Saturday, February 18, 2017

ஸ்டாலினின் முதல் அதிரடி

Image result for ஸ்டாலின்
சில அரசு அலுவலகங்களில் எதைக் கேட்டுப் போனாலும் ”விண்ணப்படிவம் நிரப்பிக் கொடுங்கள். அதன் பிறகு அதோ அங்கே வரிசையில் காத்து நில்லுங்கள்” என்பார்கள். ஒன்றுக்கு போக வேண்டும் என்றாலும் விண்ணப்பட்ட படிவம் தான். சாகும் தறுவாயில் ஸ்டிரெச்சரில் தூக்கி வந்தாலும் விண்ணப்படிவம் தான். ஸ்டாலினின் அரசியல் கிட்டத்தட்ட இது போன்றது. அவர் எதையும் நிதானமாய் திட்டமிட்டு சீராய் செய்ய விரும்புகிறவர். நாடகீயமான அடாவடித்தமான (கேஜ்ரிவால் பாணி) அரசியல் அவர் இயல்பு அல்ல. ஆனால் அரசியலில் நாடகம், கண்ணீர், ஆவேசம், கோபம் ஆகியவற்றுக்கும் முக்கிய இடம். ஒரு தலைவன் சரியான வேளையில் தெருவில் இறங்கி நின்ற குரல் கொடுத்தால் மொத்த சமூகமும் செவி மடுக்கும். அப்படியான சில நல்ல சந்தர்பங்களை ஸ்டாலின் இதற்கு முன் தனது மடிப்பு கலையாத அரசியல் காரண்மாய் தவற விட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கண் முன்னாலேயே தவற விட்டார்: அப்போராட்டத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான பொதுமக்கள், அதன் பிறகு மெ 17 இயக்கத்தினர், ஒ.பி.எஸ் என பலரும் முன்னெடுத்து சமூகத்தை உணர்ச்சி அலையில் மிதக்க வைத்தார்கள். மொத்த தமிழ் சமூகமும் தன்னை ஒற்றைப் புள்ளியில் ஓர் இனமாக உணர்ந்த அபூர்வமான தருணம் அது. ஸ்டாலின் பந்த், ரயில் மறியல் தாண்டி அது பற்றி யோசிக்கவில்லை.

