Thursday, January 12, 2017

ஏன் என் புத்தகம் பேசப்படவில்லை?


புத்தகம் வெளியிட்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த ஆவலாதி இருக்கும். நம்மை பிறர் வேண்டுமென்றே கவனிக்கவில்லை, திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள், நம்மிட நியாயமாக நடந்து கொள்ளவில்லை, இதெல்லாம் ஏன், இதற்கு பின் ஒரு சதித்திட்டம் உள்ளது என்று கூடத் தோன்றும். சில நண்பர்களின் புத்தகங்கள் வெளியானதும் ஒரு பரபரப்பு தோன்றும். குறிப்பாய், சமூக வலைதளங்களில். யாராவது அதைக் குறிப்பிட்டு எழுதலாம். ஒரு நாளிதழில் ஒரு குறிப்பு வரலாம். அப்போது நம் வயிறு எரியும். ஆனால் இந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வயிற்றெரிச்சல், தர்ம் ஆவேசம் எல்லாம் நம் கற்பனையால் விளைகிறவை என்பது நமக்கு சில வருடங்களில் புரிந்து விடும்.

எழுத்துலகம் என்பது மிக மிக சிறியது. ஒரு எளிய குடும்பத்தின் வளைகாப்புக்கு கூடுகிற கூட்டத்தை எடுத்துக் கொண்டால் அது தான் வாசகர்களும் எழுத்தாளர்களும் சேரும் நம் கூட்டம். இதற்குள் தான் பரபரப்பும், புரொமோஷனும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் இன்று சினிமாவும் அரசியலும் பேசும் இடத்தில் இலக்கிய சர்ச்சைகளும் நடப்பதால் நமக்கு மூன்று ஒரே இடத்தில் இருக்கும் ஒரு மாயத்தோற்றம் கிடைக்கிறது. உண்மையில் பாண்டவர்கள் கேட்ட ஐந்து கிராமங்கள் கூட நமக்கு இல்லை.
இங்கு ஏற்படும் பரபரப்பு என்பது கட்டமைக்கிற ஒன்று. சக எழுத்தாளர்களிடம், மீடியா அன்பர்களிடமும் நல்லுறவில் இருந்து, சில இலக்கிய அமைப்புகளில் தொடர்புகளும் செல்வாக்கும் ஏற்படுத்திக் கொண்டு, பணமும் நேரமும் செலவழித்து செயல்பட்டால் புத்தகம் வெளியாகும் சில வாரங்கள் முன்பே கடுமையாய் உழைத்தால் நிச்சயம் உங்கள் நூல் பற்றி ஒரு பரபரப்பு ஏற்படுத்தலாம். ஆனால் இதற்கு நீங்கள் கடுமையாய் உழைக்க வேண்டும். 9-5 வேலையில் இருந்து கொண்டு, வீடு திரும்பும் வழியில் காய்க்றி வாங்கிக் கொண்டு, நேரத்துக்கு பஸ் வருமா என கவலைப்பட்டுக் கொண்டு, மனைவி திட்டுவாளா என நடுங்கிக் கொண்டு தினம் தினம் அல்லல்படுவோர்களுக்கு இந்த மாதிரியான புரொமோஷன் எல்லாம் சரிப்படாது. கல்யாணம் பண்ணிப் பார், புத்தகம் புரொமோட் பண்ணிப் பார்!
ஆனால் இப்படியெல்லாம் லோல்பட்டு புரொமோட் செய்தும் உங்கள் புத்தம் ஆயிரக்கணக்கில் (அல்லது நூற்றுக்கணக்கில்) விற்கும் என கற்பனை செய்ய வேண்டாம். இந்த புரொமோஷன் நம் ஆத்மதிருப்திக்கு மட்டுமே!
புத்தக விற்பனை என்பது அதன் பொழுதுபோக்கு அம்சத்தை பொறுத்தது. இது இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம். ஆனால் உண்மை இது தான். எஸ்.ரா, ஜெ.மோவில் நூல்களாய் இருந்தாலும் கூட அவை சுவாரஸ்யமான வாசிப்பனுவத்தை தருவதாய் பேச்சு கிளம்பினால் தான் விற்கும். இலக்கிய மதிப்பினால் நூல்கள் விற்பதில்லை. அதனால் யார் என்ன உங்கள் நூலை பாராட்டி எழுதினால் வாசகர்களை சுலபத்தில் ஏமாற்ற முடியாது.
சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ரா தன் நூல் வெளியீடு ஒன்றின் போது வருத்தப்பட்டார்: “புத்தகங்களை தொடர்ந்து வெளியிடுவது கிணக்கில் கற்களை போடுவது போல் இருக்கிறது.” அவர் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? ஏனென்றால் மற்றொரு சமூகத்தில் அவர் இப்படியான பணிகளை செய்திருந்தால் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார். இங்கு எதுவும் நடக்காது. நூறு புத்தகங்கள் வெளியிட்டால் பத்து நூல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆயிரம் பேரோடு வந்தால் பத்து பேர் கவனிப்பார்கள்.
சமீபத்தில் அராத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயமோகனும் இதே உணர்வை தான் வெளிப்படுத்தினார். ”என் நாவலுக்கு மூன்று பேர் தான் முன்பதிவு செய்வார்கள் என்று நினைத்தேன். 300 பேர் முன்பதிவு செய்த ஆச்சரியம் எனக்கு இன்னும் நீங்கவில்லை. நம்மூருக்கு இதுவே அதிகம்,” என்றார் அவர். ஆனால் இந்த 300 எனும் எண்ணைத் தொடுவதற்கு அவர் கடந்த கால்நூற்றாண்டாக வருடாவருடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். நூறே பக்கம் எழுதி விட்டு நாமெல்லாம் ஒன்றுமே இங்கு எதிர்பார்க்கக் கூடாது.
தமிழில் இளம் எழுத்தாளர்கள் எதையுமே எதிர்பாராத துறவி போல் இருக்க வேண்டும். இந்த மனநிலை இல்லாவிட்டால் சீக்கிரமே களைத்து போய் காவியை, தாடி மயிர்களை துறந்து விடுவார்கள். இதற்கு துணிவு இல்லாதவர்கள் இங்கு வரவே கூடாது. நானெல்லாம் என்னை எப்போதும் ஒரு கன்னியாஸ்திரி போலத் தான் கற்பனை பண்ணிக் கொள்வேன். என் உள்ளங்கையில் நீங்கள் துப்பினாலும் அன்னை தெரேசா போல் ஜேப்பில் போட்டுக் கொண்டு “இது எனக்கு. இனி என் மக்களுக்கு கொஞ்சம் சில்லறை கொடுங்கள்” என சொல்வேன்.
நான் 9 வருடங்களுக்கு முன்பு உயிரோசையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்த போது ஓரளவு கவனம் கிடைத்தது. அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன். அடிக்கடி புதுபுது ஆட்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள். போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்போது பேஸ்புக் இல்லை என்பதால் இதுவே ஒரு பெரிய பரபரப்பு தான். சரி, மாஸ் ஆகி விட்டோம் என நினைத்தேன். ஒரு வருடத்துக்கு பிறகு உயிர்மையின் ஒரு இலக்கிய கூட்டம். நான் பார்வையாளர்களில் ஒருவனாக போய் உட்கார்ந்தேன். ”என்னை இதோ நிறைய பேர் கவனிக்கிறார்கள், திரும்பி பார்க்கிறார்கள், இவர்களில் என்னை பிடிக்காதவர்கள், என் கருத்துக்களோடு உடன்படாதவர்கள், என் விசிறிகள் இருக்கிறார்கள்.” என்றெல்லாம் மனதுக்குள் எண்ணங்கள். ஆனால் யாருமே என்னை கவனிக்கவில்லை. எட்டு வருடங்களுக்கு பிறகு இப்போது நான் கூட்டத்துக்கு சென்றால் யாரோ இரண்டு பேர் புதிதாய் வந்து தம்மை என் வாசகர் என அறிமுகப்படுத்துகிறார்கள். மற்றபடி ஏற்கனவே நன்கு தெரிந்த எனது பத்து நண்பர்கள் பிரியத்துடன் புன்னகைக்கிறார்கள். ஒன்பது வருடங்கள் தொடர்ந்து எழுதி நான் உருவாக்கிக் கொண்ட ஒற்றை அலை இது. அடுத்த முப்பது வருடங்களில் இது பத்தோ அல்லது இருபது மடங்கு பெருகும். அவ்வளவு தான். அப்படி ஆகாவிட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன்.
இந்த சிறிய காலகட்டத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம் இது:
1)   தமிழின் வாசகப் படை மிக மிக குறுகியது.
2)   பெரும்பாலான வாசகர்கள் எதிர்கால எழுத்தாளர்கள்
3)   நம் வாசகர்களில் ஒரு பாதியினர் வெளியே வந்து நம் கை குலுக்க மாட்டார்கள். இவர்கள் தற்கொலைப் படையினர்.
4)   என்னதான் நாம் புரொமோட் செய்தாலும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாய், புதிதாய் தோன்றும் புத்தகங்கள் மட்டுமே விற்கும், கவனிக்கப்படும். மற்ற நூல்கள் பரபரப்பு அடங்கியதும் செத்து விடும்.
5)   நம் புத்தகங்கள் பத்து பத்தாய் விமர்சனம் எழுத வேண்டி பிற எழுத்தாளர்களுக்கு அனுப்புவதனால் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு எழுத தேவையிருந்தால், ஆர்வம் இருந்தால், நேரம் இருந்தால் ஒழிய எழுத மாட்டார்கள். ஆனால் உங்கள் நூல் குறித்த ஒரு பரிச்சயத்தை எழுத்தாளர்கள் இடையே நீங்கள் இதன் வழி ஏற்படுத்த முடியும்.
6)   ஒரு புத்தகம் ஏன் கவனிக்கப்பட்டு விரும்பப் படும் என்பது அதை எழுதிய எழுத்தாளனுக்கே பல சமயங்களில் புரியாது. அவன் முக்கியமாய் நினைக்கும் புத்தகம் ஒன்று வாசகர்களால் புறக்கணிக்கப் படலாம். இதை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7)   புரொமோஷன் என்பது நின்று போன காரை பத்து பேர் சேர்ந்து தள்ளி விடுவதைப் போலத் தான். ஓடுகிற வண்டியென்றால் ஓடும். இல்லாவிட்டால் திரும்பவும் நின்று விடும். அடுத்தவர்களின் வண்டியெல்லாம் தள்ளி தள்ளியே ஓட்டுகிறார்களே என நாம் கவலை கொள்ளக் கூடாது. முடிந்தால் முடியும். அவ்வளவு தான்.
8)   புரொமோஷன் முக்கியம் தான். ஆனால் அதையும் தாண்டி புத்தகத்துக்கு ஒரு ஆயுள் உண்டு. வாசிக்க வாசிக்க புதுமை மாறாத புத்தகம் பத்து வருடங்கள் கூட வாழும். புத்தக கண்காட்சியை ஒட்டிய குறுகுன பரபரப்பை மட்டுமே ஒரு நூலின் ஆயுள் என நாம் நம்பக் கூடாது.
9)   ஒரு புத்தகம் வெளியானதுமே, அதாவது ஒரே வாரத்தில் அல்லது மாதத்தில், பத்து, இருபது, முப்பது என அதற்கு இணையத்தில் விமரசனங்கள் வர வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. வெளியாகி ஒரு வருடம் கழித்தும் அந்நூலுக்கு விமர்சனம் வந்தால் தான் மகிழ்ச்சி. அப்போது தான் அதற்கு ஆயுள் உண்டென என அர்த்தம். பொறுமை முக்கியம்.
10) கடைசியாக, உங்கள் நூலுக்கு விமர்சனங்கள் வர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதற்கு கடுமையாய் உழைக்க வேண்டும். அதற்கென மூன்று மாதங்கள் ஒதுக்கி பணமும் செலவழிக்க வேண்டும். கூச்சப்படக் கூடாது.

பின்குறிப்பு: இதை நான் எழுத காரணம்: ஒரு நண்பர் ஒரு மாதத்துக்கு முன்பு தன் நாவலை எனக்கு தந்து மதிப்புரை எழுதக் கேட்டுக் கொண்டார். நான் அவரிடம் மேற்சொன்ன விசயங்களை எல்லாம் விளக்கினேன். ஆனால் அவரோ பிடிவாதமாய் என் நூலுக்கு பெயர் கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது என அப்போது கூறினார். நானும் வாங்கிக் கொண்டேன். நேற்று எனக்கு போன் செய்து அவர் கடுமையாய் திட்டினார். ”என் புத்தகத்தை பற்றி நான்கு வரிகள் எழுத முடியாதா? புத்தகத்தை திரும்ப கொடுங்கள். வேறு யாரிடமாவது எழுதக் கொடுக்கிறேன். உங்களிடம் புத்தகம் இருப்பது வீண்” என கொதித்தார். அவரைப் போன்ற நண்பர்களுக்காக தான் மேற்சொன்ன பதிவு.