Sunday, January 8, 2017

ரசிகன்: நிஜத்தை நய்யாண்டி செய்யும் கதைக்களம் - அருள் ஸ்காட்

Image result for ரசிகன் ஆர். அபிலாஷ்

ஆர். அபிலாஷின் ”ரசிகன்” நாவலைப் பற்றி யோசிக்கும் போது ஏதோ ஒரு மௌனத்தை அந்த நாவல் தன்னை தொடந்து கட்டிக் காத்துக் கொண்டே வருகிறது என தோன்றுகிறது. அந்த ”மௌனம்” ஒரு விதத்தில் நாம் அறியாத நம்முடைய பயமாகக் கூட இருக்கலாம்.
 கதையின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசுவதற்கு சற்று உள்ளூர பயம் ஏற்படுகிறது. அது எதற்கு என்று கூட தெளிவாகக் கூற முடியாது. இக்கதையில் இருக்கும் வாழ்க்கை அந்தக் கதைக்கான வாழ்க்கையே கிடையாது.

கதைகள் எபோதும் தங்கள் கதைகளை பேசுவதே இல்லை. ஒரு வேளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்கள் வேண்டுமானால் வாழ்க்கையை கதைகளாக அப்படியே காண்பிக்கக் கூடியவைகள் எனலாம். ஆனால் அதற்கு முன்பும் சரி பின்பும் சரி கதைகளில் வாழ்க்கையை தேடவே முடியாது. அப்படி தேடி வாசித்தால் எழுத்தாளன் நம்மை முட்டாளாக்கி விட்டான் என்றுதான் பொருள்.
            நாவலில் இருக்கும் ஒரு கதை என்னவோ நம்முடைய கால கட்டத்தில் நடந்த சம்பவம் போன்றுதான் தோன்றும். ஆசிரியன் ஏதாவது ஒரு குறிப்பை தரும் போது மாத்திரமே அது நிஜத்திற்கு வெளியில் இயங்கும் கதை என்பது தெரிய வரும். அதாவது கதை அதற்கானது அல்ல என்றும் அது சுட்டிக்காட்டும் வாழ்க்கை முழுவதும் கதைக்கு வெளியில் இயங்குகிறது என்பதையும் பார்க்கப்படுமானால் முழுக்கதையும் கதையாக அல்ல அது ஒரு குறியீடாக பார்க்கப்படும். அதன் மூலம் ஏதோ ஒரு காலக்கட்டத்தின் வாழ்க்கை பகடி செய்யப்படுகிறது என்பதை நாம் பார்த்து விடுவோம்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் ஜார்ஜ் ஆர்வலின் “விலங்கு பண்ணை” போன்று ஒரு கதை நம் வாசிப்பிற்கு வந்தால் நிச்சயமாக கதை விலங்குகளைப் பற்றியது இல்லை என்பதை தீர்க்கமாக சொல்லி விடுவோம்.  ஆனால் ரஷ்யாவைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் எதுவும் தெரியாத 1995க்கு மேல் பிறந்தவர்கள் அக்கதையை வெறுமனே கதையாகத் தான் வாசிப்பார்கள். அவர்களிடம் சென்று ஸ்டாலினைத் தெரியுமா இவரைத் தெரியுமா அவரைத் தெரியுமா என்று கேட்டால் பதில் இருக்காது. அவர்கள் அதனை ஒரு செய்திக் குறிப்பாகத் தான் வாசிப்பார்கள். அந்த தொன்னூறைந்துகளின் வாசகர்களைப் போலத்தான் ”ரசிகனைப்” பற்றிய நம் வாசிப்பும் இருக்கிறது.
            வாசிப்பில் கிடைக்கும் கதை சாதிக் என்கிற அறிவுஜீவி எவ்வாறு தன் இடதுசாரி சிந்தனையில் இருந்து படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி சென்று இறுதியில் ஒரு சினிமா நடிகரின் விசிறியாக அதுவும் நடிகர் சங்கத் தலைவனாக முடிவடைகிறான் என்ற கதையாகத் தான் வாசிக்கப்படும். கதை வெறுமனே சாதிக்கின் கதை அவ்வளவுதான். அதற்கு மீறி கதையை கருத்தாக்கத்தின் நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.
ஆனால் விவாதத்திற்கு கருத்தாக்கம் அவசியப்படுகிறது. ”ரசிகன்” கதையை எவ்வளவு முறை வாசித்தாலும் அதற்கு பின்பதாக இருக்கும் அல்லது கதை சுட்டிக் காட்டும் மற்றொரு வாழ்க்கை நமக்கு புலப்படவே படாது. காரணம் கதையில் உள்ள சாதிக்கின் கதைக்குதான் பரிட்சயம் ஏற்படுகிறது. சாதிக் என்ற ஒரு பாத்திரம் கதைகானவன் அல்ல அவன் சமுக வெளியில் வாழ்ந்த ஏதோ ஒரு அறிவுஜீவியை சுட்டிக் காட்டும் பாத்திரம். வாசிப்பு மட்டுமே ஒரே வேலை என என்பதுகளில் வாழ்ந்த ஒரு கூட்டம் அறிவுஜீவிகளின் வாழ்க்கையை பற்றி வாசகர்கள் அறிந்திருப்பார்களானால் முழு ”ரசிகன்” நாவலும் அதன் கதையின் சட்டகத்திற்குள் இயங்காது. அது கதையை விட்டு வெளியே சென்று என்பதுகளில் வாழ்ந்த அறிவுஜீவிகளை பகடி செய்யும் கதையாக மாறிவிடும்.
 என்பதுகளின் வாழ்க்கை முற்றிலுமாக இறந்துவிட வில்லை. “விலங்கு பண்ணையை”யின் அரசியலை பற்றி ஒருவேளை நான் இங்கிலாந்து நாட்டில் தைரியமாக நேர்பட பேசமுடியும். ஆனால் முதலாலித்துவ நாடுகளுக்கு வெளியில் நான் வாசிக்கும் ஒவ்வொரு விமர்சனத்தின் அரசியலும் ஆபத்தை தேடித் தரும் ஒன்றாக மாறி விடும்.
            அதே நிலைதான் அபிலாஷின் “ரசிகன்” நாவலின் விமர்சன வாசிப்பு பெரும் உட்பகையை அநேகர் மத்தியில் ஏற்படுத்திவிடும் கதையாக மாறிவிடும். நாம் “ரசிகனை” துணிவோடு வாசிக்க குறைந்தது இருபது ஆண்டுகளாவது தேவைப் படுகிறது என என்னளவில் கூற முடியும். சாதிக்கைக் கொண்டு என்பதுகளின் வாழ்க்கையை தைரியமாக சாடலாம் விமசிக்கலாம். அப்படி செய்தால் உயிருடன் இருக்கும் இபோதைய என்பதுகளின் வாழ்க்கை சீறிப்பாய ஆரம்பித்துவிடும்.
            இந்த நிலையில் “ரசிகனின்” திரைக்கு பின்னிருக்கும் ஒரு வாழ்க்கை இருட்டடிப்பு செய்யப்பட்டு அதனுடைய வடிவத்தை மட்டும் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. இந்த இருபது ஆண்டுகள் “ரசிகனின்” வடிவம் அதிகம் பிரித்து பிரித்து வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்நாவல், அபிலாஷின் மற்ற நாவல்களை போன்று அல்லாமல், ஒரு திடமான உடைக்க முடியாத வடிவம் கொண்டது. “உன்னால் ஆனதை செய்து கொள்” என வாசகனை நோக்கி அது சவால் விடுகிறது.
இந்நாவல் என்னை முற்றிலுமாக எதையும் பேச விடாமல் வைத்திருந்தது. முக்கியமாக நான் இன்றைய வசிப்பில் உருவானவன். என்னிடம் வாசிப்பின் காலத்திற்கு முற்பட்ட ஒன்றை கொண்டுவந்தால் அது வெறுமனே சுவாரசியமான அறிவுசார் தகவலாகத்தான் இருக்கும். அது அனுபவத்தின் வாசிப்பாக இருக்காது.
            ”ரசிகன்” அமைதியில் எதையும் பேச முடியாமல் வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் நான் அறியாத என்பதுகளின் வாழ்க்கைதான். அதே நேரத்தில் வாசிப்பின் காலம் என்னுடையது அல்ல என்று தெளிவடையும் போது அது வடிவத்தை நோக்கி அதிகம் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விடுகிறது. “ரசிகன்” ஒரு வாழ்க்கையை தன்னுள் வைத்திருக்கும் கதை அல்ல. அது கதைக்கு வெளியில் இயங்கும் வழ்க்கையை வாசிக்க செய்யும் ஒரு நையாண்டிக்  களம்.
”ரசிகனில்” நாம் திடமாக உருவாக்கப்பட்ட ஒரு கதையில் இருந்து யதார்தத்தை பார்த்தாக வேண்டியிருக்கிறது. உதாரணமாக ”கிழவனும் கடலும்” கதையை அதன் கதைக்காவும் வாசிக்கலாம் அதனையே அதற்கு வெளியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை தர்க்கம் செய்யும் கதையாகவும் வாசிக்கலாம். அது வெறுமனே கிழவனுடைய கதையாக இருந்திருக்குமானால் அதனை உயர்ந்த பரிசுக்கான கதையாக யாரும் வாசித்திருக்க மாட்டார்கள். அந்தக் கதையைக் கொண்டு அன்றைய மக்கள் உலக போர்களை வாசித்தார்கள். இன்றைக்கும் அந்நாவல்  அதிகம் சிலாகித்து வாசிக்கப்படுகிறது. அதில் உலகப் போர் என்ற கதைக்கான உள்ளடக்கம் கதைக்கு வெளியில் வாசிக்கும் போதுதான் நமக்கு கிடைக்கிறது. கதையின் உன்னதம் அப்போது தான் தெரிய வருகிறது.
            அதைப் போன்றே “ரசிகன்” அதிகம் வியந்து வாசிக்கப்படலாம். கூடுதலாக மற்றுமொறு வாசிப்பும் தேவைப்படுகிறது. கதையின் முக்கியமான உள்ளடக்கமாக இருக்கிற ஒரு வாழ்க்கை கதைக்கு முற்றிலும் வெளியில் இருக்கிற வாழ்க்கை. அதனை ஆச்சரியத்தோடு வாசிக்கத்தான் இப்போதைக்கு முடியும். அதனை பொதுவெளியில் வைத்து விவாதிக்க முடியாது.
            “விலங்குப் பண்ணையை” வாசிக்கும் போது ரஷ்யக் கமுயூனிசாத்தை கதையின் பின்னணியாக வைத்தே வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆர்வெல் என்கிற ஒரு சீரியசான எழுத்தாளன் வெறுமனே விலக்குகளின் கதைக்காக தன் நாவலை எழுதவில்லை என்பது வெளிப்படையாக தெறிகின்ற ஒன்று அதில் எவரும் வாசிப்பை கதையோடு நிறுத்தி விட மாட்டார்கள். வாசிப்பு நிச்சயமாக கதைக்கு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. வெறுமனே கதைக்காக விலங்குப் பண்ணையை வாசிக்கிறேன் என்று ஒருவர் கூறினால் அது குழந்தைகளுக்கான கதையாகத்தான் இருக்கும். வயதானவர்கள் கதைக்காகத்தான் நாவலை வாசிக்கிறேன் என்று சொல்ல துணிய மாட்டர்கள். அப்படியே இருக்குமானால் அது வாசிப்புக்கான பங்கமாகிவிடும்.
            இதற்கு நேர் எதிராக ஹெம்மிங்வே சிறுவர்களுக்கான கதையாக உருவாக்காமல் ஒரு யதார்த்தக் கதையையே உருவாக்குகிறார். அவருடைய பெரும்பாலானக் கதைகளை உவமைக் கதைகளாகத் தான் வாசிக்க வேண்டும். ஹெம்மிங்வேவின் உலகப் போரைப் பற்றிய நிஜத்தின் அனுபவம் தத்துவார்த்தமானது. ஒரு தத்துவக் கருத்தை கூற கதைகளே சிறந்த சாதனக்கள். தத்துவக் கருத்துக்களை கதைகள் தெளிவுப்படுத்துவது போல வேறெதுவும் சாதித்துக் காட்டாது. ஆனால் ஹேம்மிங்வே கதையை மிக சாதுர்யமாக யதார்த்தக் கதையாகவே செய்து முடித்திருப்பார்.
            சில நேரங்களில் கதைகள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக்கு நடத்திச் செல்கிறது. சில நேரங்களில் நாவல்களில் கதைகளாக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வின் தத்துவத்திற்கும் அதன் உண்மைக்கும் நடுத்துகின்றன. இந்த வகையில் ஹெம்மிங்வேவின் “கடலும் கிழவனும்” கதை நோபல் பரிசை பெற்றதற்கான முக்கியக் காரணம் கதையின் புலப்படாத பின்னணியான உலகப் போர் என்பதுதான்.
            இந்த வகையில் அபிலாஷின் ரசிகன் நாவலை அதன் சமூக விமர்சனக் நோக்கில் பார்ப்பதனலாலேயே அதன் சிறப்பு மேலோங்குகிறது. எனினும் நாவல் அதில் கதைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கைக்கே போதுமானதாக இருக்கிறது. கிழவனும் கடலும் பெரும்பாலும் அதன் உலக்ப்போர் பின்னணியில் வைத்து வாசிக்கவேண்டிய அவசியமில்லாமல் அதன் கதைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்காகவே அதிகம் சிலாக்கித்து வாசிக்கப்பட்டது.  அதைப்போன்றே ”ரசிகனின்” கதையை அதன் நாவல் என்ற கதைச் சட்டகத்திற்குள்ளாகவே வைத்து வாசிக்க போதுமானதாக இருக்கிறது.
            கதை என்பதுகளில் வாழ்ந்த அறிவு மேற்கத்தைய கோட்ப்பாட்டாளர்கள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள் மீதான ரசிகத்தனத்தைக் காட்டுகிறது. அவர்களின் மொத்த உருவம் தான் சாதிக். ஏற்கனவே கூறியது போன்று சாதிக்கைக் கொண்டோ நாவலைக் கொண்டோ இன்றும் தொடருகிற எண்பதுகளின் சமூகத்தை வாசிக்க முடியாது. நாவலுக்குள்ளாகவே கதைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாசிக்க வேண்டி இருக்கிறது. சாதிக் ஒரு ரசிகன். அவனுடைய ரசனையின் வளர்ச்சி அதன் முன்னேற்றத்தில் கடைசியாக வீழ்ச்சியைக் கண்டடையும் போக்கை முழுக் கதையும் பேசுகிறது. தமிழகத்தின் கடைசிப் பகுதியான கன்னியாக்குமரி பகுதியில் கதை ஆரம்பிக்கிறது. நிலம் அதன் செழுமையில் இருப்பது போன்று சாதிக் என்கிற அறிவு ஜீவி தன்னுடைய வசிப்பிலும் சிந்தனையிலும் செழுமையானவன். அவன் நடத்தும் ”செங்கதிர்” சிறு பத்திரிக்கை அந்த அறிவின் செழுமையை முன்நிறுத்திக் காட்டுகிறது. வாசகர்கள் என்று படித்த மேதைகள் என்று யாரும் கிடையாது. சாதாரண எளிய மக்கள் தான் அதன் வாசகர்கள். அதுவும் மாத சந்தா ஒழுங்காக செலுத்தக்கூட முடியாத வாசகர்கள். உதாரணமாக பழைய ப்ளாஸ்டிக்குகளை பொறுக்குறவர்தான் இந்த செங்கதிர் பத்திர்க்கையின் வாசகன். இதனை வட தமிழகத்தில் இருந்து வாசிக்கிற ஒருவருக்கு மிகவும் நகைப்புக்குறியதாக இருக்கலாம். எனினும் கன்னியாகுமரி மாவட்டம் படிப்பறிவுக்கு பேர்போன மாவட்டம். அங்கு காகிதம் பொறுக்கும் ஒருவனுக்குக் கூட வாசிப்பின் பழக்கம் அதுவும் சிறு பத்திரிக்கை வரை வாசிக்க முடிகிறது என்பதைக் கதைக் காட்டுகிறது.
            இங்கு கதையை நிஜத்திற்கு எடுத்துச் சென்று வாசித்தால் ஏற்படும் ஆபத்து தோன்றுகிறது. “செங்கதிர்” ஏதாகிலும் என்பதுகளில் செயல்பட்ட சிறுபத்திக்கையை கேலி செய்வதாக முடிந்து விடும். கூடிய வரையில் கதையை அதன் நாவல் என்ற சட்டகத்திற்குள் வைத்தே வாசிக்க வேண்டியிருக்கிறது.
            சாதிக்கின் அறிவுத் தேடலையும் இண்டெலெச்சுவலிசத்தையும் அதிகம் ரசிப்பவன் அவன் நண்பன். இங்கே ரசிகனுக்கே மற்றொரு ரசிகன். இலட்சியவாதி சாதிக்கை பின்பற்றும் ரசிகன் சங்கர் அவனைப் போன்று ஒரு லட்சியவாதி அல்ல. அவன் வெறுமனே சாதிக்கின் மேதாவித்தனத்தின் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டவன். அதன் விளைவாக சாதிக்கின் அறிவுப் பயணமே சங்கரின் பயணமாக மாறுகிறது. தனக்கு வேறு மேம்பட்ட வாய்ப்புகள் இருந்தும் சாதிக் நிமித்தமாக அவன் வேலை செய்யும் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து விடுகிறான். அக்கல்லூரி ஒரு இரண்டாந்தரக் கல்லூரி. இது கதையின் இரண்டாவது கட்டம். இந்தக் கதை முழுவதும் கேரளாவில் நடைபெறுகிறது.
            இந்தக் கட்டத்தில் சாதிக்கின் ரசனை அறிவின் மீது இருந்து ரெஜினா என்ற தன் மாணவி மீது காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவன் நேசித்தாலும் சாதிக்கால் ரெஜினாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. சாதிக்கின் இந்த ரசனையின் வீழ்ச்சியின் நேரத்திலும் சங்கர் அவனுடைய ரசிகனாகவே இருக்கிறான். சங்கர் தன்னுடைய படிப்பு முடிந்து சென்னைக்கு சென்றுவிடுகிறான். அதுமுதல் அவனுக்கும் சாதிக்கும் இருந்த நட்பு முடிந்து விடுகிறது.
            கதை மூன்றாவது கட்டமாக சென்னைக்கு நகர்த்தப்படுகிறது. சாதிக்கைப் பிரிந்த சங்கர் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு திரையரங்கின் முன் மிகவும் பரிதாபமான நிலையில் அவனைச் சந்திக்கிறான். சாதிக்கை அவன் சந்திக்கும் இடம் வாசகர் வட்டம் அல்ல. சினிமே தியேட்டர். அதுவும் ஒரு பக்கக் கை விளங்காமல் போன சாதிக்கை. இப்போது சாதிக் சென்னையில் ரஜினி ரசிகர் மன்ற தலைவன். அவன் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் இலக்கியக் கூட்டங்கள் அல்ல. ரசிகர் மன்றக் கூட்டங்கள். அவன் முதல் சந்திப்பே ரஜினியைப் போன்று சிக்ரெட்டை ரஜினி ஸ்டைலில் புகைக்கும் சாதிக்கைத்தான்.
            சாதிக்கின் அறிவின் செழுமை, உடலின் செழுமை, அனைத்தும் வறட்சி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.  மார்க்ஸின், மார்க்வெஸின் ரசிகன் இப்போது ரஜினி ரசிகன். அவனுடைய சிறு பத்திரிக்கை செயல்பாடு இப்போது முற்றிலும் அழிந்து இயந்திரத்தனமாக காப்பி எடிட்டிங் வேலையாக எந்த படைப்பூக்கமும் இல்லாத வரட்சியான வேலையாக மாறிவிடுகிறது. அவனுடைய ரசிகத்தனத்தின் கீழ்மையில் இருந்து அவனால் மீளவே முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
            சங்கர் ரசித்த சாதிக் அவன் இல்லை. முற்றிலும் அவனை விட்டு விடுபட்டு செல்ல முடிவு செய்கிறான் சங்கர். கடைசியாக அவனை சந்திக்கப் போகும் போது சாதிக்கின்  சினிமா நட்சத்திரத்தின் மோகம் கட் அவுட்டிற்கு மேல் ஏறி பால் அபிஷேகம் சேய்யும் அளவிற்கு கொண்டு செல்கிறது. கட் அவுட்டின் உச்சிக்கு ஏறி சாதிக் கால் தவறி கிழே விழுந்து விழுந்துவிடுகிறான். கீழே விழுந்து மண்டை உடைந்து அவனுடைய மூளை தரையில் சிதறிக் கிடக்க நாய் அதனை நக்க ஆரம்பிக்கிற கோரமான காட்சியோடு நாவல் முடிவடைகிறது.
            இதனைக் கதையாக நாவலின் சாட்டகத்திற்குள் மாத்திரமே வைத்து வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தின் வாசகனாகிய எனக்கு இந்த நாவல் சாதிக் என்ற அறிவு ஜீவி ரசிகனைப் பற்றியும் அவன் வீழ்ச்சியைப் பற்றியக் கதையாகத் தான் இருக்கும். கதை தற்போதை தலைமுறைகளின் வாசிப்பிற்கு எந்த விதமான பிரதிக்கு வெளியில் இருக்கும் வாழ்க்கையையும் காட்டாது. ஒரு வேளை எண்பதுகளில் தீவிர இலக்கிய வாசகராக ஒருவர் இந்தக் கதையை வாசித்தால் கதை முற்றிலும் அன்றைய வாழ்க்கையை நையாண்டி செய்யும் கதையாகத்தான் இருக்கும். கதையில் வரும் செங்கதிர் சிறு பத்திரிக்கை வெறுமனே சாதிக்கின் பத்திரிக்கையாக இருக்காது. சாதிக்கின் இடது கை செயல்படாமல் போனது வெறுமனே உடல் சார்ந்த பிரச்சனையாக வாசிக்கப்படாது. ”இடது” என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டு வரும். அதே போல் கதையில் இறுதியில் சாதிக்கின் மூளையை நாய் நக்குவதும் வேறொரு அர்த்தத்தோடு வாசிக்கப்படும். ஒருவேளை இரண்டாயிரத்தின் நவீன வாசகன் இந்தக் கதையை என்பதுகளின் விமர்சனமாக விவாதித்தால் பேச முயன்றால் இப்பொழுதும் தொடரும் எண்பதுகளின் வாழ்க்கையின் மனிதர்களின் வன்மத்தை சம்பாதிக்க நேரிடும். அதன் பொருட்டு வாசிப்பும் கதையளவிலும் நாவலின் சட்டகத்திற்குள் அதன் வடிவத்தையும் பற்றிய விவாதமாக இருக்க வேண்டி இருக்கிறது.   
             
 நன்றி: புத்தகம் பேசுது, டிசம்பர் 2016.


No comments: