Sunday, February 5, 2017

சசிகலாவினால் யாருக்கு லாபம்?

சசிகலா முதல்வராவதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நேற்று முழுக்க நண்பர்கள் இவ்விசயத்தில் கொந்தளிப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். சிலர் “நாங்க கேரளா போகிறோம்” என ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். ஆனால் கேரளாவின் நிலை நம்மை விட மோசம். பினராயி விஜயன் சசிகலாவுக்கு சித்தப்பா. ஆந்திராவுக்கும் போக முடியாது. குளுகுளுவென்ற கர்நாடகாவுக்கும் பெயர முடியாது. எங்குமே ரியல் எஸ்டேட் தாதாக்களின் அட்டகாசம். தமிழகம் எவ்வளவோ மேல்! முக்கியமாக, யார் முதல்வரானாலும் இங்கே ஆட்சி செய்வது அதிகாரிகள் தாம். மாநிலத்தை கொள்ளையடிப்பதில் பங்கை தீர்மானிக்கும் பணி மட்டும் தான் முதல்வருக்கு. மற்றபடி அது ஒரு அலங்கார பதவி. நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம்?

முதல்வரை நாம் நமது பிரதிநிதி என நம்பத் தலைப்படுகிறோம். ஆனால் அமெரிக்காவில் போல் ஜனாதிபதி தேர்வு முறை இங்கில்லை. ஆனால் அங்கே கூட டிரம்புக்கு கணிசமான எதிர்ப்பு இருக்கிறது. அவர் எப்படி அங்கு ஜனாதிபதி ஆனார்? அமெரிக்க தேர்வு அமைப்பிலும் சில குறிப்பிட்ட மாகாணங்களின் உணர்வுநிலை தான் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கிறது. ஒட்டுமொத்தமாய், எந்த அமைப்பிலும் மக்களின் உண்மையான பிரதிநிதி அரியணை ஏறுவதில்லை. ஜனநாயக தேர்தல், ஜனாதிபதி தேர்தல் எல்லாமே அரைவாசி மன்னராட்சி தான். தேர்தலுக்கு பின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. அதனால் மக்களின் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அவர்களுக்கு அதிகாரமே இல்லை. உலகம் முழுக்க உள்ள நிலை இது தான்.
 ஆனால் ஜனநாயக தேர்தல் முறையில் மக்களுக்கு தாம் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதாய் ஒரு பிரமை உள்ளது; அதில் ஒரு எளிய திருப்தி உள்ளது. சசிகலா போன்றவர்கள் இந்த பிரமையை உடைக்கிறார்கள். போலி ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக்குகிறார்கள். அப்போது நாம் ஏமாற்றப்பட்டதாய் உணர்கிறோம். தலையில் யாரோ சாணியை கரைத்து ஊற்றியதாய் அசிங்கப்படுகிறோம். ஆனால் காலங்காலமாய் நாம் அரசியல்ரீதியாய் அந்நியப்பட்டு தானே இருக்கிறோம். சசிகலா அதை அம்பலப்படுத்தி இருக்கிறார். அவ்வளவு தான்.
சரி நடைமுறைக்கு வருவோம். சசிகலாவினால் யாருக்கு பயன்? யாருக்கு கேடு? சசிகலாவின் ஆட்சி செய்யும் பாணி, திறன் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் ஒ.பி.எஸ்ஸை விட துணிவானவர், உறுதியானவர். இவை ஒரு தலைவருக்கு தேவையான குணங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒ.பி.எஸ் கையாண்ட முறை அவர் ஆபத்தானவர் என காட்டியது. அவருக்கு என்று ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை. மக்களின் மனநிலை எந்த நேரத்தில் எப்படி மாறும் என கணித்து அதை கையாளும் திறன் இல்லை. ஒரு கட்டத்தில் அவர் இப்போராட்டத்தை வளர்த்து எடுத்து அந்த அலையில் மேலெழுந்து வந்து தன்னை நாயகனாக முன்னிறுத்தலாம் என நம்பினார். அது நடக்காமல் போனது. மக்களின் கூட்டமும், அதன் உணர்வெழுச்சியும் தன் கைக்கு அடங்காமல் போவதை உணர்ந்தார். உடனே போலீஸ் வன்முறையை அவிழ்த்து விட்ட இளைஞர்களை கொடூரமாய் தண்டித்து சிதைத்தார்; பெண்களும் கர்பிணிகளும் தாக்கப்பட்டார்கள். மீனவர் குப்பமும் வாகனங்களும் எரிக்கப்பட்டது. போலீஸ் இந்த பிரச்சனையை மிக மோசமாய் கையாண்டதன் பின் ஒரு முதல்வரின் செயலின்மை தான் தெரிந்தது. ஒரு கலைஞரோ ஜெயாவோ இது போல் நிலைமையை கட்டுக்கடங்காமல் விட்டு இறுதியில் போர்க்களத்தில் கொண்டு போய் முடித்திருக்க மாட்டார்கள். ஒரு முதல்வர் ஒரு நல்ல சூத்திரதாரியாக இருக்க வேண்டும். ஒ.பி.எஸ் மாறி மாறி இரு முகமூடிகள் அணிபவரே அன்றி அவருக்கு என்று ஒரு முகம் இல்லை.
சசிகலா இவர் அளவுக்கு மோசமாக இருக்க மாட்டார் என நம்புவோம்.
சசிகலாவினால் அதிமுகவுக்கு பலன் இருக்கும் என்றே நம்புகிறேன். (நான் இதைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.) முதலில், அவர் அதிமுக உடையாதபடி பார்த்துக் கொண்டார். அடுத்து, ஒரு தலைவராக முழு அதிகாரமும் கொண்டவராக அவர் இருப்பார். அவருக்கு பின் அதிமுகவினர் மொத்தமாய் திரள முடியும். எதிர்ப்புக் குரல்கள், அதிகார போட்டிகள் ஒரு தலைவருக்கு எதிராக இருந்தால் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்காது. தலைவர் பலவீனமாய் தோற்றமளித்தால் கட்சியும் பலவீனமாகும். ஜெயாவின் மரணத்துடன் கட்சி ஒரு எரியும் வீடு போல் மாறி விடும். ஆளாளுக்கு கிடைக்கிற மரத்துண்டுகளை பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாய் ஓடுவார்கள் என எதிர்பார்த்தேன். அடுத்து, கட்சி முழுக்க பா.ஜ.வின் கட்டுப்பாடில் இருக்கும் என நினைத்தேன். ஆனால் சசிகலாவின் எழுச்சியும் அவர் முதல்வர் ஆவதற்கு தமிழிசை தெரிவித்துள்ள கண்டனங்களும் அதிமுக மீது பா.ஜ.கவின் பிடி இளகுகிறது என்பதை காட்டுகிறது. இது உண்மையானால் இதுவும் அதிமுகவுக்கு நல்லதே.
சசிகலாவின் மீது கடுமையான வெறுப்பும் கசப்பும் மக்களிடையே நிலவுகிறதே? உண்மை தான்.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மரணத்துக்கு பின் கட்சியை கைப்பற்றியதற்கும் சசிகலா இன்று அதை செய்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஜெயலலிதா மக்கள் பணி மூலம் கட்சிக்குள் வரவில்லை. எம்.ஜி.ஆரின் அணுக்கம் மட்டுமே அவருக்கு கட்சிக்குள் பதவியை அளித்தது. அதையும் எம்.ஜி.ஆரை தொடர்ந்து தொந்தரவு செய்தே பெற்றார். அப்போது அவர் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் ஒரு திரைநட்சத்திரம் மட்டுமே. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலை பிடிக்க மூன்று விசயங்கள் அவருக்கு உதவின. 1) அவரது திரை அந்தஸ்து; 2) எம்.ஜி.ஆரி துணைவி எனும் பிம்பம்; 3) ராஜீவ் படுகொலை. குறிப்பாய், எம்.ஜி.ஆரின் துணைவி எனும் பிரதான அடையாளத்தின் வலுவில் தான் அவர் தேர்தலில் நின்று வென்றார். சசிகலா ஜெயாவின் தோழி எனும் பிம்பத்தின் வழி, ஜெயாவின் பினாமி சொத்தின் வாரிசு எனும் அதிகாரத்தின் வழி ஆட்சிக்கட்டில் ஏறுகிறார். சசிகலாவுக்கும் ஜெயாவுக்குமான ஒரே வித்தியாசம் முன்னவர் தேர்தலில் நிற்காமலே ஆட்சியை பிடிக்கிறார் என்பது.
 அடுத்து, ஜெயா ஆட்சிக்கு வந்த பின் பட்டவர்த்தமாய் ஊழல் செய்து செல்வத்தை குவித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனால் சசிகலா அதை ஆட்சிக்கட்டிலில் ஏறும் முன்னரே செய்து கொண்டார். (எல்லா விசயங்களிலும் சசிகலா ஜெயாவை விட ஒரு படி முந்தி செய்கிறார் என்பது தான் சிக்கல்.)
சசிகலாவின் அடாவடித்தனங்கள், ஊழல், திரைமறைவு அரசியல் கட்டபஞ்சாயத்து அனைத்துமே ஜெயாவின் ஆசியுடன் தான் நடந்தன. சொல்லப்போனால் சசிகலா ஜெயாவின் இருள் உலகின் பினாமி. அவர் வெளிச்சத்தில் இருக்க சசிகலா இருளில் இருந்தார். ஆனால் ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இப்போது ஜெயாவின் மறைவுக்கு பின் அந்த பினாமி சொத்து முழுக்க சசிகலாவின் கைக்கு வந்து விட்டது. அதோடு ஒட்டுமொத்த கெட்ட பெயரும். ஆனால் நாம் ஜெயாவின் தூய ஆன்மாவாகவும் சசிகலாவை அவரை ஆக்கிரமித்த துர் ஆவியாகவும் பார்க்க விரும்புகிறோம். நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்.
ஆனால் கிட்டத்தட்ட ஜெயாவை போன்றவரான சசிகலா ஏன் ஜெயாவை போன்று ஒரு தூய ஆன்மா பிம்பத்தை உருவாக்க முடியாது? முடியும். அந்த நம்பிக்கையில் தான் சசிகலா அரியணை ஏறுகிறார். ஜெயா தெளிவாக திட்டமிட்டு தன்னை கருணை மிக்க தாயாக கட்டமைத்தார். கராறான ஆட்சியாளராகவும் காட்டிக் கொண்டார். நிறைய மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வந்து அடித்தட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். போலீஸ் சார்புநிலை மூலம் மத்திய வர்க்கத்திடம் நல்ல பெயர் வாங்கினார். அது போக, கோயில்களுக்கு அவர் அளித்த கொடைகள், வெளிப்படையான பக்தி ஆகியவை வலதுசாரி தரப்புக்கும் திருப்தி அளித்தது. முக்குலத்தோர், கொங்கு வேளாளர் சமூகங்களை துருப்பு சீட்டாய் பயன்படுத்தி, வி.சி.க, மதிமுக, இடதுசாரிகள் ஆகியோரையும் தன் பி. அணியாய் அணி நடத்தி திமுகவை ஓரம் கட்டினார். இப்படி ஒவ்வொரு தரப்பையும் திருப்தி செய்ய உங்களுக்கு ஒவ்வொரு விதமான பிம்பம் தேவை. ஒவ்வொருவருக்கும் அவருக்கு தோதான முகம் காட்டினால் போதும். அரசியலில் இன்று ஒவ்வொன்றையும் நீங்கள் உற்பத்தி செய்ய முடியும். அதைத் தான் சசிகலா செய்யப் போகிறார்.
தனக்கென ஒரு வலுவான பிம்பத்தை உருவாக்கி, இரண்டாம் நிலை தலைவர்களையும் தன் இரும்புப் பிடியில் வைக்க முடிந்தால் சசிகலா வென்று விடுவார். அதன் மூலம் அடுத்த தேர்தலில் திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார். அதனால் தான் இப்போது ஸ்டாலின் வெளிப்படையாகவே சசிகலாவை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் தன் உண்மையான எதிரி ஒ.பி.எஸ் அல்ல என அவர் அறிவார்.
 பா.ஜ.கவும் தன் அதிருப்தியை காட்டியிருக்கிறது. மோடி முழுக்க அதிமுகவை ரிமோட் கண்டுரோல் மூலம் கட்டுப்படுத்த சசிகலா தடையாக இருப்பார். இரண்டு கட்சிகளும் அவரைக் கண்டு அஞ்சுகின்றன.
இப்போது சசிகலாவுக்கு மக்கள் இடையே உள்ள எதிர்ப்பும் மெல்ல மெல்ல மறைந்து விடும். எந்த மக்கள் செல்வாக்கும் இல்லாத ஒ.பி.எஸ்ஸை நாம் முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லையா? அது போல் சசிகலா நம் முதல்வர் எனும் உண்மைக்கும் நாம் விரைவில் பழகி விடுவோம். சசிகலா என்றில்லை யார் அப்பதவியை அலங்கரித்தாலும் நம் மனம் அவரை மறைமுகமாய் அங்கீகரிக்கும். அது நம் அடிப்படை உளவியல். அதையும் மீறி தன் மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை முழுக்க துடைத்தெறிவது மட்டுமே சசிகலா முன்னுள்ள சவால்.
கேரளாவுக்கு போகிறேன், அந்தமானுக்கு போகிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் விரைவில் “முதல்வர் சசிகலா” என சரளமாய் உச்சரிக்க பழகி விடுவார்கள். (அவர்களுக்கு வேறு வழியில்லை.)

இறுதியாய்:
சசிகலாவினால் யாருக்கு பயன் = அதிமுகவுக்கு

யாருக்கு கேடு = திமுகவுக்கு

1 comment:

வேப்பங்குளத்தான் said...

நான் கட்சிக்காரனாய் சசியம்மா வை ஆதரித்தாலும் எதார்த்தமாய் போட்டு உடைத்து உள்ளீர்கள்.ஆனால் எங்கு ரவுடிசம் செய்தார்கள்.