Wednesday, January 4, 2017

எம். எஸ். தோனி விடைபெறுகிறார்…

Image result for ms dhoni
எம்.எஸ் தோனி தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலகின் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவர், ஒரு தலைமுறைக்கே நவீன பேட்டிங்கை கற்றுத் தந்தவர், எப்போதும் முக்கியமான தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு சொதப்பும் இந்திய அணியினருக்கு முடிவை பற்றி அஞ்சாது ஆடினால் வெற்றி எவ்வளவு சுலபமாய் கிடைக்கும் என புரிய வைத்தவர். தோற்கும் வேளையிலும் அதை அலட்டாமல் கடந்து போக கற்றுத் தந்தவர். இந்திய மக்களின் சாராம்சமான ஒட்டாத, விட்டேந்தி மனநிலையை கிரிக்கெட்டின் வெற்றி சூத்திரமாக மாற்றியவர். இந்திய கிரிக்கெட்டின் மீது சச்சினை விட, கங்குலியை விட மிகப்பெரும் தாக்கத்தை செலுத்தியவர். எம்.எஸ் தோனி கிரிக்கெட்டில் மட்டும் அல்ல வெளியேயும் நமக்கு ஒரு ஊக்கவிசை தான். ரொம்ப நெருக்கடி ஏற்படும் போது கராறாய், தர்க்க ரீதியாய், கொஞ்சம் எந்திரத்தனமாய், எதிலும் பட்டுக்கொள்ளாமல் இயங்குவது ஒரு அற்புதமான வழிமுறை. எவ்வளவு பெரும் பிரச்சனைகள் வந்தாலும் போனாலும் நாம் கடைசியில் இருப்போம். நம் உழைப்புக்கு ஒரு பிரதிபலன் உண்டு. மலையை நகர்த்த முடியாவிட்டாலும் நம்மளவில் ஒரு கல்லை நகர்த்தி வைப்போம். இது தான் தோனியின் தத்துவம்.எனக்கு தோனி இரண்டு விசயங்களை நினைவுபடுத்துவார். எல்லாரும் பதற்றமாய் இருக்கும் போது எங்கள் ஊரில் இந்த பழமொழியை யாராவது போகிற போக்கில் சொல்வார்கள்: “யானை வந்தால் ஆளைக் கொல்லும்; மயிரையா புடுங்கும்?” எனக்கு இதைக் கேட்கும் போதெல்லாம் ஒரு புன்னகை வரும். இந்தியா தோல்வியில் ஒரு மலரை போல் உதிரத் துவங்கும் போதெல்லாம் தோனி இந்த மனநிலையுடன் தான் பேட்டிங் ஆட வருவார். யானை மிதிக்கும் அந்த கடைசி த்ருணம் வரை அவர் கவலைப்பட மாட்டார். அந்த நொடி ஒரு நொடி தானே? ஒரு நொடியை ஏன் நிமிடங்களாய் நீடிக்க வேண்டும்? தோனி நமக்கு தோல்வியையும் வெற்றியையும் சமமாக பாவிக்க சொல்லித் தந்தவர். வாழ்க்கை இரண்டையும் கடந்தது என புரிய வைத்தவர்.


இப்போது இந்த முக்கிய விடைபெறும் தருணத்திலும் தோனி நமக்கு அதையே சொல்வார். ஓய்வு என்பெல்லாம் வெறும் சொல் தானே. நம் வேலைகள் தொடரும்! ஒரு மலையை நகர்த்த வேண்டி இருக்கிறது!


3 comments:

Antony Francis OMD said...

மிகவும் பிடித்தமான ஒரு நபர் தோனி. அவரைப் பற்றி எனது மனதில் அவ்வப்போது வந்து போகும் எண்ணங்களை அப்படியே மொழிபெயர்த்தது போல் உள்ளது உங்களது கட்டுரை. நன்றி

‘தளிர்’ சுரேஷ் said...

தோனி இந்திய கிரிக்கெட்டை வெற்றிப் பாதைக்கு திருப்பியவர் என்பதில் மிகையில்லை! டெஸ்டில் இருந்து விலகிய போதும் இப்போது ஒருநாள் டி 20 அரங்கில் இருந்து விலகும் போது தன்னுடைய விலகலை கூட மிக சாதாரணமாக அறிவித்து அசத்திவிட்டார். தனியாக பிரிவுபசார போட்டிகள் என்று வைக்க அவகாசம் தராமல் முடிவை மிக சரியான தருணத்தில் எடுத்துள்ளார். நல்லதொரு கட்டுரை! பாராட்டுக்கள்!

சச்சின் said...

சான்சே இல்ல சார்..