Thursday, January 5, 2017

பேலியோ உணவு ஏன் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது?

பேலியோ உணவு நம் மனநிலையை சீராக வைக்கிறது. Mood swing எனப்படும் அதிரடி மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, களைப்பு ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் பேலியோ உணவு ரத்த சர்க்கரையை அதிரடியாய் உயர்த்துவதில்லை என்பது. வேறு சில காரணங்களும் உள்ளன.
உணவு நமது சுபாவத்தை தீர்மானிக்கிறது என்பது பற்றி இந்திய மரபில் பல நம்பிக்கைகள் உண்டு. சில வாழ்க்கை மார்க்கங்கள் கொண்டோருக்கு குறிப்பிட்ட உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. (இன்னொரு பக்கம் உணவின் வழி இங்கு சாதியம் நிறுவப்பட்டுள்ளது.) உடலின் குளிர்மை, வெப்பம் பொறுத்து உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காந்தி உணவின் உளவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஜைன மதப் பின்னணி காரணமாயும், இங்கிலாந்தில் அவர் கலந்து கொண்ட சைவ உணவு குழுக்களின் தாக்கம் காரணமாயும் உணவில் சைவத்தை அவர் வலியுறுத்தினார். அவர் உணவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். காந்தி இயல்பில் கொந்தளிப்பான சுபாவம் கொண்டவர். இளமையில் தனது கட்டுக்கடங்காத காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது தத்தளித்தவர். மனதை நிலைப்படுத்துவதில் உணவுக்கு பங்கு உண்டு என அவர் நம்பினார். அவர் அடிக்கடி விரதம் இருந்ததன் ரகசியம் இது தான். எந்த அரசியல் சிக்கல் ஏற்படும் போதும் உண்ணாநோன்பு தன் மனதை தெளிவுபடுத்தி உடலையும் வலுப்படுத்துவதாய் அவர் உணர்ந்தார். (இன்னொரு பக்கம் அவர் தன் உடலை வருத்துவது மக்களுக்கு பெரும் மன எழுச்சியை அளித்து காந்தியத்தின் பின் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது.) 

