Saturday, January 21, 2017

பின்நவீனத்துவ மக்கள் போராட்டங்களின் டெம்பிளேட்


லட்சக்கணக்கானோர் உதைத்து போராடி கொண்டு வந்த பந்தை கடைசியில் கோல் அடித்தவர் .பி.எஸ். நீங்கள் கோல் போஸ்ட் வரை கொண்டு வருவீர்கள் என அவருக்கு தெரியும். அதுக்குத் தானே வியூகம் அமைத்து காத்திருந்தார். இந்த சாமர்த்தியம் இல்லாமலா அவர் டீக்கடையில் இருந்து அரியணை வரை வந்திருக்கிறார்! கடந்த தேர்தலில் ஜெயா மூன்றாவது அணி அமைத்து திமுகவின் ஓட்டுகளை கலைத்து நூலிழை வித்தியாசத்தில் ஜெயித்ததை இதனுடன் ஒப்பிடலாம். ஆனால் மூன்றாவது அணி கூட ஜெயாவின் பி அணி என மக்கள் உடனே கண்டுபிடித்து கலாய்த்தார்கள். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ சூத்திரதாரி யார் நமக்கு கடைசிவரை புரியவே இல்லை. ஏனென்றால் .பி.எஸ்ஸின் சிரித்த முகமும் பணிவான உடல்மொழியும் கண்டவர்களுக்கு அவர் தந்திரசாலி என்றெல்லாம் தோன்றாது. ஆனால் மக்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாய் ஒரு தோற்றம் ஏற்படுத்தி திருப்தி கொடுத்து அவர்களை தனக்கு ஏற்றபடி பயன்படுத்தியது ஒரு அரசியல் master stroke. அடுத்து வரும் வருடங்களுக்கு என்று அவர் என்னவெல்லாம் சாணக்கிய வித்தைகள் வைத்திருக்கிறாரோ?யார் இறுதியில் பயன்பெற்றாலும், மக்களால் ஒன்றிணைந்து போராட முடியும் என நிரூபிக்க முடிந்தது ஒரு வெற்றி. ஒருவேளை இதே போன்று அடுத்து வரும் போராட்டங்களில் போலீசும் அரசும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களை கணிசமாய் ஒருங்கிணைக்கும் தன்னம்பிக்கையும் அனுப்வமும் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.


போராட்டங்களில் ஒரு பக்கம் உணர்வுபூர்வமாய் மாணவர்கள் கலந்து கொண்டாலும், இன்னொரு பக்கம் இதை ஒரு சமூகமாக்கல் நிகழ்வாக, கொண்டாட்டமாக, பொழுதுபோக்காக, வேடிக்கை பார்க்கும் சந்தர்ப்பமாக மக்கள் மாற்றினார்கள். நான் கவனித்த வரை கோபம், ஆவேசம் என்பதை விட உற்சாகமும் துடிப்பும் மக்களிடம் கரைபுரண்டது. புத்தாண்டை ஒரு வாரம் கடற்கரையில் கொண்டாடியது போல் இப்போராட்டம் மாறியது. போராட்டங்களின் பின்நவீனத்துவ வடிவம் இது. எதிர்கால போராட்டங்களும் இப்படித் தான் இருக்கும்.


ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பரஸ்பர வெறுப்பின்றி, கசப்புகள் இன்றி, வரலாற்று பகைமைகள் இன்றி ஒரு அயல் பொது எதிரியை முன்வைத்து போராட முடிந்தது. அதனாலே அனைவராலும் ஒன்று சேர முடிந்தது. ஒற்றை உணர்வுப் புள்ளியில் அனைவராலும் சிந்திக்க முடிந்தது. ஒரு போராட்டம் அனைவரும் பங்கேற்கும் பண்டிகையாக மாறியது முதன்முறையாய் இப்போது தான். ஊழல் எதிர்ப்பு, சாதி, மத பிரச்சனை, அணு உலை எதிர்ப்பு, சூழலியல் ஆதரவு. கார்ப்பரேட் எதிர்ப்பு, ஈழப் பிரச்சனை, காவிரி பிரச்சனை என வேறெந்த பிரச்சனைகளின் போதும் ஒரு சீரியஸான தொனி இருந்தது. அவை வாழ்வா சாவா பிரச்சனையாக இருந்தன. ஆனால் ஜல்லிக்கட்டு அப்படி அல்ல. அதனாலே லட்சக்கணக்கான இளைஞர்களால் இதில் இணைய முடிந்தது. இதில் மாற்றுக்கருத்துக்கள், சர்ச்சைகள் இருக்க முடியாது. அந்தளவு எளிமையான, மென்மையான, ரொமாண்டிக்கான பிரச்சனை இது. ரொம்ப நெகட்டிவ்வான, மண்டையை உடைக்கும் பிரச்சனைகளில் இளைஞர்கள் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் ஒன்றிணைவார்கள் என தோன்றவில்லை. எதிர்காலத்திலும் இது போல் கூட்டங்கள் ஒரு போராட்டத்துக்காக அமைய இந்த தன்மைகள் பிரச்சனைக்கு அவசியம்: எளிமையாய், ரொமாண்டிக்காய் இருக்க வேண்டும், யாருக்கும் முரண்பாடு ஏற்படுத்தாததாய் இருக்க வேண்டும். உதாரணமாய், ஈழப் போரின் போது போராடியவர்களைக் கண்டு சிலர்நீங்கள் எப்படி பாரதப்பிரதமரை கொன்ற ஒரு இயக்கத்துக்காக கொடி பிடிக்கலாம்?” என கேட்டனர். ஆனால் ஜல்லிக்கட்டு விசயத்தில் இது போன்ற உள்குத்து கேள்விகளுக்கு சாத்தியமில்லை. கூடன்குளம் போராட்டம் கூட மீனவர்களின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்சனையாக பார்க்க வாய்ப்பிருந்தது. ஜல்லிக்கட்டு போல் அனைவரையும் இணைக்கும் ஒரு ரொமாண்டிக்கான எளிய புள்ளி (தமிழண்டா, வீரண்டா) அதற்கு இல்லை. இறுதியாய், பிரச்சனை முடிந்தால் நமக்குள் யாரையும் குற்றம் சாட்ட தேவையில்லாதபடி, விரோதி கண்ணுக்கு தெரியாத ஒரு ஆளாய் இருக்க வேண்டும். போராட்டம் முடிந்ததும் பொதுவிடங்களில் நண்பர்களுடன் ஒன்று கூடி நண்பர்களுடன் உணர்வுகளை பங்கிட்ட, ஒரு பெரிய சமூக செயல்பாட்டில் பங்கெடுத்த திருப்தி இருக்க வேண்டும். ஒரு விழா முடிந்த இன்பக் களைப்பு நமக்கு ஏற்பட வேண்டும்.


நமது பொது வெளிகளை ஆக்கிரமிக்கும் உரிமை நமக்கு என்றும் இருந்ததில்லை. கடற்கரையில் நம்மால் அனுமதி இன்றி கூட்டம் நடத்த முடியாது. ஆனால் முதல்முறையாய் எங்கு வேண்டுமானாலும் மக்களால் கூட்டம் நடத்த, மைக்கில் முழங்க அரசு அனுமதித்தது. தற்காலிகமாக ஏனும் பொதுவெளியை சமூகம் தன் கையில் எடுத்து தனக்கான சமூகமாக்கல் வெளியாக, உணர்வுகளை காட்டும் மேடையாக மாற்ற முடிந்தது. இது கொடுத்த அபரித சுதந்திரத்தை நம் இளைஞர்கள் கொண்டாடினர். ஆனால் திங்கட் கிழமையில் இருந்து ஒரு பூங்காவில், சாலையில், கடற்கரையில் நம்மால் பதாகைகளுடன் குழும முடியாது. அவ்வெளிகளை மீண்டும் அரசு பறித்துக் கொள்ளும். நாம் மீண்டும் நமது வீடு, அலுவலகம், சாலையில் குறுகலாலன இடங்களுக்குள் நம் வாழ்கையை அமைத்துக் கொள்வோம். இது போன்ற போராட்டங்களின் கொடையே மக்களுக்கு கிடைக்கும் புது புழங்கு வெளிகள், அங்கு தம் அதிகாரத்தை நிறுவ கிடைக்கும் வாய்ப்புகள்.


எதிர்கால பின்நவீத்துவ மக்கள் போராட்டங்களுக்கான டெம்பிளேட் இது தான்.


No comments: