Friday, December 23, 2016

ப்ரியா தம்பியின் சிறந்த பேச்சு

Image result for ப்ரியா தம்பி
நேற்றைய எனது புத்தக வெளியீட்டு விழாவில் ப்ரியா தம்பி அருமையாக பேசினார். எனது இதுவரையிலான நூல் வெளியீடுகளில் பேசப்பட்டதில் சிறந்த பேச்சு அது தான். அவர் இரு கதைகளை எடுத்துக் கொண்டு நுணுக்கமான அவதானிப்புகளை முன்வைத்தார். மொழியை அலசினார். தனக்கு பிடித்த உவமைகளை குறிப்பிட்டார். அப்பா – மகள் உறவு, ஆண்களின் பொதுவான உளவியல் கதைகளில் எப்படி வந்திருக்கிறது என பேசினார். “அப்பாவின் கதைகள்“ கதைசொல்லியின் அடிப்படையான மனச்சிக்கல் என்ன என அவரால் சுலபத்தில் சொல்லி விட்டு கடக்க முடிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் கதையை தான் கவனிப்பார்கள். ஒரு கூர்மையான வாசகன் மட்டுமே கதையில் உள்ள முக்கிய தருணங்களை, அத்தருணங்களில் மனித நடத்தையில் வெளிப்படும் விசித்திரங்களை கவனித்து பேசுவான். ப்ரியா அதைத் தான் செய்தார். நான் இதற்கு முன் அவரது இலக்கிய விமர்சனங்கள் படித்ததில்லை. அதனால் இத்தகையதொரு லேசர் கதிர் விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


 அது இன்னொரு விசயத்தையும் காட்டியது. அவருக்குள் பல எழுத்துத் தளங்கள் உள்ளன. இவ்வார குமுதம் லைப்பில் அவர் ஜெயலலிதா பற்றி எழுதிய பத்தி கட்டுரையை படித்த போது ஞாநிக்கு பிறகு நமக்குக் கிடைத்த சிறந்த பத்தியாளர் ப்ரியா தான் என தோன்றியது. ஆனால் அது மட்டுமல்ல. அவருக்கு முகநூலில் சரளமாக எழுதும் ஒரு துணிச்சலான முகம் உள்ளது. பெண்களின் பிரச்சனையை பேசும் பெண்ணிய முகம் உள்ளது. சீரியல் போன்று வெகுஜன மீடியாவில் எழுதுகிறார். அரசியல், சமூகம், தன்னனுபவம் எனவும் நன்றாக எழுதுகிறார். எதையும் துணித்து தனித்துவமாய் பேசுவது தான் அவர் சிறப்பு. தன்னைப் பற்றி அடுத்தவர் என்ன நினைப்பார்கள் எனும் கூச்சம் அவருக்கு இல்லை. இது எழுத்தாளனுக்கு தேவையான ஒரு முக்கிய இயல்பு. நமக்கு தயக்கம் வந்ததும் எழுத்து களையிழந்து விடும்.

 நேற்றைய அவர் பேச்சை கேட்ட போது அவர் தொடர்ந்து இலக்கிய மதிப்புரைகள் எழுத வேண்டும் எனப் பட்டது. அது மட்டுமல்ல அவர் வெவ்வேறு எழுத்து வடிவங்களை முயன்று பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. தரையில் விட்டால் சிதறி ஓடுவது மாதிரியான ஆளுமை அவருடையது என கணிக்கிறேன். இத்தகையோர் இன்னதென ஒரு அடையாளம் அமைக்காமல் எல்லா விசயங்கள் பற்றியும் எழுதி ஒரு விரிவான தளத்தில் இருக்க கூடியவர்கள்.


நேற்றைய கூட்டத்திற்கு முதலில் தன்னால் வரமுடியாத நிலையில் இருப்பதாய் ப்ரியா தெரிவித்தார். எங்கள் வற்புறுத்தலில் பெயரில் தன் தனிப்பட்ட சிக்கல்களை பொருட்படுத்தாமல் வந்து பேசினார். இத்தனைக்கும் எனக்கு அவருடன் நீண்ட நாள் பரிச்சயம் எல்லாம் இல்லை. அவரிடம் இதுவரை பத்து சொற்களுக்கு மேல் பேசியிருக்க மாட்டேன். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஊருக்கு வேறு செல்ல வேண்டும். ஆனால் எந்த நெருக்கடியிலும் தன் பணியை செய்து முடிக்கும் ஒரு அர்ப்பணிப்பு அவரிடம் உள்ளது. அதனால் வந்தார். வந்தவரிடம் சந்தித்து பேச கூட எனக்கு வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த சந்தர்பத்தில் சொல்லிக் கொள்கிறேன். ப்ரியா தம்பிக்கு என் அன்பும் நன்றிகளும்!

1 comment:

Nat Chander said...

yes she writes well ...thinks honestly.. a bold lady.. best wishes to priya