Sunday, January 1, 2017

நான் பேலியோவுக்குள் வந்த கதை

நான் கடந்த சில மாதங்களாக பேலியோவை பின்பற்றி வருகிறேன். என் நோக்கம் எடை குறைப்பு அல்ல. (ஆனாலும் சில கிலோக்களை இந்த காலகட்டத்தில் குறைத்து விட்டேன் தான், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல்.) பத்து வருடங்களாக நீரிழிவுடன் போராடி வருகிறேன். இந்த வருடங்களில் மருந்துகளும் உடற்பயிற்சியும் காப்பாற்றாத நிலையில், பேலியோ உணவு எனக்கு அபாரமாய் உதவியது. என் ரத்த சர்க்கரையை வேறென்றுமே சாத்தியப்படாத ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மருந்துகளை வெகுவாக குறைத்து விட்டேன். இதை ஒரு அற்புதம் என்று தான் என்னளவில் சொல்வேன்.

 என்னுடைய நீரிழிவை brittle diabetes என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரை அளவு ஒன்று மிக குறைவாக ஆகி 40க்கு கீழ் செல்லும். அல்லது எகிறி 400ஐ தொடும் (ஆரோக்கியமான அளவு 120-180 வரை). மாத்திரை, இன்சுலின் என் சர்க்கரை அளவு நிலையாக வைக்க உதவவில்லை. எனக்கு brittle diabetes உடன் dawn phenomenon எனும் சிக்கலும் உண்டு. அதாவது விடிகாலை என் ரத்த சர்க்கரை தானாக எகிறும். நான் உணவே எடுக்காத போதும் என்னை மீறி நிகழும் பிரச்சனை இது. இதை சமாளிக்க நான் இரவு முழுக்க நீடிக்கும் நீண்ட வேளை இன்சுலின் எடுத்து வந்தேன். இந்த இன்சுலின் என் சர்க்கரை அளவை விடிகாலையில் சீராக வைக்கும். ஆனாலும் காலை உணவின் போது என் சர்க்கரை அளவு மீண்டும் ஹை ஹம்ப் அடிக்கும். இதனால் நான் காலையில் மிக அதிகமாய் இன்சுலின் (60-70 யூனிட் வரை) எடுத்து விட்டு குறைவான கலோரிகள் கொண்ட ஓட்ஸ் போன்ற உணவை எடுத்து வந்தேன். இந்த அளவு அதிக இன்சுலின் பகல் முழுக்க என் ரத்த சர்க்கரை தேவைக்கு அதிகமாய் அளவை குறைத்தபடியே வரும். இதனால் நாள் முழுக்க பசியும் அசதியுமாய் இருப்பேன். விளைவாக எதையாவது சாப்பிட்டபடி இருப்பேன். இன்சுலின் பசியை தூண்டுவதுடன் எடையையும் அதிகரிக்க வைக்கும். 24 மணிநேரமும் பசியில் இருக்கிறீர்கள். அதை தணிக்க அதிகமாய் உண்டால் ரத்த சர்க்கரை எகிறும். இது தான் ஐந்து வருடங்களாய் என் விதியாக இருந்தது. ஊசி முனையில் தலைகீழாக தவமிருக்கும் நிலை அது.
என் பிரச்சனை இவ்வளவு தீவிரமாக காரணம் நான் எடுத்து வந்த தானிய உணவு. தானிய உணவு உடனடியாய் சர்க்கரையாக மாறி உடல் முழுக்க செல்லும். அப்போது என் ரத்த சர்க்கரை அதிகமாக, அதை கட்டுப்படுத்தும் இன்சுலின் என் உடலில் இயல்பாக இல்லை. நான் வெளியில் இருந்து இன்சுலின் ஊசில் மூலம் செலுத்த வேண்டும். இந்த இன்சுலின் என் ரத்த சர்க்கரையை குறைக்கும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து கொஞ்ச நேரத்தில் உறங்க செல்லும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. முன்பு நான் உண்ட உணவின் ஒரு பகுதி ஆற்றலாய் மாறி திசுக்களுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும். இன்சுலின் ஆற்றல் இழக்கும் வேளையில் இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை வெளியே வந்து மீண்டும் என் ரத்தசர்க்கரையை எகிற வைக்கும். அதாவது நான் மதியம் உண்ணும் உணவின் கலோரிகள் என் ரத்த சர்க்கரையை உயர்த்தாமல் இருக்கும்படி என் இன்சுலின் பார்த்துக் கொள்ளும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து உறங்கப் போனதும், மாலை ஆறு மணிக்கு உடம்பில் காலியாகாத கலோரிகள் விழித்துக் கொண்டு ரத்த சர்க்கரையை தட்டி எழுப்பும். இரவு நாம் தூங்கும் போது வீட்டில் பல ஓட்டைகளில் இருந்து எலிகள் வெளியே வந்து கும்மாளமடிப்பது போன்றது இது.
அதே போல நான் அதிகமாய் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் நாள் முழுக்க என் உடம்பில் வேலை செய்வதால் அடிக்கடி ரத்த சர்க்கரை வெகுவாய் குறைந்து மயக்கம் ஏற்படும். என்னால் இன்சுலின் அளவையும் குறைக்க முடியாது – சர்க்கரை எகிறும். சரி, இன்சுலினை குறைவாக போட்டாலோ அடிக்கடி உடம்பு சர்க்கரைப் பாகாய் மாறி விடும்.
இவ்வளவு பிரச்சனைகளோடு நான் தவித்துக் கொண்டிருந்தேன். மருத்துவர்கள் மருந்தை மாற்றுவார்கள். உடற்பயிற்சி செய்ய சொல்வார்கள். ஆனால் எதுவும் எனக்கு உதவவில்லை. ஏனென்றால் என் பிரச்சனை உணவில் இருந்தது. மருத்துவர்கள் என்னை வழக்கமான உணவை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார்கள். கொழுப்பும் இனிப்பும் மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சோறு, தோசை, இட்லி, சப்பாத்தி என பிரதானமாய் உண்ண வேண்டும்.
நான் ஏற்கனவே பேலியோ குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது ஒரு சமநிலையற்ற உணவுமுறை எனும் எண்ணம் இருந்தது. பல நூறு வருடங்களாய் நம் முன்னோர்கள் உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்த உணவுமுறையில் என்ன குறை இருக்க முடியும் என வியந்தேன். சில மாதங்களுக்கு முன்பு நண்பர் விநாயக முருகனை ஒரு இலக்கிய கூட்டத்தில் சந்தித்த போது அவர் நன்றாய் இளைத்திருந்தார். பேலியோ தான் காரணம் என்றார். தான் பின்பற்றும் உணவு அட்டவணையை குறிப்பிட்டார். அப்போது தான் எனக்கும் தூண்டுதல் ஏற்பட்டது.
நான் எதையும் தடாலடியாய் செய்பவன் அல்ல. அதனால் மெல்ல மெல்லத் தான் உணவுமுறையை மாற்றினேன். முதலில் காலை உணவாக காய்கறி சாலட் முயன்று பார்த்தேன். மதியம் சோற்றை குறைத்து காய்கறிகளை அதிகப்படுத்தினேன். சில நாட்கள் கழித்து மதியம் கறியும் சோறும் சமமாக உண்ணத் துவங்கினேன். ஒருநாள் முழுக்க சோற்றை தவிர்த்தேன். மதிய உணவை முழுக்க மாற்றியதும் எனக்கு வயிறு கொஞ்சம் சிரமம் கொடுத்தது தான். அதற்கு முக்கிய காரணம் புதிய உணவு முறையில் எவ்வளவு இன்சுலின் எடுக்க வேண்டும் என எனக்கு தெரியாதது. பொதுவாக, உணவின் கலோரிகள் பொறுத்து இன்சுலின் அளவை தீர்மானிக்க வேண்டும். பாதி தட்டு சோறு உண்கிறேன் என்றால் 8 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். மதியம் பழம், முட்டை, காய்கறி சாப்பிடும் போது இந்த அளவு இன்சுலின் எடுத்தால் அரைமணியில் மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக்கும். கொஞ்சம் வாயு உபத்திரவமும் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களில் அது சரியாகி விட்டது. தோதான இன்சுலின் அளவையும் சுயபரிசோதனைகள் மூலம் அறிந்து கொண்டேன்.
 காலை உணவை பேலியோவுக்கு மாற்றியதுமே என் ரத்த சர்க்கரை சிறப்பான கட்டுப்பாட்டில் வருவதை உணர்ந்தேன். இன்சுலின் அளவையும் மூன்றில் ஒரு பங்காய் குறைத்துக் கொண்டேன். இது தான் எனக்கு பேலியோவுக்குள் தொடர்வதற்கான தூண்டுதலாக அமைந்தது.
 மதிய உணவை மாற்றிய பின் மாலையில் குறைவான ரத்த சர்க்கரை காரணமாய் நேரும் மயக்கம் நின்றது. நாள் முழுக்க அபாரமான ஆற்றல் கிடைத்தது. முன்பு எப்போதும் இல்லாத புத்துணர்ச்சியுடன் இருந்தேன். பொதுவாய் நீரிழிவு உள்ளோருக்கு எப்போதும் ஒரு சடவு, அசதி இருக்கும். ஒன்று, ரத்த சர்க்கரை குறையும் போது சோர்வு வரும். உணவை எடுத்துக் கொண்டதும், இன்னொரு பக்கம், ரத்த சர்க்கரை ஒரு ஜம்ப் அடிக்கும். அப்போதும் ஒரு மயக்கம், சோர்வு, தள்ளாட்டம் ஏற்படும். ஆனால் பேலியோவுக்கு மாறின பின் இந்த சடவு முழுக்க இல்லாமல் ஆனது. நாள் முழுக்க துடிப்பாக இருக்க முடிந்தது.
ஆனால் இரவுணவு தான் எனக்கு தலைவலியானது. இரவில் நான் வழக்கமாய் 32 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். இரவில் பேலியோ உணவு எடுத்துக் கொண்ட போது முதலில் இதை 20 யூனிட்டாக குறைத்தேன். இரவு ஒரு மணிக்கு சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. நள்ளிரவில் மீண்டும் அவசரமாய் உணவு எடுத்துக் கொள்வேன். இதற்காகவே முதல் 10 நாட்கள் நான் இரவு மூன்று மணி வரை விழித்திருப்பேன். உணவு உண்டு இரண்டு மணிநேரம் கழித்து சோதித்து பார்த்து, மீண்டும் உணவு அருந்தி மீண்டும் சோதித்து பார்த்து… இப்படி இரவு பதைபதைப்பாக கழியும். இன்சுலினை இரவில் மிகவும் குறைத்தால் சர்க்கரை அளவும் மிகவும் அதிகமாகி விடும். அந்த ரிஸ்கை எடுக்க நான் விரும்பவில்லை. மெல்ல மெல்ல இரவு நேர இன்சுலின் அளவை புரிந்து கொண்டேன். இரவில் சிக்கன் மட்டும் உண்பதென்றால் ஒரு அளவு, வெறும் முட்டை என்றால் அதை விட குறைவான அளவு. இந்த கடைசி கண்டத்தையும் தாண்டிய பின் என் நீரிழிவு யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.
கடந்த பத்து வருடங்களில் சாத்தியப்படாத ரத்த சர்க்கரை கட்டுப்பாடு இப்போது வந்து விட்டது. இத்தனை வருடங்களும் இந்த உணவு முறையை பின்பற்றவில்லையே என நான் என்னை நொந்து கொண்டேன். ஏனென்றால் நீரிழிவால் இரண்டு முறை மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பினேன். பேலியோவுக்கு பிறகு நீரிழிவின் மீதுள்ள அச்சம் விலகி விட்டது. பயிற்சி பெற்ற போலீஸ் நாய் போல் ரத்த சர்க்கரை என் ஆணைகளுக்கு இணங்கி ஒரே சீராக என்னுடன் ஓடி வருகிறது.
முக்கியமாய் முன்பு நான் ஒருநாளைக்கு 110 யூனிட் இன்சுலின் எடுத்து வந்தேன். இப்போது அதை 50 யூனிட்டாக குறைத்து விட்டேன். அதுவும் எனக்கு dawn phenomenon சிக்கல் இருப்பதால் தான் இவ்வளவும் கூட எடுக்க வேண்டியதாகிறது. இல்லாவிட்டால் மொத்தமே 20 யூனிட்டுக்குள் இன்சுலினை குறைக்க முடியும். நான் முதல் வகை நீரிழிவு நோயாளி. அதாவது இன்சுலினை உடம்புக்குள் செலுத்தியாக வேண்டும். இரண்டாவது வகை நீரிழிவாளர்களுக்கு உடம்பில் சொற்ப இன்சுலின் இயற்கையாக சுரக்கும். மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டால் சமாளிக்கலாம். இவர்கள் பேலியோவுக்கு மாறுவதானால் மாத்திரையை கூட விட்டு விடலாம் என தோன்றுகிறது. அதாவது தாம் நீரிழிவாளன் என்பதையே மறந்து வாழலாம்.

இவ்வளவு விபரமாய் நான் பேலியோ பற்றி கூறியது ஒரு நோக்கத்திற்காகத் தான். பேலியோ அனைவருக்குமானது அல்ல. ஏதாவது உடல் உபாதை இருந்தால் அதை சீராக்க பேலியோவுக்குள் வரலாம். சில மாதங்களில் உடல் எடையை குறைக்க பேலியோ பயன்படும். மற்றபடி மரபான உணவு முறையே பெரும்பாலானோருக்கு போதும். தேவையின்று உணவு முறையை மாற்றக் கூடாது. ஏன் என அடுத்த பதிவில் கூறுகிறேன்.

3 comments:

Kamaal said...

பேலியோ டயட் புத்தகத்தை படித்து முடித்துள்ள இந்த வேலையில் உங்கள் பதிவு அதனை பின்பற்ற தூண்டுகிறது என்று முடிக்கும்போது "பேலியோ அனைவருக்குமானது அல்ல" என்று முடித்துள்ளீர்கள். ஏன் என கூறினால் நல்லது!

குறிப்பு : நான் பித்தப்பை கல் கரைக்க ஹோமியோபதி மருத்துவத்தை தற்போது பின்பற்றுகிறேன் !!

velmurugan said...

நீரிழிவு உள்ள நீங்கள் பயன்படுத்தி விளக்கம் அளித்துள்ளது நம்பிக்கை
அளிக்கிறது
கொழுப்பை அதிகம் எடுத்து கொள்வதற்க்கு பயந்து வெளியில் நின்று
நீரிழிவுை அனுபவிக்க வேண்டி இருக்கிறது கூடவே இதய நோயும்
நன்றி

vic said...

best information