Thursday, January 19, 2017

தியாகம் எனும் போலித்தனம்


எப்போதும் எதையாவது தியாகம் செய்யும், துறக்கும், கைவிடும் அரசியல் மீது எனக்கு ஆழமான கசப்பு உண்டு. சுஜாதா ஒருமுறை மரணம் பற்றிய தன் சிந்தனைகளை எழுத வாசகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை போனில் அழைத்து “என் ஆயுசில் பாதியை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்” என சொன்னார்களாம். அதைப் பற்றி குறிப்பிடும் சுஜாதா இவ்வாறு சொன்னார் “அப்படி ஆயுசை தர முடியாது என்கிற நம்பிக்கையில் தான் இவ்வளவு வாக்குறுதிகள் தருகிறார்கள்?” உண்மை தான். ஒருவேளை ஒரு மனிதன் தன் ஆயுளில் ஒரு பாதியை இன்னொருவருக்கு தர முடியும் என்றால் ஒருத்தரும் அதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்.

 அரசியல் போராட்டங்களிலும் அப்படித் தான். உயிரை, வாழ்க்கையை, வசதி வாய்ப்புகளை, அங்கீகாரங்களை, பணத்தை சமூகத்துக்காய் துறப்பதாய் கோருவதில் ஒரு பம்மாத்து உள்ளது. நடப்பு வாழ்வை பொருட்படுத்தாத லட்சியவாதிகள் ஒரு காலத்தில் அவ்வாறு தியாகங்கள் செய்ததுண்டு. தான் ஒரு மகாப்பெரிய காரியத்தில் ஈடுபடுவதான அகங்காரம் அவர்களை சுய-அழிவு நோக்கி தள்ளியிருக்கலாம். ஆனால் தன்னை அறிந்தவன் என்றுமே தன்னை அழிக்கவோ தனது உடைமைகளை துறக்கவோ முயல மாட்டான். காந்தி ஒரு சிறந்த உதாரணம். அவர் என்றுமே உண்ணாவிரதங்களின் போது தன் எல்லை என்ன, எந்தளவு தன் உடலை வருத்த முடியும் என அறிந்திருந்தார். அதனால் அவர் சரியான நேரத்தில் உண்ணாவிரதங்களை முடித்துக் கொள்வார். போராட்டங்களின் போதும் உயிரிழப்புகள் நடக்க துவங்கியதும் அவர் போராட்டங்களை முடித்து விடுவார். ஏனென்றால் காந்தியிடம் மிதமிஞ்சிய அகங்காரம் இல்லை. அரசியலும் வரலாறும் தன்னைக் கடந்த ஒன்று என அவர் அறிந்திருந்தார்.
ஆனால் நம் ஊரில் இன்றும் தனிமனிதர்கள் சமூக முன்னேற்றத்துக்காக தியாகங்கள் செய்து போராட வேண்டும் எனும் மூடநம்பிக்கைகள் உண்டு. அரசியலில் மட்டுமல்ல, இலக்கியத்தில் கூட ஒருவர் சுயமுன்னேற்றத்தை விரும்பாமல் தன்னை அழித்துக் கொண்டால் அவரை ஒரு தியாகியாக்கி கொண்டாடுவோம். சி.சு செல்லப்பாவும் அவர் காலத்து சில சிறுபத்திரிகையாளர்கள் குறித்து இது போன்ற சித்திரங்கள் நம் கதையாடல்களில் உண்டு. உண்மையில் யாரும் அப்படி தம்மை பிறிதொன்றுக்காய் அழிப்பதில்லை. வறுமையில் அல்லாடியபடி இலக்கியத்துக்காய் உழைத்தவர்கள் கூட தமக்கு அவ்வாறு செய்ய பிடித்திருந்ததாலே செய்தார்கள்.
 ஒவ்வொரு முறை ஒரு சமூகப் பிரச்சனை கொழுந்து விட்டெரியும் போதும் சிலர் உடமைகளை, உணவை, ஏன் உயிரைக் கூட, துறந்து போராட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காய் கண்ணீர் மல்க வேண்டுகிறோம். இன்று ஜல்லிக்கட்டுக்காய் எம்.பிக்கள் பதறி துறக்க வேண்டும், எழுத்தாளர்கள் விருதை துறக்க வேண்டும், வியாபாரிகள் ஒருநாளுக்கான தமது வியாபாரத்தை இழக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இத்தகைய ஈகோவின் விளைவாகத் தான். நீங்கள் ஒருவேளை உண்ணாவிட்டாலும், சட்டையை, பேண்டை கழற்றி வீசினாலும், வேலை நிறுத்தம் செய்தாலும் பிரச்சனை அப்படியே தான் இருக்கும். எப்படி சமூக அவலங்களை தனிமனிதர்கள் நிகழ்த்தவில்லையோ அது போல் சமூக முன்னேற்றத்தை தனிமனித தியாகங்களால் ஏற்படுத்த முடியாது. தொடர்ந்து தன் உணவை, ஆடையை போராட்டங்களுக்காய் குறைத்து தன்னை வருந்திய காந்தியே இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுக்க பல்வேறு சமரசங்களை செய்தபடி இருந்தார். அதனால் மிகை லட்சியவாதிகள் அவரை தூற்றியபடி இருந்தார்கள். அவரை வெள்ளையரின் கூலியாள் என்றார்கள். ஆனால் வரலாற்றில் நம்மால் பங்களிக்க முடியுமே அன்றி வரலாற்றை நம்மால் உருவாக்க முடியாது என அவர் அறிந்திருந்தார்.
காந்தி மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் இது நன்கு தெரியும். இதுவரை ஏதாவது ஒரு வட்டச்செயலாளராவது தீக்குளித்து செத்திருக்கிறாரா? இல்லை. அரசியல் என்பது அழுத்தங்கள், சமரங்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் ஆட்டம் என அவர்கள் அறிவார்கள். உண்மையில், அரசியலுக்குள் இருப்பவர்கள் அதன் வெளியே இருக்கும் லட்சியவாத போராளிகளை விட ஈகோ குறைவானவர்கள். அதனால் தான் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பதவியை துறப்பதில்லை. அதில் அர்த்தமில்லை என அவர்கள் அறிவார்கள். இன்று ரொம்ப முக்கியமாய் பேசப்படும் பிரச்சனை நாளை யார் கவனத்திலும் இருக்காது. ஒவ்வொரு பிரச்சனைக்காய் எதையாவது துறப்பதானால் அது அபத்தம் என அறிவார்கள்.
ஜெயலலிதா மறைவை ஒட்டிய ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கவனித்தேன். அரசியலுக்கு வெளியில் இருப்போர் பலரும் ஜெயலலிதாவில் தம்மைக் கண்டனர். அவர் மறைவுக்காய் உணர்ச்சியவப்பட்டு துடித்தனர். ஆனால் அதிமுகவில் இருக்கும் பலரும் அவர் மறைவு உருவாக்கிய எதிர்கால வாய்ப்புகளை கவனித்தனர். ஜெயலலிதாவின் பிம்பத்தையும் தம்மையும் அவர்கள் குழப்பிக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சியில் நான் அறிந்த நண்பர் ஒருவர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தனக்கு வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளதாய் தெரிவித்தார். நான் இதை சுயநலமாய் பார்க்கவில்லை. கட்சி, அரசியல், சமூக இயக்கம் ஆகியவை தம்மை மீறிய நகர்வுகள் என அவர் புரிந்து வைத்திருக்கிறார். சந்தர்பங்களை தேவையானபடி பயன்படுத்துவதே அவரது அரசியல். இது சந்தர்ப்பவாதம் அல்ல. ஈகோவற்ற அரசியல். அவருக்கு தன் தலைவியின் மீது பற்றும் மதிப்பும் உண்டு. ஆனால் அதற்காக தலைவி இல்லாத கட்சியில் என்னால் இருக்க முடியாது என்று அவர் மிகையாக கோர மாட்டார். தன்னை மிகையாக கருதுபவன் தான் அப்படி நினைப்பான்.
இந்த உலகில் ஒவ்வொருவரும் நம்மை தக்க வைக்கவே போராடுகிறோம். உணவுக்காக, உடமைக்காக, அதிகாரத்துக்காக, பணத்துக்காக, பாதுகாப்புக்காக போராடலாம். ஆனால் ஒரு விழுமியத்துக்காக போராடக் கூடாது. அது நம்மை நாமே சொறிந்து சுகம் காணும் காரியம். விழுமியங்கள், லட்சியங்கள் வெறும் கற்பிதங்களே. என் குடியிருப்புக்கு வெளியே இரண்டு நாய்க்குட்டிகள் திரியும். ஒருநாள் இரவு நான் வீடு திரும்பும் போது அதில் ஒரு குட்டி மண்ணைத் தோண்டி ஒரு பிளாஸ்டிக் பையை வெளியே இழுத்துக் கொண்டிருந்தது. நான் நின்று கவனித்தேன். அது அந்த பிளாஸ்டிக் பையை பிய்த்து போட்டது. என்ன இந்த நாய் பிளாஸ்டிக்கை தின்கிறதா என வியந்தேன். கொஞ்ச நேரத்தில் அது பைக்குள்ளிருந்து சில நாடகள் பழைய உணவின் மீதத்தை நக்கி முழுங்கியது. எனக்கு அதைப் பார்த்ததும் வாழ்க்கையின் ஒரு தெளிவான சித்திரம் கிடைத்தது. நம்முடைய ஒவ்வொரு விநாடியும் அந்த நாய்க்குட்டி போல எச்சிலுக்காய், இல்லாத ஒன்றுக்காய், மண்ணைத் தோண்டி போராடுகிறோம். அப்படியான நிலையில், ஏதோ ஒரு கண்காணாத விழுமியத்துக்காய், நம்பிக்கைக்காய், ஒருவன் வேலை செய்யாமல் இருக்கிறான், உணவை விட்டுக் கொடுக்கிறான், தன் மீது தீ வைக்கிறான் என்றால் அவன் இந்த வாழ்க்கையை அவமதிக்கிறான் என பொருள். அவனுக்கு நடப்பு வாழ்வின் முக்கியத்துவம் புரியவில்லை என பொருள். நடப்புலகை விட தானே பெரிது எனும் அகங்காரம் புகைமூட்டமாய் அவன் பார்வையை மறைத்து விட்டது என பொருள்.
நான் யாருக்காகவும் எதற்காகவும் என்னுடைய கிழிந்த உள்ளாடையை கூட விட்டுத் தர மாட்டேன். ஏனென்றால் என்னிடம் அது மட்டும் தான் உள்ளது. அதற்காய் தான் நான் தினமும் போராடுகிறேன். நான் என் உணவை துறக்க மாட்டேன். ஏனென்றால் அப்போது நான் என் உடலை அவமதிக்கிறேன். உணவை அளிக்காமல் இருந்தாலும் என் உள்ளுறுப்புகள் எனக்காய் சிரமப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் என திமிர்த்தனத்தில் அப்படி செய்கிறேன் என பொருள்.
சொகுசாய் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு கேட்டதை பெற்றோர் வாங்கிக் கொடுக்காவிட்டால் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும். மண்ணில் புரண்டு அழும். பசி என்றால் என்னவென அறியாத திமிரில் இருந்து வரும் பிடிவாதம் அது. நானும் அந்த நாய்க்குட்டியும் பசியை அறிந்தவர்கள். முயலாவிட்டால் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் என உணர்ந்தவர்கள். நாங்கள் சிரமப்பட்டு தோண்டி எடுக்கும் எச்சில் உணவை எந்த மகோன்னத மாற்றத்துக்ககாவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

தியாகிகளை நம்பாதீர்கள். அவர்கள் போலிகள்!

1 comment:

Naveen Hari said...

தியாகிகள்என்றுமே தங்களது தியாகத்தை உணர்வதில்லை ஏனெனில் அவர்கள் இயல்பே அதுதான்.தான் தியாகம் செய்வதாக உரைப்பவன் தியாகியே அல்ல...