Sunday, January 8, 2017

எழுத்து என்பது ஒரு மூளைச்சலவை


எழுத்துலகில் மூட நம்பிக்கைகள் அதிகம். அதில் ஒன்று நமக்கு கிடைக்கும் அங்கீகாரம். நாம் எழுத்துக்கான மதிப்பீட்டை ஒரு தேர்வு மதிப்பெண் போன்றே பார்க்கிறோம். நாம் நம்பும், மதிப்பும் யாரோ ஒருவர் பாராட்டி விட மாட்டாரா என ஏங்குகிறோம். ஒரு படைப்பு போதுமான கவனம் பெறாமல் போனால் தோற்று விட்டோமோ என கலங்குகிறோம். ஒரு பிரபல எழுத்தாளர் நம்மை பாராட்டி விட்டால் பெரும் வாசக கவனம் நம் மீது திரும்பும் என நம்புகிறோம். கடந்த பத்தாண்டுகளில் பிரபல எழுத்தாளர்கள் பாராட்டி முன்வைத்து ஆனாலும் காணாமல் போன எழுத்தாளர்களின் பட்டியலை என்னால் தர முடியும். அது கூடத் தேவையில்லை, நாற்பது வருடங்களுக்கு முன்பு கா.ந.சு புரொமோட் செய்த இளம் எழுத்தாளர்களின் பட்டியலைப் பாருங்கள். அதை இன்று படிக்க அஞ்சலி போஸ்டர் போல இருக்கும்.

வாசகனை ஏமாற்ற முடியாது; அவன் ஒரு கராறான மதிப்பீட்டாளன் என நான் கூறவில்லை. வாசகனை நிச்சயம் ஏமாற்ற முடியும். ஆனால் தற்காலிகமாக மட்டுமே. ஏனென்று அடுத்த சில பத்திகளில் சொல்கிறேன்.
பிரபல எழுத்தாளர்கள் கூட வேண்டாம். என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளன் பாராட்டினால் கூட போதும் என நினைக்கிறவர்களும் உண்டு. என்னிடம் புத்தகம் தந்து “ஒரு சின்ன குறிப்பாக எழுதுங்கள். புத்தகத்தை யாராவது கவனிப்பார்கள். எல்லாம் உங்கள் கையில் தான்” என்பார்கள். இதே போல் நானும் யோசித்திருக்கிறேன், நம்பி இருக்கிறேன் என்பதால் எனக்கு அவர்களின் உளவியல் புரிகிறது. “என்னை தொந்தரவு செய்யாதீங்க. வற்புறுத்தாதீங்க” என நான் அவர்களிடம் கூற மாட்டேன். ஒரு படைப்பை புத்தகமாய் கொண்டு வருவது, அதை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதன் பின்னுள்ள போராட்டங்கள் என்னவென எனக்கு புரியும்.
நான் இரண்டு விசயங்களை அவர்களிடம் வலியுறுத்துவேன். 1) எழுத்து என்பது மதிப்பீடு சார்ந்த செயல்பாடு அல்ல. ஒரு புத்தகத்தினால் எழுத்தாளனாய் நமக்கு எந்த மாற்றமும் நேரப் போவதில்லை. ஒரு எழுத்தாளன் ஒரு சிறுகதையால், ஒரு தொகுப்பால், ஒரு நாவலால், ஒரு கட்டுரையால் உருவாகிறவன் அல்ல. “இந்த ஒரு கதை அல்லது கவிதை போதும், தமிழில் என் பெயர் காலங்காலமாய் நிலைத்து நிற்கும்” என்பது தமிழில் உள்ள மூட நம்பிக்கை மட்டுமே.
 சிலர் அப்படி ஒற்றைப் படைப்புக்காய் அறியப்படுவது உண்டு. ஆனால் அந்த படைப்பைத் தாண்டி வாசகர்கள் அந்த எழுத்தாளனை படிக்க மாட்டார்கள். உதாரணமாய், சி.சு செல்லப்பாவின் எல்லா எழுத்துக்களையும் தேடிச் சென்று யாரும் படிக்க மாட்டார்கள். ஆனால் “வாடிவாசல்” கிடைத்தால் படித்துப் பார்ப்பார்கள். அதே நேரம் சுந்தர ராமசாமியின் ஒரு சிறு கட்டுரை, மொழியாக்கத்தை படிக்க கூட எதிர்காலத்திலும் வாசகன் இருப்பான். ஜெயமோகன் வெறுமனே முட்டைக்கோஸ் பற்றி எழுதினால் கூட அதை வாசகர்கள் ஆர்வமாய் படிப்பார்கள்.
சில நாவல்கள் ஒரு காலகட்டத்தின் மைய மனநிலையை பிரதிபலிப்பதால் வாசகனுக்கு முக்கியமாகி விடும். ஆங்கிலத்தில் Uncle Tom’s Cabin அப்படியான ஒரு நாவல். அமெரிக்காவில் கறுப்பர் விடுதலை, சமூக மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் இந்நாவலும் ஒரு கலாச்சார குறியீடாக மாறியது. இதையெல்லாம் ஒரு அதிர்ஷ்டம், விசித்திரம் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி இதை யாராலும் திட்டமிட முடியாது.
2) எழுத்து என்பது உயரம் தாண்டும் போட்டி போன்று ஒரு சாதனை அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பணி. முப்பது, நாற்பது வருடங்கள் நீடிக்கிற மூளைச்சலவை அது ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் திறமை, புத்திசாலித்தனம், அறிவு ஆகிய அளவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை. சிலவேளைகளில் வாசகன் எழுத்தாளனை விட அதிபுத்திசாலியாக இருப்பான். (இதை நான் அடிக்கடி உணர்கிறேன்.) வாசகன் யானை என்றால் எழுத்தாளன் ஒரு பாகன். பாகனின் சொற்களுக்கு, ஆளுமைக்கு, அன்புக்கு, ஆணைகளுக்கு அவனை விட பன்மடங்கு வலிமை கொண்ட யானை கட்டுப்படுகிறது. மொழி வழியாகவே அது சாத்தியப்படுகிறது.
மொழியின் ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் தொடர்ந்து அதை சாமர்த்தியமாய் பயன்படுத்தி வாசகனின் மனநிலையை, நம்பிக்கைகளை, நுண்ணுணர்வை மெல்ல மெல்ல நீங்கள் மாற்றி எடுக்க முடியும். சாருவை தொடர்ந்து வாசிக்கிறவர் மற்றொரு குட்டி சாருவாகி விடுவார். அதன் பிறகு அந்த வாசகன் நீங்கள் எதை எழுதினாலும் நம்புவான், ரசிப்பான். (எதை என்று சும்மா ஒரு அழுத்தத்துக்காக சொன்னேன். குப்பை எழுதினால் கண்டிப்பாய் காறி துப்புவான்)
ஒரு வாசகன் தன் நேரத்தில் சில நிமிடங்களை, மணிநேரங்களை உங்களுக்காய் அர்ப்பணிப்பது என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. அவன் நம்பிக்கையை பெறுவது எளிய காரியம் அல்ல. அதற்குத் தான் தொடர்ந்து எழுத வேண்டும். அவனை ஆச்சரியப்படுத்திக் கொண்டே, நெகிழவும் கோபம் கொள்ளவும் மகிழவும் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் சொற்களை படிக்க துவங்கியதுமே அவன் தன்னை மறக்க வேண்டும். உங்களுக்கும் அவனுக்கும் இடையில் ஒரு மின்சாரம் பாயத் துவங்கும். நீங்கள் எழுதுவது உண்மையில் அவன் சொற்களே என அவன் நம்ப ஆரம்பிப்பான். இங்கு தான் ஒரு எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். ஒரு படைப்பு கவனிக்கப்பட்டு பாராட்டப்படும் போது அல்ல.
சமீபத்தில் புதிய தலைமுறை “நீரின்றி அமையாது உலகு” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னிடம் எனது முதல் நூல் பிரசுர அனுபவம் பற்றி கேட்டார். “நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தீர்கள்?”. நான் ஒரு புத்தகத்தை பிரசுரிப்பது அவ்வளவு முக்கியம் அல்ல என்றேன். மாறாக தொடர்ந்து எழுதக் கிடைக்கும் வாய்ப்புகளே முக்கியம். என் முதல் நூல் வெளியான வருடம் நான் தொடர்ந்து உயிரோசை இணையதளத்தில் எழுதி கவனம் பெற்றிருந்தேன். என் முதல் நூல் பிரசுரத்தை விட அதுவே எனக்கு முக்கியம். அதை விட முக்கியம் நான் இன்று வரை எழுதிக் கொண்டிருப்பது.
 எழுத்தை என்றுமே தனி சாதனைகளின் தொகுப்பாக பார்க்க கூடாது. அது ஒரு ஹிப்னாடிஸம். வாசகனை ஹிப்னாடைஸ் செய்து கொண்டே இருக்க வேண்டும். சிலர் கட்டுரையில் மயங்குவார்கள். சிலர் உங்கள் பேச்சுக்கு தலையாட்டுவார்கள். இன்னும் சிலர் உங்கள் நாவலில் தம்மை கரைக்க விரும்புவார்கள். நீங்கள் பலவிதமான மொழிகளை உருவாக்கியபடி இருக்க வேண்டும். சாகிற வரை நீங்கள் உங்கள் மொழியில் சலனங்களை, சிற்றலைகளை கிளப்பியபடி இருக்க வேண்டும். நீங்கள் விடைபெற்ற பின் உங்கள் மொழியின் தாக்கத்துடன் எழுதுபவர்கள் தோன்றுவார்கள். அவர்களின் மொழியில் நீங்கள் வாழ்வீர்கள். அப்படி இருப்பது தான் மகிழ்ச்சி. ஒரு புத்தகம் மூலம் பத்து பேர் பாராட்டை பெற்று சின்ன விருதொன்றை வாங்கி அலமாரியில் வைப்பது அல்ல.
எப்படி பத்து மதிப்புரைகள் வாங்குவது, எப்படி நான்கு விருதுகள் வாங்கி ஒரு சின்ன இடத்தை உருவாக்குவது என நாம் யோசித்து நம்மையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
நீங்கள் Inception படத்தில் நாயகன் என நினைத்துக் கொள்ளுங்கள். பிறரது நினைவுகளை, கனவுகளை, நம்பிக்கைகளை நீங்கள் சிறுக சிறுக மாற்றுகிறீர்கள். அவர்களை வடிவமைக்கிறீர்கள். இதை எப்படி செய்வது என சிந்திக்க வேண்டும். உங்களை சந்திக்கும் ஒருவர் நீங்கள் என்றோ போகிற போக்கில் கூறிய கருத்தொன்றைப் பற்றி, பல வருடங்கள் முன்பு எழுதிய ஒற்றை வரி, ஒரு சித்தரிப்பைப் பற்றி உங்களிடம் சிலாகித்து பேசும் போது நீங்கள் எழுத்தாளனாய் வெல்கிறீர்கள். உங்களுடைய பிரத்யேகமான சொற்களை மற்றொருவர் தன்னையறியாது தன் படைப்பில் எடுத்து கையாளும் போது எழுத்துலகில் உங்கள் இடம் உறுதிப்படுகிறது. (கோணங்கியின், எஸ்.ராவின் மொழியில் பின்னாளில் எழுத வந்தவர்கள் ஒரு உதாரணம்)
வண்ணதாசனை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை ஆரம்பத்தில் சு.ரா நிராகரித்தார். விமர்சகர்கள் அவர் ஒரு மிகையான, செயற்கையான, ரொமாண்டிக்கான எழுத்தாளர் என்று அவரை தேர்வில் பெயில் ஆக்கினாரக்ள். ஆனால் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். இன்று அவர் சாகித்ய அகாதமி விருது பெறும் போது வாசகர்கள் பலர் அது தமக்கு கிடைத்த விருது என்பது போல் புளகாங்கிதம் பெறுகிறார்கள். உண்மையில் வண்ணதாசனின் விருது இந்த வாசகர்களின் சிலாகிப்பு தான். அவர் தன்னைப் போல் பல ஆயிரம் வாசகர்களை உருமாற்றி விட்டார். நேற்று ஒரு கூட்டத்தில் பேசும் போது வண்ணதாசனைப் பற்றி ரசனையாக குறிப்பிட்டேன். உடனே முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களில் ஒளி பரவி துலங்கியது. கண்களில் லயித்து மயங்கின. புன்னகை சுடர் விட என்னை பூரிப்பாக பார்த்தார்கள். அவரை பாராட்டியது அவர்களுக்கு தம்மையே பாராட்டியது போல் இருக்கிறது. எழுத்தாளன் இந்த இடத்தை நோக்கித் தான் நகர வேண்டும். நாளை உங்களை யாராவது பாராட்டினால் உங்கள் வாசகன் புளகாங்கிதப் பட வேண்டும்.
நாம் எழுத ஆரம்பிக்கும் காலகட்டத்தில் போதுமான வாசக கவனம் கிடைக்கவில்லை எனப் பட்டால் நம்மிடம் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது எனப் பொருள். ஒன்று, நமது மொழி எளிமையாக அல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மிடம் சொல்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். அப்போது நாம் வெவ்வேறு விசயங்கள் வெவ்வேறு மொழிகள் எழுதிப் பார்க்கலாம்.
 மீனுக்கு தூண்டில் வீசுவது போலத் தான் இது. அதற்கு ஒரு லாவகம், சாமர்த்தியம் வேண்டும். இந்த இடத்தில் மீன் மாட்டவில்லை என்றால் சற்று தள்ளி சென்று மீண்டும் தூண்டிலை வீசலாம். பொறுமையும் முக்கியம். இதனுடன், நம் ஆளுமையையும் நாம் சுவாரஸ்யமானதாய் மாற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் உங்கள் ஆளுமை தான் உங்கள் எழுத்து. புது விசயங்களை கவனியுங்கள். மனிதர்களின் நடத்தையை ஊன்றி கவனியுங்கள். யாரும் யோசிக்காத கோணங்களில் துணிச்சலாய் சிந்தியுங்கள். சக எழுத்தாளர்கள் படிக்காத புத்தகங்களை தேடிப் படியுங்கள். பிறர் எழுதத் தயங்கும் விசயங்கள் நீங்கள் எழுதுங்கள். எப்போதுமே நேர்மாறாய் சிந்தியுங்கள். இது எழுத்தாளனுக்கு அவசியம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கோணல் உள்ளது. அந்த கோணல் தான் அவர்களின் ஸ்டைல். அதை வெளிக்கொணர வேண்டும். எழுத்தாளன் தொடர்ந்து தன்னை மாற்றிக் கொண்டே, புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் முதலில் எழுதும் சில நூறு பக்கங்கள் (கவிதையோ நாவலோ) முக்கியமே அல்ல. நாம் மீனவர்கள். எவ்வளவு முறை வலை வீசுகிறோம் என்பது பொருட்டல்ல. நம் வலையில் மீன்கள் விழுகின்றனவா? அது தான் கேள்வி. நம் உலகில் மீன்களும் நாமும் மட்டும் தான். கரையில் நின்று ஒரு விமர்சகர், ஒரு பரிந்துரையாளர். ஒரு நண்பர் கை தட்டலாம். அது உங்களுக்கு கேட்கலாம். ஆனால் உங்களுக்கு மட்டுமே கேட்கும். மீன்களுக்கு கேட்காது. மீன்களுக்கு கேட்காத விசயங்கள் உங்களுக்கு கேட்கத் தேவையில்லை. காதை மூடிக் கொள்ளுங்கள்!

2 comments:

மனஸிகன் said...

இன்னொரு முறை
தடுமாறி நிற்கும்போது ,கைதூக்கி விடும் கட்டுரை ..
நன்றி அண்ணா!!
<3

Senthil Prabu said...

As usual... I liked this post and accepting each and every detail just like you as you said :)