Saturday, January 14, 2017

அழிந்து வரும் குமரி மாவட்டம்

குமுதம் லைப் இதழில் நான் தொடர்ந்து படிப்பது ப்ரியா தம்பியின் “மாயநதி” தொடர். இந்த வாரம் குமரி மாவட்டம் சந்தித்து வரும் ஒரு முக்கிய சவால் பற்றி பேசுகிறார். பருவநிலை மாற்றமும் அருகி வரும் விவசாய நிலங்களும்.

பெரும்பாலான நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் காணாமல் போய் விட்டன. எங்கும் கட்டிடங்கள், நிலங்கள், இதன் விளைவான பருவச்சூழல் மாற்றம். மழை குறைந்து, வெக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக குமரி மாவட்டம் அதன் தண்மை, வளம், நீர்நிலைகள், தொடர்ந்து தூறும் மழை, எட்டுத்திக்கும் சூழ்ந்த மலைகள், பச்சைப்பசேல் என்ற கண்குளிர் காட்சிகளுக்காய் அறியப்படுவது. இந்த சித்திரம் தீயில் உருகும் பிளாஸ்டிக் போல் சிதைந்து வருகிறது.

ஆனால் குமரி மக்களை அறிந்தவர்களுக்கு இது பெரும் வியப்பை அளிக்காது. அம்மக்கள் தற்காலிக நோக்கம் மிக்கவர்கள். முன்பு ரப்பர் விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இருந்த போது வாழை தோப்புகளை அழித்து ரப்பர் பயிரிட்டார்கள். இது ஒரு பக்கம் மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தது. அடித்தட்டு (குறிப்பாய் நாடார் இன மக்கள்) சமூகத்தில் மேலெழுந்து வர உதவியது. (இந்த இரு விசயங்களையும் இணைத்து ஜெயமோகன் தன் முதல் நாவலான “ரப்பர்” எழுதினார்.)
 மற்ற மாநிலத்தவரை போல் குமரியினர் நிலத்துடன் அறுக்க முடியாத பிணைப்பு கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கை நிலையை மேம்படுத்த அவர்கள் கல்வியை பெருமளவு நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் அங்கு கல்வி நிலையங்கள் அதிகம். அதே போல எந்தெந்த காலத்தில் எது எது லாபம் தருமே அதில் அவர்கள் யோசிக்காமல் குதித்து விடுவார்கள். பொறியியல் படிப்பு உச்சத்தில் இருந்த போது குமரி மாவட்டம் முழுக்க பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. கேரளா, வடமாநிலங்களில் இருந்தெல்லாம் மாணவர்களை அழைத்து வந்து வகுப்புகளையே பார்க்காதவர்களுக்கு கூட பொறியியல் பட்டங்கள் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் பி.ஏ பட்டத்தை விட பி.இ பட்டம் மலிவானது. கடந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் லாபம் கொழிக்கும் அடுத்த தொழிலாகியது. மக்கள் ரப்பரையும் பொறியியலையும் விட்டு ரியல் எஸ்டேட்டுக்கு தாவினார்கள். இத்தொழிலில் மக்கள் பெருமளவு பணம் ஈட்டினார்கள். இதற்கு மற்றொரு காரணம் அப்போதைய திமுக ஆட்சியில் கணிசமான கறுப்புப் பணம் நிலத்தில் முடக்கப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் இங்கு நிலம் வாங்க படையெடுத்தார்கள். அப்போது தான், ப்ரியா தம்பி குறிப்பிடும், குளங்களை நிரப்பாக்கி வீடு கட்டி விற்கும் அழிவு வேலைகள் பெருகின.
என்னுடைய அத்தான் ஆரம்பத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் வணிகம் செய்து வந்தார். அதில் அவர் வெற்றி பெற்று பணம் ஈட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் விளம்பர பலகைகளுக்கு தடை கொண்டு வந்தார்கள். தன் தொழில் முடங்கிப் போவதை அவர் உணர்ந்தார். அப்போது தான் நான் முன்னே சொன்ன ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் ஏற்பட்டது. ஒரு சிறிய கதவு மூடினால் இன்னொரு பெரிய கதவு திறக்கும். அவர் தான் ஈட்டிய பணத்தை முழுக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். சில வருடங்களில் பத்து மடங்கு பணம் ஈட்டினார். குமரி மாவட்ட மக்களின் சுபாவத்துக்கு என் அத்தான் ஒரு சரியான குறியீடு. காலத்தோடு ஒத்து வாழ் என்பது குமரி மாவட்ட தத்துவம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் ஊர் மக்கள் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க மாட்டார்கள். அப்பிரச்சனையின் ஊடே வேறேதாவது நல்வாய்ப்புகள் கிடைக்குமா என சிந்திப்பார்கள். அதைப் பற்றிக் கொண்டு மேலெழுவார்கள்.
 ஒரு பக்கம் மக்கள் கல்வி பெற்று வெளி ஊர்களிலோ அல்லது வெளிநாட்டிலோ சென்று வேலை பார்த்து பணம் ஈட்ட முனைகிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. முன்பு விவசாயத்தில் ஈடுபட்ட நாடார் சமூகத்தினர் பின்பு வியாபாரத்தில் முனைப்பு காட்டி கூடுதல் முன்னேற்றம் கண்டனர். ஆக, குமரியில் மக்களுக்கு நிலம் ஒரு பொருட்டு அல்ல. அதாவது மண்ணோடு பிணைந்த ஒரு நிரந்தர வாழ்க்கை அந்த மக்களுக்கு என்றும் இருந்ததில்லை. அவர்கள் அதனால் சூழலியல் மாற்றங்கள் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
 வேறு மாவட்டங்களை விட குமரியில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். திருமணங்களின் போது அவர்கள் தங்கமாகவும் ரொக்கமாகவும் செலவழிக்கிற பணத்தை கண்டால் மிரண்டு விடுவீர்கள். மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக இருபது, முப்பது லட்சங்கள் கொடுத்து ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது முடியாவிட்டால் பத்து லட்சத்தை ஒரு கல்லூரிக்கு கொடுத்து ஒரு தற்காலிக பேராசிரிய வேலை வாங்கிக் கொடுப்பார்கள். லட்சங்கள் அங்கு ஆயிரங்கள் போல.
இந்த நிலைமையில் அவர்களிடம் சென்று நீங்கள் சூழல் அழிகிறது, மழை வராது என்றெல்லாம் அறிவுறுத்த முடியாது. ஆனால் இன்று ரியல் எஸ்டேட்டில் மந்தநிலை நிலவுகிறது. வேலை வாய்ப்புகளும் உலகளவில் குறைந்து விட்டன.
இந்நிலையில் குமரி மாவட்டத்துக்கு என இயற்கையோடு இயைந்த உற்பத்தி தொழில்களை ஏற்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இதுவும் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. குமரிக்கடல் வற்றினாலும் எங்கள் மக்கள் அதை வைத்து எப்படி லாபம் பார்ப்பது என யோசிப்பார்கள். அதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத கூலான எம்மக்கள் எதையும் சமாளிப்பார்கள். அவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.

No comments: