Monday, December 5, 2016

செக்ஸ் ஒரு சின்ன விசயம் தான்…

”மோகமுள்” நாவலில் யமுனாவுக்காக பல ஆண்டுகளாய் காத்திருந்து இளமையை வீணாக்கி தவித்த பின் பாபுவுக்கு இறுதியில் அவள் மீதான் இச்சை நிறைவேறுகிறது. அவளுடன் கூடிய பின் அவனுக்கு சட்டென தோன்றும் “இது தானா? இதற்காகத் தானா இவ்வளவு ஆண்டுகள் மருகித் தவித்தேன்?” இந்த புணர்ச்சி ஒரு புனிதப்பயணத்தின் போது பாபுவும் யமுனாவும் ஒரு விடுதி அறையில் நிகழ்வதாய் தி.ஜா பொருத்தமாய் அமைத்திருப்பார். ஏனென்றால் பெரும் புனித தேடல்களுக்கு பின்னாலும் நிறைவேறாத காம இச்சை இருக்கிறது.
செக்ஸ் ஒரு மிகச்சின்ன விசயம் தான். ஆனால் அது கிடைக்காமல் போகும் போது அது ஒரு தலைவலியாக நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதை தவிர்க்கவே முடியாமல் ஆகிறது. அதை மற்றொரு எரிச்சலாய், உத்வேகமாய், வெறுப்பாய், பல்வேறு நெருக்கடிகளாய் மாற்றும் தேவை ஏற்படுகிறது. நிறைவேறாத இச்சை மனிதனை இரட்டை நாக்கு கொண்டவனாக ஆக்குகிறது. அவன் அடுத்தவர்களின் செக்ஸை கண்காணிக்க துவங்குகிறான். ஒழுக்க காவலன் ஆகிறான். அதிகம் சூடாகி பொங்கும் பால் பாத்திரம் போல் பாசாங்குகளால் நிரம்பி வழிகிறான். ஆனால் செக்ஸ் கிடைத்து விட்டால் அடுத்த நொடியே அவன் அமைதியாகிறான். தெளிவாய் சிரிக்கிறான். குளிர்கிறான். அடுத்த நாள் அவன் மனம் மீண்டும் தவிக்க துவங்குகிறது. இதனால் தான் தி.ஜா இதை ஒரு “முள்” என்றார்.

 ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் பல்வேறு அன்றாடத் தேவைகளில் ஒன்றாய் செக்ஸ் பார்க்கப்பட வேண்டும். ஆனால் அப்படி ஒரு சமூகம் எங்குமே இல்லை. திறந்தநிலை செக்ஸ் அனுமதிக்கப்படும் ஐரோப்பிய சமூகங்களில் கூட செக்ஸ் வறட்சி நிலவுகிறது. கைவிடப்பட்டவர்கள் அங்கும் விளிம்பில் கையேந்தி நிற்கிறார்கள்.
இது ஒரு சமூக, கலாச்சார சிக்கல் / பிரச்சனை மட்டுமே அல்ல. மிருகங்களுக்கும், பூச்சிகளுக்கும், எல்லா ஜீவராசிக்கும் இந்த தவிப்பு, வறட்சி, ஏக்கம் உண்டென நினைக்கிறேன். ஒரு காரணம் செக்ஸ் என்பது வருங்கால சந்ததியினரின் உருவாக்கத்துடன் சம்மந்தப்பட்டது. அதனால் அதில் தேர்வு முக்கியமாகிறது. தேர்வினால் போட்டி வருகிறது. போட்டியில் எப்போதுமே சிலர் தோற்கிறார்கள். அவர்கள் அரைவயிற்றுடன் அலைகிறார்கள். அதனால் தான் மனித சமூகம் நாகரிகமடையத் துவங்கியதும் பாலியல் ஒரு தொழிலாக மாற்றப்பட்டது. அது போட்டியில் தோற்கிறவர்களின் ஒரு தற்காலிக சரணாகதி ஆகிறது. செக்ஸின் ஒரு ஆதாரப் பிரச்சனை அதில் சமத்துவத்திற்கு இடமே இல்லை. அன்புக்கும் செக்ஸுக்கும் கூட சம்மந்தமில்லை. செக்ஸின் சாயல் அன்புக்கு ஏற்படலாம். ஆனால் இரண்டும் வேறு வேறு. இந்த காரணத்தால் தான் திருமண உறவுகளை மீறிய பிறழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஒருவரை நேசிக்கிறோம். மற்றொருவருக்காக ஏங்குகிறோம். ரெண்டும் உண்மையான உணர்வுகள் தாம். செக்ஸ் நம்மிடம் இல்லாத ஒன்றிற்கான நாட்டம். அன்பு நம்மிடம் இருப்பதை பகிர்வதற்கான நாட்டம்.
ப்ரியா தம்பி குமுதம் லைப் இதழில் எழுதி வரும் “மாயநதி” தொடரின் நவம்பர் முதல் வார கட்டுரையில் மேற்சொன்ன பிரச்சனையை பற்றி துணிச்சலாய் பேசுகிறார். ஒரே சமயம் ஒழுக்கவாதம் போதித்துக் கொண்டே முறைகேடாத உறவுகளுக்குள் இருக்கும் மனிதர்களை சித்தரிக்கிறார். சமூகத்தில் இது போன்ற பிறழ்வுகளை நாம் சுலபத்தில் புரிந்து கொள்கிறோம். ”பாவம், அவர்களுக்கு ஏதோ தேவை” என மனதுக்குள் நினைக்கிறோம். ஆனால் உரையாடலில் அவ்விசயம் வரும் போது சம்மந்தப்பட்ட ஆணையோ பெண்ணையோ பழிக்கிறோம். அதாவது செக்ஸ் ஒரு அவசியமான பசி, அதை எப்படியும் நிறைவேறியே ஆக வேண்டும் என நம் மனம் அறிகிறது. ஆனால் அறிவு மறுக்கிறது. இது தான் நம் சமூகத்தின் பிரச்சனை. இந்த முடிச்சை தான் ப்ரியா தொடுகிறார். இக்கட்டுரையில் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண் வருகிறார். திருமணமான அவரின் கணவர் ஒரு விபத்தில் படுக்க படுக்கையாய் இருக்கிறார். அவர் தன் கணவனுக்கு உதவ வரும் ஒரு ஆளுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். அதே நேரம் இப்பெண் பிற பெண்களின் ஒழுக்கத்தை மதிப்பிட்டு தீர்ப்பு சொல்பவராகவும் இருக்கிறார். தன் கணவிடம் அன்பும் விசுவாசமும் கொண்டிருப்பதாகவும், தன் தகாத உறவு ஒருவித காதல் என்றும் நியாயப்படுத்துகிறார். ஊரில் இதே போல் பாசாங்காய் வாழ்ந்த மற்றொரு பெண்ணைப் பற்றியும் ப்ரியா பேசுகிறார். தகாத உறவின் குற்றவுணர்வு இவர்களை எப்படி ஒழுக்க காவலர்களாய் இருக்க தூண்டுகிறது, இரட்டை வாழ்க்கையை எப்படி சுலபமாய் வாழப் பழகிக் கொள்கிறார்கள் என கட்டுரை விவாதிக்கிறது.
கட்டுரையில் என்னை கவர்ந்த மற்றொரு விசயம் செக்ஸ் நிறைவேறாத ஆண்கள் எப்படி வெளியில் சந்திக்கும் பெண்களை சாதாரணமாய் எதிர்கொள்ள முடியாமல் போகிறது எனும் பிரச்சனை. ஒன்று இந்த ஆண்களின் கண்கள் பெண் மார்புகளை மொய்க்கிறது. அதை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அல்லது உடல் மொழியில் ஒரு அசௌகரியத்தை காட்டுகிறார்கள். பெண்களிடத்து ஒரு நல்ல ஆண் நண்பனாய் இவர்களால் எளிதில் இருக்க முடிவதில்லை.

தமிழ் பெண்ணிய எழுத்தின் மூன்றாம் தலைமுறை என ப்ரியாவை குறிப்பிடலாம். அவருக்கு முன்பான தலைமுறையை சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் பலர் இந்த சிக்கலைப் பற்றி வெளிப்படையாய் இதுவரை எழுதியதில்லை. அவர்கள் துணிச்சலாய் திருமணம் செய்ய மறுத்து தனியாகவோ அல்லது துணையுடனோ வாழ்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எழுதுவது அவர்களுக்கு சுலபமாய் இல்லை. ஏற்கனவே தமது நேர்மையினால் கிடைத்த அவச்சொற்கள் போதும் என ஒதுங்கி விட்டார்கள். ஆனால் முதன்முறையாய் ஒரு புண்ணை உடைப்பது போல் ப்ரியா இப்பிரச்சனையை திறந்து விட்டிருக்கிறார். இனி இது மெல்ல மெல்ல ஆறட்டும்!

No comments: