Monday, February 13, 2017

சம்பவம் எப்படி கதையாகிறது?

அன்புள்ள அபிலாஷ் ...
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் என்னுடைய சிறுகதையை படிக்க கொடுத்திருந்தேன். இது சிறுகதையல்ல டைரி குறிப்பிற்க்கு தலைப்பிட்டு கொடுத்திருக்கிறாய் என்றார். சரி என் டைரி குறிப்பில் என்ன குறை இருக்கிறது ?? என்றேன். அது ஒரு புனைவாக மாற்றம் அடையவே இல்லை என்றார். இன்னும் கொஞ்சம் எழுதிப்பார் என்றார். என் சந்தேகம் ... புனைவு என்றால் என்ன, நான் நேரில் பார்த்த ஒரு சம்பவம் எந்த புள்ளியில் ஒரு புனைவாக மாறுகிறது. சமயமிருப்பின் தெளிவுபடுத்தவும்.
நன்றி ரவீந்தர்

அன்புள்ள ரவீந்தர்
இது ஒரு நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்கு இ.எம் பாஸ்டர் எனும் ஆங்கிலேய நாவலாசிரியர் ஒரு பதில் சொன்னார்.

சம்பவம்: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து ராஜாவும் இறந்து போனார்.
கதை: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து துயரம் தாள முடியாமல் ராஜா இறந்து போனார்.
(பாஸ்டர் சம்பவத்தை tale என்றும் கதையை story என்றும் வகைப்படுத்துகிறார். Tale என்றால் சாதாரண கட்டுக்கதை. Story என்றால் ஒரு செய்நேர்த்தி உள்ள / இலக்கிய கதை. )
சரி, ரெண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே கவனித்திருப்பீர்கள். ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் தூண்டப்பட்டு இன்னொரு சம்பவம் அடுத்து நடக்கையில் அது கதையாகிறது (ராணியின் இழப்பால் தூண்டப்பட்டு கடும் சோகத்தில் ராஜாவும் இறக்கிறார்).
 திரைக்கதையின் இலக்கணமே இது தான். ஏன் இப்படி நடந்தது, அடுத்து என்ன ஆகிய கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் வரும்படியாய் எழுதினால் கதை உருவாகிறது. வணிகக் கதைகள், சம்பிரதாயமான இலக்கிய சிறுகதை என பல வடிவங்களிலும் இந்த தொழில் யுக்தி தான் செயல்படுகிறது. வணிகக் கதை எடுத்துக் கொண்டால் சுஜாதாவின் எந்த சிறுகதைக்கும் நீங்கள் இதை பொருத்திப் பார்க்கலாம்.
 இலக்கிய கதை எடுத்துக் கொண்டால்? அசோகமித்திரனின் ஒரு சிறுகதையை எடுத்துக் கொள்வோம். கதை ஒரு மத்திய வர்க்க வீட்டில் நடக்கிறது. முதல் கேள்வி: அங்கு என்ன பிரச்சனை? எலி. எலியை பிடிக்க பல முயற்சிகள் செய்து கடைசியில் எலிப்பொறியில் மாட்ட வைக்கிறார்கள். அடுத்த கேள்வி: அடுத்து என்ன நடக்கப் போகிறது? எலியை அடிக்க வேண்டும். ஆனால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு பாவம் எலியை அடிக்க மனம் வரவில்லை. “பாவம் இதை தொலைவா எங்கியாவது கொண்டு போய் திறந்து விட்டிரு” என மைய பாத்திரத்திடம் அவன் அம்மா சொல்கிறாள். அடுத்து என்ன ஆச்சு? மைய பாத்திரம் அதை தொலைவாக ஒரு வெட்டவெளிக்கு எடுத்துப் போகிறான். அப்புறம்? எலியை திறந்து விடுகிறான். சரி, எலி வெளியே ஓடியதா? அது தான் இல்லை. அது வெளியே வந்து பார்த்து திகைத்து நின்றது. ஏன்? இப்போது தான் நாம் “அடுத்து என்ன?” என்பதில் இருந்து “ஏன்?” எனும் கேள்விக்கு வருகிறோம். அதை ஆசிரியர் சொல்வதில்லை. ஆனால் வெட்டவெளியை முதன்முதலில் பார்க்கும் ஒண்டுக்குடித்தன எலியின் திகைப்பை சுருக்கமாய் காட்டி விடுகிறார். கடைசியாய் ஒரு கேள்வி: அப்படி எலி வெளியே வந்து திகைத்து நின்ற போது என்னாச்சு? அங்கு விரைந்து வரும் ஒரு வண்டி அதன் மேல் ஏறி விட அது செத்து விடுகிறது.
 ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழல். அங்கே ஒரு சற்றே விசித்திரமான பிரச்சனை: எலியை பிடிப்பது. அடுத்து இப்பிரச்சனை தரும் புது புது சவால்கள். அவை உருவாக்கும் “அடுத்து என்ன?” எனும் கேள்விகள். இக்கேள்விகள் தாம் இக்கதையை இறுதி வரை நகர்த்துகின்றன. அதேநேரம் இக்கதையை முக்கியமாக ஆக்குவது ”ஏன்” எனும் கேள்வி தான். அக்கேள்வியை தூண்டும் எலியின் திகைப்பு தான். அது தான் கதையின் அவதானிப்பு முடியப்பட்டுள்ள தருணம். வாசகனுக்கு வாழ்க்கையின் நகைமுரண் கண்டு நெகிழவும் புன்னகைக்கவும் கதைக்குள் இங்கு ஒரு சந்தர்ப்பத்தை அசோகமித்திரன் தருகிறார். “நானும் இந்த எலியை போலத் தானே” என அந்த வாசகன் ஒரு நொடி யோசிக்கிறான். “அந்த மைய பாத்திரமும் அந்த எலியை போல் ஒரு இடுங்கின வாழ்க்கையில் அல்லல்படுகிறவன் தானே?” என தனக்குள் கேட்கிறான். இந்த இடத்தில் வாசகனின் மனம் விரிகிறது. அவனுக்கு வாழ்க்கை குறித்த ஒரு புதிய பார்வை, கோணம் கிடைக்கிறது. இந்த கோணம் இக்கதையை ஒரு உயர்ந்த இலக்கிய படைப்பு ஆக்குகிறது.
ஆக, ஒரு சிறுகதைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியம்: 1) கதைத்தன்மை. மேற்சொன்ன கேள்வி-பதில் பாணி தான் கதைத்தன்மையை உருவாக்குகிறது. விவரணை, வசனம், கவித்துவம், நாடகீயமான உணர்ச்சிமோதல், வித்தியாசமான பின்னணி என எதைக் கொண்டும் இந்த கதை பாணியை நீங்கள் வலுவாக்கி வாசகனை உள்ளிழுத்து தன்னை மறக்க வைக்கலாம். பெரும்பாலான வாசகர்கள் கதையின் இந்த முதல் நிலையிலேயே திருப்தி கண்டு விடுவார்கள்.
2) கோணம். பார்வை, கேசரி கிளறுவது பார்த்திருப்பீர்கள். கடைசியில் அந்த ஒரு சொட்டு எஸன்ஸ் சேர்க்கும் வரையில் அது இனிப்பான உப்புமா மட்டும் தான். ஆனால் அதை சேர்த்ததும் மணம் மற்றும் நிறம் பெற்று அது கேசரியாகிறது. ஒரு எளிய காதல் கதையை (தொண்ணூறுகளில் வந்த முரளியின் “இதயம்” போன்ற கதையை) மௌனி இப்படித் தான் வாழ்க்கைத் தேடல் பற்றிய ஒரு அபாரமான கதையாக்குகிறார் (”அழியாச்சுடர்”). மல்கோவா ஆண்டி கதையை பிராய்டிய பார்வை கொண்டு அபாரமான இலக்கிய நாவலாக்குகிறார் தி.ஜா (மோகமுள்).
நம்முடைய அனுபவங்கள் பெரும்பாலும் வாழ்க்கை கோணத்துடன் தான் இருக்கும். அதனால் தான் அனுபவங்களை சுலபத்தில் நல்ல கதையாக்க முடிகிறது. உங்கள் அனுபவம் நல்ல கதையாகி உள்ளதா என எனக்குத் தெரியவில்லை (நான் உங்கள் கதையை படிக்கவில்லை). ஆனால் உங்களுக்கு அது சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.
 நம்மில் பெரும்பாலானோரால் ஒரு நல்ல சிறுகதையாவது நிச்சயம் எழுத முடியும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது இரண்டு விசயங்களில். 1) உங்களுக்கு தெரிந்த கதையில் உள்ள சம்பவங்கள் ஏன் அப்படி நடக்கின்றன என உங்களுக்கு முன்கூறாக தெரியும். ஆனால் வாசகனுக்கு தெரியாது. அந்த நியாயத்தை வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுக்கு நேர்வதை நீங்கள் உடனடியாய் நம்புவீர்கள். அதில் உணர்ச்சிகரமாய் நீங்கள் சம்மந்தப்பட்டிருக்கிறீர்கள். உ.தா. ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவள் பெற்றோரிடம் பேசி பழகுகிறான். அப்போது அவனுக்கு அப்பெண்ணின் அம்மா மீது மோகம் ஏற்படுகிறது. ஏன் என்றே அவனுக்கு புரியவில்லை. அப்பெண்ணை விட அவனுக்கு அவள் அம்மா மீது மிகுந்த காதல் ஏற்படுகிறது. இது ஒரு சவாலான கதைப்புள்ளி. சுலபத்தில் இது காமம் அல்லது வேடிக்கை என்ற புள்ளிக்கு சென்று விடும். அதை தவிர்த்து இதை சீரியஸாக எழுத முடியும். கதையை எதார்த்தமாக எழுதுவதானால் அவனது மனநிலையை, ஆளுமையை ஸ்தாபிக்கும் காட்சிகளை, தகவல்களை முன்கூறாக வாசகனுக்கு சொல்ல வேண்டும். வாசகனை தயாரிக்க வேண்டும். அப்போது வாசகன் அவனது அந்த மோகம் இயல்பானதுதான் என ஏற்பான். இதையே ஒரு மிகை-எதார்த்த (fantasy) கதையாக சுலபத்தில் எழுதலாம் (லஷ்மி சரவணகுமார் அல்லது ஜெ.பி சாணக்யா பாணியில்). கதையில் அந்த இளைஞனுக்கு ஏன் அப்படி மோகம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு உணர்ச்சிகரமாய் விளங்குவது போல் வாசகனுக்கும் விளக்கி விட வேண்டும். உங்கள் பாத்திரம் ஒரு கொலைகாரன் என்றால் அவன் கொல்லுவதன் இறுதி நொடிக்கு முன் உணரும் பதற்றமும் த்ரில்லும் உங்கள் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும்.
2) அடுத்து இதற்கு வேறொரு கோணத்தை அளிக்க வேண்டும். உங்கள் இயல்பான நிலைப்பாடு, வாழ்க்கைப் பார்வையை ஒட்டி இது எதேச்சையாய் கதையில் அமைய வேண்டும். உ.தா நகுலனின் கதை மற்றும் கவிதைகளில் அவர் மட்டுமே தான் இருப்பார். வெவ்வேரு ரூபங்களில் நகுலனே தோன்றி நகுலனிடம் பேசுவார். இது ஒரு தத்துவ நிலை, வாழ்க்கைப் பார்வை. நகுலன் ஒரு துப்பறியும் கதை எழுதினால் எப்படி இருக்கும் யோசியுங்கள். அவர் கதையில் கொலைகாரனும், கொல்லப்படுபவனும், அதை புலன் அறிகிறவனும் – மூவருமே - நகுலனாகவே இருக்க முடியும். இது தான் நகுலன் கதையை ”நகுலன் கதை” ஆக்குகிறது. இப்படி ஒரு கோணம் உங்களுக்கு இயல்பாகவே இருந்தால் அது உங்கள் கதையில் வரட்டும். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். போராடி அதை ஏற்படுத்தாதீர்கள்.

இவ்வளவு தான்!