Wednesday, January 18, 2017

ஜெயமோகனின் குறள் உரை

Image result for ஜெயமோகன்

ஜெயமோகனை இன்னவகையான அறிஞர் என அடையாளப்படுத்த இயலாது. பெரும்பாலான அறிவுத்துறைகள், அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளில் அவருக்கு அளப்பரிய ஆர்வம் உண்டு. அவருக்கு மரபில் மிகுந்த பிடிப்பு உண்டென நமக்குத் தெரியும். அதேவேளை நவீன ஐரோப்பிய கோட்பாடுகளையும் ஆர்வமாய் கற்றவர் (அப்படியான பிம்பம் அவருக்கு இல்லை எனிலும்). அவரது ”தேவதேவனை முன்வைத்து” நூலின் இணைப்பாய் வரும் கோட்பாட்டு சுருக்கங்கள் சிறப்பானவை. முதுகலை கல்லூரி மாணவனாய் இருக்கையில் அவற்றை மட்டும் படித்தே நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அவரது அறிவு என்பது பயிற்சியில் இருந்து அல்ல, பரந்துபட்ட அவதானிப்பில் இருந்து திரண்டு வருவது.
 நூற்றுக்கணக்கான பொம்மைகளை பரப்பி வைத்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து, களைக்கும் வரை விளையாடும் குழந்தை போன்றவர் அவர் என எனக்கு அவரை முதலில் சந்தித்த போது தோன்றியது. இப்படி போகும் வழியெங்கும் பூக்களை கிள்ளி தன் கூடையில் சேர்க்கும் ஒரு சிறுமி போல் அவர் இருப்பதால் தான் ஓயாமல் பேசுகிறார். மணிக்கணக்காய் அல்ல நாட்கணக்காய் அவரால் ஆர்வம் குன்றாது பேச முடியும். ஈகோ அல்ல தீராத பகிர்தலின் ஆர்வம் தான் அவரது விசையின் மையம்.

 ஒன்றை மட்டுமே குறுகி நுணுகி ஆராய்வதை விட, விலகும் தாவணி ஒன்றை மட்டும் அரைக்கண்ணுடன் கவனிப்பதை விட தன்னைச் சுற்றி ஜொலிக்கும் நூற்றுக்கணக்கான முகங்களை பரவசமாய் பார்த்து நடக்கும் பயணியின் அணுகுமுறை எவ்வளவு சிறப்பானது, மகிழ்ச்சி மிக்கது என நான் அவரை கண்டு தான் அறிந்து கொண்டேன்.
 இந்த வகையான அறிதலுக்கு முக்கிய விதிமுறை ஒன்று உண்டு: எதையொன்றையும் இறுக்க பற்றிக் கொள்ளக் கூடாது என்பது. உதாரணமாய், மார்க்ஸியம் என்றால் அதை பயில்கையில் “நான் ஒரு மார்க்ஸியன், அதில் கரை காணப் போகிறவன், அதுவே என் ஒரே வாழ்க்கை நெறி” என சபதம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்று மார்க்ஸியத்தை அறிய முயலும் இதே ஆர்வத்துடன் நாளை எறும்புகளின் சமூக அமைப்பு பற்றியும் படிக்க வேண்டும். எல்லாவற்றையும் மனனம் செய்யாமல் ஒரு வியப்புடன் கடந்து செல்ல வேண்டும். கைக்குள் அடங்குவதை அள்ளிக் கொள்ள வேண்டும். அப்போது வேறு யாரையும் விட நாம் கூடுதலாய் படிக்க முடியும். நம் மனம் விகாசிக்கும். வாழ்வில் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போகும்.
தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் ஜெயமோகனுக்கு உள்ள ஆர்வத்தை இவ்வாறு தான் புரிந்து கொள்கிறேன். ஒரு தமிழறிஞர் காட்டும் அதே அக்கறையை அவர் சங்கக்கவிதைகள், நீதி இலக்கியம், காப்பியங்கள் மீது காட்டி இருக்கிறார். ஆனால் ஒரு நவீன எழுத்தாளனாக அவர் திருக்குறளின் வடிவிலோ பாணியிலோ அப்படியே எழுதவோ, வைரமுத்து போல அதன் உவமைகள், சொற்களை சிலாகிப்பாய் எடுத்தாளவோ முடியாது. ஏனென்றால் சிதைவின், உடைவின் வழி மட்டுமே முழுமையை பார்க்க முயலும் நவீன படைப்பாளி அவர். அவரைப் போன்ற கணிசமான நவீன படைப்பாளிகள் செவ்வியல் பக்கமே செல்லாததற்கும் இது ஒரு காரணம். ஆனால் ஜெயமோகன் இது என் பாதை, இதில் தான் நான் பயணிக்க வேண்டும் என எண்ணுபவர் அல்ல. எங்கு திறப்பிருந்தாலும் புகுந்து வெளியே வந்து பார்க்க வேண்டும் என உத்வேகம் கொண்டவர். திருக்குறளில் அவருக்கு உள்ள ஆர்வம், புலமை, நுணுக்கமான பார்வை, பிடிப்பை இப்படி அவர் ”புகுந்து வந்து” பெற்ற ஒரு கொடையாகத் தான் பார்க்கிறேன். சமீபமாய் கோவையில் இரண்டு நாட்கள் அவர் குறள் பற்றி ஆற்றிய சொற்பொழிவுகள் (குறள் இனிது) அபாரமானவை. (யூடியூபில் பார்க்கலாம்.)
தொண்ணூறுகளில் நான் ஜெயமோகனை சந்திக்கும் போதும் அவர் ஓயாது பேசும் ஒரு வெட்டுக்கிளி தான். ஆனால் அவை நண்பர்களுடனான உரையாடல்கள், நண்பர்களுக்கு எழுதும் நீண்ட கடிதங்கள், இவற்றின் கருத்துக்களை நீண்ட கட்டுரைகளாய் எழுதி பின்பு நூலாக மாற்றுவது (தேவதேவனை முன்வைத்து) என்பதாய் இருந்தன. இன்று அவரது இந்த உரையாடல்கள் செறிவான சுவாரஸ்யமான கட்டுரைகளாய் ஆயிரமாயிரம் பக்கங்களில் இணையம் வழி கிடைக்கின்றன. முன்பை விட அதிக கூட்டங்களில் பேசுகிறார். அவை யுடியூபில் கிடைக்கின்றன. அவரது சக-பயணிகளுக்கு இது ஒரு அபாரமான வாய்ப்பு என நினைக்கிறேன். அவர் தீராத ஆர்வத்துடன் கற்றுத் தெரிந்த விசயங்கள் இன்று ஒரு குறுகின வட்டத்தில் இருந்து பெரும் பரப்பில் வைக்கப்படுகின்றன.
”குறள் இனிது” அரங்கின் முதல் நாள் நாள் அமர்வுகளில் அவர் குறள் குறித்த கதையாடல்களின் வரலாற்றை பேசுகிறார். இதை ஆங்கிலத்தில் narratology என்பார்கள். ஜெயமோகன் கவனமாய் “கதையாடல்” என்ற பிரயோகத்தை உரையில் தவிர்க்கிறார். ஆனாலும் அவரது முறைமை அது தான். கதையாடல் என்றால் மொழிதல். வெளிப்படுத்தப்படும் ஒன்றை கருத்தாக, உண்மையாக மட்டும் நோக்காமல் ஒரு கட்டமைப்பாக பார்ப்பது; அதாவது ஒரு உண்மையை ஒரு புனைவாக, படைப்பாக பார்த்து அலசுவது. மனிதன் தனக்கு தெரிந்ததை அல்ல, தான் அவ்வாறு நம்ப விரும்புவதை, தன் கற்பனையை, தனக்குத் தானே அவர் சொல்லிக் கொள்ளும் புனைவை, நிரூபணமான கூற்று எனும் பாவனையுடன் பிறர் முன் வைக்கிறான் என நீட்சே கூறினார். அவர் அறிவியலையே இவ்வாறான புனைவு என்றார். (பின்நவீனத்துவ சிந்தனையின் முக்கியமான பங்களிப்பு இது.) உண்மை என்பது பாவனை என்கிற இந்த கோணம் தான் கதையாடல் ஆய்வின் அடிப்படை. உதாரணமாய், வள்ளுவரின் மனைவி வாசுகி என்பதை ஒரு உண்மையாக அல்லாமல் ஒரு புனைவாய் கண்டு (கட்டுக்கதை அல்ல), அந்த புனைவின் நோக்கம் என்ன என அலசுவது. அயோத்திதாச பண்டிதர் தன் வாழ்வில் இப்படியான தமிழ் அறிவுலக புனைவுகளை கட்டுடைக்க தொடர்ந்து முயன்றார். ஜெயமோகன் திருக்குறள் எப்படியாக சமணம், வைணவம், சைவம், அதன் பின் திராவிட கருத்தியல் என பல கதையாடல்களை தாண்டி வந்தது என பேசுகிறார். நான் சமணத்தையும் ஒரு கதையாடலாக சேர்ப்பதற்கு காரணம் குறள் முழுக்க ஒரு சமண மதநூல் அல்ல என்பது தான். அதில் இந்திய மரபின் பல அறிதல் முறைகளின் தாக்கம், சாயல்கள் உள்ளன.
ஜெயமோகன் பொதுவாக ரசனை மதிப்பீட்டின் படி உரையாடுவார். அதாவது, கூட்டங்களில் அவர் கோட்பாட்டு ரீதியிலான விவாதங்களுக்குள் போக மாட்டார். இந்த உரை மாறானது. கிட்டத்தட்ட ஒரு ஆய்வாளர் போன்றே பேசுகிறார். Narratologyயில் ஆர்வமுள்ளோருக்கு முதல் நாள் உரைகள் முக்கியமாக இருக்கும்.
சில சர்ச்சைக்குரிய விசயங்களையும் அவர் (வழக்கம் போல்) பேசுகிறார். இந்தியாவில் எந்த மதமும் பிறிதுடன் மோதி அழிந்தது இல்லை. இங்கு மதங்கள் ஒன்றையொன்று உண்டு செரித்திருக்கின்றனவே ஒழிய மதப்போர்கள் நடந்ததில்லை என்கிறார். அதாவது பௌத்தத்தையோ சமணத்தையோ வைணவமோ சமணமோ மோதி அழிக்கவில்லை. சமணர்கள் தலைவாங்கப்படவில்லை என்கிறார். மக்களின் வழிபாடுகள், தொன்மங்கள், ஆசாரங்களை பொறுத்து இது உண்மையாக இருக்கலாம். ஆனால் சமூக அளவில் அதிகாரங்கள் கைமாறும் போது மத கைப்பற்றல்களும் நடந்திருக்கவே வாய்ப்பதிகம். இந்த முரணியக்க பார்வை (எதிர் சக்திகளுக்கு இடையிலான மோதலின் வழி ஒரு புது விசயம் பிறக்கும் எனும் பார்வை) தவறானது என ஜெயமோகன் கூறுகிறார்.
 ஆனால் இது அவரவர் பார்வை கோணத்தை பொறுத்தது என எனக்கு தோன்றுகிறது. அதாவது, வாழ்க்கையை உள்முகமாய் கவனித்தால், அதன் ஊடுபாவும் சிக்கல்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், முரணியக்கம் இல்லை எனலாம். ஆனால் பருவுலகை, அதன் அரசியலை, சமூக நகர்வுகளை உண்மை என கருதினால் முரணியக்கம் (அடித்தட்டு மக்களின் தொன்மங்கள் மீது மேல்தட்டு மக்கள் தம் அரசியலை திணித்து கைப்பற்றுவது, அதிகாரத்தை செலுத்துவது) நடப்பில் உள்ளது தான் எனலாம்.

ஆனால் சிறு சர்ச்சைகளை கடந்து, இது ஒரு முக்கிய உரை என்பேன்.

No comments: