Monday, December 5, 2016

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Image result for ஜெயலலிதா
ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை ஒன்றை பத்து வருடங்களுக்கு முன்பு படித்தேன். அதில் ஒரு காட்சி என் நெஞ்சை விட்டு நீங்காதது. குழந்தையாய் இருக்கும் போது ஜெயலலிதாவுக்கு விமானப்பணிப்பெண்ணாக பணி புரிந்த தன் அத்தை மீது அன்பும் மதிப்பும் அதிகம். தன் வீட்டிற்கு மேல் விமானம் பறந்தால் அவர் ஓடிச் சென்று மொட்டை மாடியில் நின்று பார்ப்பாராம். வளர்ந்த பின் விமானப்பணிப்பெண் ஆக வேண்டும் என அம்மாவிடம் அடிக்கடி கூறுவாராம். எனக்கு ஜெயலலிதா பற்றி யோசிக்கும் போதெல்லாம் மொட்டைமாடியில் நின்று விமானத்தை தலையுயர்த்தி நோக்கி, அங்கே அதில் தன் அத்தை செல்கிறாரா என கற்பனை செய்யும் ஒரு சிறுமியின் சித்திரம் தான் தோன்றும். வானத்தை எட்டிப் பிடிக்கும் அவா பின்னர் அவர் தமிழகத்தின் அதிகார உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர செய்தது.
சினிமா, அரசியல் ஆகியவை அவர் கனவுகளில் இருந்ததில்லை. இரண்டிலும் பெரும் வெற்றிகள் அவர் வாழ்வில் பிறகு மிக மிக எதேச்சையாய் தான் நிகழ்ந்தன. அவர் வாழ்வில் மேற்தட்டை அடைய வேண்டும், ஒரு வசதியான நவநாகரிகமான ஸ்டைலான வாழ்க்கை வாழ வேண்டும் என ஏங்கியிருக்கிறார். பின்னர் இந்த ஏக்கம் துணிச்சலாய், கட்டற்ற அதிகார, கௌரவ வேட்கையாய் அவருக்குள் வளர்ந்திருக்க வேண்டும். தனக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை இறுகப்பற்றிக் கொண்டு மேலே வரும் புத்திசாலித்தனமும் மூர்க்கமும் அவருக்கு இருந்தது.

எம்.ஜி.ஆரிடம் அபாரமான வசீகரமும் மக்கள் செல்வாக்கும் இருந்தது. அவர் அதற்காய் ஏதும் தனியாய் செய்ய வேண்டியிருக்க வில்லை. ஆனால் ஜெயலலிதா இந்த செல்வாக்கை தன் முயற்சிகளாலும் மக்களின் மனநிலை குறித்த துல்லியமான உள்ளுணர்வாலும் சிறுக சிறுக உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆரை கடந்து தன்னை ஒரு பிம்பமாக கட்டமைத்தார். எம்.ஜி.ஆரின் வாரிசாக அரசியலுக்கு வந்து, அந்த அடையாளத்திலேயே தேர்தலை வென்றவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எம்.ஜி.ஆரை மக்களிடம் நினைவுபடுத்த் தேவையிருக்கவில்லை. இது தான் அவரது முக்கிய சாதனை என படுகிறது.
ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரை விட சிறந்த நிர்வாகி எனலாம். எம்.ஜி.ஆர் வசம் கட்சி இருந்த போது கூட அடுத்த நிலை தலைவர்களை கட்டுப்படுத்துவதில் அவருக்கு சிரமங்கள் இருந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜெயா ஒரு இசைநடத்துநரின் கோலுக்கு இணங்க வாத்தியங்கள் இசைக்கும் கலைஞர்களை போல அத்தனை குட்டித்தலைவர்களை நடத்தினார். அவர் பிறழ்வுகளை அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்ல அதிமுகவை கார்ப்பரேட்மயமாக்கி ஒரு வலுவான கட்டமைப்பாக்கினார். தனக்கு கீழுள்ள தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு கச்சிதமான பணித்திட்டம், வரையறை, இடம் என வகுத்து கட்டுப்படுத்தினார். ஜெயலலிதா தேர்தலின் போது தன் கட்சிக்காரர்களிடம் ஒரு டீக்காரரை சுட்டி ”இவரை ஜெயிக்க வையுங்கள்” என ஆணையிட்டால் அது நிகழும். எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் ஜெயலலிதா எனும் பிம்பத்தை மட்டுமே வைத்து வெல்ல முடிந்தது. இது ஒருவித franchise செயல்பாட்டு முறை. நீங்கள் KFCயில் முகவர் ஆக சேர்ந்தால் வாடிக்கையாளர்களை வரவழைக்கும், தரத்தை நிரணயித்து விளம்பரப்படுத்தும் பொறுப்பை KFC கார்ப்பரேட் நிறுவனமே எடுத்துக் கொள்ளும். நீங்கள் பணத்தை முதலீடு செய்து நிர்வகித்தால் மட்டும் போதும். இந்த பாணியை ஜெயலலிதா கச்சிதமாய் அதிமுகவில் செயல்படுத்தினார்.
திமுக இன்றும் ஒரு அரை-நிலப்பிரபுத்துவ, அரை-ஜனநாயக அமைப்பே. ஸ்டாலின் முழுக்க பொறுப்பேற்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் திமுகவை ஒரு அதிமுகவாக மாற்றுவார். ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவின் நிர்வாக முறை மீது அபிமானம் உண்டு. கேரளா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னதான் சமத்துவம், தனிமனித உரிமைகள், போராட்டம் என பொங்கினாலும் ஆழத்தில் அவர்கள் ஜெயலலிதா போன்ற தலைவருக்காகவே ஏங்குகிறார்கள். எந்த மலையாளியிடம் பேசினாலும் அவர்களுக்கு ஜெயலலிதா மீதுள்ள மரியாதையும் வியப்பும் தெரிய வரும்.
ஜெயலலிதாவின் ஆட்சியை பொறுத்த மட்டில் பாராட்டத்தக்க முக்கிய அம்சம் அவரது மக்கள் நலத்திட்டங்கள். குறிப்பாய், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா காய்கறிக் கடை, அம்மா மருத்துவ காப்பீடு, மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத் தந்தன. ஒரு பக்கம் மக்களுக்கு தற்காலிக அனுகூலங்களை வழங்கி அவர்களின் கோபத்தை திசைதிருப்பும் ஒரு வியூகம் என இத்திட்டங்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எனக்கு மற்றொரு காரணத்துக்காக இத்திட்டங்கள் பிடித்திருந்தன. அரசே உற்பத்தி செய்து மக்களுக்கு குறைந்த செலவில் சேவை செய்வது எனும் நோக்கு என்னை கவர்ந்தது. இது ஒரு சோஷலிஸ அணுகுமுறை. தொண்ணூறுகளில் தோன்றிய மிதமிஞ்சிய தாராளமயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கம் எளிய மக்களை கடும் நெருக்கடியில் தள்ளின. அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்காய் கடுமையாய் போராடும் நிலை ஏற்பட்டன. அனைத்து நிலைகளிலும் பெரும் பணக்காரர்களே முதலீடு செய்து லாபம் ஈடு, அதை மேற்தட்டினர் பகிர்ந்து கொண்டு, தம் சேவையாளர்களாக மேல்மத்திய, மத்திய வர்க்கத்தினரை மட்டும் பாவிக்கும் போது பெரும்பகுதி கீழ்த்தட்டினர் கைவிடப்பட்டனர். இப்படி கைவிடப்பட்டவர்களை கைகொடுத்து அணைப்பதே அம்மா மக்கள் நலத்திட்டங்களின் சிறப்பு.
 கடந்த வருடம் வேலை இல்லாமல் நெருக்கடியில் இருந்த போது நான் தினமும் இரண்டு வேளை அம்மா உணவகத்தில் நிறைவாக உண்டேன். ஐந்து ரூபாய் ஒருவேளை உணவு. ஒருநாள் செலவுக்கு இருபது ரூபாய் போதும். வேறெங்கு நீங்கள் இப்படி உண்ண முடியும்? அந்நாட்களில் அங்கு தினமும் உணவருந்த வரும் பலதரப்பட்ட மக்களை கவனித்தேன். அவர்கள் அந்த சேவையை நம்பியே வாழ்ந்தனர். ஒரு நெருக்கடியான நேரத்தில் உணவளித்தவர் மீது நமக்கு ஒரு தீராத பற்று இருக்கும். அதுவே ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த பாசம். எளிய மக்களுக்கு எது தேவை என அவர் தெரிந்து வைத்திருந்தார். அது அவரது வலிமை.
இந்த மக்கள் நலத்திட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று செல்போன், மென்பொருள், கட்டுமானம் என பலதுறைகளிலும் முதலீடு செய்து லாபம் ஈட்டி அப்பணத்தால் தனது எளிய மக்களை அரவணைக்கும் ஒரு அரசு வர வேண்டும் என்பதே என் ஆசை. மக்களின் வரிப்பணத்தால் மக்களுக்கு சேவை செய்வது ஒரு காலனிய ஆட்சி முறை. இதை எதிர்காலத்தில் ஒழித்துக் கட்ட வேண்டும். ஜெயலலிதாவின் பல செயல்பாடுகள் இதை நோக்கி ஒரு எளிய முதல் கட்டமாக நான் கண்டேன். அவ்விதத்தில் அவரது மறைவு எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் உயிருடன் தொடர்ந்திருந்தால் மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பார்.

எல்லா சமகால அரசியல் தலைவர்களையும் போல ஜெயலலிதாவும் கறைபடிந்தவரே. ஊழல், வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக்குவிப்பு, அமைச்சர்களை ஊழல் பணத்தை வசூலித்து தலைமைக்கு ஒப்படைக்கும் ஏவலர்களாக மாற்றியது என பல தவறுகளையும் சேர்த்தே அவர் மதிப்பிடப்படுவார். சமகால இந்தியாவின் எந்த தலைவரும் இந்தவித குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாது தான். ஜெயலலிதாவின் சர்வாதிகார நிர்வாக பாணியும், விமர்சனங்களை சற்றும் சகிக்க முடியாத மனநிலையும், கருணாநிதி போன்ற முதியவரை அவர் நள்ளிரவில் கைது செய்த முறையும், காவல்துறைக்கு அளித்த மிதமிஞ்சிய அதிகாரமும், அதனால் விளைந்த மனித உரிமை மீறல்களும் அவரது பிம்பத்தின் இருண்ட பகுதிகள். அவர் ஒரு ஊழல்வாதியா, சர்வாதிகாரியா, ஆணவம் மிக்கவரா, ஒரு சிறந்த கார்ப்பரேட் நிர்வாகியா, கனிவான மக்கள் தலைவரா? இதில் இன்னதே அவர் என உறுதிப்பட கூற இயலாது. ஆனால் கணிசமான எளிய மக்களின் அன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். அத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் இந்த எளிய அன்புக்காக ஜெயா என்றும் நினைவுகூரப்படுவார். 

1 comment:

Antony Francis OMD said...

தமிழர்கள் என்றால் காலில் விழுவார்கள் என்னும் அடிமை பிம்பத்தைத் தமிழர்கள் மீது சுமத்தி பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை தரக்குறைவாய் பார்க்கச் செய்த பெருமையும் அவரையே சேரும்.