அது மட்டுமல்ல, காந்தி உணவை குறைக்க குறைக்க தன் ஆரோக்கியமும் மன உறுதியும் தெளிவும் அதிகரிப்பதையும் கண்டார்.
 இது குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதாவது, மனிதர்கள் எந்தளவு குறைவாக உணவருந்துகிறார்களோ அந்தளவு அவர்களின் ஆயுள் நீடிக்கிறது. பஞ்ச காலத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததாய் ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது ஒருவேளை உணவு கிடைக்கும் சூழலில் உடல் ஒரு battery saving modeக்கு செல்கிறது. உடல் ஆற்றலை எரிக்கும் வேகம் குறைகிறது. உடலின் வளர்ச்சி வேகமும் மெத்தனமாகிறது. விளைவாக ஆயுள் அதிகமாகிறது. ஏன்? ஏனென்றால் உணவு குறையும் போது மனிதன் குழந்தை பெற்று வம்சாவளியை நீடிக்க வாய்ப்புகளும் குறைகின்றன. (பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் குழந்தைப்பேறு ஆர்வத்தை மனிதரில் குறைக்கிறது.) நம்மை மரணத்தை நோக்கி விரைவுபடுத்தும் பொத்தான் ஒன்று நம் மரபணுக்குள் உள்ளது. முப்பது வயது நெருங்கும் போது இந்த பொத்தான் தானே செயல்படத் துவங்குகிறது. ஆனால் உணவை மிகக்குறைவாக உண்ணும் மனிதர்களில் இந்த பொத்தான் off நிலையில் இருக்கிறது. விளைவாக அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள். இதனால் தான் உணவு அபரிதமாய் கிடைக்கும் இன்றைய தலைமுறையில் பலரும் ஐம்பது வயதுக்குள் மரிக்கிறார்கள். காந்தி தன் உணவை வெகுவாய் குறைத்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தினார். கோட்சே சுடாவிட்டால் மனிதர் நூறு வயதை எளிதில் தொட்டிருப்பார்.
இந்தியர்கள் நம்புவது போல் உணவு நம் ஆளுமையை வடிவமைக்கிறதா என்பது குறித்து தீர்க்கமான அறிவியல் ஆய்வுகள் இல்லை. ஆனால் சிக்மண்ட் பிராய்ட் ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார். நமது அஜீரணத்துக்கும் துர்கனவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது வயிற்று தொந்தரவுகளுடன் தூங்கினால் கனவில் ரத்தக்களறி தோன்றும்; அச்சுறுத்தும் காட்சிகள் மனத்திரையில் ஓடும். நள்ளிரவில் அலறி எழுவோம். குடல் பகுதியில் உள்ள நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளதாய் பிராயிட் கணிக்கிறார்.
பேலியோ நிபுணர்கள் இது சம்மந்தமாய் இரண்டு விசயங்களை சொல்கிறார்கள். ஒன்று leaky gut. அவர்களின் கருத்துப்படி, தானிய உணவுகள் குடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. விளைவாக குடலில் ஓட்டைகள் தோன்றுகின்றன. சரியாக செரிக்கப்படாத உணவுத் துகள்களும், விஷப்பொருட்களும் ரத்தத்தில் கலக்கின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான சத்தான உணவுகள் உடலில் ஒட்டாமல் போகின்றன. கல்லீரல் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை அகற்ற கடுமையாய் முயலும். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவும் சோர்ந்து போகும். இப்போது நம் உடலின் தற்பாதுகாப்பு சக்தி விழித்துக் கொள்ளும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அது தொற்றுவியாதி கிருமிகளாய் கருதி தாக்க துவங்கும். இந்த தாக்குதல் நமது உடல் உறுப்புகள் எதிராக நடக்கும் என்பது தான் சிக்கல். அதாவது உடல் தன் கண்ணுக்கு தெரியாத சக்தியை தாக்க முயன்று தன்னையே கடுமையாய் காயப்படுத்தும். விளைவாக உடல் முழுக்க நமக்கு வீக்கம் ஏற்படும். மனம் எப்போதும் பனிமூட்டத்தில் இருப்பது போன்ற குழப்ப நிலை, கசப்புணர்வு, மறதி, தலைவலி ஆகியவை அடிக்கடி ஏற்படும். இப்படி குடலில் ஏற்பட்ட சிக்கல் (பிராயிட் சொன்னது போல்) நம் மனதை வந்து தாக்கும்.
அடுத்து நமது தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்குள் மற்றொரு தற்பாதுகாப்பு சக்தி செயல்படுகிறது. இந்த விதைகள் நாம் உண்பதற்கானவை அல்ல. இவை முளைத்து செடியாக வேண்டியவை. தம் குழந்தைகளை மனிதர்களும் மிருகங்களும் மொத்தமாய் கபளீகரம் செய்வதை விரும்பாத செடிகள் விதைகளுக்குள் சில ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்களை ஒளித்து வைக்கின்றன. இந்த தானியங்களை உண்ணும் நமக்குள் இவை ஒவ்வாமையையும், வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 இன்றைய மனிதர்கள் எப்போதும் களைப்பாக, தூக்க சடவோடு இருக்கிறார்கள். இதை போக்க மதுவருந்துகிறார்கள். புகைக்கிறார்கள். பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் என தம்மை மறக்க முயல்கிறார்கள். ஆனால் களைப்பு அவர்களை விடாமல் துரத்துகிறது. நமது உணவு மூளையை பாதிப்பது தான் இந்த சடவுக்கு காரணம் என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள்.
பேலியோ உணவுமுறைக்கு மாறும் போது பெரும்பாலானோர் உணரும் முதல் மாற்றம் அபாரமான ஆற்றலும் மனத்தெளிவும் உற்சாகமும். இது குறித்து இணையத்தில் நிறைய பதிவுகள் கிடைக்கின்றன. நானும் என் அனுபவத்தில் உணர்ந்தேன். என் நிரந்தர களைப்பும் உடல் அலுப்பும் மறைந்தன.

 ஆனாலும் இவ்விசயத்தில் போதுமான அறிவியல் ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை தான். அறிவியல் தன் முத்திரையை குத்தினாலும் இல்லாவிட்டாலும் செயற்கையான உணவுகளையும் தானியங்களையும் தவிர்ப்பது தமக்கு மனதளவில் நன்மை பயக்கிறதா என்பதை அவரவர் தனிப்பட்ட முறையில் முயன்று பார்ப்பது தான் சரி. நன்மை விளைந்தால் மகிழ்வோம். இல்லாவிட்டால் கடந்து செல்வோம். நஷ்டம் இல்லையே!

No comments: