Sunday, January 1, 2017

ஏன் பேலியோ எல்லாருக்கும் சரிப்படாது


அனைவருக்கும் பேலியோ பொருந்தாது. என் தோழி ஒருவருக்கு நீரிழிவு உண்டு. அவர் பேலியோ உணவை உண்டதில் அவருக்கு சர்க்கரை அளவு வெகுவாய் குறைந்து மயக்கம் போடும் நிலைக்கு சென்று விட்டார். அதற்கு முக்கிய காரணம் அவர் தன் உடல்நிலை என்ன, அதற்கு போதுமான உணவு எவ்வளவு என்பது குறித்து போதுமான ஆய்வு செய்யவில்லை. தமிழில் பேலியோ குறித்து வந்துள்ள சில நூல்கள், கட்டுரைகள் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் நான் படித்த மட்டிலும் பழங்களை நிச்சயம் உண்ணலாம். தமிழ் பேலியோ நிபுணர்களை கராறாய் பின்பற்றின தோழி வெறுமனே காய்கறிகளை மட்டும் உண்டார். அவரால் அதிகமாய் அசைவம் உண்ண முடியாது. இதனால் அவரது உணவு கலோரிகள் மிகவும் குறைந்து, ஆரோக்கியமற்றதாக மாறி விட்டது.

மற்றொரு நண்பரும் இதே தவறை செய்தார். முதல் தவறாக (படிப்படியாய் அன்றி) தடாலடியாக பேலியோவுக்கு மாறினார். இரவு அவர் வெறும் வெண்ணெய் கட்டி மற்றும் காய்கறி உணவை எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு வாயுத்தொல்லை அதிகமாகி விடிகாலையில் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். மாரடைப்பு வந்து விட்டதென அஞ்சி அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெறும் வாயுத்தொல்லை தான் என உறுதிப்படுத்தினர். அதனால் நண்பர் இனிமேல் பேலியோ விளையாட்டெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.
ஓவியர் சண்முகவேல் இதே போல் பேலியோ உணவை சரிவர புரிந்து கொள்ளாமல் பின்பற்றியதில் அவருக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டு மிகவும் நொடிந்து போனதாய் கேள்விப்பட்டேன்.
பேலியோவை பொறுத்த மட்டில் customization என்பது மிக முக்கியம். அதாவது யாரோ கொடுக்கிற உணவு அட்டவணையை நாம் கண்ணை மூடி பின்பற்றக் கூடாது. நாமாக நிறைய படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இறுதியாக நம் சுவைக்கு, உடல் நிலைக்கு எது பொருந்தும் என நாமாக தான் முடிவு செய்ய வேண்டும். என் நண்பர் ஒருவர் பேலியோவை முன்னெடுக்கும் ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றார். அவர் கொடுத்த் அட்டவணைப்படி உண்ணத் துவங்கினார். அது அவருக்கு தோது படவில்லை என்பது மட்டுமல்ல உடம்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தின. எப்படி ஆண்டிராய்ட் போனை நம் தேவைக்கு ஏற்றபடி customize செய்கிறோமோ அதே போல் பேலியோவையும் வடிவமைக்கலாம். உதாரணமாய், பேலியோவில் பால் உணவு கூடாது. ஆனால் எனக்கு பால் பிடிக்கும். அதனால் நான் பால் எடுத்துக் கொள்கிறேன். காலையிலும் மதியமும் ஏன் இரவிலும் கூட கறி, மீன், முட்டை உண்ண பேலியோ நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் அது முடியாது. அதனால் நான் ஒரே வேளை தான் கறி சாப்பிடுகிறேன். மீதி நேரம் காய்கறி, பழங்கள் உண்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பழங்கள் மிக பிடிக்கும். தேங்காயும் பிடிக்கும். ஆக, இந்த இரண்டையும் உணவில் அதிகமாய் சேர்க்கிறேன். முடிந்தளவு காய்கறிகளும் உண்கிறேன். பழங்களிலும் எவை எவை என் ரத்த சர்க்கரையை பாதிக்கும் என சோதித்து அறிந்து வைத்து அவற்றையே உண்கிறேன். மதியம் உண்பதற்கு எனக்கு தேங்காயும் பழங்களுமே தாராளம். ஆனால் மற்றொருவருக்கு இவை பிடிக்காமல் போகலாம். அவர் தன் சுவைக்கு, உடல்வாகுக்கு ஏற்றபடி உணவை வடிவமைக்க வேண்டும்.
பேலியோ உணவுமுறை கீட்டோஜெனிக் டயட் எனப்படுகிறது. அதென்ன கீட்டோஜெனிக்? பொதுவாக நாம் உண்ணும் உணவு சர்க்கரையாக மாறும். அதன் பிறகு அது ஆற்றலாக மாற்றப்படும். ஒருவேளை நாம் விரதம் இருந்தால் உடம்பு கொழுப்பை ஆற்றலாக மாற்ற முயலும். அப்போது உபவிளைவாக தோன்றுகிறவை தான் கீட்டோன். இப்படி கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்தும் முறையை தான் ketogenic டயட் என்கிறோம். பேலியோவில் நேரடியான மாவுச்சத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் உள்ள சத்துகள், கறியில் உள்ள புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடல் கீட்டோஜெனிக் முறையில் ஆற்றலாக மாற்ற வேண்டும். அதாவது உணவில்லாத வேளைகளில் உடம்பு செயல்படும் முறைக்கு அதை நிரந்தரமாக மாற்றுகிறோம் (போனில் power saving mode போல).
 இதன் ஒரு பலன் என்னவென்றால் ரத்த சர்க்கரை அதிரடியாய் ஏறி இறங்கி சிக்கல் ஏற்படுத்தாது. இது நீரிழ்வு நோயாளிகளுக்கு அருமையான விசயம். ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே சீராக இருக்கும்.
 உடல் பருமன் கொண்டோருக்கும் கூட இது பலன் தரும். உடல் தன் ஆற்றலுக்காய் கொழுப்பை கரைக்கும் போது இயல்பாகவே எடை குறையும்.
பேலியோவில் உடல் எடை குறைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மாவுச்சத்து மிக்க தானிய உணவு ஒருவித போதை தரக் கூடியது. சுவையான சாம்பார் ஊற்றி ஒரு தட்டு சோறு சாப்பிடுகிறீர்கள். அடுத்து நல்ல வாசனையுடன் ரசம் வருகிறது. இன்னொரு கரண்டி சோறு சாப்பிடத் தோன்றும். பாயசம் வருகிறது. பிரமாதம். இன்னொரு கிண்ணம் சாப்பிட ஆசை ஏற்படும். இப்படி தானிய உணவு நம்மை மேலும் மேலும் கூடுதலாய் சாப்பிட தூண்டும். அது மட்டுமல்ல வயிறும் விரிந்து கொண்டே போகும். ஆனால் புரத உணவு அப்படி அல்ல. நீங்கள் என்னதான் சுவையாக உணர்ந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சிக்கனை தின்ன முடியாது. பழங்களும் அப்படியே. ஐந்து லட்டு முழுங்கலாம். பத்து இட்லியை சூடாய் சட்னியுடன் தின்னலாம். வயிறு இன்னும் கொடு என கேட்கும். ஆனால் ஐந்து ஆப்பிள்களை சேர்ந்தாற் போல் தின்ன முடியுமா? இரண்டு சாப்பிட்டாலே வெறுத்து விடும். பேலியோ உணவு அதன் இயல்பிலேயே போதையானதோ ஒரு பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்குவதோ (addictive) அல்ல. அளவாகத் தான் உண்ண முடியும். அது மட்டுமல்ல, பேலியோ பழகின பின் எனக்கு இப்போது தானிய உணவுகளைக் கண்டால் எச்சில் ஊறுவதில்லை. இனிப்பை யாராவது வழங்கினால் கூட கொஞ்சம் சுவைத்ததும் வயிறு வேண்டாம் என்கிறது. முன்பு வெகுசுவையாய் நான் கருதிய பல உணவுகள் மீது இப்போது ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. நானாகவே வெறுத்து ஒதுக்கவில்லை. என் நாவே அவற்றை மறுக்கிறது. சுவை என்பது முழுக்க நம் பழக்கங்களால் கட்டமைக்கப்பட்டது தானே!
 இதனால் தொடர்ந்து பேலியோவை பின்பற்றுகிறவர்கள் உடற்பயிற்சி இல்லாமல் கூட இளைத்து விடுவார்கள்.
ஆனால் ஏற்கனவே ஒல்லியாக இருப்பவர் பேலியோவுக்குள் வரலாமா? இது சற்று சிக்கலானது. அவர்கள் தம் உடல் தேவைக்கு ஏற்ப சரியான அளவு உண்ண வேண்டும். ஏனென்றால் உடம்புக்கு பேலியோ உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் போதுமானதாக இல்லாவிட்டால் கரைப்பதற்கு உடம்பில் போதுமான கொழுப்பு இருக்காது. புத்தாண்டு இரவில் உயிர்மையில் உணவருந்திக் கொண்டிருக்கும் நண்பர் விநாயக முருகனை கண்டேன். பிரியாணியை புரட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். “நீங்க எப்போ பேலியோவை கை விட்டீங்க?” என கேட்டேன். அவர் ”சமீபமாக” என்றார். அவர் வெகுவாக எடையை குறைத்து விட்டார். (ஏற்கனவே அவருக்கு நடுவாந்தரமான எடை தான்.) இப்போது ஜிம்மில் எடை தூக்கி பயிற்சி செய்வதால் பேலியோ உணவு போதுமானதாக இல்லை, அதனாலே தானிய உணவுக்கு மீண்டதாய் சொன்னார். இது மிகச்சரியான அணுகுமுறை. அவர் தன் உடலுக்கு ஆற்றல் எவ்வளவு தேவை என புரிந்து அதற்கு ஏற்றாற் போல் உணவையும் தீர்மானிக்கிறார். உணவைப் பொறுத்த மட்டில் பிடிவாதம் கூடாது. நம் தேவைகளே நாம் பேலியோவில் இருக்கிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
ஏற்கனவே ரத்தக்கொழுப்பு உள்ளவர்கள் பேலியோவுக்குள் வரலாமா? அவர்கள் மிகுந்த கவனம் காட்ட வேண்டும். கொழுப்புணவை குறைத்து, புரத, காய்கறி, பழ உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். ரத்த பரிசோதனை செய்து பேலியோவினால் ஏதாவது சிக்கல் ஏற்படுகிறதா என பார்க்க வேண்டும். இதையே மாரடைப்பு வியாதிக்காரர்களுக்கும் சொல்லலாம். சமீபத்திய ஆய்வுகள் நமது ரத்த கொழுப்புக்கு காரணம் கொழுப்புணவு அல்ல என வலியுறுத்துகின்றன. நாம் சர்க்கரை (மாவு) சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்பதனால் தான் நமது ரத்த கொழுப்பு அதிகமாகிறது. அதாவது வாழைக்காய் சிப்ஸை விட, வெண்ணெயை விட அரிசி, கோதுமை, மைதா மற்றும் கோக், பெப்ஸி ஆபத்தானவை. இவை தான் உடம்பில் சென்று கொழுப்பாய் மாறி தமனிகளை அடைக்கின்றன. ஆக, மாரடைப்பு கோளாறு கொண்டவர்களுக்கு கூட பேலியோ உதவும் என்றே தோன்றுகிறது.

முக்கியமாய், பேலியோ அனைவருக்கும் ஆனது அல்ல. சிலர் உடல்வாகுக்கு அது ஒவ்வாமல் ஆகலாம். அவர்கள் தவிர்ப்பது நல்லது.அவரவர் தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்த வேண்டும். உடல்வாகு, வியாதிகள், சுவைக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப இவ்வுணவு முறையை வடிவமைக்க வேண்டும். முக்கியமாய், அடுத்தவர் உணவு அட்டவணையை கண்மூடித்தனமாய் நாம் பின்பற்றுதல் ஆகாது.
பேலியோ உணவு நம் மனச்சோர்வுக்கு நல்லது. ஆற்றலை பெருக்கி நம் இயல்பான உற்சாகம் வடியாமல் பார்த்துக் கொள்கிறது. இது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன்.

4 comments:

Shankar G said...

தமிழ் பேலியோ நிபுணர்களை கராறாய் பின்பற்றின தோழி வெறுமனே காய்கறிகளை மட்டும் உண்டார். அவரால் அதிகமாய் அசைவம் உண்ண முடியாது. இதனால் அவரது உணவு கலோரிகள் மிகவும் குறைந்து, ஆரோக்கியமற்றதாக மாறி விட்டது.

மற்றொரு நண்பரும் இதே தவறை செய்தார். முதல் தவறாக (படிப்படியாய் அன்றி) தடாலடியாக பேலியோவுக்கு மாறினார். இரவு அவர் வெறும் வெண்ணெய் கட்டி மற்றும் காய்கறி உணவை எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு வாயுத்தொல்லை அதிகமாகி விடிகாலையில் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். //

அந்தத் தமிழ் பேலியோ நிபுணர்கள் யார் என்று தெரியவில்லை. தமிழில் பேலியோவை முன்னெடுத்த ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் காய்கறி மட்டும் அல்லது வெண்ணெய் மட்டும் உண்ணச் சொல்வதில்லை. கொடுக்கப்படும் அட்டவணையில் தேவையான கலோரிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டே தரப்படுகிறது. பேலியோவின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் முயற்சிப்பவர்கள் தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்புவார்கள்.

டயபடிக் இருப்பவர்களை 30 நாட்கள் க்ளுக்கோ கிராப் எடுங்கள் என்று சொல்வதே எந்த உணவு அவர்களுக்கு ரத்த சர்க்கரையை ஏற்றுகிறது என்று அறிந்துகொள்ளத்தான். பால், நல்லெண்ணெய், காலிப்ளவரே அபரிமிதமாக ரத்த சர்க்கரையை ஏற்றிய சம்பவங்கள் உண்டு. முழு ரத்தப் பரிசோதனை செய்யாது இந்த உணவுக்கு மாற நினைப்பது, ருசியிலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது, சரியாக நீர் அருந்தாதது, தன் உடலில் என்ன பிரச்சனைகள் என்று அறியாதது போன்ற பல காரணிகள் பல சிக்கல்களை வரவழைக்கும்.

போக, எந்த உணவு மாற்றம் மற்றும் மருந்துகளை இரவில் முயற்சிப்பது ஆபத்து. மருத்துவ உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். இரவில் காய்கறி உண்பதும் தவறு இதற்கான காரணங்கள் நூற்றுக்கணக்கானமுறை குழுவில் விளக்கப்பட்டிருக்கிறது.

Balaji said...

Have you tried vegan diet ? That's good for diabetic people.

Nagendra Bharathi said...

அருமை

Govindveerakkaran said...

நான் படித்த வரையில் கொழுப்பு உணவுடன் 50-60கிராமுக்கு மேல் மாவுசத்து உணவை எடுப்பது என்பது சில தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம். பழங்களில் (எல்லா பழங்களும் ) பெரும்பாலும் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே பழங்கள் சாப்பிட்டாலும் அது 50-60கிராமுக்கு மேல் மாவு சத்தை அதிகப்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தானியங்களில் உள்ள PHYTIC ஆசிட் நம் உடலுக்கு பிரச்சினை உண்டு பண்ணக்கூடியது. எனவே பலோவ் வந்தால் முற்றிலும் PALEO வாக இருப்பது நல்லது. PALEO வை சைடு டிஷாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் கட்டாயம். மேலும் PALEO என்பது ஒரு வாழ்க்கை முறை, அது மருத்துவம் அல்ல.