Saturday, December 31, 2016

சசிகலா எனும் alpha male

Image result for சசிகலா

ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”.
 இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்?
அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உறுதியானவர். துணிச்சலானவர். பன்னீர் யார் மிரட்டினாலும் பணிந்து விடக் கூடியவர். அவரால் கட்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியாது என பா.ஜ.க அறியும். அதனால் சசிகலாவே பா.ஜ.கவின் தேர்வாக இருக்கும்.”

ஆனால் ஜெயாவின் மரணத்திற்கு பின்பான மத்திய அரசின் போக்கு இக்கூற்றுக்கு எதிராக இருந்தது. சசிகலா தன்னை தலைவர் ஆக்கக் கோரும் ஒரு குழுவினரை தனக்காக கூச்சல் இடும்படி களத்தில் இறக்கினார். அதிமுக தலைவர்கள் சிலரே சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன. பன்னீர் உடனே தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். அதிகாரிகள் கூட சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தன்னை மதிப்பதில்லை என்றும் புகார் கூறினார். உடனே சசிகலாவுக்கு ஆதரவான தலைமைச்செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரியினர் ரெய்ட் செய்தார்கள். மிரட்டினார்கள். அடுத்து சசிகலாவின் சொத்துகளை ரெய்ட் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. சசிகலாவை வீட்டை காவல் காக்கும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நீக்க்கப்பட்டனர். சசிகலா கட்சியில் இருந்து விலக வேண்டும் என பா.ஜ.க நிர்பந்திப்பதாக கூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் சசிகலா அஞ்சி வெளியேறுவார் என நான் நம்பவில்லை.
கட்சியின் மீது கணிசமான கட்டுப்பாட்டை வைத்திருக்கும், ஜெயாவின் சொத்துக்களை கைவசம் வைத்திருக்கும் ஒருவரை எளிதில் அகற்றி விட முடியாது. மேலும் மிரட்டினால் உடனடியாய் வெளியேறும் சுபாவக்காரர் அல்ல சசிகலா.
அதற்குப் பதிலாக சசிகலா – பன்னீர் – பா.ஜ.க தரப்பினர் இடையில் ஒரு சமரசம் நடக்கிறது. பன்னீரை தொந்தரவின்றி ஆட்சி செய்ய சசிகலா அனுமதிப்பார். சசிகலாவின் இடத்தை பன்னீர் கேட்க மாட்டார். (அவர் என்றுமே அந்த வம்புக்கு போக மாட்டார்.) முக்கியமாக, பா.ஜ.கவின் பிடியில் இந்த ஜல்லிக்கட்டு மாடு வந்து விட்டது. சசியை அடக்கியது பா.ஜ.கவுக்கு ஒரு குறியீட்டு வெற்றி.
ஆனால் சசிகலாவை நீண்ட காலம் பா.ஜ.கவால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. பா.ஜ.கவுக்கு என்றும் அவர் மீது நம்பிக்கை இருந்ததில்லை என விகடன் இணையதளத்தில் சில கட்டுரைகள் சொல்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே அவருக்கும் பா.ஜ.கவுக்கும் முழு ராசியில்லை. அவர் காங்கிரசுடன் சற்று இணக்கம் காட்டுகிறார். கலைஞரின் நலம் விசாரிக்கிறேன் எனும் சாக்கில் கலைஞர் குடும்பத்தை சந்திக்கிறார். அவர் தனக்கென ஒரு அணியை அமைக்க முயல்கிறார். ஏனென்றால் ஜெயாவுக்கு பிறகு பன்னீரை கொண்டு தான் பா.ஜ.க காய் நகர்த்தும் என சசிகலா அறிந்திருந்தார். இப்போது மோடிக்கு முன் முழுக்க தலைவணங்கி விட்டார். அதனால் அவரை பொதுச்செயலாளராக இருக்க அனுமதித்திருக்கிறார்கள்.
இப்போதே ஒரு வலுவான தலைவருக்கான சில அறிகுறிகளை அவர் காட்டி விட்டார். பதவியேற்கும் போது கண்கலங்குகிறார். எம்.ஜி.ஆர். ஜெயா சமாதிகளுக்கு சென்று வணங்குகிறார். அங்கு அதிமுக மந்திரிகளையும் வரச் செய்கிறார். பல இடங்களில் ஜெயலலிதாவின் பிம்பத்தை பின்னணியில் வைத்து சசிகலாவின் வணங்கி நிற்கும் படத்தை தாங்கிய சுவரொட்டிகள் பளிச்சிடுகின்றன. பன்னீர் செல்வம் இந்த பிம்பம் கட்டியமைக்கும் பணிகளில் இதுவரை ஒன்றை கூட செய்ய முயலவில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு தன்னை வலுவாக முன்னெடுக்கும் ஒரு தலைவர் தேவை. இப்போதைக்கு அது சசிகலா தான்.
ஒரு சிறந்த தலைவர் யார்? மக்களுக்கு நல்லது செய்கிற தலைவர் யார் என நான் கேட்கவில்லை. மக்களை வசீகரிக்கிற, கட்சியை கட்டுப்படுத்துகிற தலைவர் யார்? ஆணவமும், துணிச்சலும், பிடிவாதமும், சிறப்பாய் மீடியா பிம்பத்தை கட்டமைக்கிறவரும், கட்சியை விரல் நுனியில் வைத்திருக்கும் நிர்வாகத் திறனும் கொண்டவர் தான் சிறந்த தலைவர். அதாவது ஆங்கிலத்தில் alpha male என்பார்கள். இங்கு அது சசிகலா மட்டுமே. அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால் அதிமுக ஒரு கட்சியாக நிலைபெற வேண்டுமென்றால் அது சசிகலாவின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும் எனத் தோன்றுகிறது. தலைமைப் பண்பை நாம் ஒழுக்க, அற மதிப்பீடுகள் இன்றி அளவிட வேண்டும். இந்த மதிப்பீடுகளுக்கு அரசியலில் எந்த மதிப்பும் இல்லை.
பா.ஜ.க இதை நன்கு அறியும். அதனால் சசிகலாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை அது சுலபத்தில் அனுமதிக்காது. பல முட்டுக்கட்டுகள் போடுகள். குழு அரசியலை வளர்த்து அவரை முடிந்த வரை தளர்த்த பார்க்கும்.
ஆனால் இப்போதைக்கு அதிமுகவிற்கு பன்னீர் செல்வத்தினால் பலன் இல்லை என தோன்றுகிறது. அவர் ஒரு பா.ஜ.க பினாமி மட்டுமே. மேலும் அவர் ஒரு இயல்பான தலைவரும் அல்ல. அவர் கீழ் அதிமுக நிர்மூலமாகி விடும். அவ்விதத்தில் சசிகலாவின் முதல் கட்ட வெற்றி திமுகவுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கும். அடுத்த தேர்தலில் திமுக வெல்லும் என்பது 99% உறுதி என்றாலும், திமுகவுக்கு தலைவலி கொடுக்கும் வண்ணம் அதிமுகவை முன்னெடுக்க சசிகலாவால் முடியும். இதை உணர்ந்ததனால் தான் ஸ்டாலின் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலக வேண்டும், அதற்கான விசாரணை வேண்டும் என கோரி இருக்கிறார். ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது எனும் செய்தி வளர்வது சசிகலாவுக்கு பங்கமாக இருக்கும் என அவர் அறிவார். ஆனால் இந்த கோரிக்கை ஒரு விசயத்தை காட்டுகிறது: ஸ்டாலின் சசிகலாவை பொருட்படுத்த துவங்கி விட்டார்.


1 comment:

Nat Chander said...

YES sasi seems to have inherited certain jayas mannerisms tactics behaviour ...to capture the aiadmk audience.. panneer certainly lacks the charisma...

so known devil is better than an unknown angel...