 அப்போராட்டத்தை திமுக முன்னெடுத்திருந்தால் போலீஸ் நிச்சயம் கையை கட்டி வேடிக்கை பார்த்திருக்காது. ஆனால் நடந்த போராட்டங்களில் பாதி அளவிலாவது திமுகவால் ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் ஸ்டாலின் மக்கள் உள்ளங்கள் முழுக்க நிறைந்திருப்பார். ஆனால் அவருக்கு பதிலாக ஒ.பி.எஸ் சிறிது காலம் நல்ல பெயர் சம்பாதித்தார். குறிப்பாக, ராஜினாமாவுக்கு பிறகு அவர் சசிகலாவுக்கு எதிராக தன் ”புரட்சியை” துவங்கிய பின் பா.ஜ.கவினருமே பொறாமைப்படும் அளவுக்கு அவர் இமேஜ் வளர்ந்தது.
இதுவரை வேடிக்கை பார்த்திருந்த ஸ்டாலின் முதன்முறையாய் இப்போது அதிமுகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விழித்தெழுந்திருக்கிறார். இன்றைய தினம் திமுகவின் சட்டமன்ற அமளி, ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் மீடியாவுக்கு பேட்டி அளித்தது, கவர்னரை சந்தித்தது, மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தது எல்லாமே மாஸ் தான். வரும் மாதங்களில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை ஒட்டி அவர் மாநிலத்தை இது போல் தொடர்ந்து ஸ்தம்பிக்க வைத்தால் கலைஞரே அவரைக் கண்டு பயந்து விடுவார்.
அதேநேரம் ஸ்டாலின் இவ்வளவு ஆவேசமாக போராடியது அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் என்பது நகைமுரண் தான். சசிகலா மீது மக்களில் ஒரு தரப்பினருக்கு உள்ள கோபம் இந்த நகைமுரணை காண விடாமல் தடுக்கிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமனதுடன் எடப்பட்டியாரை ஆதரிக்கவில்லை என்பதை அவர்கள் கூறவில்லை. இன்று ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களில் ஒருவரும் கூட “என்னை மிரட்டுகிறாகள்; அடைத்து வைத்திருக்கிறார்கள்” என புகார் கொடுக்கவில்லை. நாளையும் கூறுவார்கள் எனத் தோன்றவில்லை. ஒருவேளை அவர்கள் பல கோடி பணத்தை பெற்று ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நிச்சயம் வாயே திறக்க மாட்டார்கள். அவர்களுக்கே பிரச்சனை இல்லையென்றால் ஸ்டாலினுக்கு மட்டும் என்ன? ஒ.பி.எஸ் தரப்பும் இன்று அமைதி காத்தது. திமுக மட்டும் ஏன் தன் “எதிர்க்கட்சியின்” உரிமைகளை காப்பாற்ற போராட வேண்டும்? ”நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதினைந்து நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்” என முதலில் கருத்து சொன்ன ஸ்டாலின் ”ஏன் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு அவசரமாய் நடக்க வேண்டும்? அது தான் 15 நாட்கள் அவகாசம் உள்ளதே” என இன்று முரணாக கேட்கிறார். அப்படி என்றால் ஒ.பி.எஸ்ஸும் பா.ஜ.கவும் சேர்ந்து “குதிரை பேரம்” நடத்த வேண்டும் என்கிறாரா?
எடப்பாடியார் அரசை ஆதரிக்க மாட்டோம் என்றார் சரி. அப்படி என்றால் ஒ.பி.எஸ் அரசு அமைக்க திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்களா? இதற்கு பதில் இல்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஒருவேளை எடப்பாடியார் அரசு கவிழலாம். ஆனால் அடுத்து யார் அரசு அமைக்க முடியும்? 11 பேர் ஆதரவு கொண்ட ஒ.பி.எஸ்ஸா?
ஆக திமுகவின் நோக்கங்கள் இரண்டு.
1)   அதிமுக ஒரு நிலையான அரசை அமைக்க அனுமதிக்க கூடாது. அதன் விளைவாக ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அதன் நற்பலன் திமுகவுக்கே.
2)   எப்படியும் எடப்பாடியார் குழுவினர் வாக்கெடுப்பில் ஜெயித்து விடுவார்கள். ஆனால் எளிதாக அவர்கள் அதை சாதித்து தப்பித்து ஓட விடக் கூடாது. அமளி செய்து போராடி சத்தம் போட்டு ”இது அறமற்ற முறையில் நடந்த வாக்கெடுப்பு” எனும் செய்தியை வலுவாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இரண்டாவது நோக்கத்தில் திமுக வென்று விட்டது.
திமுக இப்படி ஆட்டத்தை கலைக்க பார்க்கும் என அதிமுக முன்னரே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதனாலே திமுகவினர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மைக்கை பிடுங்கி உடைத்து மேஜையை கவிழ்த்து, சபாநாயகர் நாற்காலியில் ஏறி அமர்ந்து அதகளம் பண்ணும் போது அதிமுகவினர் அமைதியின் திருவுருவங்களாக நடித்தனர். திமுகவின் அதகளத்தையே ஆதாரமாக காட்டி அத்துமீறலுக்காக அவர்களை வெளியேற்றி, வாக்கெடுப்பு நடத்தலாம் என்பதே அவர்களின் திட்டம். இல்லாவிட்டால் வாக்கெடுப்பில் ஒ.பி.எஸ் தரப்பு எடப்பாடியாருக்கு மிக கடுமையான போட்டி கொடுத்திருக்கும். திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போனது ஒருவிதத்தில் எடப்பாடியார் பிரம்மாண்ட வெற்றி பெற்றதாய் தோற்றத்தை கொடுக்க உதவியது. இல்லாவிட்டால் திமுகவும் அதிருப்தி அதிமுகவினரும் ஒரு வலுவான அணியாய் எடப்பாடியார் அணிக்கு எதிராக நிற்கும் ஒரு விசித்திர நிலை ஏற்பட்டிருக்கும். நாளைய பேப்பரில் பார்க்க எடப்பாடியார் மயிரிழையில் தப்பித்த சித்திரம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை.

ஆக இன்றைய ஆட்டம் டிரா:  ஸ்டாலின் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். எடப்பாடியாருக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் திமுகவின் ஆயுதத்தையே கொண்டு அவர்களை சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றி சுலபமாய் வாக்கெடுப்பை நடத்திய திருப்தி அவருக்கு இருக்கும். முக்கியமாய் அவர் முதல்வர் ஆகி விட்டார்.

No comments: