கள் இந்த பேரலையுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறு புள்ளி. இப்படி எல்லாம் ஒரு பக்கம் செழிப்பாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் எந்த சந்தர்ப்பத்திலாவது ஒரு சிறு தளர்ச்சியை சந்திக்கும் போது “இந்து மதம் அழிகிறது, இந்துக்கள் மதமாற்றப்படுகிறார்கள்” என கூக்குரலிட மறக்காது. ஆனால் ஆதாரத்தை மட்டும் தர மாட்டார்கள்.

இரண்டு தரப்புகள் இந்த இந்த்துத்துவா பேரெழுச்சிக்கு பாராமுகம் காட்டின: 1) ஆங்கில மீடியா, 2) எழுத்தாளர்கள். இது உலகுதழுவிய நிலை தான். ஏனென்றால் உலகம் முழுக்க எழுத்தாளர்கள் நவீன பார்வை கொண்டவர்கள். நவீன பார்வை ஐரோப்பிய புத்தொளி கால சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சித்தாந்தம் பகுத்தறிவை தீவிரமாக முன்வைப்பது; மதசார்பின்மையை, தனிமனிதவாதத்தை முன்னெடுப்பது. இந்தியாவில் இத்துடன் இடதுசாரி பார்வையும் இணைந்து கொள்கிறது. இந்த ஐரோப்பிய கல்வியின் நீட்சியான ஆங்கில மீடியாவும் இவ்வாறு தான் மதத்தை ஒவ்வாமையுடன் எதிர்கொண்டது. தமிழில் இச்சூழலுடன் பெரியாரியமும் மார்க்ஸியமும் இணைந்து கொண்டது. நம் எழுத்துலகில் மதவாதிகள் சிறுபான்மையினர் தாம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நிஜ உலகில் அப்படி அல்ல. நிஜ உலகுடன் அதிக தொடர்பில்லாத ஒரு மிகச்சிறு உலகம் மீடியாக்காரர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உடையது. இவர்களை ஒரு காரணம் காட்டி இந்து மதம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என நாம் கூறக் கூடாது.

இந்து மதம் மட்டுமல்ல பொதுவாகவே அனைத்து மத அமைப்புகள், அவற்றில் பங்கு கொள்ளும் மக்களின் உணர்ச்சிப்போக்குகள், நம்பிக்கைகள், புராண கதைகள் ஆகியவற்றுக்கு எழுத்தாளர்களும் மீடியாவும் போதுமான கவனம் அளிப்பதில்லை என எனக்கு மனக்குறை உண்டு. நான் மதவாதி அல்ல. அதேநேரம் மத எதிர்ப்பாளனும் அல்ல. ஆனால் பொது நீரோட்டத்தை அறிந்து கொள்ள மத இயக்கங்களை நுணுக்கமாய் பின் தொடர வேண்டும்; மக்களின் மத உணர்வுகளை வெறுப்புடன், உதாசீனத்துடன் அணுகாமல் சீரியஸாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
ஜெயமோகன் கூறுவது போல் இந்துமத வெறுப்பு இங்கு உள்ளதாய் நான் நினைக்கவில்லை. அறிவுத்தரப்பினரிடம் மதவெறுப்பு உள்ளது. ஏற்கனவே ஒடுக்கப்படும் கிறித்துவ, இஸ்லாமிய மதத்தினரை விமர்சிக்க கூடாது எனும் எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அம்மதங்கள் குறித்த ஆழமான பார்வையோ அலசல்களோ கூட இங்கே இல்லை. (உயிர்மையில் கடவுளை ஆதரித்து வெளிவந்த ஒரே கட்டுரை என்னுடயது: “கடவுள் இருக்கிறாரா?”)

இது பற்றி பேசும் போது எழுத்தாளனுக்கு கடவுள் நம்பிக்கை, மத ஈடுபாடு இருக்கலாமா என ஒரு தோழி என்னிடம் கேட்டார். எழுத்தாளன் முற்போக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலைப்பாடு இங்கே ரெண்டாயிரத்தில் துவக்கத்திலேயே பின்நவீனத்துவ அலையின் உச்சத்தில் ஏற்பட்டு விட்டது. எழுத்தாளன் விரதம் இருந்து மாலையிட்டு மலைக்கு போகலாம். கோயிலுக்கு போகலாம். அவன் அரசியல் கட்சிக்கும் போகலாம். இதில் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. எழுத்தாளன் பொதுசமூகத்தில் இருந்து தனித்திருக்கையில் தான் ஒரு மிக சாதாரண மனிதன் எனும் உணர்வுடனும் இருக்க வேண்டும். அவன் தெருவில் போகும் கும்பலுடனும் கலந்திருக்க வேண்டும்.
இறுதியாய்:
 குமரி மாவட்டம் கிறித்துவர்கள் அதிகமாய் உள்ள மாவட்டம். அங்கு கிறித்துவ மதமாற்றம் தீவிரமாய் நடந்த காலத்தில் ஜெயமோகன் தன்னை “சிறுபான்மையாய்” உணர்ந்திருக்கலாம். அல்லது இது குறித்த ஒரு தீவிர மனச்சித்திரம அவருக்கு இளமையில் ஏற்பட்டிருக்கலாம். அவர் பொதுவாய் தன்னை உணர்வுபூர்வமாய் பாதித்த ஒன்றை பல்மடங்கு பெருக்கி ஒரு கொள்கையாகவே வகுத்து விடுவார். அது பற்றி மணிக்கணக்காய் வாதிடுவார். நூறு பக்கங்கள் எழுதுவார். வெளியே அது உண்மையாகவே இருக்கிறதா என தேடி ஆராய மாட்டார். இந்துமதம் தாக்குதலுக்கு உள்ளாகிறது, பா.ஜ.க இங்கு ஜக்கியின் ஆதரவு அலையில் வளர்ந்து விடக் கூடாது என அஞ்சியே ஜக்கியை தாக்குகிறார்கள் ஆகிய கருத்துக்கள் அவரை பொறுத்த மட்டில் உண்மையாக இருக்கலாம். எனக்கு உடன்பாடில்லை.

மனிதர்கள் உள்முரண்பாடுகளுடன் சுலபத்தில் வாழக் கூடியவர்கள். எனது இடதுசாரி நண்பர்களில் ஒரு பகுதியினர் கோயிலுக்கு செல்வதை, பிரார்த்தனைகளில் ஈடுபடுவதை அறிவேன். ஆவேசமாய் காவடி தூக்கி, கும்பம் எடுத்து கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போடுவதையும் அறிவேன். இவர்கள் ஜக்கியையும் தான் ஆதரிப்பார்கள். இவர்களை எல்லாம் நம்பி பா.ஜ.க அரசியல் செய்ய இயலாது! பாதி ஆற்றில் கவிழ்த்து விடுவார்கள்.

No comments: