Wednesday, January 11, 2017

டொனால்ட் டிரம்பின் alt-right கொள்கையும் இந்தியாவின் மாற்று-இந்துத்துவாவும்

Image result for donald trumpImage result for narendra modi

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் ஏதோ கடவுளே மரித்துப் போனது போல் முற்போக்கு நண்பர்கள் பலர் தளர்ந்து போனார்கள். மிகுந்த கசப்புடன் அச்சத்துடன் “இனி என்னாகுமோ?” என கேள்வி கேட்டு பல ஆங்கில கட்டுரைகள் எழுதப்பட்டன. தம் வேலை பறிபோகுமோ என பயந்த தமிழ் ஐ.டி நண்பர்கள் கூட டிரம்பை எதிர்த்தனர். ஆனால் இன்னும் எந்த பூகம்பமும் நேரவில்லை. அமெரிக்காவில் கறுப்பர்களோ, ஆசியர்களோ தாக்கப்படவோ துரத்தப்படவோ இல்லை. இன்னும் நம் ஐ.டி வேலைகள் பறிபோகவில்லை. இது ஒன்றை காட்டுகிறது: ஒரு கட்சியும் அதன் தலைவரும், அவர்கள் பிரதிநுத்துவப்படுத்தும் அரசியலும் வெறும் குறியீடுகள் தாம். கொள்கைகள், நிலைப்பாடுகள், வன்முறை ஆகியவற்றை பொருளாதாரம் தான் தூண்டுகிறது, வழிநடத்துகிறது, தீர்மானிக்கிறது. நாம் அளிக்கும் மலிவான ஐ.டி உழைப்பு அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அவசியம். அதை அவர்கள் கைவிட முடியாது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் அல்லாதோரும் பல்வேறு நிலைகளில் பங்களிக்கும் ஒரு சிக்கலான அமைப்பு தான் அமெரிக்கா. அங்கு வெள்ளையர்கள் மட்டுமே வாழ்வதென்றால் அந்த அமைப்பு நொறுங்கிப் போகும்.

டிரம்பின் அடிப்படை அரசியல் என்பது alt-right என அறியப்படுகிறது. அதாவது மாற்று-வலதுசாரி அரசியல். மாற்று-வலதுசாரிகள் கறுப்பர்கள், ஆசியர்களை மட்டுமல்ல இஸ்ரேலிய யூதர்களையும் எதிர்க்கிறார்கள். அமெரிக்கா பிற தேசங்களின் அரசியலில் தலையிட்டு போர்கள் நிகழ்த்துவதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்துக்கும் எதிரானவர்கள். கிறித்துவ நம்பிக்கையின் அடிப்படையிலான அரசியலை விட இனவாத அடிப்படையிலான அரசியலை ஏற்கிறார்கள். குறிப்பாக வெள்ளையர்களை ஒரு குறுகின இனக்குழுவாய் அவர்கள் காண்கிறார்கள். அதனால அவர்களுக்கு யூத மனச்சாய்வும் இல்லை. அவர்கள் மரபான வலதுசாரிகளின் மென்மையான முற்போக்குவாதத்தை (பெண்ணிய, சிறுபான்மையினர் ஆதரவு) எதிர்க்கிறார்கள். அதாவது காலப்போக்கில் அமெரிக்காவில் வலதுசாரித்தனம் திரிந்து சற்றே முற்போக்குத் தன்மையும், யூத சாய்வும் கொண்டதாக மாறி விட்டது. அதே போல் ராணுவ நடவடிக்கைகளுக்காக பெரும் அமெரிக்க பணத்தை செலவழிக்கும், ஆயுத வியாபாரிகளுக்கு துணை போகும் ஒரு அமைப்பாக வலதுசாரிகள் மாறி விட்டார்கள். இதற்கான ஒரு மாற்று கொள்கை தான் alt-right. ராணுவ எதிர்ப்பை பொறுத்த மட்டில் மாற்ற்-வலதுசாரிகள் சற்றே மென்மையான இடதுசாரிகள் எனலாம். ஆனால் இனவாதம், ஆண்-மைய வாதம், அடையாளவாதம் அவர்களை தீவிர வலதுசாரிகள் ஆக்குகிறது. அதாவது மரபான வலதுசாரிகளும் இப்போதைய மாற்று வலதுசாரிகளும் சுலபத்தில் பிரித்தறி முடியாத படி, ஆனாலும் அதே நேரம் ஒருவரோடு மற்றவர்கள் வித்தியாசப்பட்டவராக, பின்னி முயங்கி போயிருக்கிறார்கள்.
இன்று இந்தியாவில் எழுச்சி பெற்றும் வரும் ஒருவித மாற்று-இந்துத்துவாவையும் நாம் இதை வைத்து புரிந்து கொள்ளலாம். மாற்று-வலதுசாரிகளைப் போல மாற்று-இந்துத்துவாவினரும் தம் பொருளாதார சிக்கல்களுக்கு சிறுபான்மையினரை காரணமாய் காண்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும் இந்தியாவில் மோடி வென்றதற்கும் அவர்களின் தேர்தல் காலத்திலான பொருளாதார நெருக்கடிகள் முக்கிய காரணம். ஒரு சமூகத்தில் பொருளாதார தளர்ச்சி ஏற்படும் போது பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பு அச்சமும், வறுமை குறித்த பதற்றமும் இனவாத எச்சரிக்கை உணர்வாக வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இது வளர்ந்து இனவாத வெறுப்பாக வெடிக்கிறது. பொருளாதார பயங்கள் சிறுபான்மையினர் மீது வாந்தி எடுக்கப்படுகின்றன. இந்த வெறுப்பு அலையில் நீந்தி மேலேறி வந்த மோடியும் டிரம்பும் தம் தேசத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதாய் வாக்குறுதி அளித்தே தம்மை அடையாளப்படுத்தினார்கள். இருவருமே மதவாதத்தை முன்னிறுத்தவில்லை. இதுவே அத்வானியின் இந்துத்துவாவுக்கும் மோடியின் இந்துத்துவாவுக்குமான வித்தியாசம். மோடி ஒரு ஆக்மார்க் மரபான இந்துத்துவாவாதி அல்ல. அவர் நேரடியாய் இஸ்லாமிய வெறுப்பை முன்னெடுக்க மாட்டார். ஆனால் மதவாதத்தை ஒரு அடையாளமாய், குறியீடாய் மட்டும் முன்வைப்பார். குஜராத்தில் முன்பு நிகழ்ந்த மதக்கலவரங்கள் இனி இந்தியாவில் எங்கும் நிகழ்வதை அவர் விரும்ப மாட்டார். மோடியுடையவது ஒரு “முற்போக்கு” இந்துத்துவா.
அமெரிக்க மாற்று-வலதுசாரிகளும் இந்திய மாற்று-இந்துத்துவர்களுக்குமான முக்கிய வித்தியாசம் இது: அமெரிக்க மாற்று-வலதுசாரிகள் இனவாத முன்னெடுப்பை ஒரு அடையாளமாய் பதாகையாய் பயன்படுத்துகிறார்கள். மதத்தை அல்ல. இந்திய மாற்று-இந்துத்துவர்களோ மதத்தை பதாகையாக தூக்கிப் பிடிக்கிறார்கள். (ஆரிய) இனவாதத்தையோ சாதியத்தையோ அல்ல. சொல்லப் போனால் மாற்று-இந்துத்துவா காலகட்டத்தில் இந்தியா முழுக்க இடைநிலை சாதிகளும், தலித்துகளும் இந்துத்துவாவின் கீழ் திரட்டப்படுகிறார்கள்.
இரு சாராருக்குமான முக்கிய ஒற்றுமை இந்த வாதம் – ”எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்; நாங்கள் தனிகுழு; எங்கள் மரபான அடையாளத்தை பறிக்காதீர்கள்; அதை உங்கள் முற்போக்கு விழுமியங்களால் கேலி செய்யாதீர்கள். நாங்கள் சுபிட்சமாக வாழ விரும்புகிறோம். எங்கள் மரபான நம்பிக்கைகளை, எந்த குற்றவுணர்வும் இன்றி, யார் குறுக்கீடும் இன்றி, பேண விரும்புகிறோம்.”
எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு ஐயனார் கோயிலை அதன் உரிமையாளர்கள் ஒரு பெரிய சாய்பாபா கோயிலாக மாற்றி கட்டியிருக்கிறார்கள். முன்பு அங்கு அடித்தட்டு வந்து ஆடு, கோழி பலி கொடுத்து மக்கள் வழிபடுவார்கள். நேற்று அங்கு குருக்கள் வந்து பூஜைகள் செய்தார்கள். சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலித்தார்கள். யானை வந்தது. கூட்டமாய் மத்திய வர்க்க பாபா பக்தர்கள் குழுமினார்கள். கோழி ரத்தத்திற்கு பதில் நைவேத்யமும் சுண்டலும் படைத்தார்கள். பிரசாதம் விநியோகித்தார்கள். காலையும் மாலையும் பஜனை பாடினார்கள். மக்கள் டோக்கன் வாங்கி பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என முறைப்படுத்தப்பட்டது. கோயில் வாசலில் இரு பூக்காரிகளும் ஒரு பிச்சைக்காரியும் வந்து தம்மை நிறுவிக் கொண்டனர். பிச்சைக்காரி மாலையில் ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பி சென்றாள். ஒரு சிறுதெய்வ வழிபாட்டுத்தலம் நிறுவனமயமாகி இந்துத்துவா மயமாகி விட்டது என ஒரு தோழியிடம் சொன்னேன். அவள் கோபமாய் திரும்ப கேட்டாள் “ஒரு கோயில் கட்டினால் உடனே அதை இந்துத்துவா என திட்டுவதா? அங்கே ஐயனாருடன் பாபாவும் இருந்து விட்டு போகட்டுமே. சமிஸ்கிருதத்தில் என்ன தப்பு? அதுவும் நம் மக்களின் மொழி தானே? பஜனை வெகுஜன மக்களின் வழிபாட்டு முறை தானே? அதை எப்படி நீ கேலி பண்ணலாம்?”
இந்த தோழி வழக்கமான இந்துத்துவாவாதி அல்ல. தன்னை அப்படி அடையாளப்படுத்த அவர் விரும்ப மாட்டார். அவர் மனித உரிமைகள், பெண்ணியத்தை முன்னெடுப்பவர். முற்போக்கானவர். அவர் ஒரு மாற்று-இந்துத்துவாவாதி. இளையதலைமுறையினர் இடையே, இணையத்தில் குறிப்பாய், அவரை போன்ற ஒரு பெரும் மாற்று தரப்பினர் படை இருக்கிறார்கள். அவர்கள் சாதியவாதிகள் அல்ல. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால் தம் மதத்தை, மரபை, சடங்கு சம்பிரதாயங்களை அவர்கள் முக்கியம் என நினைக்கிறார்கள். “நான் பூணூல் போட்டுக் கொள்வேன், என் சாதிக்குள் மணம் புரிவேன். அதில் என்ன தப்பு? என் மதத்தை என் உடையில் தரித்துக் கொள்வேன். அதில் எனக்கு என்ன கூச்சப்பட வேண்டியிருக்கிறது?’ என கேட்கிறார்கள். இதே மக்கள் குஜராத் கலவர வன்முறையையோ தருமபுரி கௌரவக் கொலைகளையோ ஏற்க மாட்டார்கள். இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும் எனும் மரபான இந்துத்துவாவினரை எதிரொலிக்க மாட்டார்கள்.

 இவர்கள் தமது இருப்புக்கு சாதி, மத அடையாளங்கள் அவசியம் என கோருகிறார்கள். முற்போக்கினர் முன்புள்ள கேள்வி இது: இவர்களை நாம் மரபான இந்துத்துவர்களாக மட்டும் கண்டு, கேலி செய்து பழித்து அந்நியப்படுத்த போகிறோமா அல்லது இவர்களின் அக்கறைகளை புரிந்து கொண்டு இவர்களுடன் உரையாடப் போகிறோமா?

நன்றி: கல்கி 

No comments: