Wednesday, January 11, 2017

எழுத்தாளனின் கலாச்சார அதிகாரம்

நேற்று நண்பர் சர்வோத்தமனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் எழுத்தாளர்களின் கலாச்சார அதிகாரம் பற்றி குறிப்பிட்டார். எழுத்தில் பெரும் சமூக அங்கீகாரமோ பணமோ இல்லை. சொல்லப் போனால் இத்தனை பேர் வருடாவருடம் மலைக்கு மாலை போடுவது போல் நிறைய விரதங்கள் இருந்து எழுதி புத்தகம் போட்டு, அவர்களில் சிலர் கூடுதலாய் செலவு செய்து புத்தகத்தை புரமோட் செய்வது எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் அபத்தமாய் உள்ளது. இதில் இருந்து அவர்களுக்கு கிடைப்பது என்ன? கலாச்சார அதிகாரம் என்றார் சர்வோத்தமன்.
இதையே என் நண்பர் ஒருவர் வாசகர்களின் பேரன்பு என்பார். இன்னொருவர் தோழமை என்பார். மற்றொருவர் பிரியம் என்பார். கலாச்சார அதிகாரம் என்ற சொல் எனக்கு சரியாகப் படுகிறது.
அதாவது ஒரு கூட்டத்தில் யாரென்றே தெரியாத பத்து பேர் உங்களை தேடி வந்து கைகுலுக்கும் போது, புத்தகத்தில் கையெழுத்து வாங்கும் போது ஒரு கிளுகிளுப்பு ஏற்படுகிறது. அல்லது மற்றொரு எழுத்தாளனை பத்து பேர் சூழ்ந்து பேரன்பை காட்டும் போது நமக்கு பொறாமை ஏற்படுகிறது. உங்கள் சொல்லுக்கு என்று ஒரு மதிப்பு, அதைப் படிக்க, கேட்க என ஆட்கள். எவ்வளவு குறைவான எண்ணிக்கை என்றாலும் இது ஒரு அதிகாரம் தான். தெருவில் இஸ்திரி போடுகிறவருக்கோ ஓட்டல் கல்லாவில் இருப்பவருக்கோ இது இல்லை.

எனக்கு எப்போதும் இந்த அதிகாரம் கூச்சம் ஏற்படுத்தும். நேற்று வங்கிக்கு பணம் எடுக்க போயிருந்தேன். அங்கு என்னைப் போன்ற ஒரு வாடிக்கையாளர் என்னை தேடி வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். என் வாசகர் என்றார். என் பிளாகை படிப்பதாய் சொன்னார். உயிர்மை கூட்டங்களுக்கு தவறாமல் வருவதாய் சொன்னார். அவருக்கு என்னை விட இருபது வருடங்கள் மூப்பிருக்கும். நிறைய அனுபவங்கள் கொண்டவர். வெளிநாட்டுக்கு சென்று இருபது வருடங்கள் உழைத்து விட்டு இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு இந்த உலகைப் பற்றி, இந்த வாழ்க்கை பற்றி, என்னை விட பத்து மடங்கு அதிகமாய் தெரிந்திருக்கும். அவருக்கு தெரியாத ஒன்றையும் நான் சொல்லி விடப் போவதில்லை. அவருக்கு தெரிந்ததை ஒரு புது கோணத்தில் எழுதியிருக்கலாம். அதனாலே அவர் தன்னை என் வாசகன் என அறிமுகப்படுத்தியதும் எனக்கு கூச்சம் ஏற்பட்டது. அந்த சந்தர்பத்தில் கிடைக்கும் அங்கீகாரத்துக்கு பொருத்தமானவனாய் நான் என்னை உணரவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு.
எழுத்தாளனின் அதிகாரம் அவனில் இருந்து வரவில்லை என நினைக்கிறேன். இந்த அதிகாரம் எழுத்தின் அதிகாரம். எழுத்தாளனுக்கு அது de facto ஆக கிடைக்கிறது. வில்லை யார் எடுத்தாலும் வில்லாளன் தான். வில்லின் கம்பீரமும், பலமும், அதன் மீது பிறருக்கு உள்ள திகைப்பும் உங்களுக்கு உரியதாகிறது. குழந்தையாய் இருக்கையில் உங்களை எல்லாரும் அள்ளிக் கொஞ்சுவார்கள். அன்பை பொழிவார்கள். உங்கள் குற்றங்களை, சேட்டைகளை, பிடிவாதத்தை எவ்வளவு முன்கோபம் கொண்டவரும் பொறுத்து ஏற்பார்கள். ஆனால் வளர்ந்த பின் உங்களை – அதே உங்களை – ஏன் யாரும் அள்ளி கொஞ்சுவதில்லை? அப்படி என்றால் அந்த அன்பு, செல்லம் கொஞ்சம், ஆசை எல்லாம் உங்கள் மீதானதா அல்லது குழந்தை எனும் பிம்பம் மீதானதா?
 ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறது. அதை சூடிக் கொண்டதும் அதற்கு தோதான அன்பு, மரியாதை, அங்கீகாரம் எல்லாம் கிடைக்கிறது. ஒரு குழந்தைக்கு உள்ள அதிகாரம் வளர்ந்தவருக்கு இருப்பதில்லை. எழுத்தாளனுக்கும் இதுவே நேர்கிறது. அவனால் குழந்தை ஆக முடியாது. அதனால் அவன் எழுத்தாளன் ஆகிறான்.
குழந்தையின் அதிகாரம் என்பது ஆதியில் குழந்தைகளுக்கு என ஏற்பட்ட பிம்பத்தில் இருந்து வருகிறது. அது நம் மரபணுவில் பதிந்திருக்கிறது. தொன்மங்களை பற்றி ஆராய்ந்த கார்ல் யுங் எவ்வாறு பெரும்பாலான மரபுகளில் தெய்வத்தை குழந்தையாக, அதுவும் கைவிடப் பட்ட, ஆபத்தில் இருக்கும் குழந்தையாக, பார்க்கும் வழக்கம் உள்ளது என பேசுகிறார். அவர் கர்த்தரில் இருந்து கிருஷ்ணர் வரை உதாரணம் காட்டுகிறார். நமக்கு எந்த குழந்தையை பார்த்தாலும் அள்ளி கொஞ்ச தோன்றுகிறது. ஒரு யுத்தகளத்தில் ஒரு குழந்தை அனாதரவாய் நிற்கும் புகைப்படம் பார்த்தால் மனம் பதறுகிறது. அன்று முழுக்க அந்த சித்திரம் நம்மை தொந்தரவு செய்கிறது. குழந்தைகளுக்கு சமூகத்தில் உள்ள இடம் என்பது அது ஒரு குழந்தையாய் இருப்பதனால் மட்டுமே விளைகிற ஒன்று. அந்த தனிப்பட்ட குழந்தையின் குணநலன்களினால் அதற்கு கிடைக்கிற சிறப்பு அங்கீகாரம் அல்ல இது.
குழந்தை பிம்பத்தின் மீது நமக்குள் கனிவு மரபணு ரீதியானது என்றேன். இது மனிதனுக்கே உரித்தான சுபாவம் எனத் தோன்றுகிறது. குழந்தை என்றில்லை குட்டிக் குரங்கு, விழுந்து கிடக்கும் காக்காய் குஞ்சு, ரோட்டில் அழகாய் துள்ளி வரும் நாய்க்குட்டி என எதைப் பார்த்தாலும் தூக்கி உதவ, கவனிக்க, சீராக்க தோன்றுகிறது. ஆனால் ஒரு அம்மா நாய் தனது குட்டிக்கு மூன்று மாதங்கள் ஆனதும் அதை துரத்தி விடும். ஆனால் மனிதன் மட்டுமே வளர்ந்த பிறகும் தன் குழந்தையை ஒரு “குழந்தையாகவே” பார்க்கிறான். இதற்கு ஒரு காரணம் வேறு எந்த மிருகத்தை விடவும் மனிதக் குழந்தைகள் வளர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன என்பது. 15 ஆண்டு காலம் என எடுத்துக் கொண்டால் அதுவரை ஒரு மனிதக் குழந்தை பாதுகாப்பற்ற, பலவீன நிலையில் தான் இருக்கிறது. அதனாலே கூட நமக்கு நம்மை அறியாமலே சிறியதாய், பலவீனமாய் தோன்றுகிற எல்லாவற்றின் மீது ஒரு அக்கறை, பிரியம், கவனம், ஆசை ஏற்படுகிறது என நினைக்கிறேன். (இந்த உணர்வு இந்த சமூகத்தில் குழந்தைகளை பாதுகாக்க உதவுகிறது.)
சரி, எழுத்தாளனுக்கு வருவோம். ஒரு காலச்சுவடிலோ உயிர்மையிலோ உங்கள் கதை வெளியாகும் போது அப்பத்திரிகையின் அதுவரையிலான இதழ்களில் எழுதிய அத்தனை மகத்தான எழுத்தாளர்களின் வெளிச்சமும் உங்கள் எழுத்தின் மீது விழுகிறது. நீங்கள் வெளிப்படுத்தும் கவித்துவம், சமூகக் கோபம், மிடுக்கு, கம்பீரம் அனைத்துமே உங்களுக்கு முன்பு எழுதியவர்களின் சொற்களின் வெளிச்சத்தால் அதிக கவனம் பெறுகின்றன. ஒரு கண்ணாடியின் வெளிச்சத்தை மற்றொரு கண்ணாடி வாங்கி பிரதிபலிப்பது போல் இது நிகழ்கிறது. நீங்கள் கவிதை நூல் வெளியிடும் போது இதுவரை தமிழில் சாதித்த அத்தனை கவிகளின் மதிப்பும் அங்கீகாரமும் உங்கள் மீதும் இயல்பாக கவிகிறது. ஒரு சிறுகதையாளனாய் உங்களை அறியப்படுத்தும் போது நீங்கள் பெறும் கலாச்சார அதிகாரம் என்பது உங்களுடையது அல்ல. புதுமைப்பித்தனின், அசோகமித்திரனின், இமையத்தின், சு.ராவின், எஸ்.ராவின், ஜெ.மோவின் அத்தனை பிம்பங்களும் உங்களுக்கு பின்னால் வந்து நிற்கின்றன. என் ஒவ்வொரு சொல்லுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் எனக்கு முன் எழுதப்பட்ட லட்சக்கணக்கான சொற்களில் இருந்து வருகின்றன. இந்த சமூகத்தில் எனக்கு முன்பு பல எழுத்தாளர்கள் எழுத்தாளன் எனும் பிம்பத்திற்கு ஒரு மரியாதையை (பெரும் புகழ் இல்லாவிட்டாலும்) ஏற்படுத்தி இருக்கிறார்கள். எழுத ஆரம்பித்ததும் எனக்கும் அது கிடைத்து விடுகிறது. என் கைகளில் சுடர் விடும் இந்த ஒளி என்னுடன் கைகோர்க்கும் எவருக்கும் கிடைத்து விடும். இந்த சங்கிலித் தொடர் முடிவற்றது.
இதனால் தான் என்னை விட அறிவும் அனுபவமும் மிகுந்த ஒரு ஆள் என்னை தன் வாசகர் என கூறிக் கொள்ள துணிகிறார். அவர் என் வாசகர் அல்ல. நான் கையாளும் மொழியின், அதன் பின் உள்ள லட்சக்கணக்கான சொற்களில் உறைந்துள்ள அறிவின், உணர்ச்சிகளின், குறியீடுகளின் வாசகர். எப்படி காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி காந்தி இல்லையோ அதே போல் இந்த பிம்பம் என்னுடையது அல்ல. நான் இதில் தற்காலிகமாய் குடியிருக்கும் ஒருவன். அதனாலே எனக்கு கூச்சம் ஏற்படுகிறது.


No comments: